மனமிருந்தால் மார்க்கமுண்டு
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டைப் புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும். இரு கட்டைகளுக்கு இடையே இடைவெளி விட்டு வீடு கட்டப்பட்டிருக்கும். அந்த நபர் வீட்டுச் சுவற்றை பெயர்த்து எடுக்கும் போது இரு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதையும் அது உயிருடன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அந்த ஆணி அடித்து குறைந்தது 5 வருடம் ஆகிய நிலையில் எப்படி இந்த பல்லி இன்றும் உயிருடன் இருக்க முடியும்? இதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் அதை கேமரா மூலம் கண்காணித்தார். சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து, மரத்தின் இடையே சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு ஊட்டுவதை கண்டார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. 5 ஆண்டுகளாக இந்த பல்லி, சிக்கி இருந்த தனது சக பல்லிக்கு உணவளித்து காப்பாற்றியுள்ளது.
இது ஒரு அதிசயமான செயல் மட்டுமல்ல. எவ்வாறு மற்ற இனங்கள் தங்களின் இனத்தை அன்புடன் நடத்தி காப்பாற்றி வருகின்றன என்ற படிப்பினையையும் நமக்கு தருகிறது. ஒரு பல்லி, தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 5 ஆண்டுகள் உணவளித்துவந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா?
உனக்கு உயிரளித்து, உன்னை பத்து மாதம் சுமந்து, உதிரத்தை பாலாக்கி, உன்னை வளர்த்தெடுத்த உன் தாயும், தகப்பனும் இன்று உனக்கு பாரமாகி போனார்களா? மனிதராக பிறந்த நாம் மற்ற ஜீவராசிகளை விட உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறோம். சிந்திப்போம் செயலில் இறங்குவோம். பெற்றோரை மட்டுமல்ல, அனைவரையும் பரிவுடனும் மரியாதையுடனும் நடத்துவோம். எனக்கு என்ன லாபம் என்ற கோட்பாட்டை உங்கள் வியாபாரத்தில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். அன்றாட அணுகுமுறையில் எதிர்பார்ப்பில்லாமல் நன்மை செய்யும்படி இறைவேதம் நம்மை எச்சரிக்கிறது.
‘‘ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது’’ (பிலி 2:3-5) இதைச்செய்ய மதம் தேவையில்லை. மனமிருந்தால் போதும்.
- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்