சுக்கிரனை சாதாரணமாக எடை போட வேண்டாம்!
சுக்கிரனைப் பற்றித் தொடர்ந்து நாம் பார்த்து வருகின்றோம். சுக்கிரன் அற்புதமான கிரகம். ஆனால், அதே நேரம் ஆபத்தான கிரகம்கூட. சுக்கிரன் அதிக வலிமை பெறுவதோ, அதிக பலவீனமாக இருப்பதோ தவறு. இது பொதுவாக எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும் என்றாலும், சுக்கிரன் போகக்காரன் என்பதால் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. சுக்கிரன் வலுத்து பாதகாதிபதியோடு அல்லது அஷ்டமாதிபதியோடு சேர்ந்துவிட்டால், அதைவிட ஆபத்து வேறு ஏதுமில்லை. சிலரை கோடீஸ்வரர்களாக மாற்றி வண்டி, வாகனம், ஆடம்பரம் என்று வாழ வைத்த அதே சுக்கிரன், சிலரை முழுவதுமாக ஒன்று மில்லாமல் ஆக்கியிருப்பதையும் நாம் பார்க்கலாம். சுக்கிரனுடைய ஆதிபத்தியம், சுக்கிரனுடைய ஸ்தான பலம், சுக்கிரன் வாங்கிய சாரபலம் இவ்வளவையும் சீர்தூக்கி பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.
உதாரணமாக, ஒரு தனுர் லக்ன ஜாதகம். பெண் குழந்தை. லக்னத்தில் சுக்கிரன் புதன் இணைந்திருக்கிறார்கள். போகக்காரனாகிய சுக்கிரனும் அறிவுக்காரனாகிய புதனும் இணைந்திருக்கிறார்கள் என்று நாம் மகிழ்ச்சி அடையாதபடி இந்தக் குழந்தைக்கு பிறந்ததிலிருந்து நோய்தான். காரணம், தனுர் லக்னத்திற்கு வேண்டாத சுக்கிரன் லக்னத்தில் வந்து அமர்ந்திருப்பது முதல் குற்றம். தனுர் லக்னத்திற்கு 6, 11க்கு உடைய சுக்கிரன்.
ஆறாம் இடத்திற்கு ஆறாம் இடம் அமர்ந்ததால், நோயைக் கொடுக்கும் பலமான அமைப்பாக மாறிவிட்டது. அடுத்து அறிவைக் கொடுக்கின்ற கிரகம் புதன் சேர்ந்திருக்கிறது என்று நாம் பார்க்கின்ற பொழுது, அந்த புதன் தனுர் லக்னத்திற்கு லக்கின கேந்திரத்தில் அமைந்திருக்கிறார். அவர் 7, 10 எனும் இரண்டு கேந்திரங்களுக்கு உரியவர். லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை வலுவாகத் தருகிறது. அடுத்தபடி, புதன் பாதகாதிபதி. பாதகாதிபதியும் நோய்க்குரிய ரோகாதிபதியும் லக்கினத்தில் அமர்ந்திருப்பதால், சுக்கிரன் இந்தக் குழந்தைக்கு நல்ல வாழ்க்கையைத் தரவில்லை. தொடக்கத்தில் இருந்தே நோய்தான். அதைவிட முக்கியம், சுக்கிரன் தனுர் லக்னத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்தது.
இதே சுக்கிரன், தனுசு ராசிக்கு 9வது ராசியாகிய சிம்மத்துக்கு மூன்றாம் இடத்துக்கு உரியவர். எனவே, இந்தக் குழந்தை பிறந்த பிறகு தந்தையும் படாத பாடுபட்டார்.
இன்னொரு ஜாதகம். விருச்சிக லக்னம். சுக்கிரன் லாபஸ்தானத்தில் அதாவது கன்னியில் ராகுவோடு இணைந்திருக்கிறார். விருச்சிக லக்னத்திற்கு 7க்குரியவர், லாபஸ்தானத்தில் அமர்ந்தது நல்ல அமைப்புதான். ஏழாம் இடம் மனைவியைக் குறிக்கும். 11ம் இடம் லாபத்தைக் குறிக்கும். எனவே மனைவியால் இவருக்கு வருமானம் உண்டு. மனைவி அரசு வேலை செய்கின்றார். மாதச் சம்பளம் கணிசமாக வருகிறது. ஆனால், கன்னியில் அவர் அஸ்த நட்சத்திரம். அதாவது, சந்திரன் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். விருச்சிகத்திற்கு சந்திரன் பாக்யாதிபதி மற்றும் பாதகாதிபதி அல்லவா. இங்கே மனைவியால் பாக்கியமும் உண்டு பாதகமும் உண்டு. அதுவும் சுக்கிரன் பாம்பாகிய ராகுவோடு அமைந்ததால் மனைவி எப்பொழுதும் சர்ப்பம்போல் சீறுவார். சீண்டுவார். அதனால் அமைதி இழந்து ஜாதகர் தவிப்பார்.
ஒரு நண்பரின் மகன் ஜாதகம் இது. தனுர் லக்னம். இரண்டில் சுக்கிரன் செவ்வாய். செவ்வாய் உச்சம் என்பதால், பஞ்சமாதி பதியோடு கூடிய சுக்கிரன் என்று எடுத்துக்கொள்ளலாம். அவர் தன குடும்பஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தனுர் லக்னத்திற்கு வேண்டாதவராயிற்றே சுக்கிரன். என்ன செய்வார் இவர்? என்று நினைக்கலாம். ஆனால் அவர் பாக்கிய அதிபதியான சூரியனுக்குரிய உத்திராட நட்சத்திரத்தில் அமர்ந்ததால் பாக்கியத்தைக் கொடுத்தார். ஐந்தாம் அதிபதியோடு ஒன்பதாம் அதிபதி சாரம் பெற்று குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் அமர்ந்ததால், காதல் கொடுத்தார். குரு தசையில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. சுக்கிரனுக்கு வேண்டாத குரு தசையில் எப்படி திருமணம் நடைபெறும்?
குரு, தனுர் லக்னத்தில் கேந்திர பலம் பெற்று சுக்கிரனுடைய நட்சத்திரமான பூராட நட்சத்திரத்தில் அமர்ந்ததால், சுக்கிரனுக்குரிய காதலையும், மனைவியையும், வாழ்க்கையையும் தந்தார்.
இன்னொரு ஜாதகம். மகர லக்கனம். சுக்கிரன் இவருக்கு யோகாதிபதி. காரணம், ஐந்து பத்துக்குரியவர். ஆனால் 12 ஆம் இடமாகிய தனுசு ராசியில் இருக்கிறார். அவரோடு செவ்வாயும் இணைந்து இருக்கிறார். 12ல் செவ்வாய் சுக்கிரன் இருப்பது பாதகமான அமைப்பு அல்ல. பொதுவாகவே செவ்வாய் சுக்கிரன் இணைப்பு என்பது கணவன் மனைவி ஒற்றுமையைக் குறிப்பதுதான். இங்கே மகரலக்கினத்திற்கு செவ்வாய் பாதகாதிபதியாகி சுக்கிரனோடு இணைந்ததால், பாதகத்தைச் செய்துவிட்டார். லக்ன விரயமாகிய 12ஆம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைந்ததால் அதிலும் செவ்வாய் பாதகாதிபதியாகி இணைந்ததால் அதிலும் சுக்கிரன் பூராட நட்சத்திரத்தில் சுயசாரத்தில் அமர்ந்து விரய ஸ்தானம் வலுப்பெற்றதால் கணவரை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
திடீர் மாரடைப்பில் இளம் வயதில் கணவர் காலமாகிவிட்டார். ஆனால், கணவரது வேலை இவருக்குக் கிடைத்தது. காரணம் மகர லக்கினத்திற்கு பத்துக்குரியவர் சுக்கிரன் அல்லவா. எனவே வேலையைக் கொடுத்துவிட்டார்.
இன்னொரு ஜாதகம். மீன லக்னம். மிதுனத்தில் சுக்கிரன், திக் பலத்தோடு இருக்கிறார். திக்பலம் என்பது ஆட்சி உச்சத்தைவிட வலிமை பெற்ற அமைப்பு. ஆனால், லக்னாதிபதி குருவுக்கு சுக்கிரன் பகை. எனவே பகைவர் திக்பலம் பெற்று விட்டால் லக்னாதிபதிக்கு அல்லவா ஆபத்து வந்துவிடும். மீன லக்னத்திற்கு மிக கொடுமையான, பாபர் சுக்கிரன்.
ஆதிபத்திய விசேஷம் இல்லாதவர். அவருடைய ஆதிபத்தியம் மூன்றாவது வீடு. எட்டாவது வீடு. மூன்றாவது வீடு என்பது எட்டாவது வீட்டிற்கு எட்டாவது வீடு. எனவே இவை ஆயுள் மற்றும் மாரக ஸ்தானங்கள். ஆனால், இரண்டு மாரக அதிபதிகள் மாரகத்தைக் கொடுக்க மாட்டார்கள் என்பதால், மாரகத்துக்குச் சமமான அத்தனை தொல்லைகளையும் செய்வார்கள்.
நான்காம் இடத்தில் அமர்ந்ததால், நான்காம் பாவத்திற்கு உரிய எந்த விசேஷமும் அதாவது உயர்கல்வியோ, உயர் கல்வியால் பயனோ, வண்டி வாகன வீடு முதலிய வசதிகளோ, தாய், அன்பு, சுகம் முதலிய அனுபவங்களோ பெரிய
அளவில் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இவர்களில் பெரும்பாலோருக்கு சுக்கிரதிசை வராததினால் இவர்கள் ஒரு விதத்தில் பிழைத்துக் கிடக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். ஒரு வேளை இந்த அமைப்பில் சுக்கிர திசையும் சேர்ந்துவிட்டால் நிச்சயம் மிகுந்த துன்பத்தைக் கொடுத்து விடும்.
எனவே சுக்கிரனை சாதாரணமாக எடை போட வேண்டாம்.