தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரண்மனை விட்டு அரன் மனை அடைந்தவர்

எல்லாவற்றையும் துறந்து, தெய்வ சிந்தனையிலேயே வாழும் மகான்களுக்குக் கூட, அடுத்தவர்களின் அவச் சொல்லுக்கு ஆட்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது நியதிபோலும்!

Advertisement

மிகவும் நல்லவரான உத்தமர் ஒருவர், ஊராரின் பழிக்கு ஆளானதையும்; அந்தப் பழியை அரசர் கையாண்ட விதத்தையும் விளக்கும் வரலாறு இது.மைசூர் அரண்மனை எனும் அற்புதமான மாளிகையைப் பார்க்கிறோம் அல்லவா? அதே மைசூரில் அதே போன்றதொரு பெரும் மாளிகையின் வாசலில், ஓர் உத்தமர் நின்று கொண்டிருந்தார். அவர் கழுத்தில் உஞ்சவிருத்தி சூத்திரமும் (மஞ்சள் நிற அடையாள மங்கலக் கயிறு), கைகளில் ஓர் அட்சய பாத்திரமும் இருந்தன.

அவர் அருகில், அவர் மனைவியும் தாயாரும் நின்றிருந்தார்கள். அவர்களின் எதிரில் மைசூர் மன்னரும் சமஸ்தான அதிபதிகளும் பொதுமக்களும் ஏராளமாக நின்றிருந்தார்கள். அனைவரின் முகங்களிலும், ஏதோ துயரம் அப்பியிருந்தது. உத்தமர் பேசத் தொடங்கினார்; மகா ஜனங்களே! இந்த வீடோ, இதைச்சேர்ந்த சொத்துக்களோ என்னுடையவை அல்ல. இவை அனைத்தும், பொதுமக்களான உங்களைச் சேர்ந்தவை. எல்லாவற்றையும் உங்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

உத்தமர் சொல்லி முடித்ததும், அனைவரும் மிகுந்த மரியாதையுடன் கைகளை கூப்பி வணங்கினார்கள்; ‘‘சுவாமி! நீங்கள் இந்த சமஸ்தானத்தில் இல்லாவிட்டால்கூட, இங்கேயே இருந்து, அமைச்சராக இருந்து எங்களுக்கெல்லாம் வழிகாட்ட வேண்டும்’’ என வேண்டினார்கள். அமைதியாகப் பதில் சொல்லத் தொடங்கினார் உத்தமர்; ‘‘பெரியோர்களே! என் தந்தையின் வற்புறுத்தல் காரணமாக, இவ்வளவு நாட்கள் நான் இங்கிருந்தேன். இனிமேல் நான் இங்கு இருக்க முடியாது. எதற்காக நான் இந்தப் பூமிக்கு வந்தேனோ, அந்தக் காரியத்தைச் செய்தாக வேண்டும் நான்.

ஓட்டைக் குடத்தில் உள்ள தண்ணீரைப்போல, ஆயுள் போய்க் கொண்டே இருக்கிறது. ஆகையால் என் விருப்பப்படிச் செயல்பட, நீங்கள் எல்லோரும் என்னை அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

அதைக் கேட்டதும் அரசர் உட்பட அங்கிருந்த அனைவரும் அழுதார்கள்; ‘நல்லவர் ஒருவர் நம்மைவிட்டுப் பிரிந்து போகிறேன்’ என்கிறாரே’ என்ற எண்ணம், அவர்கள் முகங்களில் பிரதிபலித்தது.

அனைவர் மனத்திலும் அழுத்தமாக இடம்பிடித்த அந்த உத்தமர் - ஸ்ரீ ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்.

நாம மகிமையை, அதாவது தெய்வ நாமத்தின் மகிமையை மக்களிடம் பரப்புவதற்காகவே அவதரித்து, அதைச்செய்த மகான் அவர். அரண்மனை போன்ற பெரும் மாளிகை, அரண்மனை வாழ்வு, அளவில்லாத சொத்து-சுகங்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு,அவற்றைப் பற்றிய எண்ணமே இல்லாமல் ஆண்டவனின் நாமத்தைச் சொன்னபடி ஐயாவாள், தன் மனைவி-தாயார் ஆகியோருடன் மைசூரை விட்டுப் புறப்பட்டார்.

(அவரை ‘ஐயாவாள்’ என்றுதான் குறிப்பிடுவது வழக்கம். அதன்படியே நாமும் இனிமேல், அப்படியே பார்க்கலாம்)புறப்பட்ட ஐயாவாள் வழியில் ஆங்காங்கே தங்கி, தன் ஆசார-அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டார்; நாம பஜனை செய்தபடி பிட்சை எடுத்து உண்பது, மக்களிடையே நாம சங்கீர்த்தன மகிமையைச் சொல்லி, அவர்களையும் தெய்வ நாமங்களைச் சொல்லும்படிப் பழக்குவது என்ற முறையிலேயே, ஐயாவாளின் பயணம் நடந்து கொண்டிருந்தது. திருச்சியை அடைந்தார்கள்.

அங்கே மலைக் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருநாமம் - மாத்ரு பூதேசுவரர் - தாயுமானவர்!

தாயுமானவ சுவாமி கோவில் வீதியில் ஒரு வீட்டில் ஐயாவாள் வசிக்கத் தொடங்கினார். நாள்தோறும் அதிகாலையில் எழுந்திருப்பது, காவிரிக்குச் சென்று நீராடி ஆசார-அனுஷ்டானங்களை முடிப்பது, பகவானின் நாம ஜபம், பிட்சை, வழிபாடு, அதிதி (எதிர்பாராமல் வரும் விருந்தாளி)களுக்கு உணவிடுவது, அதன் பிறகே தான் உண்பது என்றே ஐயாவாளின் அன்றாட காலை நடவடிக்கைகள் அமைந்திருந்தன; பிற்பகலில் ஞானநூல்களைப் படிப்பதும் நாம சங்கீர்த்தனம் செய்வதுமாக இருந்தன.

மாலைப்பொழுதில் மலைக்கோட்டை மலையேறி, தாயுமானவ சுவாமியையும் மட்டுவார் குழலி அம்மையையும் தரிசனம் செய்து திரும்புவது, வீடு திரும்பியதும் இரவில் ராமாயணம், பாரதம், பாகவதம், சிவ புராணம், ஸ்காந்தம் எனும் கந்தபுராணம் ஆகியவைகளை உபந்யாசம் - சொற்பொழிவு செய்வார்.அவர் சிவ புராணம் சொல்லும்போது சிவனின் மகிமைகள் தாம் இடம் பெறுமே தவிர, மறந்து போயும் கடுகளவு கூட மகாவிஷ்ணுவைக் குறைத்துப் பேச மாட்டார். அதேபோல பாகவதம், ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைச் சொல்லும்போது, விஷ்ணு மகிமை தான் இடம்பெறுமே தவிர, அங்கு சிறிதளவு கூடச் சிவத் துவேஷம் இடம் பெறாது.

நாளாக நாளாக அவருடைய சொற்பொழிவில் கூட்டம் அதிகரித்தது. அது அங்கிருந்த சிலரின் கண்களை உறுத்தியது. பொறாமை அவர்களைத் தூண்டியது; நேரே மன்னரிடம் போனார்கள். அப்போது திருச்சியில் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் அரசராக இருந்து ஆண்டு கொண்டிருந்தார். அவரிடம் போன பொறாமைக்காரர்கள், ‘‘மன்னா! மைசூரில் இருந்து ஒருவர் வந்து, நமது தாயுமானவர் மலைக்கோட்டை வீதியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தங்கியிருக்கிறார். ஏதோ உயர் பதவியில் இருந்தவரின் பிள்ளையாம்! பார்த்தால் நல்ல சுபாவம் கொண்டவராகத்தான் இருக்கிறார். தெய்வ பக்தியிலும் தலை சிறந்தவராக இருக்கிறார். சந்தேகமே இல்லை. ஆனால்...’’ என்று இழுத்தார்கள்.

‘‘ம்! மேலே சொல்லுங்கள்!’’ என்பதைப் போல, மன்னர் தலையசைத்தார்.அதற்காகவே காத்திருந்ததைப்போலப் பொறாமைக்காரர்கள், தங்கள் மனங்களில் இருந்ததை அப்படியே கொட்டினார்கள். ‘‘மன்னா! நீங்கள் பெருமாள் பக்தர். ஆனால், வந்திருக்கும் அவருடைய சுபாவத்தைப் பார்க்கும்போது, அவருக்கு சைவத்தில் தான் அதிக விருப்பம் இருக்கும்போலத் தெரிகிறது. இதை அரசரான, நீங்கள்தான் சோதனை செய்து பார்க்க வேண்டும்’’ என்று தூபம் போட்டார்கள்.

மன்னர் குழம்பினார்; ‘‘என்ன இது? இவர்களே, அவரை மகானாகவும் சொல்கிறார்கள். அதே சமயம் சோதனை செய்து பார்க்கும் படியாகவும் சொல்கிறார்களே! ம்...! என்ன செய்வது? மகான்களைச் சோதனை செய்து பார்ப்பது, மகத்தான பாவத்தைத் தந்து விடுமே! ஆகையால் இவர்கள் சொல்லும் அந்த மகானை, சோதனை செய்யவும் கூடாது; அதேசமயம் தகவல் என்னவென்று தெரிந்து கொள்ளவும் வேண்டும்’’ என்று தீர்மானித்தார் அரசர்.

அதற்காக ஒருநாள்...

சிவபெருமானை தாயுமானவ சுவாமியைக் கண்ணனாக அலங்காரம் செய்து, ஊர்வலம் வரச் செய்தார், மன்னர்.மன்னர் ஏற்பாடு செய்திருந்த தெய்வத் திருவீதி உலா, ஐயாவாள் இருந்த வீதியில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஐயாவாள் தன் வீட்டில் பரமேஸ்வர பூஜையை முடித்து விட்டு, சிவத் தியானம் செய்து கொண்டிருந்தார். திருவீதி உலா வரும்போது ஒலிக்கும் மங்கல வாத்தியங்களின் ஓசை கேட்டது.

அதைக் கேட்டதும் ஐயாவாள் தன் மனைவியை அழைத்து, ‘‘அம்மா! சுவாமி திருவீதி உலா வந்து கொண்டிருக்கிறார். மங்கல வாத்தியங்கள் கேட்கிறது பார்! நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டு வா!’’ என்றார். கணவரும் மனைவியுமாக வீட்டு வாசலுக்கு வந்தார்கள். திருவீதி உலா, அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. சைவ வைணவ பேதம் சிறிதளவு கூட இல்லாத ஐயாவாள், திருவீதி உலாவில் தரிசனம் தந்து கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணனைத் தரிசனம் செய்தார். சிவ வடிவத்தை மறைத்து கண்ணனாக அலங்காரம் செய்திருந்தாலும்...

ஸ்ரீ கிருஷ்ணனைத் தரிசனம் செய்த ஐயாவாள், ‘‘கண்ணா! புல்லால் மூடப்பட்ட கிணற்றைப் பார்த்ததும், புல்லுக்கு ஆசைப் பட்ட பசு, அந்தப் பாழுங்கிணற்றில் விழுந்து விடுவதைப்போல; விஷய சுகங்களில் ஆசைப்பட்டு, சம்சாரத்தில் விழுந்து கிடக்கும் என்னை இரக்கத்தோடு காப்பாற்றி, எப்போது உன் திருவடிகளில் சேர்த்து சுகப்படுத்தப் போகிறாய்?’’ என்று கேட்டுப் பக்தி ததும்பப் பாடல்கள் பாடி, தன் உள்ளத்தில் இருந்ததை அப்படியே வெளிப்படுத்தினார், ஐயாவாள்.

கிருஷ்ண பக்தியை முழுமையாக வெளிப்படுத்தும் அப்பாடல்கள் ‘க்ருஷ்ண த்வாதச மஞ்சரி’ என அழைக்கப்படுகின்றன. பாடல்களைப் பாடிப் பரந்தாமனைப் பக்திப் பரவசத்தோடு வழிபட்டுக் கொண்டிருந்த ஐயாவாளைப் பார்த்து, அவர்மீது புகார் சொன்ன பொறாமைக்காரர்களும் அரசரும் உள்ளம் உருகினார்கள்; புகார் படித்தவர்கள் ஐயாவாளை நெருங்கி வணங்கினார்கள்.‘‘சுவாமி! நாங்கள் எல்லோரும் அகங்காரத்தால் உங்களைப்பற்றி அரசரிடம் தவறாகச் சொல்லி விட்டோம். எங்களை மன்னியுங்கள்!’’ என வேண்டினார்கள்.

அதைக் கேட்ட ஐயாவாள், ‘‘உத்தமர்களே! நீங்கள் சொல்லும் அவ்வளவு பெரிய (மன்னிப்பு) வார்த்தைக்கு, நான் தகுதியானவன் அல்ல. உங்களைப் போன்ற உத்தமர்களை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்’’ என்றார்.அதன்பின் ஐயாவாள் தம்பதிகள் வீட்டின் உள்ளே செல்ல, திருந்திய பொறாமைக்காரர்கள் திரும்பினார்கள். மன்னரும் மனத் திருப்தியுடன் திரும்பினார்.

V.R.சுந்தரி

Advertisement

Related News