தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனிவான அவர் பார்வை பிணி எல்லாம் போக்கும்

ஒருநாள் மாலை வேளை. காஞ்சி மடத்தில் மகா சுவாமிகளை தரிசனம் செய்ய நல்ல கூட்டம். நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. ‘இன்னும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்?’ என்பதை தெரிந்து கொள்ள தலையைச் சுற்று சாய்த்து பார்த்த சுவாமிகளின் பார்வையில் 25 வயதுயுடைய ஓர் இளைஞர் தென்பட்டான். அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்த பெரியவா, தனக்குப் பணிவிடை செய்யும் ராமு என்ற இளைஞனை அருகே அழைத்தார்.

Advertisement

‘‘ராமு….‘க்யூ’விலே பதினஞ்சாவது ஆசாமியா, உயரமா, கொஞ்சம் மாநிறமா நின்னுண்டிருக்கானே ஒரு பையன்…. அவன் ‘சைஸு’க்கு சரியா இருக்காப்லே ஒரு பேண்ட் - சட்டை துணி நீ வாங்கிண்டு வரணும். ஆபீசிலே பணத்தை வாங்கிண்டு. மடத்துக்குப் பக்கத்துலே இருக்கிற முதலியார் ஜவுளிக்கடைல நல்ல துணியா வாங்கிண்டு வா’’ என்று சொன்னார், பெரியவா.

ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை, குழம்பினான். ‘ஏன்? எதற்கு?’ என்று பெரியவாளைக் கேட்க முடியுமா? மௌனமாகப் புறப்பட தயாரானான்.‘‘ராமு இங்கே வா. இப்போ துணிக்குப் புதுப்புது பேரெல்லாம் சொல்றாளே, நோக்குத் தெரியுமோ?’’ என்று பெரியவா கேட்டார்.

‘‘தெரியும் பெரியவா….’’

‘‘எங்கே….. அந்தப் பேரைச் சொல்லு. பார்ப்போம்.’’

‘‘டெரிகாட்டன்னு பேரு பெரியவா….’’

‘‘ம்…. அதான்…. அந்தத் துணியிலேயே நல்ல ‘ஒஸ்தி’யா பார்த்து வாங்கிக்கோ. புரியறதா?’’ என்று சொன்னார் பெரியவா.பதினைந்து நிமிடங்களில் ஆச்சார்யாள் சொன்னபடி பேண்ட் - ஷர்ட் துணிகளோடு அவர்முன் வந்து நின்றான் ராமு. துணிகளைத் தூர இருந்தே பார்த்த சுவாமிகளுக்கு பரம சந்தோஷம்.‘‘பேஷ்….பேஷ்….. ரொம்ப நன்னாருக்கு’’ என்று ராமுவைப் பாராட்டிய பெரியவா, ‘‘நீ ஒரு கார்யம் பண்ணு. ஒரு மூங்கில் தட்டு நிறைய பழங்கள், பூர்ண பலம் எல்லாம் எடுத்து வெச்சுண்டு, இந்தத் துணிமணியையும் அது மேல வை. நா சொன்னேன்னு மடத்து மானேஜர் கிட்டே சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஒரு கவரில் போட்டு எடுத்துண்டு வரச் சொல்லு. அந்த ரூவா கவரையும், தட்டுல துணிமணிக்கு மேல வெச்சுடு. என்ன பண்ணணும்கறத அப்புறம் சொல்றேன்’’ என்று சொல்லிவிட்டுத் தனக்கு முன்னால் இருந்த பக்தரோடு பேச ஆரம்பித்துவிட்டார்.

பெரியவா உத்தரவுப்படியே ஏழாயிரம் ரூபாய் ரொக்கம் ஒரு கவரில் போடப்பட்டு வந்து சேர்ந்தது. அதை தட்டின்மேல் வைத்துவிட்டுப் போகுமாறு கண் அசைவில் உத்தரவிட்டார் பெரியவா. அந்த 25 வயது இளைஞன், சுவாமிகளுக்கு முன் நின்றிருந்தான். ஆச்சார்யாள் அவனை பார்த்தார். அப்படியே கீழே விழுந்து நமஸ்கரித்து எழுந்தான். சுவாமிகள், ராமுவைத் திரும்பிப் பார்த்தார். அருகில் ஓடி வந்தான் ராமு.

‘‘ராமு, அந்த மூங்கில் தட்டை கைலே எடுத்துக்கோ.’’ உடனே சுவாமிகள், ‘‘அந்தப் பையனுக்கும் அவன் குடும்பத்துக்கும் நா பூர்ண ஆசீர்வாதம் பண்றதா சொல்லி, அந்தத் தட்டை அவன் கைலே குடு’’ என்று புன்சிரிப்புடன் கட்டளையிட்டார்.தட்டை இளைஞனிடம் ஒப்படைத்தான் ராமு. இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. திருதிருன்னு விழித்தான். அக்கம் பக்கம் பார்த்தான் செய்வது அறியாது நின்றான்.

அவனுடைய தவிப்பைப் புரிந்துகொண்ட ஆச்சார்யாள், ‘‘ராமு, அவனை ஒண்ணும் குழம்ப வேண்டாம்னு சொல்லு. அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் மடத்தோட அனுக்கிரகம் இதுனு சொல்லு. கவர்லே ரூவா இருக்கு. பத்ரமா வீட்ல ஒப்படைக்கணும்னு சொல்லு’’ என்றார்.ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினான், இளைஞன். குழப்பம் தீராமல் தட்டை வாங்கிக் கொண்டு சுவாமிகளை நமஸ்கரித்து விட்டு நகர்ந்தான்.

பதினைந்து நிமிடம் கழிந்தது. எல்லோரும் தரிசித்துச் சென்றுவிட்டனர். தனது அறைக்குள் வந்து அமர்ந்தார் ஆச்சார்யாள். ராமுவை அருகில் கூப்பிட்டார்.‘‘ஏண்டா ராமு, அந்தப் பையனுக்கு அப்டி உபசாரம் பண்ணி, அதையெல்லாம் வெச்சு கொடுக்கச் சொன்னேனே…. ஏன், எதுக்குனு நீ கேட்கவே இல்லியே’’ என்றார்.ராமு தயங்கியபடியே, ‘‘பெரியவாளைப் போய் நா எப்டி கேள்வி கேக்கறது? ஒங்க கட்டளையை நிறைவேத்தத்தானே நா இருக்கேன்’’ என்று பதில் சொன்னான்.

‘‘சரி…… நீ கேக்க வேண்டாம். நானே சொல்றேன்’’ என்று கூறிவிட்டுப் பேச ஆரம்பித்தார், சுவாமிகள்.‘‘ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. ஒரு ஆறு மாச காலம், பரிவாரங்களோட வடதேச யாத்திரை போயிட்டு வரலாம்னு முடிவுபண்ணி பொறப்பட்டேன். நல்லவேளை பார்த்து யாத்திரை கிளம்பினோம். மடத்து வாசலுக்கு வந்தேன். மடத்துக்கு எதுத்தாப்லே ஒரு சின்ன மளிகைக் கடை உண்டு. அது ஒரு செட்டியாருக்குச் சொந்தம். மடத்துக்கும் அங்கதான் மளிகைச் சாமான்கள் பற்று வரவுக் கணக்கு.

மடத்து வாசல்ல என்னைப் பார்த்ததும் மளிகைக் கடை செட்டியார் வேகமா ஓடி வந்தார். தனி மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார். நான் யாத்திரை போறது தெரிஞ்சு நமஸ்காரம் பண்ணிட்டுப் போக வந்திருப்பார்னு நெனச்சேன்.‘என்ன செட்டியார்வாள்…. சௌக்யமா? மளிகை வியாபாரம் எல்லாம் எப்டி போறது?’னு விசாரிச்சேன்.அதுக்கு அவர், வாயைப் பொத்திண்டு பவ்யமா, ‘சுமாரா போறது சுவாமி. கஷ்டமாத்தான் இருக்கு. பெரியவா வடதேச யாத்திரை போவதாகவும், திரும்பி வர்றதுக்கு அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க’ என்று மென்னு விழுங்கினார்.

‘ஆமாம் செட்டியார்வாள். அஞ்சாறு மாசம் ஆகலாம்’ என்றேன். ஒடனே அவர் ரொம்ப யோஜனை பண்ணி, தயங்கித் தயங்கி, ‘அதுக்கில்லே சாமி. மடத்துக்கும் நம்ம மளிகைக் கடைலேதான் பற்று வரவுக் கணக்கு. சாமிக்கே தெரியும். நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு. எனக்கும் கஷ்டம். நாலு மாச கடை வாடகை பாக்கி. கஷ்டமா இருக்கிறாலேதான் ஒங்ககிட்டே குறையைச் சொல்லிக்கிறேன்….. நீங்க யாத்திரையை நல்லபடியா முடிச்சுக்கிட்டு வாங்க’ன்னு சொல்லிட்டு நமஸ்காரம் பண்ணினார்.

‘செட்டியார்வாள்! யாத்திரை போயிட்டு வந்து ஒடனேயே ஒங்க மளிகைக் கடை பாக்கியை பைசல் பண்ணச் சொல்றேன்’னு கிளம்பினேன்.ஆறு மாச வடதேச யாத்திரை முடிஞ்சு திரும்பினேன். மடத்துக்கு எதிர்ச்சாரியிலே பார்த்தேன். செட்டியார் மளிகைக் கடை பூட்டியிருந்தது. அப்புறமா விசாரிச்சுப் பார்த்ததுலே மூணு மாசத்துக்கு முன்னாடி அந்த செட்டியார் வௌியூருக்குப் போயிருந்தபோது திடீர்னு ‘காலகதி’ அடைஞ்சுட்டதா சொன்னா.

அவரோட மனுஷாள் எல்லாம் எங்கே இருக்கான்னும் தெரியலே. அப்புறமா, செட்டியார் மளிகைக்கு மடத்து பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வெச்சுண்டேன். 900 ரூபாய். அந்த பாக்கியை இன்னிக்குத்தான் வட்டியும் அசலுமா அவரோட பேரன்ட்டே தீர்த்து வெச்சேன். அந்தப் பையங்கிட்டே எல்லாத்தையும் வெச்சு ஒன்னை கொடுக்கச் சொன்னேனே, அவன் வேற யாருமில்லே. மளிகைக் கடை செட்டியாரோட பிள்ளை வயித்துப் பேரன். தாத்தாவுக்குச் சேர வேண்டியதை அசலும் வட்டியுமா பேரங்கிட்ட சேர்ப்பிச்சாச்சு. இனிமே கவலை இல்லை’’ மகா சுவாமிகள் சொல்லி முடித்தார்.

ராமுவுக்குக் கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அதற்குள், வேறு ஒரு பையன் ஆச்சார்யாளின் உதவிக்காக அங்கு வரவே, பெரியவாளிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தான் ராமு. வந்தவன், மடத்து வாசலை நோக்கி விரைந்தான்.அங்கே, அந்த 25 வயது இளைஞன் ஆச்சார்யாளால் அனுக்கிரகிக்கப்பட்ட வஸ்துக்கள் நிரம்பிய மூங்கில் தட்டுடன் நின்றுகொண்டு இருந்தான். அவனைப் பார்த்தவுடன் ராமுவுக்குப் பரம சந்தோஷம். அவனை நெருங்கினான். விஷயத்தைச் சொல்லி விசாரித்தான்.

அதற்கு அந்த இளைஞன், ‘‘ஆமாம்ங்க. ரொம்ப வருஷத்துக்கு முந்தி எங்க தாத்தா இங்கே மடத்துக்கு எதுத்தாப்லே மளிகைக் கடை வெச்சிருந்ததா எங்க பாட்டி, அப்பாவெல்லாம் சொல்லுவாங்க. என் தாத்தா திடீரென்று காலமானதும் நிறைய கடன் ஏற்பட்டுட்டதாலே கடையை மூடிட்டு சேலத்துக்கு வந்துட்டாங்களாம்.இப்போது அங்கேதான் எங்கப்பா மளிகைக்கடை வெச்சு நடத்திகிட்டு இருக்காரு. நான் எங்க ஊர் தெரிஞ்சவங்களோடு ‘டூர்’ வந்தேன். வந்த எடத்துலே பெரியவங்க இதெல்லாம் எனக்கு ஏன் பண்ணாங்கன்னு தெரியலே. ஒரே ஆச்சரியமா இருக்கு’’ என்று தெரிவித்தான்.

ராமுவுக்கு இதைக் கேட்டவுடன் கையும் காலும் ஓடவில்லை. பெரியவாளின் - அந்த நடமாடும் தெய்வத்தின் - தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்தபடியே மடத்துக்குள் சென்றான். அப்போது இரவு மணி ஏழு. தனி அறையில் ஏகாந்தமாக வீற்றிருந்தார் ஆச்சார்யாள்.ராமுவைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார், சுவாமிகள். ராமுவுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவனை அழைத்த ஆச்சார்யாள், ‘‘நா சொன்ன விஷயம் வாஸ்தவமா இல்லியான்னு நோக்கு சந்தேகம் வந்துடுத்து. மடத்து வாசலுக்குப் போய், அந்த செட்டியார் பேரனையே நேரடியா பார்த்து, ஊர்ஜிதப்படுத்திண்டு வந்துட்டியோல்லியோ’’ என்று சொல்லி சிரித்தார்.உடனே ராமு, ‘‘பெரியவா…. என்னை மன்னிக்கணும். ஒர் ஆர்வத்துல அப்படிப் பண்ணிட்டேன். வேற ஒண்ணுமில்லே. மன்னிச்சேன்னு சொல்லுங்கோ’’ என்று கதறி அழுதான்.அந்த தெய்வம் சிரித்துக்கொண்டே கைதூக்கி ராமுவை ஆசீர்வதித்தது.

(மகிமை தொடரும்...)

தொகுப்பு: ரமணி அண்ணா

Advertisement

Related News