?விரதம் என்பது பட்டினி கிடப்பதா?
ராமமூர்த்தி, பண்ரூட்டி.
பட்டினி கிடப்பது மட்டுமல்ல. பகவானை நினைப்பதுதான் விரதம். பெரியாழ்வாரின் ஐந்தாம் பத்து பன்னிரண்டாம் திருமொழியில் வரும் 438-வது பாசுரத்தில் இந்த விஷயத்தை அழகாக விளக்கும்.கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
வேத நாள்மலர் கொண்டு உன பாதம்
நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே.
இந்த பாடலில், பெரியாழ்வார், பகவான் நாராயணனை நோக்கி, ‘‘நான் உன்னை எப்போதும் நினைப்பதால், உண்ணாத நாட்களில் எனக்கு பசி என்பதே தெரிவதில்லை. உன் பாதங்களை எப்போதும் நினைக்கும் நாளே எனக்கு உண்மையான நாளாகும். அந்த நாள் தவறினால், அது எனக்கு பட்டினி நாளாகும்’’ என்று கூறுகிறார். எனவே, பகவானை நினைக்காததுதான் பட்டினி நாள். மற்றபடி தெய்வ சிந்தனை பூஜை செய்யாமல் பட்டினி கிடந்தாலும், அந்தக் கணக்கு உண்ணா நோன்பு கணக்கில்
(விரதம்) சேராது.
?மன்னிப்பு கேட்பதற்கு என்ன வேண்டும்?
- முருகவேல், சேலம்.
மன வலிமை வேண்டும். மன தைரியம் உள்ளவன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பான். வலிமையானவன் பிறர் செய்த தவறுகளை மன்னித்து விடுவான். சந்தோஷம் வேண்டும் என்ற நினைப்பவன் தவறையே மறந்து விடுவான். இதை சாஸ்திரத்தில் “காணாக்கண் கேளாச் செவி” என்றார்கள். பிறர் தோஷங்களை பார்க்காதே, பிறருடைய தோஷங்களைக் குறித்துச்
சொல்வதைக் கேட்காதே என்று பொருள்.
?போராட்டம் இல்லாமல் வாழ முடியாதா?
- ராமபிரியா, முசிறி.
போராட்டம் தான் நம்மை வாழ வைக்கிறது. நம்முடைய உடலையே எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளுக்குள் எத்தனை போராட்டம் நடக்கிறது தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும் ஆயிரக்கணக்கான கிருமிகளும் பாக்டீரியாக்களும் உண்ணும் உணவின் மூலமும் சுவாசிக்கும் காற்றின் மூலமும் இருக்கும் இடத்தின் மூலமும் உள்ளே போய்க்கொண்டே இருக்கின்றன. உள்ளுக்குள் இவற்றையெல்லாம் அடித்துத் துரத்த ஒரு போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
இதனை மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு திறன் என்று குறிப்பிடுவார்கள். அது இருக்கும் வரை அதாவது போராட்டம் இருக்கும் வரைதான் நமக்கு வாழ்வு. உள்ளுக்குள் இருக்கக் கூடிய இந்த விஷயங்கள் எல்லாம் போராடாமல் அமைதியாக இருக்கலாம் என்று சொன்னால் நாமும் அமைதி அடைய வேண்டியதுதான். பிறந்து விட்டோம். போராடித்தான் வாழ வேண்டும். வேறு வழியில்லை என்பதை புரிந்து கொள்வது தான் இதனை எதிர்கொள்ளும் வழி.
?ஆயுள் நிர்ணயம் ஜோதிடத்தில் செய்ய முடியுமா?
- ஸ்ரீனிவாசன், ஆற்காடு.
முடியும் என்றுதான் சொல்கிறார்கள். ஜோதிடத்தில் அதற்கான கணக்கு வழக்குகள் இருக்கின்றன. துல்லியமான கணக்குகள் போட்டுச் சொல்வதற்கு ஆற்றல் உள்ள நிபுணர்களும் இருக்கிறார்கள். ஆனால், மழை, மகவு, ஆயுள் மூன்றும் ரகசியமானது. இதை எல்லாம் வெளிப்படுத்த இறைவன் ஏதோ ஒரு விதத்தில் அனுமதித்தால் மட்டுமே துல்லியமாகச் சொல்ல முடியும். மற்றதெல்லாம் தோராயமான கணக்குதான்.
பல பழைய ஜாதகங்களில் ஆயுர் தாய கணக்குப் போட்டு, ஜாதகம் எழுதும் போதே, ஆயுளையும் ஆண்டு மாதம் நாள் கணக்கில் நிர்ணயித்து எழுதி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஜாதகங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், பெரும்பாலும் அதன்படி துல்லியமாக நடந்ததில்லை. இந்த விஷயத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். பிறக்கின்ற அனைவரும் ஒருநாள் இந்த நிலவுலகத்தில் வாழ்க்கையை முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். அப்படி வாழும் காலத்தில் நன்றாக வாழ்வதற்கு என்ன வழி என்று தான் பார்க்க வேண்டும். ஆயுளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும், சமூக அமைதிக்கும் மிகப்பெரிய கேடு இருக்கிறது.
?எதை மறக்க வேண்டும்? எதை நினைக்க வேண்டும். - சரத்குமார், திருப்பூர்
எப்பொழுதும் பிறர் செய்த நல்லவற்றை நினைக்க வேண்டும் பிறர் செய்த கெட்டவற்றை மறக்க வேண்டும் அதே சமயம் நாம் ஏதாவது பிறருக்கு நல்லது செய்து இருந்தால் அதையும் மறந்து விட வேண்டும் அடிக்கடி சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்கக் கூடாது. இது சம்பந்தமாக ஒரு நடந்த சம்பவத்தைச் சொல்லுகின்றேன்.ஒரு மாணவன். மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லாத நிலையில் அவனுடைய ஆசிரியர், ‘‘யாரிடமாவது உதவி பெற்றுத் தருகிறேன்.
நீ படிப்பை நிறுத்த வேண்டாம்’’ என்று சொல்லி, தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவரிடம் அந்த மாணவனுக்காக உதவி கேட்கிறார். அவர் ‘‘அப்படியா செய்து விடுவோம்’’ என்று உதவுகின்றார். அந்த மாணவர் படிப்பின் நிறைவில், ஆய்வு சமர்ப்பிக்க வேண்டி இருக்கிறது. அப்பொழுது தனக்கு படிப்பில் உதவிய அந்த பணக் காரரின் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று, தனக்கு யார் உதவியது என்று ஆசிரியரிடம் கேட்கிறார்.
அவர் “அனுமதி இல்லாமல் சொல்லக்கூடாது’’ என்று பணக்காரரிடம் ‘‘நீங்கள் உதவி செய்ததால் அந்த மாணவன் நல்ல படியாக படிப்பை முடித்து விட்டான். அவன் ஆய்வுக் கட்டுரையில் உங்கள் பெயரைக் குறிப்பிட விரும்புகிறான்’’ என்றார். உடனே அவர் ‘‘இல்லை இல்லை. பெயர் வேண்டாம்’’ என்று மறுத்துவிடுகிறார்.
அதற்கான காரணத்தைக் கேட்கின்ற பொழுது அந்த பணக்காரர் சொன்னது. ‘‘நான் யாருக்கு உதவி செய்தேன் என்பது எனக்கும் தெரிய வேண்டாம். யாரிடம் உதவி பெற்றோம் என்று அந்தப் மாணவனுக்கும் தெரிய வேண்டாம். உங்களுக்குத் தெரிந்தது உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.
எப்பொழுதாவது அந்த மாணவரைச் சந்திக்கின்ற பொழுது என் உதவியால்தான் அவன் இந்த அளவுக்கு வந்திருக்கிறான் என்று என்னை அறியாமலேயே எண்ணம் தோன்றிவிடும். இது வேண்டாம். அந்த மாணவருக்கும் தெரிய வேண்டாம். எனக்கும் அவர் யார் என்று தெரிய வேண்டாம். உங்களுக்குத் தெரியும் இறைவனுக்குத் தெரியும் என்றார். இது நடந்த சம்பவம். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
?திருமூலர் பாடல்களில் எது மிகச்சிறந்த பாடல்?
- வாசுதேவ நாராயணன், பரமக்குடி.
சர்க்கரைப் பொங்கலில் எந்தப் பகுதி சுவைக்கும் என்று கேட்பது போல் இருக்கிறது திருமூலரின் பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதமான பாடல்கள். அதில் மிகச்சிறந்த இரண்டு பாடலை மட்டும் எப்பொழுதும் மனதில்
நினைத்துக் கொள்ள வேண்டும்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே
இதில் அவர் சொல்லுகின்ற சுருக்கமான கருத்து மிக அற்புதமானது. இறைவனுக்குச் செய்யப்படும் பூஜையை விட மனிதர்களுக்குச் செய்யப்படும் உதவி சிறந்தது என்பதை வலியுறுத்துகிறார். இன்னொரு கோணத்தில் இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டியதுதான். ஆனால் ஒரு மனிதனின் பசியை அலட்சியப்படுத்திவிட்டு இறைவனுக்கு பூஜை செய்வது இறைவனுக்கு உகப்பைத் தராது. அடுத்த ஒரு பாடல்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே.
அன்பு வேறு, சிவம் வேறு, இரண்டும் ஒன்றல்ல; வேறு வேறு என்று சொல்பவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே சிவம் என்பதை அறியாதிருக்கிறார்கள். அன்புதான் சிவம் என்பதை அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவான சிவமாய் ஆகிவிடுவார்கள்.எத்தனை வியப்பான கருத்து. இந்த இரண்டு பாடலின் கருத்தை மட்டும் பின்பற்றினாலே இந்த மனித குலம் உயர்ந்து விடுமே. இவர்கள் தனியாக சொர்க்கம் போக வேண்டிய அவசியமே இல்லை. இந்த உலகமே சொர்க்கம் ஆகிவிடும்.
?அதிர்ஷ்டம் என்பது என்ன?
- செந்தமிழன், சென்னை.
எதிர்பாராத ஒரு நன்மை நடப்பதை அதிர்ஷ்டம் என்கிறோம். நம் இஷ்டத்துக்கு வராமல் அது இஷ்டத்துக்கு வருவதை அதிர்ஷ்டம் என்பார்கள். ஆனால், அதிர்ஷ்டம் என்பது இது மட்டுமல்ல. அது ஒரு குணம். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுகின்ற திறமை கூட அதிர்ஷ்டம்தான். ஒரு அரேபியப் பழமொழி உண்டு. ‘‘நைல் நதியில் தள்ளிவிட்டாலும் அதிர்ஷ்டக்காரன் அங்கே ஒரு மீனை கவ்விக் கொண்டு வெளியே வந்து விடுவான்.’’ இது ஒரு நுட்பமான பொருளைச் சொல்லுகின்றது.
கஷ்டத்தைச் சமாளித்து கொண்டு வருவான் என்பது மட்டும் இதன் பொருள் அல்ல. அந்த கஷ்டத்தின் மூலம் வெளியே வரும் பொழுது தனக்குரிய நன்மை ஒன்றையும் எடுத்துக் கொண்டு வருவான் என்று பொருள். இந்த அதிர்ஷ்ட குணம் இருந்து விட்டால் எந்த கஷ்டத்தையும் கடந்து முன்னேறி விடலாம்.
?யோக வாசிஷ்டம் என்றொரு நூலைச் சொல்லுகிறார்களே, அது எதில் உள்ளது? அதன் சிறப்பு என்ன?
- ஆர்.மதுமிதா, திரு்ச்சி.
யோக வாசிஷ்டம் சுமார் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டது. மகரிஷி வசிஷ்டர் இராமருக்குக் கூறியதாகச் சொல்லப்படும் நூல். (வால்மீகி இராமாயணத்தில் இல்லை. தனி நூல். ஞானத் தேடலுக்கும், முக்திக்கும் வழிகாட்டும் நூல். வசிஷ்டர் தசரத மன்னன் சபையில், விஸ்வாமித்திரர், வால்மீகி, வியாசர் போன்ற மகரிஷிகள் அமர்ந்திருந்த இடத்தில் உலகம், மனித மனம், அகங்காரம், அவற்றின் தன்மை, பிறப்பு - இறப்பு இவற்றிலிருந்து விடுபட்டு முக்தி பெறுதல் போன்றவற்றை விளக்கி, ஜீவன் முக்தி நிலைகளைப் பற்றி விளக்குவதாக அமைந்துள்ள நூல் ஒரு சின்ன விஷயத்தை சொல்லுகின்றேன்.
விழிப்பு நிலையில் கனவு பொய்யாகத் தோன்றுகிறது. கனவு நிலையில் விழிப்பு நிலை பொய்யாகத் தோன்றும். இதைப் போன்ற ஒரு கேள்விக்குத்தான் அஷ்டாவக்ரர் ஜனக மகாராஜாவுக்கு விளக்கம் அளித்தார். இரண்டு நிலையிலும் ஒன்றுக்கு ஒன்று பொய்யாகத் தோன்றுகிறது. ஆனால், இரண்டு நிலையிலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் மெய்யாக இருக்கிறது. அதுதான் ஆன்மா.
இன்னொரு விஷயம். வாழ்வில் இறப்பு என்பது பொய்யானது. இறப்பில் வாழ்வு என்பது இல்லாத ஒன்று. ஆனால் இதே விஷயத்தை மேல்நாட்டுகாரர்களும் சிந்தித்து இருக்கிறார்கள்.
‘‘நீ ஏன் இறப்பைப் பற்றி பயப்படுகிறாய்? நீ இருக்கின்ற வரை அது வரப்போவதில்லை. அது வந்தபின் அதைப் பற்றி சிந்திப்பதற்கு நீ இருக்கப் போவதில்லை பிறகு ஏன் கவலை?’’ என்று இப்படி நிறைய விஷயங்கள் யோக வாசிஷ்டத்தில் உண்டு.
?அதர்வண வேதம் இன்று இருக்கிறதா? பெரும்பாலும் மூன்று வேதங் களைத்தானே சொல்லுகின்றனர்?
பூர்வஜா, மதுரை.
அதர்வண வேதம் பிரம்ம வேதம் எனப்படும். அற்புதமான வேதம். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. உச்சாடனம், மாந்த்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம். சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலையை விவரிக்கிறது. பெரும்பாலும் இவ்வுலகத்தில் உள்ள பலாபலன்களை விரைவாக அடைய பல்வேறு விதமான மந்திர பிரயோகங்களையும் முறைகளையும் தெரிவிக்கிறது.
சாம வேதத்தால் பகவான் சந்தோஷப்படும் பொழுது தனக்கு வேண்டியதைக் கேட்பதற்கு உதவுவது அதர்வண வேதம். எந்த தெய்வத்திடம் எந்த பிரார்த்தனை வைத்தால் எப்படி நிறைவேறும் என்பதை எல்லாம் சொல்வது அதர்வண வேதம். ஆனால் மோட்சத்தின் விருப்ப முடையவர்கள் அதர்வண வேதத்தின் பக்கம் செல்வது இல்லை. ஞான மார்க்கத்தை அடைய வேண்டும் என்று நினைப் பவர்கள் அதர்வண வேதத்தை அதிகம் பயன்படுத்துவது இல்லை.
தேஜஸ்வி