தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமலையில் அனுமன்!

திருப்பதி திருமலையில், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருக்கிறார். அவரைப் பற்றிதான் இந்த தொகுப்பில் பார்க்க விருக்கிறோம்.

Advertisement

திருமலைக்கு இன்னொரு பெயர்

ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரனிடமிருந்து பூமியை காப்பாற்ற பகவான், ஸ்ரீ வராஹமூர்த்தி அவதாரமெடுத்து, அந்த அசுரனிடம் சண்டையிட்டு, பூமியை காப்பாற்றினார். அதன் பிறகு, வராஹ பகவான் திருப்பதியில் உள்ள ஒரு மலையில் கோயில்கொண்டார். வராஹர் தங்கியதன் காரணமாக அந்த மலை, ``ஸ்ரீ வராஹமூர்த்தி மலை’’ என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப் போக்கில், திருவேங்கடமுடையான் இங்கு கோயில் கொள்ள, ``திருமலை’’ ஆனது. இதனால், திருமலை மலைகளுக்கு ``ஆதிவராஹ க்ஷேத்திரம்’’ என்னும் பெயரும் உண்டு. முன்னொரு காலத்தில், மகாலட்சுமியை தேடி, மகாவிஷ்ணு பூமியில் வெங்கடேஸ்வரராக மனித உருவில் அவதாரம் எடுத்தார். அந்த சமயத்தில், ஸ்ரீ வராஹமூர்த்தியின் சம்மதத்துடன் திருமலையில் தங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆக, திருமலையில் முதலில் முக்கியத்துவம் தரவேண்டிய பெருமாள் வராஹர் ஆவார்.இதன் காரணமாகவே, இன்றும்கூட, முதலில் ஸ்ரீ வராஹமூர்த்தியையே தரிசிக்க சொல்வார்கள், நம் முன்னோர்கள். அதன்படி பலரும் முதலில் வராஹரைத்தான் தரிசிக்கிறார்கள். அதன் பிறகுதான், ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கிறார்கள். மேலும், பூஜை மற்றும் நிவேதனங்கள் முதலில் ஸ்ரீ வராஹமூர்த்திக்கே செய்யப்படுகிறது. அதன் பின்னர்தான் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

திருமலையில் எங்கே இருக்கிறார் வராஹசுவாமி?

திருமலை வேங்கடவன் கோயில் கொண்டுள்ள மாடவீதி அதாவது கோயில் சுற்றியுள்ள நான்கு வீதிகளில், சுவாமி புஷ்கர்ணிக்கு வடமேற்கு பகுதியில், ஸ்ரீ வராஹசுவாமி கோயில் உள்ளது. நாம் முன்பே கூறியதைப் போல், முதலில் வராஹரையே தரிசிக்க வேண்டும். ஆதலால், பக்தர்கள், முடிகாணிக்கை போன்ற நேர்த்திக் கடன் இருந்தால், அவற்றை முதலில் செய்துகொண்டு, அப்படியே புஷ்கர்ணியில் ஸ்நானம் செய்யக்கூடாது. மேலும், புஷ்கர்ணியில் ஷாம்பு, சோப்பு போன்றவற்றை தேய்த்து குளித்து, புஷ்கர்ணியை அசுத்தம் செய்யக்கூடாது. ஆகையால், புஷ்கர்ணி வெளியில் குளியலறை இருக்கும். அங்கு குளித்துமுடித்த பின்னர், புஷ்கர்ணியில் குளிக்கலாம். குளித்து முடித்தவுடன், கையோடு அருகில் இருக்கும் வராஹஸ்வாமியையும் தரிசிக்கலாம்.

மேலும் சில பெருமைகள்

திருமலையில் இருக்கும் இந்த சுவாமி புஷ்கர்ணி, ஒரு காலத்தில் வைகுண்டத்தில் இருந்ததாகவும், இதனை கருடன், திருமலைக்கு கொண்டுவந்து சேர்த்ததாகவும் வேங்கடவனின் ``திருமால் புராணம்’’ கூறுகிறது. வராஹசுவாமி கோயிலுக்கு தெற்கே, மலையப்பசுவாமி கோயில் கொண்டுள்ளார். ஆக, ஒரு புறம் வராஹஸ்வாமி கோயில், மறுபுறம் வெங்கடாஜலபதி கோயில். இவ்விரு கோயில்களுக்கு மத்தியில், ``சுவாமி புஷ்கர்ணி’’ என்று அழைக்கப்படும் கோயிலின் தீர்த்தம் உள்ளது. இக்குளம் ஒரே குளமாக இருந்தாலும், ஒரு பகுதி அதாவது ஸ்ரீ வராஹஸ்வாமி கோயிலுக்கு எதிரே உள்ள ஒரு பகுதி, ``ஸ்ரீ வராஹபுஷ்கர்ணி’’ என்றும், தெற்கே ஸ்ரீனிவாசருக்கு அருகே உள்ள குளமானது, ``ஸ்ரீனிவாசபுஷ்கர்ணி’’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், ஒரே குளமாக இருப்பதால், இதனை பக்தர்கள், ``சுவாமி புஷ்கர்ணி’’ என்றே பொதுவாக அழைக்கிறார்கள். வராஹர் கோயிலுக்கு எதிரே, புஷ்கர்ணியில் ``சுதர்சன சக்கரத்தையும்’’ காணலாம்.இந்த சுவாமி புஷ்கர்ணியில்தான் ``தெப்போற்சவம்’’ வண்ணமைய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விமர்சையாக நடைபெறும். அதே போல், பிரம்மோற்சவம் காலத்தில் தீர்த்தவாரியும் இந்த புஷ்கர்ணியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேங்கடவனை பூஜித்த வியாசராஜர்

மகான் ஸ்ரீ வியாசராஜரைப் பற்றி, இதற்கு முன்னர் வெளிவந்த பல இதழ் களில் பதிவிட்டு வந்துள்ளோம். குறிப்பாக, வியாசராஜரின் பூர்வாஸ்ரம பெயர் `யதிராஜா’ என்பதும், மகான் ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தர், யதிராஜருக்கு ஸ்ரீ வியாசராஜதீர்த்தர் என்ற திருநாமம் சூட்டி, சந்நியாச தீட்சை கொடுத்தது, மேலும் பல துவைத தத்வ ஞானத்தை பெற, முல்பாகலில் உள்ள ஸ்ரீ ஸ்ரீபாதராஜதீர்த்தரிடத்தில் பயின்றது, ஸ்ரீபாதராஜதீர்த்தரின் வழிகாட்டுதலின் கீழ், சாளுவ மன்னன் நரசிம்மன், ஸ்ரீ வியாசராஜரை கௌரவித்து ராஜகுருவாக ஆக்கியது, இந்தியா முழுவதும் ஆஞ்சநேயருக்கு 732 கோயில்களைக் கட்டியது என வியாசராஜரை பற்றிய பல தகவல்களை நாம் கண்டுவந்திருக்கிறோம். அதில் மிக முக்கியமானது, மன்னன் கிருஷ்ணதேவராயரின் வேண்டுகோளுக்கு இணங்க, மகான் ஸ்ரீ வியாசராஜர், திருமலையில் தங்கியிருந்து, ஸ்ரீ வெங்கடாஜலபதியை 12 ஆண்டுகள் பூஜித்து வந்தார்.

அஹ்னிகா மண்டபம்

அந்த சமயத்தில், சுவாமி புஷ்கர்ணி வடக்குக் கரை பகுதியில் ஒரு மண்டபம் இருந்துள்ளது. அதில்தான் வியாசராஜர் தங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, இந்த மண்டபத்தில் ஒரு அனுமனையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார். விடியற்காலையில் சுவாமி புஷ்கர்ணியில் ஸ்நானம். அதன் பின் வெங்கடாஜலபதிக்கு அபிஷேக ஆராதனைகள். பிறகு, புஷ்கர்ணி அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில், தன் குருமார்கள் கொடுத்த ஸ்ரீ மூல கோபால கிருஷ்ணருக்கும், தான் பிரதிஷ்டை செய்த அனுமாருக்கும் பூஜைகள். இப்படி தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்திருக்கிறார், மகான் ஸ்ரீ வியாசராஜதீர்த்தர். அதனாலேயே, இந்த மண்டபத்திற்கு ``வியாசராய அஹ்னிகா மண்டபம்’’ என்று பெயர் ஏற்பட்டது. ``அஹ்னிகா’’ என்ற சொல், சூழலைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களை கொடுக்கிறது. இந்த இடத்தில், ``வியாசராய அஹ்னிகா மண்டபம்’’ என்று உள்ளதால், அதனை நாம், ``ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய நித்ய கர்மா’’ என்று எடுத்துக் கொள்ளலாம். காரணம், வியாசராஜர் தினமும் தன் நித்ய அனுஷ்டானங்களை இந்த மண்டபத்தில் செய்வதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

முக்யபிராணர்

திருமலை அஹ்னிகா மண்டபத்தில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை ``முக்யபிராணர்’’ என்று அழைக்கிறார்கள். சுமார் மூன்று அடி உயரம் கொண்டு அருள்பாலிக்கிறார். அவரின் காலில் அணிந்திருக்கும் தண்டை, இடுப்பில் அணிந்திருக்கும் அணிகலன், அனுமன் மீது சாற்றப்பட்டிருக்கும் துளசி மாலை, அவர் அணிந்திருக்கும் பஞ்சகட்சம், ஆகியவை அழகோ.. அழகு. அனுமனின் பாதங்களை பார்க்கும் போது, நர்த்தன ஆடுவது போல் தோன்றுகிறது. உற்சவர் புறப்பாடுகள் சமயத்தில், அஹ்னிகா மண்டபத்தின் அருகே பெருமாள் நின்று சேவை சாதிப்பார். அப்போது, வியாசராஜ மடத்தின் சார்பாக பெருமாளுக்கு மரியாதை செய்யப்படுவது வழக்கம். தற்போது, வியாசராஜ மடத்தின் மடாதிபதி ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர் கட்டளைக்கு இணங்க, அஹ்னிகா மண்டபம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த அனுமனுக்கு, தினசரி பூஜைகளை திருமலையில் உள்ள ஸ்ரீ வியாசராஜ மடத்தின் அர்ச்சகர் செய்து வருகிறார். அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி போன்ற தினங்கள் இங்கு விசேஷசம்.

ரா.ரெங்கராஜன்

Advertisement

Related News