மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன்!
பாடல் கற்க வந்த பெருமாள்
திருக்கண்ணமங்கைத் திருக்கோயிலில் உறையும் கண்ணன் திருஉருவப் பெருமாள் திருமங்கையாழ்வாரிடம் பாடல் கேட்க மண்ணுலகில் அவதரித்தார் என்பது இறையடியார் நம்பிக்கை. திருக்கண்ணமங்கைத் திருத்தலத்தின் மீது திருமங்கையாழ்வார் அருளிய பதிகத்தின் கடைசிப் பாவினில், இத்தலத்தின் மேல் தாம் உரைத்த பத்துப் பாக்களைக் கற்றவர்கள் ‘விண்ணில் விண்ணவராய் மகிழ்வெய்து வா’ என்று கூறுவதோடு, கண்ணனிடம், ‘கண்ணா’ நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே’ என்றும் பாடினார். இதனுடைய பொருள் ‘கண்ணனே, நீ கூட இப்பாக்களைக் கற்க நினைத்தால் கற்கலாம்’ என்பதே. ஆம் இறைவனையே ‘பாடல் கற்றுக் கொள்ள வேண்டுமானால் கற்றுக்கொள்’ என்றார்.
‘நீ விரும்பினால் கற்றுக்கொள்ளலாம்’ என்ற இச்சொல் கேட்டு கண்ணனே மாணவராய் வந்து பாடல் கற்றாராம். எப்படி? பாடலைக் கற்க கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும், பாடலைக் கற்றுத்தரும் பொருட்டு நம்பிள்ளையாக, அவருடைய ஆசானாகத் திருமங்கையும் அவதாரம் செய்தனராம். கண்ணன் ரோகிணி நட்சத்திரத்தில் பெரியவாச்சான் பிள்ளையாகவும், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாகத் திருமங்கையும் அவதரித்தனர் என்பர்.
ஊறாக் கிணறு
வழிப் பயணமாகச் சென்ற திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணங்குடியில் ஒருநாள் தங்கினார். அவ்வாறு தங்கியிருந்தபோது தாகம் எடுக்கவே, அவ்வூரில் கிணற்றில் நீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த பெண்களிடம் குடிப்பதற்குத் தமக்கு நீர் அளிக்கும் படி வேண்டினார். இவர் யாரென்று தெரிந்து முன்னர் நிலத்திற்கு வாது செய்தது போல், தங்கள் பானைக்கும் வாது செய்து விடுவாரோ என்று எண்ணியோ என்னவோ அப்பெண்மணிகள் நீர் தர மறுத்துவிட்டனர்.
திருமங்கைக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டது. குடிக்க நீர் தர மறுத்துவிட்டனரே என்னும் ஆத்திர உணர்வும் ஏற்பட்டுவிட்டது. எனவே, நீர்தர மறுத்ததால் சாபம் ஒன்றும் கொடுத்து விட்டார். இறைவனின் மெய்யடிகள் கோபித்துச் சபித்து விட்டால் அது மெய்யாகி விடுமல்லவா? அவரிட்ட சாபம் இதுதான். இவ்வூர்க் கிணறுகளில் என்றும் நீர் ஊறாமல் போகட்டும் என்று சபித்துவிட்டார்.
அவர் சபித்தவாறே கிணறுகளில் நீர் ஊற்றுச் சரியாகாமல் போய்விடட்து. இன்றும் திருக்கண்ணங்குடிக் கிணறுகளில் நீர் ஊற்றுச் சரியாக அமைவதில்லை என்றும், அப்படியே நீர் இருந்தாலும் அது உப்பு நீராகத்தான் உள்ளது என்றும் கூறுகின்றனர். ஆயினும் கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் நல்லநீர் உள்ளது என்கின்றனர். இந்தச் சாபத்தின் விளைவால் ‘ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி’ என்பது பழமொழியாகிவிட்டது.
தொகுப்பு: ஜெய செல்வி