உள்ளாற்றலைப் பேராற்றலாக்குங்கள்!
ஒரு மலையின் அடிவாரத்தில் இரண்டு பாறைகள் நெடு நாட்களாக மழையிலும், காற்றிலும் கிடந்து தூசி நிறைந்து பாசி பிடித்துகிடந்தது. அதில் முதல் கல்லுக்கு, நாம் ஏன் இப்படியே ஒரு அவலட்சணம் பொருந்திய கல்லாகவே இருக்க வேண்டும்? வேறு இடம், வேறு வடிவம் கொள்ளலாமே என நினைத்து, இரண்டாம் பாறையிடம் தன் விருப்பத்தை சொன்னது. உடனே அப்பாறை, நாம் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் கல்லாகவே கிடப்போம். ஆகவே, இப்படியே இருத்தல் நலமே எனக் கூறியது. கொஞ்ச நாட்களில் சிற்பிகளைக் கொண்ட ஒரு குழு அந்த இடத்திற்கு வந்தது. அவர்கள் ஒவ்வொரு பாறையாய் ஆராய்ந்து இவ்விரு பாறைகளே மிகச் சிறந்தவை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
தலைமைச் சிற்பி, நாளை நாம் இங்கு வந்து இவ்விரு பாறைகளையும் எடுத்துச் செல்வோம் என்று கூறினார். அவர்கள் போன பின் முதல் பாறை சொல்லியது;
‘‘ஆஹா! நாம் எதிர்பார்த்த மாற்றம் வரப்போகிறது. நாம் நல்ல சிலையாக, சிற்பமாக மாறப்போகிறோம்’’ என்று குதூகலித்தது. ஆனால், இரண்டாம் பாறையோ,
‘‘அவர்கள் நம்மை சுத்தியால் அடிப்பார்கள், உளியால் செதுக்குவார்கள் - வலி உயிர் போகும். எனவே நாளை அவர்கள் வரும் போது நான் பெயர்த்து எடுக்க முடியாதபடி கடினமாக மாறி பூமியோடு ஒட்டிக் கொள்வேன்’’ என்றது. மறு நாள் சிற்பிகளின் குழு வந்தது. முதல் பாறையை மட்டுமே அவர்களால் சுலபமாக பெயர்க்க முடிந்தது. எனவே, ஒரு பாறையே போதும் என்ற எண்ணத்தில் சென்றுவிட்டனர். கொண்டு சென்ற பாறையை அடித்து, உடைத்து, செதுக்கி தம் திறமைகளால் பொலிவு மிக்க ஒரு வீரனைச் சிற்பமாக உருவாக்கினர். மாற்றத்தை விரும்பியதால் தன்னுள் இருந்த ஒரு வீரனை வெளிக் கொணர்ந்தது முதல்பாறை. தன்னுள்ளும் ஒரு வீரன் இருந்தாலும், மாற்றத்தை விரும்பாமல் மதிமயக்க மனதோடு இருந்ததால், இரண்டாவது பாறை மலையேறுவோரின் காலடிப் படியாய் மாறிப்போனது.
இரு பாறைகளுக்குமான வாய்ப்புகள் ஒன்றே. ஆனால் மாற்றத்தை மனதார ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே நம் உள்ளிருக்கும் ‘வீரன்’ வெளிப்படுகிறான். இறைமக்களே, உங்கள் வாழ்வில் மாற்றத்தை எதிர்பாருங்கள். சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான். அதில் மாற்றம் ஒன்றே மாறாதது. உங்களுக்குள் புதைந்து கிடக்கும் உள்ளாற்றலை இயேசு கிறிஸ்துவின் வார்த்தை களால் மனதை நிரப்பி,
பேராற்றலாக்குங்கள்.
‘‘இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறிவீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’’ (ஏசா.43:19) என இறைவன் கூறியுள்ளார். எனவே இறைவனிடம் புதிய காரியங்களை எதிர்பாருங்கள்.
‘‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்’’ (பிலி.3:14) என பக்தன் கூறியது போல நீங்களும் இறைவன் இயேசுவை உள்ளத்தில் வைத்து, இலக்குகளை அடைய முன்னோக்கி ஓடுங்கள். உள்ளாற்றல் பேராற்றலாகும்.
- அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்