தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோவிந்தன் என்னும் நாராயண தீர்த்தர்

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வில்லாத்தூர் கிராமத்தில் இசைக் கலைஞர் வம்சத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். தள்ளவஜ்ஹூல குடும்பத்தைச் சார்ந்தவர் நீலகண்ட சாஸ்திரி. இவர் சாஸ்திர சம்பிரதாயத்தோடு ஒழுக்கநெறியுடன் திகழ்ந்தார். இவர் தன் மனைவி பார்வதி அம்மையாருடன் இல்லற தர்மத்தைக் கடைப்பிடித்து, மங்களகிரிக்கு அருகில் உள்ள காஜா என்ற இடத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர். திருமாலின் திருவடிகளைத் தவிர மற்றொரு தெய்வம் இல்லை என நித்தியபடி சேவித்து மகிழ்ந்தனர். இறை அருளால் இத்தம்பதியினருக்கு 1650 ஆம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் அழகைக் கண்டு இருவரும் பூரிப்பு அடைந்தனர். ஒரு நன்னாளில் தம் மகனுக்கு கோவிந்தன் என்ற திருநாமத்தைச் சூட்டினர்.

கோவிந்தனுக்கு வேதங்கள், பாகவத புராணம், இசை, நாட்டியம் ஆகிய கலைகள் அத்தனையும் கற்பித்தார். கோவிந்தனின் பொறுமையும் அழகும் கண்ட அக்கிராம மக்கள், மகிழ்ச்சி அடைந்தனர். கோவிந்தன் வாலிப வயதை அடைந்தார். பெற்றோர் தம் கடமையை முடிக்க நல்லதொரு குணவதியைத் தேடி கண்டு மணம் முடித்தனர். சில காலம் வாழ்ந்தார். ஆனால், இல்லற வாழ்க்கையில் கோவிந்தனால், முழுமையாக ஈடுபட இயலவில்லை. விந்தையிலும் விந்தை ஏதோ ஒரு பந்தம் தன்னை ஈர்ப்பதாக உணர்ந்தார். அதில் தன் மனம் நாடுவதையும் மற்ற லௌகீய விஷயங்களில் கலந்து கொள்ள விரும்பாமல் ஒதுங்கியே இருந்தார்.

துறவு கோலம்

ஒரு சமயம் பக்கத்து கிராமத்திற்கு சென்று திரும்பி வரும் பொழுது, ஆற்றின் ஆழம் அறியாமல் இறங்கிவிட்டார். நீந்தி கரையேற முடியாமல் நீர் மட்டம் ஏறிக் கொண்டே வந்தது.

நீந்த முடியாமல் தத்தளித்து தவித்தார். அந்த நேரத்தில் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றபடி ‘ஆபத்து சன்னியாசம்’ நினைவுக்கு வந்தது. உடனே சன்னியாசம் பெறுகிறேன் என்று கூறியதும், ஆற்றின் நீர்மட்டம் குறைந்தது, அவர் கரையேறினார். இதுவே மறுபிறப்பாகும். அதனால் இல்லற பந்தத்தை விட்டு துறவறத்தை மேற்கொண்டார்.

இறைவனை காண மனம் துடித்தது

மன அமைதியை தேடி அலைந்தார். அப்பொழுது அவருக்கு சட்டென உதயம் ஆயிற்று. குரு உபதேசமும், ஆசியும் இல்லை எனில் இறைவன் அருள் கிடைக்காது அனுபவ பூர்வமாக உணர்ந்தார். எனவே, குருவைத் தேடி கிளம்பினார்.

வாரணாசி செல்லுதல்

காசிக்கு சென்று கங்கையில் முழுகி துறவறத்தை முழுமையாக ஏற்று, தனக்கு குரு கிடைக்க வேண்டி பிராத்தித்தார். பின்பு பல நாட்கள் கங்கை கரை படித்துறையில் நீண்ட நேரம் அமர்ந்து, கண்களை மூடி தியானித்த வண்ணம் இருந்தார். ஒரு நாள், ஸ்ரீ சிவராமானந்த தீர்த்தர் என்பவர் கங்கையில் மூழ்கி எழுந்தார். கரையில் அமர்ந்து தியானித்த கோவிந்தனை கண்டு வியப்படைந்தார். அவர் முகத்தில் தெரிந்த தெய்வீக தேஜசை கண்டு பூரிப்பு அடைத்தவர், அவர் அருகில் நின்று உற்று நோக்கினார். தியானம் கலைந்து விழித்த கோவிந்தன்,

எதிரில் நிற்பவரை பார்த்து கைகளை குவித்து வணங்கினார்.

“நீ எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டதும்;

“மங்களகிரியில் இருந்து வருகிறேன்” என்று பதில் உரைத்தார் கோவிந்தன்.

“உன் பெயர் என்ன?”

“கோவிந்தன்”

“நீ எதை தேடி இங்கே வந்துள்ளாய்?”

“நான் குருவை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

“உனக்கு குரு கிடைத்துவிட்டார் என எண்ணிக்கொள்” என்றார். அதை கேட்டு பரவசம் அடைந்த கோவிந்தன்;

“சுவாமி யார் என் குரு? கூறுங்கள்” என மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார்.

“நானே”!

“சுவாமி..! சுவாமி..!” என சிவராமானந்தர் திருவடிகளில் வணங்கினார்.

“சீடனே! என் பெயர் சிவராமானந்த தீர்த்தர். உனக்கு புதிய நாமகர்ணம் சூட்ட விரும்புகிறேன்”.

“குருவே தங்கள் விருப்பப்படி திருநாமம் சூட்டி நிலையாமையில் இருந்து வழிகாட்டுங்கள்” எனப் பணிந்து வணங்கினர்.

“சீடனே இன்று முதல் “கோவிந்தன்” என்ற பெயரை மாற்றி `‘நாராயண தீர்த்தர்’’ என்னும் திருநாமம் சூட்டுகிறேன்” என்றுகூறி வாழ்த்தி சன்னியாசம் வழங்கினார்‌. பின்பு

“சீடனே, நீ உடனே புறப்பட்டு தீர்த்த யாத்திரை சென்று வா” என்று வழி அனுப்பினார்.

தீர்த்த யாத்திரைக்கு செல்லுதல்

நாராயண தீர்த்தர், குரு சொல்படி பல இடங்களில் உள்ள கோயில்களுக்கு யாத்திரை மேற்கொண்டு, இறுதியில் திருமலை அடைந்தார்.

வாழ்வில் நடந்த சம்பவம் என்ன?

சில நாட்கள் திருப்பதியில் தங்கி திருமலையானை மனமுருக வேண்டி, அங்கிருக்கும் மலை அடிவாரத்தின் குகையில் அமர்ந்து தியானம் செய்தார். அவர் உள்ளத்தில் ஏதோ ஒன்று ``தஞ்சைக்கு செல்’’ என்று மீண்டும் மீண்டும் உரைத்தது. அச்சொல்லை மீற முடியாமல் வேங்கடமலையை விட்டு தஞ்சைக்கு திரும்பினார். வழியில் வயிற்று வலியினால் துடித்தார். அதற்கு மேல் நடக்க முடியாமல், வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் நடந்தபோது, கார் இருள் சூழ்ந்தது. அந்த சமயத்தில், காவிரி ஆற்றின் அருகே உள்ள நடுகாவிரி என்ற சிறிய கிராமத்தை அடைந்தார். வயிற்று வலி அதிகமாகிற்று. அங்கு உள்ள பிள்ளையார் கோயிலில் அன்று இரவு படுத்தார். ஆனால் வலி காரணமாக உறக்கம் வரவில்லை. வலி வின் வின்னென அவரை வாட்டி வதைத்தது. உறக்கம் வராமல் துடித்த துடிப்பில் கண்ணனை எண்ணி மனதில் வணங்கினார், நாராயண தீர்த்தர்.

``கண்ணா! உன் திருவடியை சரண் அடைந்தேன். பொறுக்க முடியாமல் துடிக்கும் வயிற்று வலிக்கு வழி காட்ட மாட்டாயா?’’ என்று கேட்டு கண்ணனின் திருநாமம் சொல்லிக் கொண்டே படுத்தார். சற்று நேரம் கண் அயர்ந்து உறங்கினார். “நாராயணா! நாராயணா..” என்று தன் பெயர் அழைப்பது போல உணர்ந்து, கண்ணை திறக்க முடியாது திறந்தார். எதிரில் யாருமே இல்லை. அசரீரி மட்டுமே கேட்டது.

``நாராயணா.. பொழுது விடிந்ததும் உன் கண் எதிரில் முதலில் எது தோன்றுகின்றதோ, அதன் பின் செல். அது உனக்கு வழிகாட்டும்’’ எனக் கூறி அசரீரி ஒலி நின்றுவிட்டது. அடுத்த நாள் விடிந்ததும், கண்ணை விழித்து பார்த்தார். எதிரில் ஸ்வேதவராகம் (வெள்ளை பன்றி) ஒன்று மரத்தை சுற்றி வருவதைக் கண்டார். ஓ! இதன் பின் செல்ல இறைவன் நமக்கு கட்டளை இட்டிருக்கிறார். நாம் தேடியது கிடைக்கும் என்று எண்ணி அதன் பின் நின்றார். பன்றி, நாராயண தீர்த்தரை பார்த்ததும் அவருக்கு முன்பாக நடந்து வழிகாட்டியது. நாராயணரும்‌ அதன் பின் தொடர்ந்து சென்றார்.

வராகம் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தது. பின்பு பூபதி ராஜாபுரம் என்ற கிராமத்தை அடைந்தது. அங்கு வெங்கடேச பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலுக்குள் நுழைந்தது. அந்த வெள்ளை பன்றியின் பின்னால் தொடர்ந்த நாராயண தீர்த்தர், உள்ளே நுழைந்தார். என்ன ஆச்சரியம் பன்றி மாயமாக மறைந்துவிட்டது.

வெள்ளைப் பன்றி எங்கே சென்றது என்று தேடினார். எங்கெங்கு தேடியும் பன்றி தென்படவே இல்லை. தேடி அலைந்து ஒரு பாறாங்கல் மீது அமர்ந்தார். அப்பொழுதுதான் கவனித்தார், தன்னுடைய தீராத வயிற்று வலி நீங்கியிருந்தது. கிருஷ்ணன் பன்றி உருவத்தில் வந்து தன்னை ஆட்கொண்டதை எண்ணி மகிழ்ந்தார். ஆகையால், பூபதிராஜாபுரம் கிராமம் “வரகூர்” என்று மருவி இவ்விடம் அழைக்கப்படுகிறது.

நாராயண தீர்த்தர், வரகூர் கிராமத்துலேயே தங்கியிருந்து கண்ணனை துதித்து வந்தார். கோகுல கண்ணன் நிகழ்த்திய லீலைகள் ஒவ்வொன்றையும் ரசித்து தன் கண் முன் கொண்டு பஜனைப் பாடல் களாக இசைத்தார். வெங்கடேச பெருமாளை கண்ணனாகவே பாவித்து கீர்த்தனைகளும் காவியங்களும் இயற்றினார். 15க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். நாட்டிய சாஸ்திரத்திலும் சிறந்த புலமை பெற்றவர், 34 வகையான ராகங்களை அறிந்தவர்.

சலங்கை ஒலி

பாகவதத்தில் இருந்து கிருஷ்ணனின், பால லீலைகள் முதல் ருக்மணி கல்யாணம் வரை கீர்த்தனையாக பாட விரும்பினார். பாடல்களை இயற்றும் பொழுது ஏற்பட்ட ஒரு அருமையான சம்பவம். ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ என்ற பாடல் பாடுகின்ற பொழுது, கண்ணன் திரைக்குப் பின்னால் தம் கால்களில் சலங்கையைக் கட்டிக் கொண்டு அழகாக நாட்டியம் ஆடினார். நாராயண தீர்த்தர் எப்பொழுதெல்லாம் அவர் பாடுகின்றாரோ, அப்பொழுதெல்லாம் அந்த சலங்கை ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். ஆஞ்சநேயர் பெருமாளும் இந்த நடனத்திற்கு ஏற்ப தாளம் போடுவாராம். எனவே இவரை “தாளம் போட்ட ஆஞ்சநேயர்” என்று ஊர் மக்கள் அழைத்தனர். ‘கிருஷ்ணன் லீலா தரங்கிணி’ மங்களம் பாடி முடிக்கும் வரை அவருக்கு கிருஷ்ணனின் சலங்கை ஒலி ஒலித்து கொண்டே இருந்தது.

மங்களம் முடித்ததும் அந்த ஒலியும் நின்று விட்டது. ஆகவே அந்த காவியம் இயற்றும் பொழுதெல்லாம் அவர் உடனே நாட்டியமாடி, அவருக்கு உறுதுணைப் புரிந்தனர், கிருஷ்ண பகவான் மற்றும் ஆஞ்சநேயர். அன்று ஆண்டாள் எப்படி ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலை ஆயர்பாடி கோகுலமாகவும், அங்கிருக்கும் எம்பெருமான், கண்ணனாகவும் கொண்டு திருப்பாவை படைத்ததுபோல, நாராயண தீர்த்தர் வரகூரில் உள்ள வெங்கடேசப் பெருமாளை கண்ணனாக பாவித்து அவரையே நினைத்து பாடல்கள் பாடினார். இக்கீர்த்தனைகள், நம் இல்லங்களில் பாடினால் நம்முடைய பாவங்கள் நீங்கும். ஏனென்றால் கண்ணனே நடனமாடி காட்சியை நம் கண்முன்னே கொண்டு வருவார்.

நடைபெறும் விழாக்கள்

உறியடி திருவிழா, ருக்மணி கல்யாணம், அஷ்டமி திருநாள், வழுக்கு மரம் ஏறுதல், போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில், திருவையாற்றில் இருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

முத்தி

1745 ஆம் ஆண்டு நாராயண தீர்த்தர் இறையருள் பெற்றார். எவ்வாறு எனில், குடமுருட்டி ஆற்றங்கரையில் ஒரு பெரிய மாமரத்தின் அடியில் அமர்ந்து, இறைவனை தியானத்திற்கும் பொழுதே அவருடைய உடலில் இருந்து உயிர் பிரிந்தது என்றும், ஒரு சிலர் அமர்ந்தபடியே ஜீவசமாதி அடைந்தார் என்றும் கூறுகின்றனர். இவர் மாசி மாதம் சுக்ல அஷ்டமி குரு வாரத்தில் ஜீவசமாதி அடைந்ததால், இந்த புனிதமான இடத்தில் விரிந்து பரந்த மாமரத்தின் கீழ் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. முடிந்தால் வரகூர் சென்று இவர் ஜீவ சமாதியை வணங்கி அருளாசி பெறுவோம்.

பொன்முகரியன்

Related News