தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திசையெல்லாம் ஒளிவிடும் திகட்டாத தீபாவளியும் கந்த சஷ்டியும்

தீபாவளி - 20.10.2025, கந்தசஷ்டி சூரசம்ஹாரம் - 27.10.2025.

Advertisement

1. முன்னுரை

ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். அதில் சுமார் 100 நாட்களுக்கு மேல் பண்டிகைகளும், உற்சவங்களும், விரதங்களும், விழாக்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எல்லாப் பண்டிகைகளிலும், எல்லா மக்களும் ஒருசேரப் பங்கெடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், தீபாவளிப் பண்டிகை மட்டும் இந்தியா முழுக்க அநேகமாக எல்லா மக்களாலும் குதூகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாக இருக்கிறது. இது பண்டிகையா? உற்சவமா? விரதமா? விழாவா? என்றால் எல்லாம்தான். தீபாவளித் திருநாளில் மகத்துவத்தைப் பற்றியும் அதனைத்தொடர்ந்து வரும் கந்தசஷ்டி விழா பற்றியும் மணியான சில விஷயங்களை முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண்போம்.

2. என்று அமாவாசை? என்று தீபாவளி?

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதி திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சந்திரனுக்குரிய அஸ்த நட்சத்திரம் முழுமையாக இருக்கிறது. அதற்குப் பிறகு செவ்வாய்க்குரிய சித்திரை நட்சத்திரம் பிறக்கிறது. சூரியன் கிட்டத்தட்ட மூன்று பாகை நகர்ந்து துலா ராசியில் பிரவேசிக்க, சூரியனைத் தொடரும் சந்திரன், சித்திரை நட்சத்திரத்தில் சூரியனோடு சேர்ந்து அமாவாசை திதி வர இருக்கிறது. சாந்திரமான முறையில், இதற்கு அடுத்த நாள் கார்த்திகை மாதம் பிறந்து விடுவதாகப் பொருள்.

ஐப்பசி மாதத்தின் அமாவாசை தினத்தின் முந்தைய தினமான தேய்பிறை சதுர்த்தசி தினமே தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி திதி மாலை சுமார் 4:00 மணி வரை இருக்கிறது. அதற்குப் பிறகு அமாவாசை பிறக்கிறது. சில வருடங்களில் அமாவாசையும் தீபாவளியும் கலந்து வந்துவிடும். அமாவாசை விரதம் எப்போது இருப்பது என்கின்ற குழப்பம் வந்துவிடும். இந்த முறை அந்தக் குழப்பம் இல்லை. மிகத் தெளிவாக இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையை திங்கட்கிழமை கொண்டாடிவிட்டு செவ்வாய்க்கிழமை அமாவாசை விரதம் இருக்கலாம்.

3. ஒரே மையப்புள்ளியில் இணையும் விழா

ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையும் சில நேரங்களில் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஆனால் மக்கள் இதைக் குறித்துக் கவலைப் படுவதில்லை. எல்லாக் கதைகளிலும் ஒளிந்திருக்கக் கூடிய சில தத்துவங்களை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவரவர்கள் மரபுக்கும், அவரவர்கள் சார்ந்த சமயக் கொள்கைகளுக்கும், தகுந்தவாறு தீபாவளிக் கதைகள் அமைந்திருக்கின்றன. இந்தக் கதைகளுக்கு புராணங்களும், செவிவழிச் செய்திகளும், சில இடங்களில் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பாசுரங்களும் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன.

எப்படியோ, தீபாவளி என்கிற குதூகலமான பண்டிகையை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்கிற மையப்புள்ளியில் இந்தக் கருத்துக்கள் எல்லாம் ஒன்று சேருகின்றன. அந்தந்த காரணங்களுக்காக அவரவர்கள் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். இதில் உற்சாகம் கொண்டாட்டம் என்கிற இரண்டு விஷயங்கள் எல்லோருக்கும் ஒரே விஷயமாக இருப்பது இந்தப் பண்டிகையின் சிறப்பு.

4. மங்கலம் தரும் மகத்தான பண்டிகை

நரக சதுர்த்தசி என்கின்ற வைதீகப் பெயர் இந்தப் பண்டிகைக்கு வழங்கப்பட்டாலும், தீபாவளி என்கிற பெயர் தான் பொதுப் பெயராக இருக்கிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இதற்கு அடுத்து வரும் மாதமான கார்த்திகை தீபத்தில், தீபங்களை ஏற்றிக் கொண்டாடும் நாம், தீபாவளிப் பண்டிகையின் போது பெரிய அளவில் தீபங்களை வைத்துக் கொண்டாடு வதில்லை. ஆனால், தீபாவளி அன்று அவசியம் கார்த்திகை தீபம் போலவே தீபங்களை ஏற்ற வேண்டும்.

கார்த்திகை தீபம் என்பது பௌர்ணமியில் வருவதால், அன்று தீபம் ஏற்றுவது சிறப்பாக இருந்தாலும், தீபாவளிப் பண்டிகை அமாவாசையில் வருவதால், அன்று அவசியம் தீபங்களை ஏற்ற வேண்டும். பண்டிகைக்கான பெயருக்கு நாம் செய்கின்ற நியாயமாக ,சாஸ்திரப்படியும் அன்று வரிசையாக தீபம் ஏற்ற வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். தீபம் என்றாலே மங்கலம் தானே. மங்கலம் தரும் மகத்தான பண்டிகை தானே தீபாவளி!

5. அவதாரத்தின் தத்துவக் கருத்து

இறைவனின் அவதாரங்கள் ஒவ்வொரு நோக்கத்திற்காக ஏற்பட்டவை. பெரும்பாலும் தீமைகளை அழித்து நன்மைகளைக் காப்பதற்காக ஏற்பட்டவை தான் அவதாரங்கள். கர்ம பூமியான உலகத்தில், நன்மைகளும் தீமைகளும் கலந்துதான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, நன்மையும் தீமையும் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் தீமையின் சக்தி ஓங்கும் பொழுது, அந்தத் தீமையை எதிர்கொள்வதற்கு நன்மையால் முடியாது.

அப்பொழுது அந்த நன்மைக்கு துணை செய்யவே இறைவன் அவதாரங்களைச் செய்கின்றான். எந்த அவதாரங்களை எடுத்துக் கொண்டாலும் அதனுடைய அடிப்படை, நன்மையை வளர்ப்பதும் தீமையை அழிப்பதும் தான். பயிர்களை வளர்ப்பதும். களைகளை அழிப்பதும்தான். இதைத்தான் பகவான் கீதையில், ``யுகங்கள் தோறும், சாதுக்களைக் காக்கவும், தர்மத்தை இரட்சிக்கவும், தீமைகளை அழிக்கவும் நான் அவதரிக்கிறேன்’’ என்றார். பிரபலமான எல்லாப் பண்டிகைகளின் பின்னணியில் இந்தத் தத்துவம் இருக்கும்.

6. தீமைகளை அழித்த நாள் தீபாவளி

ராவணனை அழிப்பதற்காக ராமன் தோன்றினார். அவருடைய அவதாரம் ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது. கம்சனை அழிப்பதற்காக பகவான் கண்ணன் அவதரித்தார். அவருடைய அவதாரம் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அசுரர்களை வதம் செய்ய துர்கையாக பார்வதி அவதாரம் எடுத்தாள். அது துர்காஷ்டமி யாகவும் நவராத்திரியாகவும் கொண்டாடப்படுகிறது. பத்மாசூரனை அழிப்பதற்காக முருகன் அவதாரம் செய்தார்.

அது கந்த சஷ்டி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இரணியனை அழிப்பதற்காகவும் பிரகலாதனை காப்பதற்காகவும் நரசிம்ம அவதாரம் எடுத்தார். அது நரசிம்ம ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. நரகாசூரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவும் ,இந்த உலகத்தைக் காப்பதற்காகவும் பகவான் அவதாரம் செய்தார். இந்த அவதார நோக்கம்தான் நரக சதுர்த்தசியாக (தீபாவளியாக) கொண்டாடப்படுகிறது.

7. யார் இந்த நரகாசுரன்?

பூமாதேவியின் புதல்வன் பதுமன். பதுமன் என்றால் கனமானவன் என்று பொருள். அவள் கனமானவன் என்றால் தீமைகளில் கனமானவன். உலகத்தில் உள்ள அத்தனைத் தீமைகளையும் ஒரு உருவம் செய்தால் அது தான் பதுமன். அவன் மனிதனாகப் பிறந்ததால் நரன் என்று அழைக்கப்பட்டான். அசுரகுணம் இருந்ததால் அசுரன் என்று அழைக்கப்பட்டான். அசுர குணம் உடைய மனிதன் என்பதினால் அவனுக்கு நரகாசுரன் என்று பெயர் வைத்தார்கள். பூமா தேவியின் பிள்ளை என்பதால் பௌமாசுரன். நரகாசுரனும் அவனது இராச்சியமான பிரக்ஜோதிஷாவும், மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய இரண்டிலும் காணப்படுகிறது.

8. அசுரர்களின் வர பலம்

புராணங்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவத்தையும் சிந்தனையையும் தருகிறது. மிகுந்த கஷ்டப்பட்டு தவம் செய்து, வரம் வாங்கிய அசுரர்கள், அந்த வரத்தைச் சரியானபடி பயன்படுத்தி, தங்களுக்கும் சமூகத்துக்கும் உபயோகமுள்ளபடி வாழாமல், சமூகத்தால் வெறுக்கப்பட்டு, பகவானால் தண்டிக்கப்பட்டு உயிர் துறக்கிறார்கள் என்பது பொதுவான கதை அமைப்பு . மிகுந்த துன்பப்பட்டு, உயர்பதவி அடைகின்ற ஒருவன், அதனை துஷ்பிரயோகம் செய்து அழிவது போல இந்த புராணச் சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.

9. புத்திசாலித்தனம் எடுபடாது

ஒவ்வொரு அசுரனும் ஒவ்வொரு விதமாக வரம் வாங்குகின்ற செய்தியை ஆராய்ந்தால் ஒரு உண்மை புரியும். தங்களுக்கு எதனாலும் முடிவில்லை என்று நினைத்து வரம் வாங்குகின்றார்கள். தாங்கள் வாங்கி வந்த வரம் சிறப்பானது, அந்த வரம் எப்படியும் தங்கள் உயிரைக் காப்பாற்றி விடும் என்று நினைக்கிறார்கள். ராவணன் வாங்கி வந்த வரம் அவனைக் காப்பாற்றவில்லை. இரணியன் வாங்கி வந்த வரம் அவனைக் காப்பாற்றவில்லை. அதைப் போல நரகாசுரன் வாங்கி வந்த வரமும் அவனைக் காப்பாற்றவில்லை. காரணம் இறைசக்திக்கு முன் எத்தகைய புத்திசாலித்தனமும் எடுபடாது என்பதற்கு இந்த அசுரர்களின் கதை ஒரு எடுத்துக்காட்டு.

10. அம்மா அப்பாவால் முடிவு

ராவணன் முக்கோடி வாழ்நாள் பெற்றான். யாராலும் வெல்ல முடியாத சந்திரகாசம் என்கிற வாள் அவனிடம் இருந்தது. புஷ்பக விமானம் இருந்தது. அத்தனைத் தேவர்களும் அவனால் சிறைபிடிக்கப்பட்டார்கள். காற்றுகூட அவனைக் கேட்டுக் கொண்டுதான் வீச முடியும் என்கிற அளவுக்கு வர பலம் பெற்றவனாக இருந்தான். ஆனால் அவன் செய்த தீமைக்கு முன்னாலே, வரபலம் பயன்படவில்லை. இரணியனை எடுத்துக் கொள்ளுங்கள். தனக்கு எதனாலும் அழிவு வரக்கூடாது என்று ஒரு பட்டியலையே அவன் பிரம்மாவிடம் தந்து வரம் வாங்கி இருந்தான். அந்தப் பட்டியலில் இல்லாத ஒரு அவதாரமாக நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார் பகவான்.

அதைப் போல நரகாசுரன், பெற்றோர்களால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கினான். எத்தனை மோசமானவனாக இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை அழிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஏற்றபடி அவன் நடந்து கொள்ளவில்லை. எல்லோருமே பகவானுடைய குழந்தைகள்தான். அதிலே ஒரு குழந்தை மற்ற குழந்தைகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் பொழுது, பகவான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் என்பதை அவன் மனதில் கொள்ளத் தவறி விட்டான்.

11. மனமாற்றத்தால் வந்த நரக சதுர்த்தசி

பெரும்பாலான அசுரர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் மனமாற்றம் அடைவதில்லை. திருந்துவது இல்லை. கடைசிவரை, எதிரிலே இருப்பது பகவான்தான் என்பது புரிவதில்லை. புரிந்தாலும், அவர்கள் சரணடைந்து ஆன்ம உய்வு பெறுவதில்லை. ஆனால் நரகாசுரன் கதையிலே, அவன் திருந்துகிறான். தன்னுடைய அழிவு, (உடல் அழிவு) மற்றவர்களுடைய துன்பத்தைக் குறைக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறான். தன்னால் இனி யாருக்கும் தீமை இல்லை என்பதை மற்றவர்கள் உணர்ந்து மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதையே வரமாகக் கேட்கிறான். இது மற்ற அசுரர்கள் கதையில் கிடைக்காத அற்புதமான விஷயம். அதனால் தான் தீபாவளி மகிழ்ச்சிக்குரிய கொண்டாட்டமாக இருக்கிறது.

``என்னுடைய இறப்பை அனைவரும்

மகிழ்வாக கொண்டாடவேண்டும்;

16 வகை பலகாரம் படைத்துக் கொண்டாடவேண்டும்’’

- என்பது நரகாசுரன் விருப்பம்.

12. தீபாவளி கதை சொல்லும் செய்தி

1. சக்தியோ அறிவோ பணமோ பதவியோ இவை எல்லோரையும் வாழ வைக்கத் தானே தவிர, மற்றவர்களைக் கொடுமைப்படுத்த அல்ல.

2. எத்தகைய ஆணவமும், வர பலமும் தலைக்கு ஏறினால் அது தலையை எடுத்துவிடும். அழிவுக்கு வழிவகுக்கும்.

3. நீதியை நிலை நாட்டும் பொழுது பகவானோ, பூமித்தாயே புத்திர பாசத்தைக் காட்டுவது இல்லை. காரணம் நாம் அனைவருமே பகவானுக்கு புத்திரர்கள் தான்.

4. ஒருவன் கையிலெடுக்கும் விஷயமே அவனை வாழ வைக்கிறது அல்லது அழிக்கிறது. தன்னுடைய பலத்தை மற்றவர்களுக்காக செலவிடுகின்ற பொழுது அவனும் மற்றவர்களும் வாழ்கிறார்கள். தன்னுடைய பலத்தை மற்றவர்கள் அழிவுக்காகச் செலவிடுகிறபோது அவனே அழிகிறான்.

13. சதுர்த்தசியில் எண்ணெய்க் குளியல்

எல்லா வளங்களும் நமக்குத் தரும் தாயான பூமியை அழித்தும் இழித்தும் நாசம் செய்யும் மனிதர்கள் பூமியை நரகமாக்கும்போது அந்த நரகத்தைச் செய்யும் நரகாசுரர்களை பூமியே நாசம் செய்கிறாள். மங்களமாகிய சொர்க்கத்தைத் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் போற்ற வேண்டும். அமங்கலமாகிய நரகத்தைத் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் அழிக்க வேண்டும். அதற்கான பிரார்த்தனைதான் தீபாவளிப் பண்டிகை.பொதுவாக சதுர்த்தசி எண்ணெய் முழுக்கிற்கான நாளல்ல. ஆனால் தீபாவளியன்று மட்டும் சதுர்த்தசி எண்ணெய் முழுக்கிற்கான நாள்.

14. எல்லா தேவதைகளும் வரும் பண்டிகை

ஏதாவது ஒன்று தொலைந்து அல்லது அழிந்து திரும்பி வராது போனால் எண்ணெய் முழுக்கு செய்வது வழக்கம். தீபாவளியில் நமக்கு நரகவாசத்தைத் தரும் கெட்ட எண்ணங்கள் தொலைய தலை முழுக்கிட வேண்டும். அதைப் போலவே சூரிய உதயத்திற்கு முன்னால் தைலஸ்நானம் எனப்படும் எண்ணெய்க் குளியலை சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் தீபாவளியில் இந்த விதிகள், விதி விலக்குகள் ஆகின்றன.

தைலத்தில் சகல ஐஸ்வரியங்களையும் தருகின்ற மகாலட்சுமியும் வெந்நீரில் சகல பாவங்களையும் போக்கும் கங்கையும் அன்றைய தினம் பிரசன்னமாகி இருக்கிறார்கள். இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எண்ணெயில் மகாலட்சுமியும்,அரப்புத் தூளில் சரஸ்வதி தேவியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் மோகினியும், தண்ணீரில் கங்கையும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பட்சணங்களில் அமிர்தமும், இனிப்பு மருந்தில் தன்வந்திரி பகவானும் இருப்பதாக ஐதீகம்.

15. தன்வந்திரி அவதார நாள்

திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக (தன்திரேயாஸ்); என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது. தன்வந்திரி பகவான் கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.

மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்ற வல்லது. மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும். இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சந்நதி உள்ளது.இன்னும் பல இடங்களிலும் உண்டு.

16. ராமாயணம் காட்டும் தீபாவளி

கண்ணனுடைய அவதாரத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகை, ராம அவதாரத்திலும் கொண்டாடப்பட்டதாக செய்திகள் உண்டு. அது எப்படி சாத்தியம்? வேறொன்றும் இல்லை. ராமாயண காலத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளிக்கு முந்தைய சதுர்த்தசி நாளில்தான், நரகாசுரன் இந்த வரத்தைப் பெற்றார் என்பதால் இரண்டு நாளும் இணைந்து விட்டன என்று பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். ராமாயணத்தில் தீபாவளி எந்த நாள்? பதினான்கு ஆண்டுகள் கழித்து ராமன் வனவாசம் முடிந்து திரும்பியவுடன் அயோத்தியின் அக இருள், புற இருள் அகன்றது. அவர்கள் ஆனந்தம் அடைந்தனர்.

தங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக எல்லா இடங்களிலும் வரிசையாக தீபங்களை ஏற்றிக் கொண்டாடினர் என்ற செய்தி உண்டு. ஸ்மிருதி வாக்கியங்கள் ஐப்பசி சதுர்த்தசியில் தீபங்களை ஏற்றி இல்லங்களை அலங்கரித்தால் செல்வத்தினை தரும் ஸ்ரீ மகாலக்ஷ்மி மகிழ்ச்சியுடன் வருகிறாள் என உறுதி அளிக்கிறது. அதனை கொண்டே திரேதாயுகத்தில் தீப வரிசை என்னும் பெயரில் தீப ஆவளி = தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

17. தீபாவளி கொண்டாடியவர்கள்

தீபாவளிப் பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரன் மைந்தன் பகதத்தன். சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளி திருநாள் அன்று அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.

1. தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம்.

2. புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பௌத்தர்களும் தீபாவளி திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.

3. வாரணாசியில், ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

4. கொல்கத்தாவில் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. பூச்சட்டி கொளுத்தும்போது, எவரது வாணம் அதிக உயரத்தில் சென்று பூக்களைக் கொட்டுகிறதோ அவரே வெற்றி பெற்றவர்!

5. மகாராஷ்டிர மாநிலத்தில் தாம்பூலம் போடும் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் எழுந்து, ‘உடன்’ எனப்படும் நறுமண எண்ணெயைத் தேய்த்து குளிக்கின்றனர்.

6. நேபாளத்தில், தீபாவளியை ‘தீஹார்’ திருவிழாவாக 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பிராணிகளுக்கு உணவு படைக்கிறார்கள்.

18. கங்கைக் குளியல்

தீபாவளியன்று, அதிகாலையில் எழுந்து மூலிகை போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை தலையில் வைத்து, கதகதப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரானாலும், குழாய் நீரானாலும், கிணற்று நீரானாலும், அதில் தீபாவளியன்று கங்கை பிரசன்னமாவதாக ஐதீகம். தீபாவளித் தினத்தன்று வழக்கமாகக் குடும்பத்தில் வழிபடும் தெய்வத்தின் முன்பு கோலமிட்டு, தாம்பூலம், பழம், தேங்காய், மலர்கள், புதிய துணிமணிகள் பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய், சிகைக்காய்ப் பொடி, மஞ்சள் பொடி, இலேகியம் பட்சணங்கள், வெந்நீர் ஆகியவற்றை வைப்பர். பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்வர். தீபாவளித் தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்.

புண்ணியம் உண்டாகும். ஐப்பசி மாதம் துலா ஸ்னான மாதம் என்பதால் காவேரிக்கும் பெருமை சேரும் மாதம். பல பேர் பாவங்களை கரைக்கும் கங்கை, அந்த பாவங்களை காவேரியில் தீர்த்தமாடி கரைக்கிறாள். எனவே காவேரியில் இந்த மாதம் நீராடினால், கங்கை காவேரி இரண்டு நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும்.

19. பெரியவர்களிடம் ஆசீர்வாதம்

எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் (தைலே லஷ்மி, ஜலேகங்கே) தீபாவளி அன்று ஒன்று சேர்வதால் அன்று எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப் பயன்கிட்டும். பின்னர், வீட்டிலுள்ள பூஜை அறையில் திருமால், மகாலட்சுமி மற்றும் உங்கள் இஷ்ட வழிபடு படங்களின் முன் புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி வைக்க வேண்டும். அன்று செய்த பலகாரங்களையும், இனிப்புப் பண்டங்களையும் நைவேத்தியமாக படைத்து, பூஜைகள் செய்து திருமாலையும், மகாலட்சுமியையும், இஷ்ட தெய்வங்களையும் வணங்கி, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று புத்தாடைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகள் பட்டாசுகளை வெடித்து மகிழ வேண்டும்.

பெரியவர், சுற்றத்தார், நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மகிழ வேண்டும். தன்னிடம் வேலை செய்யும் வேலையாட்களுக்குப் புத்தாடைகள், பட்டாசுகள், பரிசுகள் தருதல் வேண்டும். அன்று மாலை குடும்பத்தினரோடு ஆலயங்களுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.

20. தீபாவளி நோன்பு

கந்தபுராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில்தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியைதன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுத்தார். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் மங்களகரமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவனைவேண்டியும், கேதாரத்தில் கவுரி(பார்வதி) இருந்த நோன்பை நம் பெண்கள் தீபாவளி ஒட்டிய நோன்பாக நோற்கின்றனர்.

சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம்.கேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையும் சுபீட்சமான வாழ்க்கையும் பெறுவார்கள். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர். இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்.

21. ஐந்து நாட்கள் தீபாவளி

வடநாட்டில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுவர். முதல்நாள் லட்சுமி பூஜை. இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி. மூன்றாம் நாள் தீபம் ஏற்றுவது. நான்காம் நாள் முழுக்கு. ஐந்தாம் நாள் எமனை வழிபடுவது. எமனுக்கு யமுனை என்ற தங்கை உண்டு. எமன் தீபாவளியன்று அவளுக்கு பரிசுகள் வழங்குவானாம். அதனால் அன்று அண்ணன், தங்கையுடன் சேர்ந்து உணவருந்த வேண்டும். தங்கைக்கு ஆபரணம் செய்து கொடுப்பர்.

வயதானவர்கள் யமுனா நதியில் ஸ்நானம் செய்வார்கள். வட நாட்டில் கங்கா பூஜா மிக சிறப்பு. அதுவும் காசியில் மிக விசேஷம். தீபாவளியின் போது வடநாட்டினர் மாடுகளையும் எருதுகளையும் கன்றுகளையும் குளிப்பாட்டி திலகமிட்டு அலங்காரம் செய்வர். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் போதுதான் இப்படி செய்வார்கள். இனி தீபாவளியை ஒட்டிவரும் கந்தசஷ்டி குறித்துக் காண்போம்.

22. ஏன் கந்த சஷ்டி?

நரகாசுரனை அழித்து மக்களைக் காத்த நாள் தீபாவளி. (20.10.25) சூர பத்மனை அழித்து மக்களைக் காத்த நாள் கந்த சஷ்டி. (27.10.25) இரண்டும் இரண்டு அசுரர்களை அழித்த தினம். கண்ணன் அசுரனை அழித்துத் காத்தது தீபாவளியாகியது. கந்தன் அசுரனை அழித்துத் காத்தது கந்தசஷ்டியாகியது. வியப்பு என்னவென்றால் இரண்டும் ஐப்பசியில் அடுத்தடுத்து அனுசரிக்கப்படுகிறது. கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்தசஷ்டி காலமாகும்.

23. என்று விரதம் தொடங்குவது?

2025-ஆம் ஆண்டிற்கான மகாகந்தசஷ்டி விரதம் அக்டோபர் 22 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி அக்டோபர் 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறும். அக்டோபர் 27 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். கந்தசஷ்டி விரதத்தை 48 நாட்கள் கடைப்பிடிக்க நினைப்பவர்கள், செப்டம்பர் 10 ஆம் தேதி (புதன்கிழமை) விரதத்தை தொடங்க வேண்டும்.

தொடக்க நாள்:

அக்டோபர் 22, 2025 (புதன்கிழமை) நிறைவு நாள் / சூரசம்ஹாரம்:

அக்டோபர் 27, 2025 (திங்கட்கிழமை) 48 நாட்கள் விரதம் தொடக்கம்:

செப்டம்பர் 10, 2025 (புதன்கிழமை) கந்தசஷ்டி விரதத்தை காப்பு கட்டாமலோ அல்லது காப்பு கட்டியோ கடைப்பிடிக்கலாம். உடல்நிலைக்கு ஏற்றவாறு விரதத்தை கடைப்பிடிப்பது நல்லது. 48 நாள் விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் செப்டம்பர் 10 அன்று காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கலாம், இது வாழ்க்கையே மாறும் அளவிற்கு பலன்கள் தரும்.

24. முருக பக்தர்களின் முத்தான விழா

முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விரத நாள் என்றால் அது ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விரதம் தான். முருகப் பெருமானின் அருளை பெறுவதற்காகவும், தங்களின் வாழ்வில் இருக்கும் மிகக் கடுமையான பிரச்னைகள் தீர வேண்டும் என்றும், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்றும் பிரதமை துவங்கி சஷ்டி வரையில் மிகக் கடுமையாக விரதம் இருந்து பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

ஆறு படை வீடுகளில் மட்டும் அல்லாது சிறு கிராமத்தில் உள்ள முருகன் ஆலயங்களிலும், முருகன் சந்நதி உள்ள சிவாலயங்களிலும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பெறும். இந்த ஆறு நாட்களும் முருக பக்தர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

25. திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

கிழமைகளில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளும், நட்சத்திரங்களில் கார்த்திகை, விசாகம், பூசம் நட்சத்திரங்களும், திதிகளில் சஷ்டி திதியும் முருகப் பெருமானுக்கு மிகவும் ஏற்றதாகும். தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை சஷ்டி திதிகள் வந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை ஐப்பசி மாத வளர்பிறையில் வரக் கூடிய சஷ்டி திதியை, மகா கந்தசஷ்டியாக விழாஎடுத்துக் கொண்டாடுகிறோம்.

முருகப் பெருமான் சூரனை வதம் செய்து, தேவர்களை காத்தது ஐப்பசி மாத சஷ்டி திதியில்தான் என்பதால் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமையில் துவங்கி, சஷ்டி வரையிலான ஆறு நாட்கள், அனைத்து முருகன் திருத்தலங்களிலும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அதிலும் முருகப் பெருமான், சூரனுடன் போரிட்டு, வெற்றி கொண்ட திருச்செந்தூர் திருத்தலத்தில் இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் சூரசம்ஹார விழா உலக பிரசித்தி பெற்றதாகும்.சூர சம்ஹாரம் 27.10.2025 திங்கட்கிழமை நடைபெறுகிறது.

26. சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம்

அறுபடை வீடுகளிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றாலும் சூர சம்ஹாரம் எனும் நிறைவுப்பகுதி திருச்செந்தூரில்தான் விசேஷமாக நடைபெறுகிறது. அதற்கு வேல்வாங்கிய இடம் சிக்கல். சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சந்நதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சந்நதியும் அமைந்துள்ளது. மிகப்பழமை வாய்ந்த இந்தத் தலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும்.

சூரசம்ஹார விழா முதல் நாள் மாலை 7.30 மணியளவில் தேரிலிருந்து இறங்கும் முருகப்பெருமான் நேராக அன்னை வேல் நெடுங்கண்ணி அம்மையிடம் சக்தி வேல் பெறுகிறார். அப்போது முருகப்பெருமானுக்கு வியர்ப்பதை இப்போதும் காணலாம். அடுத்த நாள் தாயாரிடம் பெற்ற வேல் கொண்டு சூரபத்மனை வதைத்த நாளை சூரசம்ஹாரமாகக் கொண்டாடுகின்றனர். அறுபடை வீட்டில் சூர சம்ஹாரம் நடக்காத இடம் திருத்தணிகை. முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் இடம் என்பதால் மற்ற தலங்களில் நடப்பது போல கந்தசஷ்டி விழாவின் சூரசம்காரம் இங்கே நடைபெறுவது இல்லை. கந்தசஷ்டி ஐதீக விழாவாகவே இங்கே கொண்டாடப்படுகிறது.

27. அசுரரை வதைத்த இடம்

திருச்செந்தூரில் கடற்கரையில் இந்த விழாதான் அதி முக்கியம். இந்த ஆண்டு 27.10.25 அன்று மாலை 4.15 மணி முதல் 6.00 மணிக்குள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மஹா சூரன், சிங்க முகன், பானு கோபன், சூரபத்மன் ஆகிய அரக்கர்களின் பெரிய உருவங்கள் கடற்கரையில் நிற்கும். வீரபாகு மற்றும் பால சுப்பிரமணியர் மற்றும் கல்யாண சுப்ரமணியர் ஆகியோரின் திருவுருவங்கள் தனித்தனி தேர்களில் கொண்டு செல்லப்படும். சூரபத்மன் என்ற அரக்கனின் முழுப் போரும் இறுதி வீழ்ச்சியும் இயற்றப்படும். இந்த சடங்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடிக்கும். பக்தர்கள் அமைதியுடனும், வசதியுடனும் இத்திருவிழாவைக் கண்டு தரிசிப்பார்கள்.

அன்று கடலே சற்று உள்வாங்குவதோடு சிகப்பு நிறத்தோடு காட்சி தருவதும் உண்டு. இந்த சூரசம்காரம் முடிந்ததன் செந்தில் ஆண்டவர் எதிரே கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும் இதற்கு சாயா அபிஷேகம் என்று பெயர். கந்தசஷ்டி விரதமிருந்து இந்த சூரசம்ஹார விழாவை நினைத்தாலும் தரிசித்தாலும் நம் அசுர எண்ணங்கள் மாயும். அகம் சிறக்கும். நல்வாழ்வு பிறக்கும்.

28. யார் அசுரர்கள்?

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன்காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்காரமாகும். நமக்குள் இருக்கும் காம குரோதங்கள், ராக துவேஷங்கள் மறைய இறைவன் உதவுவான். அசுரர்கள் என்பது வெளியிடத்தில் இல்லை. நம் உள்ளேயே இருக்கிறார்கள். பிறரைத் துன்பப்படுத்தும் சொற்களும் செயல்களும் அசுரத் தன்மையின் அடையாளங்கள் தான். முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடுவதன் மூலம் இந்த அசுரத் தன்மைகள் சம்ஹாரம் செய்யப்படும். (அழிக்கப்படும்). இதுவே சூரசம்ஹாரம்.

29. விரத முறை

விரதம் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் முழுவதும் இலகுவான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். விரதத்தின் போது போதுமான அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவு உண்ணாமல் இருக்கும்போது, கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். முழுமையாக தண்ணீர் கூடப் பருகாமல் தீவிர விரதம் இருப்பவர்கள் உண்டு.

அப்படி முடியாதவர்கள் ,கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சி வேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். கந்த சஷ்டியின் போது தொடர்ந்து “ஓம் சரவணபவ” என்ற ஆறெழுத்து மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், மற்றும் உள்ள முருகனின் பாராயண நூல்களை இயன்றளவு பாராயணம் செய்வது நல்லது இதில் கந்தசஷ்டி கவசத்தை பலரும் தொடர்ந்து பாராயணம் செய்வார்கள்.

30. அத்தனை தெய்வங்களும் இணையும் அற்புதம்

ஐப்பசி மாத தீபாவளிப் பண்டிகைக்கு முன்னும் பின்னும் எல்லாக் கடவுள்களின் பண்டிகைகளும் இணைந்து வருகின்றன.

1. கண்ணனுக்கு தீபாவளி,

2. கந்தனுக்கு சஷ்டி,

3. அம்பாளுக்கு கௌரி, (கேதார கௌரி)

4. சிவனுக்கு பிரதோஷம்,

5. எமனுக்கு எமத்விதியை,

6. ஆரோக்கியத்திற்கு தன்வந்திரி ஜெயந்தி,

7. அதிர்ஷ்டத்திற்கு மகாலட்சுமி பூஜை,

8. செல்வத்திற்கு குபேர பூஜை (தன த்ரயோதசி),

இதோடு பித்ருக்களுக்கான அமாவாசை வழிபாடு என அத்தனையும் முன்னும் பின்னும் இணைந்து நிற்பது இந்தத் தீபாவளியில் தான். தீபாவளிக்கு முன்னதாக ஆரம்பித்த பண்டிகை உற்சாகம் தீபாவளி கழித்து கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவோடு நிறைவு பெறுகிறது. இப்பண்டிகைகளை மனதாரக் கொண்டாடுவோம், மகிழ்ச்சியோடு அனுசரிப்போம், வாருங்கள்.

எஸ். கோகுலாச்சாரி

Advertisement

Related News