ஆன்மா அழியுமா?
?ஆன்மா அழியுமா?
- பி.கனகராஜ், மதுரை.
ஆன்மாவிற்கு அழிவில்லை. ஆன்மா என்பது நித்யமானது. அது அழிவற்றது என்பதே நம் இந்து மதத்தின் அடிப்படை தத்துவம். ``புனரபி ஜனனம், புனரபி மரணம்’’ என்று சொல்வார்கள். ஆன்மா என்பது ஒரு பிறவியில் ஒரு உடலில் இருந்து நீங்கி மறுபிறவியில் மற்றொரு உடலோடு சேர்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மா செய்யும் செயல்களின் அடிப்படையில், அதன் மற்றொரு பிறவி என்பது அமைகிறது. இதையே ``கர்மவினை’’ அல்லது ``பூர்வ ஜென்ம பாவ புண்ணியம்’’ என்ற பெயரில் அழைக்கிறோம். இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து ஆன்மா விடுதலையைப் பெறுவது ``மோக்ஷப்ராப்தி’’ என்பதாகும். அதனாலேயே மறுபிறவி இல்லாத நிலை வேண்டும் என்று ஞானியர் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
?பிளாஸ்டிக் இலைகளால் ஆன மாவிலையை சிலர் வீட்டு வாசல்களில் கட்டுகிறார்களே, இது சரியா?
- ஜெ.மணிகண்டன், வேலூர்.
சரியில்லை. பிளாஸ்டிக் தோரணம் என்பது அலங்காரமாக தோற்றம் அளிக்கலாமே தவிர, ஆன்மிக உணர்வினைத் தராது. மரத்திலிருந்து பறித்த மாவிலையைத் தோரணமாகக் கட்டுவதே சாலச் சிறந்தது.
?``நாளும் கோளும் என்ன செய்யும் நமச்சிவாயமே என்றிருந்தால்’’... இதற்கு என்ன அர்த்தம்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
விடையையும் நீங்களே சொல்லிவிட்டீர்களே. நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை சதா ஜபம் செய்து கொண்டிருப்பவர்களை, நாளும் கோளும் ஒன்றும் செய்யாது. ஈசனை முழுமையாக நம்பி அவரை சரண் அடைந்தவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாள்தான். எந்தவிதமான கிரஹ தோஷமும் அவர்களை அண்டாது என்பதே அதன் பொருள்.
?தந்தையின் பாவ புண்ணியங்கள் மகனை பாதிக்கின்றன. மகளையும் பாதிக்குமா?
- வண்ணை கணேசன், சென்னை.
தந்தை சம்பாதித்த சொத்து என்பது மகன் - மகள் இருவருக்கும் சேரும்போது, அவர் செய்த பாவ - புண்ணியங்களும் இருவருக்குமே வந்து சேரும். அவர் சம்பாதிக்கவே இல்லை, சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை என்றாலும்கூட, அவரது சொத்துக்கள் என்பதே அவருக்குப் பிறந்த பிள்ளைகள்தான் எனும்போது, நிச்சயமாக அவர் செய்யும் பாவ புண்ணியங்கள் அனைத்தும் மகன், மகள் இருவருக்குமே வந்து சேரும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?இறைவனிடம் அதைக் கொடு, இதைக் கொடு என்று வேண்டுவது சரியா?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
சரிதான். பிள்ளைகள் தங்கள் தேவைகளை தகப்பனிடம்தானே கேட்டுப் பெற முடியும்? பிள்ளைகள் ஆகிய நம் அனைவருக்கும் தந்தை சாக்ஷாத் அந்த பரமேஸ்வரன்தான். நாம் இறைவனிடத்தில் என்னென்ன எல்லாம் கேட்டுப் பெற வேண்டும் என்பதை வேதமே சொல்லித்தருகிறது. தந்தை ஆகிய பரமேஸ்வரனிடத்தில் இதையெல்லாம் கேட்டுப் பெற்றுக் கொள் என்று தாய் ஆகிய வேதம் வழிகாட்டுவதால்தான் அந்த வேதத்தினை ``வேதமாதா’’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். வேதத்தில் அந்த பாகத்திற்கு ``சமகப் ப்ரச்னம்’’ என்று பெயர். மொத்தம் 336 விதமான பிரார்த்தனைகளை முன் வைத்து அந்த மந்திரத்தை விசேஷமான யாகங்களின் போது பூர்ணாஹூதி சமயத்தில் உச்சரித்து வணங்குவார்கள். இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்ன என்னவோ அனைத்தையும் உள்ளடக்கியதே அந்த பிரார்த்தனை மந்திரம். ஆக, வேதமே இறைவனிடத்தில் இதையெல்லாம் கேட்டுப் பெற்றுக்கொள் என்று நமக்கு கற்றுத் தருவதால், இதைக் கொடு, அதைக்கொடு என்று இறைவனிடத்தில் கேட்பது முற்றிலும் சரியே.
?மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்ததா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நிச்சயமாக, மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கில் விளக்கேற்றுவது சாலச் சிறந்தது. மண் என்பது பூமாதேவியின் அருள் பெற்றது. நவகிரஹங்களில் செவ்வாயின் ஆதிக்கத்தினைப் பெற்றது. அதிலே விளக்கேற்றி வழிபடும்போது பூமாதேவியின் பொறுமையும், செவ்வாயைப் போன்ற உடல் வலிமையும் ஆரோக்யமும் நிச்சயமாகக் கிடைக்கும்.
?அம்மன் கோயிலில் சூலத்தில் வேறு ஒருவர் குத்திய எலுமிச்சம்பழத்தை எடுத்துவிட்டு, நாம் வேறு பழம் குத்துவதால் ஏதும் தவறு இல்லையே?
- பொன்விழி, அன்னூர்.
முதலில் கோயிலில் உள்ள சூலத்தை நாம் தொடுவது என்பதே கூடாது. அதுவே தோஷத்தைத் தரும். அந்த ஆலயத்தின் அர்ச்சகர்தான் அந்தப் பணியைச் செய்ய வேண்டும். பொதுவாக ஒரு ஆலயத்தில் ஒருவர் அபிஷேக ஆராதனைகள் செய்து முடித்தபின்னர், மற்றொரு பக்தர் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற வேண்டிய அபிஷேகம் செய்ய வருகிறார் எனும்போது, முன்னர் செய்த அலங்காரத்தை கலைத்துவிட்டு மறுபடியும் அபிஷேக ஆராதனைகள் செய்து, இந்த பக்தர் வாங்கி வந்த புடவையை அம்மனுக்குச் சாற்றுவார்கள் தானே. அதுபோல, ஏற்கெனவே ஒரு பக்தருக்காக குத்தப்பட்ட எலுமிச்சம்பழத்தை எடுத்துவிட்டு மற்றொரு பக்தருக்காக புதிய எலுமிச்சம்பழத்தை சமர்ப்பிக்கலாம். ஆனால், அதைச் செய்யும் உரிமை அந்த ஆலய அர்ச்சகருக்கு மாத்திரமே உண்டு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
?திருமணம் ஆகாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டுமா?
- எம்.மனோகரன், ராமநாதபுரம்.
திருச்செந்தூர் திருத்தலத்தினை ``குருஸ்தலம்’’ என்று சொல்வார்கள். நவகிரஹங்களில் குருவின் பரிகார ஸ்தலமாக திருச்செந்தூர் பார்க்கப்படுகிறது. குருவின் அருட்பார்வை இருந்தால் திருமணம் நடக்கும் என்பதால், திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் திருமணம் நடக்கும் என்று சொல்கிறார்கள். குருவையே புத்ரகாரகன் என்று அழைப்பதால், குழந்தை பாக்கியம் வேண்டி திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்வது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கமாகவே உள்ளது.
?பிறவி வினைகள் தீர்ந்து நல்வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்?
- ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
``அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’’ என்கிறார் ஔவையார். ஆக, நாம் மனிதப் பிறவி எடுத்திருக்கிறோம் என்று சொன்னாலே, ஓரளவிற்கு முன் ஜென்மாவில் புண்ணியம் செய்திருக்கிறோம் என்றுதான் பொருள். கிடைத்தற்கரிய இந்த மானுட ஜென்மாவினைப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். நம்மைச் சுற்றி யுள்ளவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாது, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும்போது, கர்மவினை என்பது அகன்று சிறந்த நல்வாழ்வு என்பது நிச்சயமாகக் கிடைக்கும்.