பேராசை பெருநஷ்டம்
அது என்னவோ தெரியவில்லை? மனிதனின் துன்பத்திற்குக் காரணம் “அவனுடைய ஆசை தான்” என்று உலகத்தில் உள்ள அத்தனைச் சமயவாதிகளும் ஒரு சேரச் சொல்கிறார்கள்.‘‘ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்.’’ எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் ஆசையே என்பது புத்த மதத்தின் அடிப்படைத் தத்துவம். ஒரு அருமையான தமிழ்த் திரைப்படப் பாடல் இப்படித் துவங்குகிறது.ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடுகிறோமே வாழ்நாளிலே.
வாழ்நாள் முழுக்க இந்த ஆசை என்னும் அலையில் நாம் ஆடிக் கொண்டிருக்கிறோம். ஆசையைக் கடந்து கரை சேர்ந்தோமா?
அது என்ன, ஆசைப்படுவது அவ்வளவு பெரிய தவறா?
ஆசைப்படாமல் மனிதன் வாழ முடியுமா?
ஒருவன் அடைய வேண்டிய நான்கு வித புருஷார்த்தங்களில் தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது. தமிழில் அறம், பொருள், இன்பம், வீடு வேறு என்றுதான் நால்வகை பேற்றினை எல்லாச் சமயங்களும்
சொல்லுகின்றன.
அப்படியானால் “ஆசையை ஏன் அறுக்க வேண்டும்?”
அடைய வேண்டிய நால்வகைப் பயன்களில் ஒன்றை விட வேண்டும் என்று சொல்வது முரண்பாடு அல்லவா?ஆனால், இதை நுட்பமாகக் கவனிக்க வேண்டும்.அறம், பொருள், இன்பம் என்ற வரிசையில் மூன்றாவதாகத் தான் இன்பத்தைச் சொன்னார்கள்.ஒருவன் தர்மத்தோடு இணைந்த பொருளை விரும்புவதோ, அந்தப் பொருளின் மூலம் இன்பத்தை விரும்புவதோ தவறல்ல.அப்படியானால் ஏன் ஆசையைத் துறக்க வேண்டும் என்று சொன்னார்கள்.இங்கே வள்ளுவரைத்தான் நாம் அழைத்து விளக்கத்தைக் கேட்க வேண்டும்.காரணம் அவர் ஆசை, அறம் இரண்டையும் இணைத்து ஒரு குறட்பாவை அற்புதமாகப் பாடி இருக்கிறார்.அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்.
அதாவது பொறாமை, ஆசை, சினம், கடும் சொல் ஆகிய இந்நான்கு குற்றங்களையும் நீக்குவதுதான் அறம்.இதில் ஆசை என்பதை தனக்கு உரியதல்லாத பொருளின் மீது கொள்ளும் பற்று என்று எடுத்துக் கொள்ளலாம்.இந்த ஆசையை மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள்.இந்த மூன்று ஆசையும் ஒருவரிடத்தில் இருந்தாலும் அல்லது மூன்றில் ஒன்று இருந்தாலும் அது அவர்களுக்கு மிகப் பெரிய கேட்டினையும் அழிவினையும் தரும் என்பதுதான் அற நூல்களின் அசையாத கருத்து.
தன்னிடம் இல்லாத பொருள் வேறு ஒருவரிடம் இருப்பதைக் கண்டு ஆசை பிறக்கும். தன்னிடம் இல்லாத பொருள் அவனிடம் இருக்கிறதே அதை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் ஆசையின் மீது எழும். தன்னிடம் இல்லாத பொருளை உடையவன் மீது பொறாமை பிறக்கும். பொறாமை பிறந்து விட்டால் அவனோடு இணக்கம் இருக்காது. காரணம் இல்லாத கோபம் கட்டுக்கடங்காமல் எழும். அந்தக் கோபம் கடும் சொல்லைப் பேச வைத்து பெரும் பகையை எழுப்பும். அது அழிவை நோக்கி அந்த மனிதனை அழைத்துச் சென்று படுகுழியில் தள்ளும். இதுதானே பலர் விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அறத்திற்கு மாறானசெயலை ஒருவன் செய்கிறான் என்று சொன்னால் அடிப் படையில் அவனுடைய ஆசைதான் சிகரமாக இருக்கும்.
கிடைக்கின்ற சம்பளம் போதவில்லை என்று ஒருவன் அறத்திற்கு புறம்பான நிலையில் பொருளைச் சேர்க்கிறான் என்று சொன்னால் என்ன பொருள்? தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ நினைத்து, எப்படியாவது (அறமற்ற முறையில் கூட) பொருளைச் சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆசைதானே காரணம்.அதுதானே செய்யத்தகாத காரியத்தைச் செய்ய வைக்கிறது.ஆசைகளில் மூன்று ஆசைகளைச் சொல்லுகின்றார்கள்.
1. மண்ணாசை 2. பொன்னாசை
3. பெண்ணாசை.
தனித்தனியாகப் பிரித்தாலும் அடிப்படையில் ஆசை என்பது எந்த ஒரு பொருளின் மீதும் கொள்ளுகின்ற அளவற்ற பற்றைத்தான் குறிக்கும். ஒரு நண்பர் பெண் ஆசை மோசமானது என்றார். ‘‘பெண்ணாசை என்று சொல்லுகின்றீர்களேஅதற்கு என்ன பொருள்? என்று கேட்டேன்.’’‘‘பெண்ணின் அழகின் மீது ஆண் கொண்ட அளவற்ற காம உணர்வு அவனைத் தகாத செயலைச் செய்ய வைக்கிறது.’’‘‘அப்படியா’’‘‘நீங்கள் ராமாயணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். பிறர்மனை நயத்தல் என்ற குற்றத்திற்கு ஆளானான். சகல தர்மங்களையும் நூல்களையும் கற்ற இராவணன். அவன் ராம பாணத்தால் கொல்லப்பட்டதாக ராமாயணம் சொல்லுகிறது. ஆனால் சீதையின் மீது கொண்ட ஆசை என்கிற நெருப்பு தான் முழுமையாக அழித்து விட்டது. அதனால்தான் பெண்ணாசை கூடாது என்று சொன்னார்கள்.’’ நான் கேட்டேன்.
‘‘ஒரு பெண்ணின் மீது ஆணுக்கு ஆசை வருகிறது. அது அவனைத் தகாத செயலைச் செய்து அழித்துவிடுகிறது. பெண்ணாசை என்று சொல்லி விட்டீர்கள். ஆனால் பெண், ஒரு ஆணின் மீது கொண்ட ஆசையினால் விளையும் விளைவுகளையும் நாம் தினசரி செய்தித் தாள்களிலே படிக்கிறோமே.’’
அவர் என்னைப் பார்த்தார்.‘‘ஆசை என்பது ஆணுக்கு மட்டும் உரியதா? தகாத ஆசை என்பது பெண்ணுக்கும் வரும் தானே.’’அவர் சற்று வியப்போடு பார்த்தார்.
நான் சொன்னேன்.
‘‘நீங்கள் படித்த அதே ராமாயணத்தில் இதற்கு சான்று இருக்கிறது. இராவணன் சீதையின் மீது கொண்ட அளவற்ற ஆசையினால் தகாத செயலைச் செய்தான். இராமன் இல்லாத நேரத்தில் அவளைக் கவர்ந்து வந்து இலங்கையில் அசோகவனத்தில் தனிமைச் சிறையில் வைத்து தானும் அழிந்தான். ஆனால் அவனுக்கு அந்த ஆசையைத் தூண்டி விட்டது யார் தெரியுமா?‘‘யார்?’’
‘‘சூர்ப்பனகை. அவள் முதன் முதலில் இராமனைப் பார்த்தவுடன் ராமன் மீது ஆசை வருகிறது. அந்த ஆசையை அவள் தீர்த்துக் கொள்வதற்கு முயல்கிறாள். அது நடக்கவில்லை. அதற்குத் தடையாக சீதை இருப்பதாகக் கருதி சீதையின் அழகை இராவணனிடத்தில் சொல்லி இராவணனுக்குப் பெண்ணாசையைத் தூண்டியவள், சூர்ப்பனகை தான். எனவே, தகுதியற்ற எல்லா ஆசைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். ஆசை என்பது ஆணுக்கு வந்தாலும் பெண்ணுக்கு வந்தாலும் அது தகாத ஆசையாக இருந்தால் அதனுடைய விளைவு விபரீதமாகத்தான் இருக்கும் என்பதை இராமாயண காலத்திலிருந்து இன்றைய செய்தித் தாள்களில் வருகின்ற செய்திகள் வரை நாம் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் ஆசையை விடு. என்று சொன்னார்கள்.இதை பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடுகிறார்.
ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி
அன்னை அத்தன் என் புத்திரர் பூமி,
வாச வார் குழலாள் என்று மயங்கி
மாளு மெல்லைக் கண் வாய் திறவாதே,
கேசவா புருடோத்தமா என்றும்
கேழலாகிய கேடிலி என்றும்,
பேசுவார் அவர் எய்தும் பெருமை
பேசு வான் புகில் நம் பரமன்றே.
பேராசை பெருநஷ்டம் அல்லவா.
ஆசை என்று சொல்வது தர்மத்திற்கும் தகுதிக்கும் புறம்பான பேராசை என்று தான் பொருள்.