சிற்பங்கள் நிறைந்த அனுமன் சந்நதி!
மிக பிரம்மாண்ட கோயில், அழகிய சிற்பங்கள், நுழைவாயிலில் மட்டுமே கோபுரம் காணப்படுகிறது, எந்த சந்நதிக்கும் கோபுரங்கள் கிடையாது. ஆங்காங்கு செடிகளைக் கொண்ட தோட்டங்கள் பறந்து விரிந்து காணப்படுகிறது. ஆலயத்தை சுற்றி பார்க்கவே அரை நாள் தேவைப்படும் போல. அத்தகைய பெரிய கோயில். இதன் உள்ளே, நம் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் இருக்கிறார். இது எந்த கோயில்? எங்கு உள்ளது? மூலவர் யார்? பார்ப்போமா!
அதிகளவில் சேதமடைந்த கோயில்
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பகுதி பேலூர். இங்கு, 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட ``சென்னகேசவர் கோயில்’’ மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த கோயிலை ``விஜயநாராயணா’’ கோயில் என்றும் அழைப்பதுண்டு. இக்கோயில் உள்ளே வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருக்கிறார். சுமார் கி.பி 1117-ஆம் ஆண்டு ஆரம்பகாலத்தில் இப்பகுதி ஹொய்சாலப் பேரரசின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. அந்த சமயத்தில், பேலூர் அருகே ``யாகச்சி நீர்த்தேக்கம்’’ (Yagachi Reservoir) பிரபலம். அதன் அருகிலேயே மன்னர் விஷ்ணுவர்தனரால் இக்கோயில் எழுப்பப்பட்டது. சாதாரணமாக எழுப்பிவிடவில்லை. மன்னர் விஷ்ணுவர்தனன் ஆரம்பித்த இக்கோயில் கட்டுமானம், 103 ஆண்டு களாக, மூன்று தலைமுறைகளை கடந்து நிறைவு செய்தார்களாம். (இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று கோயிலின் பிரம்மாண்டத்தை பார்த்தாலே தெரிகிறது) எப்போதெல்லாம் போர் காலம் வருகிறதோ.. அப்போதெல்லாம் இக்கோயில் சேதமடையும். அதன் பின்னர், புனரமைக்கப்படும். மீண்டும் போர் வரும், கோயில் சேதமடையும். மறுபடியும் கோயிலை புனரமைப்பார்கள். இப்படியாக இந்த கோயில் போர் காலங்களில் சிக்கி சேதமாவதும், அதனை மன்னர்கள் சரி செய்வதையும் வரலாறுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
சிறப்பான சிற்பங்கள்
இக்கோயிலின் மூலவர் சென்னகேசவர். சென்னகேசவர் என்றால் ``அழகான கேசவர்’’ என்று பொருளாகும். சென்னகேசவர், விஷ்ணு பகவானின் ஒரு அழகிய வடிவமாக பார்க்கப்படுகிறது. பேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், மிக முக்கிய வைணவ யாத்திரைத் திருத்தலமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்பம்சமே, அதன் கட்டிடக் கலையும், சிற்பங்களும், புடைப்புச் சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் அதன் உருவப்படமும், கல்வெட்டுகள் ஆகிய சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய அழகோ.. அழகு! 12-ஆம் நூற்றாண்டின் வாழ்க்கை முறைகள், நடன - இசை கலைஞர்களை தத்ரூபமாக சித்தரித்த சிற்பங்கள் நம்மை வாய்பிளக்க செய்கின்றன. அதோடு ராமாயணம், மகாபாரதம் மற்றும் இதர புராணங்களை உள்ளடக்கிய ஏராளமான சிற்பங்களும் நம்மை மெய்சிலிர்க்க வைத்தன.இந்த ``சென்னகேசவர் கோயில்’’, அதன் அருகில் உள்ள ``ஹளேபீடு ஹொய்சலேஸ்வரர் கோயில்’’, சோமநாதபுராவில் உள்ள இன்னொரு ``கேசவர் கோயில்’’ என மூன்று கோயில்களுக்கும் ``ஹொய்சாலர்களின் புனிதக் குழுமங்களின் ஒரு பகுதியாகவும், உலக பாரம்பரிய தளமாகவும் அறிவித்தது, உலகம் புகழ் பெற்ற ``யுனெஸ்கோ’’.
கல்வெட்டுகள் சொல்லும் ரகசியங்கள்
தென்னிந்திய வரலாற்றில், ஹொய்சாள மன்னர்களின் காலம் கி.பி 1000ல் தொடங்கி கி.பி 1346 வரை இருந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில், சுமார் 1,500 கோயில்களை ஹொய்சாள மன்னர்கள் கட்டியிருக்கிறார்கள். அதில், மன்னன் விஷ்ணுவர்தனன் கிபி 1110ல் ஆட்சிக்கு வந்தார். அவர் தீவிர விஷ்ணுவின் பக்தர். ஆதலால், கிபி 1117ல் சென்னகேசவ கோயிலை நிர்மாணம் செய்தார். இது அவரது மரபின் ஐந்து அஸ்திவாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் வரலாற்றாசிரியர்கள், இக்கோயிலில் 118 கல்வெட்டு களைக் கண்டறிந்துள்ளனர். அவை கி.பி 1117 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவை. அதில், கோயிலின் வரலாறு, சென்னகேசவ கோயிலின் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட மானியங்கள் மற்றும் பிற்காலத்தில் செய்யப்பட்ட பழுதுபார்ப்புகள், மிக முக்கியமாக மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமான் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன.
அனுமனை பற்றிய கல்வெட்டுகள்
கி.பி 1381ல் விஜயநகரப் பேரரசு காலத்தில், சேதமடைந்த கோயிலின் உள்பிராகாரத்தை புதுப்பித்தார். அந்த சமயத்தில்தான், கிருஷ்ணதேவராயருக்கு குருவாக இருந்த ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், இக்கோயிலில் அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்கிறது கல்வெட்டு. மேலும், வியாசராஜரின் மேற் பார்வையில் அனுமனுக்கு தினமும் அபிஷேகம் நடைபெற்றுவந்திருக்கிறது. இக்கோயிலின் மூலவரான சென்னகேசவப் பெருமாள் எத்தகைய பிரசித்தமோ.. அதே போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமானும் பிரசித்தம். அனுமனை காண்பதற்காகவே, பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து, பிரார்த்தித்து வழிபட்டு செல்கிறார்கள். குடும்ப ஒற்றுமைக்காகவே பலரும் இந்த அனுமனை வேண்டிக்கொண்டு செல்கிறார்கள்.அப்படி வேண்டிச் சென்ற சில நாட்களிலேயே குடும்ப பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடுகின்றதாம். இதனை பலரும் அர்ச்சகர் இடத்தில் சொல்லியிருக்கிறார்களாம். ஆகையால் அனுமன் ஜெயந்தி அன்று இங்கு கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெறும். அன்றைய தினம், அனுமனுக்கு விசேஷ அலங்காரங்கள் நடைபெறும்.
அழகான துவாரபாலகர்கள்
சென்னகேசவர் கோயில், 443.5 அடிக்கு 396 அடி அகலமுள்ள மிக பெரிய பிராகாரத்தைக் கொண்டுள்ளது. அதே போல், சென்னகேசவர் கோயிலுக்கு தெற்கே, 124 அடிக்கு 105 அடி அகலமுள்ள ``கப்பே சென்னிகராய’’ கோயில் உள்ளது. சென்னகேசவர் சந்நதிக்கு இருபுறத்திலும் துவாரபாலகர்கள் அழகாக காட்சியளிக்கிறார்கள். முன்னொரு காலத்தில், மைய மண்டபம் மற்றும் கருவறை இருக்கும் மேற்கைத் தவிர அனைத்து பக்கங்களும் திறந்தே இருக்கும். ஆனால், கோயிலானது அடிக்கடி எதிரிகளினால் சூரையாடப்பட்டமையால், அனைத்து பக்கங்களும் துளையிடப்பட்ட திரைகளால் மூடப்பட்டன.இங்குள்ள ``நவரங்க மண்டபம்’’ பிரசித்தி பெற்றவை. நாற்பத்தெட்டு தூண்களைக் கொண்டுள்ளது, இந்த நவரங்க மண்டபம். அனைத்துத் தூண்களும் தனித்துவமான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. அழகிய தூண்கள் மற்றும் நுழைவாயிலைக் கடந்ததும், நான்கு கால் மண்டபம் தெரிகிறது. அதில் நுழைந்து சென்றால், நேராக கர்ப்பகிரகத்திற்கு செல்லலாம். கதவின் இருபுறமும் ஜெய மற்றும் விஜய ஆகிய இரு துவாரபாலகர்கள் அற்புதமாக காட்சியளிக்கிறார்கள். சற்று தூரத்தில், ஸ்ரீ லட்சுமி நாராயணர் சந்நதி உள்ளது. அதன் கீழே, 12-ஆம் நூற்றாண்டின் இசைக் கருவிகளை வாசிக்கும் இசைக் கலைஞர்களின் சிற்பங்கள், கவின்மிகு தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
சிற்பிகள் பெயரை குறிப்பிடும் கல்வெட்டு
லட்சுமி நாராயணர் சந்நதி பக்கவாட்டில், ஸ்ரீ வருண பகவானும் - அவரின் துணைவியாரான ஸ்ரீ வருணியும் ஒன்றாக சவாரி செய்யும் எழில் மிகு சிற்பம் காண்போரை சிலிர்க்கவைக்கிறது. இதனை கடந்து கருவறைக்குள் சென்றால்.. ஹாஹா... சுமார் 6 அடி உயரத்தில், நான்கு கைகளுடன், மேல் கைகளில் சக்கரம், சங்கு, கீழ் கைகளில் கதா, தாமரை ஆகியவைகளை தரித்துக் கொண்டு மிக சுந்தர வடிவில் சென்னகேசவர் அருள்கிறார்.ஹொய்சாள கலைஞர்களில் சிலர், தங்கள் சிற்ப படைப்புகளை உருவாக்கிய விதங்களை கல்வெட்டுகளாக பதிவு செய்தனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் சில சமயங்களில் தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பங்கள் மற்றும் பிறப்பிடம் பற்றிய விவரங்களையும் வெளிப்படுத்தினர். இதில் குறிப்பிட்டுள்ள ஒரு கல்வெட்டில், ``ருவாரி மல்லிதம்மா’’ என்பவர் இக்கோயிலுக்கு 40க்கும் மேற்பட்ட சிற்பங்களை செதுக்கி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதே போல், இங்குள்ள பறவைகள், விலங்குகள் ஆகிய சிற்பங்களை ``மல்லியண்ணாவும்’’, ``நாகோஜாவும்’’ உருவாக்கினார்கள். மேலும், மண்டபத்தில் உள்ள சில சிற்பங்களை ``சிக்கஹம்பா’’, ``மல்லோஜா’’ ஆகிய கலைஞர்கள் செதுக்கி உருவாக்கி இக்கோயிலுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்கிறது கல்வெட்டு.(இக்கோயிலில், வெளிப்புறங்கள் மட்டுமே புகைப்படங்கள் எடுக்க அனுமதி. கடவுள் சிலைகளை எடுக்க அனுமதி இல்லை. ஆகையால் அனுமன் புகைப்படத்தை பதிய முடியவில்லை. ஆனால், மூலவரான சென்னகேசவரின் புகைப்படம் கிடைத்தது. அதனை பதிவு செய்திருக்கிறோம்).
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7:00 முதல் இரவு 7:00 வரை.
எப்படி செல்வது: ஹாசன் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவிலும், சிக்கமங்களூரில் இருந்து 26 கி.மீ தூரத்திலும் இந்த கோயிலை அடையலாம். பெங்களூருவிலிருந்து சுமார் 220 கி.மீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது.