யோகானந்த குரு நரசிம்மருடன் அனுமன்!
கடந்த இரண்டு ஆன்மிக மலரில், முசிறியில் உள்ள ``பால ஆஞ்சநேயரை’’ பற்றிய விரிவான தகவல்களை கண்டறிந்தோம். மனதிற்கு பரம திருப்தியாக இருந்தது. அதே போல், இந்த தொகுப்பிலும் கர்நாடகாவில் உள்ள வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். வாருங்கள்!
பெயர் சூட்டிய ராமானுஜர்
கர்நாடகா மாநிலம், உடுப்பி அருகே சாலிகிராமம் என்னும் பகுதி உள்ளது. இங்கு மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ``ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி’’ அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த அனுமன் கோயிலாக இப்பகுதி பக்தர்களினால் பார்க்கப்படுகிறது. 12ம் நூற்றாண்டு முற்பகுதியில், சோழர்கள் ஆட்சி செய்துவந்த போது, விசிஷ்டா துவைத மகான் ஸ்ரீ ராமானுஜர், இங்கு பன்னிரண்டு ஆண்டு காலம் தங்கியிருந்துள்ளார். மேலும் அவர், மேல் கோட்டைக்கு அருகில் உள்ள இந்த ஊருக்கு, ``சாலிக்கிராமம்’’ என்று பெயர் சூட்டினார். இன்றும், இங்குள்ள ஒரு குளம், எவ்வித அசுத்தமும் ஏற்படாதவாறு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியமான ஒன்று. இந்த குளத்திற்கு எதிரே, ராமானுஜரின் காலடி பதிந்த சிறிய கோயில் ஒன்றையும் காணலாம். மகான் ஸ்ரீ ராமானுஜர், சில காலம் இப்பகுதியில் வாழ்ந்ததால், வைணவர்கள் இந்த இடத்தை புனித இடமாக கருதுகின்றனர்.
தூய்மையான கோயில்
சாலிகிராமத்தில், ஸ்ரீ குரு நரசிம்மர் சுவாமி கோயில் மிகவும் பிரபலம். அதற்கு அடுத்த படியாக, ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோயிலை சொல்லலாம். குரு நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு நேர் எதிர் புறத்தில் ஆஞ்சநேயர் ஸ்வாமி கோயிலும் உள்ளது. கோயில் வளாகம் மிகவும் தூய்மையாக காணப்படுகிறது. அது மட்டுமல்ல, அனைத்து கோயில்களுக்கும் தூய்மையில் முன் மாதிரியாக திகழ்கிறது இத் திருத்தலம். விழா காலங்களில், கோயிலின் முகப்பு, மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கும். இக்கோயிலில் உள்ள நரசிம்மர், பக்தர்களுக்கு குரு ஸ்தானத்தில் இருந்து வழிகாட்டுவதால், இவரை ``ஸ்ரீ குரு நரசிம்மஸ்வாமி’’ என்று அழைக்கிறார்கள். இந்த குரு நரசிம்மர் கோயில், 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணக்கிடப்பட்டுள்ளது. குரு நரசிம்மர் கோயில், உடுப்பியில் இருந்து சுமார் 22 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
பகையில்லாத இடம்
பத்ம புராணத்தில் ஒரு பகுதியாக, புஷ்கர காண்டத்தில் ``ஸ்ரீ சாலிகிராம க்ஷேத்ர மஹாத்மயம்’’ என்னும் தலைப்பில் இக்கோயிலின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரிக்கின்றது. குரு நரசிம்மரின் சிலை முழுவதும் சாளக்கிராமக் கல்லினால் ஆனது. ஆகையால் மிகவும் சாந்நித்யம் நிறைந்தது. வேண்டுவதை உடனே கைக்கு மேல் பலனாக கொடுக்கக் கூடியவர். ஒரு கையில் சங்கு, மற்றொரு கையில் சக்கரம் ஏந்தி, ``யோகானந்த குரு நரசிம்மர்’’ என்ற யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். மேலும், இவ்விடத்திற்கு ``நிர்வைர்ய ஸ்தலம்’’ என்றும் பெயர் இருந்திருக்கிறது. இதற்குக் காரணம், முன்னொரு காலத்தில், இந்த இடத்தில், இயற்கைக்கு முரணான சிங்கங்களும் யானைகளும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்ததை, கோயில் பட்டாச்சார்யார் கண்டார். இதன் விளைவாக, அவர் இந்த இடத்தை ``நிர்வைர்ய ஸ்தலம்’’ என்று பெயரிட்டார். அதாவது ``பகை இல்லாத இடம்’’ என்னும் பொருள். அனுமனுக்கு மிக முக்கியமாக, விவசாயம் செய்யும் நபர்கள், அவர்களின் பயிர் வயல்கள் சேதமடையாமல் செழித்து வளர ``ரங்க பூஜை’’ என்னும் விசேஷ பூஜைகள் மேற்கொள்ளப் படுகிறது. இவற்றுடன் சனிக்கிழமைகளில், வெண்ணெய் காப்பும் சாற்றப்படுகிறது.
14 கிராம மக்களுக்கு குலதெய்வம்
மேலும், காசி, கயா, பத்ரிநாத் போன்ற நீண்டதூரம் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், பாதுகாப்பாக சென்று வர, ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வது வழக்கம்.எல்லா கோயில்களிலும் நடைபெறுவது போல் இக்கோயில்களிலும், ஆண்டுதோறும் வரக்கூடிய நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை இங்கும் நடைபெறுகின்றன. இவை தவிர, ரதாரோஹணம் (Ratharohana Seva) என்று சொல்லக்கூடிய தேர்த் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சண்டிகா பாராயணம் என்னும் பாராயணமும் இங்கு சிறப்பு! சாலிகிராமத்தை சுற்றியுள்ள 14 அந்தணர்கள் வாழ் கிராமங்களில் இருந்து இக்கோயிலுக்கு நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களில் பங்கேற்றும், `துலா மாதத்தில்’ சிறப்பு மற்றும் கூட்டு வழிபாடுகள் செய்தும் வருகின்றார்கள். அவர்களுக்கு குலதெய்வமாக நரசிம்மரும் அனுமாரும் அருள்கிறார்கள்.இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் ஏதேனும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும். காலை முதல் மாலைவரை நரசிம்மரும் ஆஞ்சநேயரும் வருபவர்களுக்கு வரத்தை வாரிவழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.சாலிகிராமத்தில் உள்ள இந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோயில், இப் பகுதியின் கலாச்சார மிக்க மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. மேலும், குரு நரசிம்மரும், ஆஞ்சநேயரும் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும், இங்குள்ள மக்களுக்கு திகழ்கிறார்கள். சாலிகிராமத்தில் உள்ள இந்த வீர ஆஞ்சநேயசுவாமியை மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை செய்துள்ளார். ஆஞ்சநேயரின் தலைக்கு மேலே வலது கையை உயர்த்தி அபயஹஸ்த முத்திரையுடனும், இடது கையில் சௌகந்திகா புஷ்பத்தையும், அனுமனின் தலைக்கு மேலே வலது புறமாக வால் வளைந்து சென்றும் வால் நுனியில், சிறியதாய் மணி ஒன்றும் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. அதே போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த சில அனுமனின் தலையில் ஜுட்டு என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்படுகின்ற குடுமி ஒன்றும், சூரிய - சந்திர உருவங்கள், காலடியில் அசுர உருவங்கள் போன்றவைகளும் இக்கோயிலில் உள்ள ஆஞ்சனேயரிடத்தில் காணமுடிகிறது. கோயில் தொடர்புக்கு: 08762305714.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 5.00 மணி முதல் 1.00 வரை, மாலை 4.00 மணிமுதல் 8.00 வரை.
எப்படி செல்வது: உடுப்பியில் இருந்து சுமார் 22 கி.மீ., பயணித்தால் சாலிகிராமத்தை அடைந்துவிடலாம்.