சாதத்தை எடுக்க காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா?
?கோயில்களில் நிவேதனம் செய்த பின்பு, அந்தப் பிரசாதத்தை எதிரில் உள்ள பலிபீடத்தில் வைத்துப் பிறகு காக்கைக்குப் போடுகிறார்களே... ஏன்?
- வசுமரி ராம், வந்தவாசி.
பூஜையை வீட்டில் செய்தாலும் கோயிலில் செய்தாலும் பூஜையின் முடிவில் தாழ்ந்த உயிர்களுக்குச் சிறிதாவது உணவளிக்க வேண்டும். அதுதான் பலி. அதற்குத்தான் பலிபீடம்.
?கோயிலில் மணி உபயோகப்படுத்து வதன் காரணம் என்ன?
- ராஜராஜன், திருச்சி.
கோயில் பூஜையின்போது மணி மற்றும் பல கருவிகளை ஒலிப்பதற்கு காரணம் இருக்கிறது. பூஜா காலத்தில் பக்தர்களின் மனம் உபயோகமற்ற எண்ணங்களில் லயிக்காமல் இறைவனின் மேல் பதிவதற்கான ஒரு முயற்சி அது. அதோடு கிராமங்களில் பூஜை, ஆரத்தி நேரத்தில் ஒலிக்கும் மணி, ஒலிகிராமம் முழுவதும் கேட்கும். கோயிலுக்கு நேரே வரமுடியாதவர்கள்கூட அந்த நேரத்தில் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு மனதால் அந்த பூஜையில் கலந்து கொள்ள முடியும்.
?ராம பக்தனான அனுமனுக்கு ராமரைவிட அதிக கோயில்கள் இருப்பதை காண்கிறேன், கேள்விப்படுகிறேன் இது ஏன்?
- வினோதினி மைத்ரேயன், ஸ்ரீரங்கம்.
பக்தி என்றாலே சேவை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். பக்தி செலுத்துதல் என்றால், சேவைபுரிதல்தான். அனுமனின் சேவை எப்பேர்ப்பட்டது! தன் நாயகனான ராமனுக்கு அவன் ஆற்றிய சேவைகள்தான் எத்தனை! ராமனை சந்தித்த நாளிலிருந்து தன் தலைவன் சுக்ரீவனுக்கு அவன் உதவுவான் என்று தலைவனுக்காகத்தான் ராமனின் நட்பை அவன் வளர்த்துக் கொண்டானே தவிர, தன் சுயநலத்துக்காக இல்லை. அப்போதிருந்தே அவன் ராமன் மீது பக்தி கொள்ள ஆரம்பித்தான். அந்த கணத்திலிருந்து ராம பட்டாபிஷேகம் வரை மட்டுமல்ல; அடுத்தடுத்த யுகங்களிலும் ராம சேவையை மேற்கொண்டிருக்கும் அற்புதத் தொண்டன் அவன். அப்படி ஒரு சேவை மனப்பான்மையை அனைத்துப் பக்தர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாலேயே, அதை உணர்த்தும் வகையில் அனுமன் கோயில்கள் அதிகமிருக்கின்றன என்று நினைக்கிறேன். மானிட அவதாரத்துக்கு அனுமன் ஆற்றிய பணி, இந்தக் கலிகாலத்தில் இன்னொன்றையும் புரியவைக்கும். அது ‘மனிதனுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை’’ என்பதுதான்.
?சாதத்தை எடுக்க காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா?
- வாணிரமேஷ், சிதம்பரம்.
கிணற்றில் மீன்கள் இருந்தால் போடலாம். ஜீவராசிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். மீன்கள் இல்லாத கிணற்றில் போடுவதைவிட அந்த சாதத்தை தெரு நாய்களுக்கு வைக்கலாம். சிராத்தம் செய்த பின் காகத்திற்கு வைக்கும் பிண்டத்திற்கு இந்த விதி பொருந்தாது. அவ்வாறு சிராத்தம் செய்த பின் வைத்த பிண்டத்தை காகம் எடுக்க வராவிட்டால் அதனை ஆறு, குளம், நீர் அல்லது கடல் முதலான மீன்கள் வாழுகின்ற தீர்த்தங்களில் கரைப்பதே நல்லது.
?ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு என்ன சிறப்பு?
- ரா.பிரியதர்ஷனி, கோவை.
மார்கழி வரபோகிறது. ஆண்டாள் திருப்பாவையை எல்லோரும் பாடிக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ தமிழ் பக்தி நூல்கள் இருந்தாலும் ஆண்டாள் இயற்றிய திருப் பாவையும் நாச்சியார் திருமொழியும் தமிழ் மாதத்தின் பெயரில் ஆரம்பிப்பது விசேஷம். திருப்பாவை மார்கழி திங்கள் என்று மார்கழி மாதத்தின் பெயரோடு ஆரம்பிக்கிறது. நாச்சியார் திருமொழி தையொரு திங்கள் என்று தை மாதத்தின் பெயரோடு ஆரம்பிக்கிறது. இந்த சிறப்பு வேறு நூல்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நாளுக்கு ஒரு பாசுரமாக 30 பாசுரங்களை ஆண்டாள் அருளிச்செய்திருக்கிறாள். இதை சகல வேதங்களின் சாரம் என்று பெரியோர்கள் சொல்லுகின்றார்கள். கண்ணன் குழல் ஓசையில் இந்த உலகம் எல்லாம் மயங்கியது. ஆனால் அந்தக் கண்ணனே திருப்பாவையின் இசையில் மயங்கியதால் திருப்பாவையை இன்னிசை என்று சொல்வார்கள்.
?பஜனை என்ற பிரார்த்தனையில் ஒருவர் பாட, பலபேரும் சேர்ந்து பாடுவதேன்? ஒருவன் பாடினால் போதுமானதாக இருக்காதா?
- எஸ்.ஜானகி, விழுப்புரம்.
பஜனையில் ஒன்றாகச் சேர்ந்து பாடும்போது தனித் தனியே பாட முற்படுபவர்களின் தயக்கம், சொற்களைக் கூறுவதில் உள்ள தவறு எல்லாம் நீங்கி விடுகிறது. அத்துடன் இதயத்தின் அடித்தளத்திலிருந்து முழுவேகத்துடன் பாடும் உணர்ச்சிப் பெருக்கம் உண்டாகிறது. நூறு பேர் சேர்ந்து செய்யும் பிரார்த்தனை ஒருவர் தனியே செய்யும் துதி, அவர் மனத்தளவில் மிகவும் தூய்மையானவையாக இருந்தால் சிறந்த பலனைக் கொடுக்கும். இல்லையெனில் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும். பஜனையில் பலரும் சேர்ந்து செய்யும் பிரார்த்தனையில் ஒரு சிலராவது அப்படி மனத்தூய்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அப்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் சக்தி அந்தப் பிரார்த்தனையில் மகிமையையே உயர்த்திவிடும். அப்படி ஒரு சில தூய உள்ளங்கள் மனம் உருகிப் பிராத்தனை செய்யும்போது, அதன் பலனை அனைவரும் அடைவார்கள்; சமூகமே பலன்பெறும்; நாடே நன்மையடையும்.
?தியானத்துக்கேற்ற உணவு முறைகள் உண்டா?
- கே.சரஸ்வதி, கல்கத்தா.
உண்டு. உணவினால் தமது குணங்களை மாற்றிக்கொள்ள இயலும். சாத்வீக, ராஜஸ, தாமஸ் குணங்களை, அவற்றுக்கேற்ற உணவை உட்கொள்வதால் பெறமுடியும். உடம்பைச் சீராக வைத்துக் கொண்டால், உள்ளமும் ஆரோக்கியமாக அமையும். உடலுக்கு ஏற்படும் குணதோஷங்களும் உணவைப் பொறுத்ததே. மூன்று குணங்களில் ராஜோ குணமும், தமோ குணமும் சாதுக்களுக்கு வேண்டாதவை. ஆகையால், அந்தக் குணங்களை வளர்க்கும் புலால் ஆகியவற்றை அவர்கள் நீக்க வேண்டும். பூமிக்குக் கீழே விளையும் கிழங்குகளும், அவற்றின் எண்ணெய்களும், பழங்களும் சிறந்தவை. ஜைனர்கள் விளக்கு ஏற்றுவதற்கு முன் உணவு உட்கொள்வார்கள். இரவு உணவு முன்வேளையில் ஜிரணமானால், விடியற்காலையில் தியானம் செய்யவும், தினசரிக் கடன்களை முடிக்கவும் வசதியாக அமையும். ஆசிரமங்களிலும் இதனால்தான் மாலை வேளை உணவை முன் நேரத்திலேயே உட்கொள்ளுகின்றனர். உணவு ஜீரணமாகிவிட்டால் முன்னிரவில் தூங்கி, விடியற்காலையில் கண் விழிக்க வசதியாக இருக்கும். தியானத்துக்கு உகந்த நேரம் விடியற்காலைப் பொழுதே ஆகும்.