தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சின்ன கண்ணன் அழைக்கின்றான்…

கிருஷ்ண ஜெயந்தி: 16.8.2025

இதோ நாம் ஆவலோடு எதிர்பார்த்த இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி விழா வந்துவிட்டது.

ஜெயந்தி என்றால் என்ன?

அதற்கு முன்னால் ஸ்ரீ ஜெயந்தி அல்லது ஜெயந்தி என்பது கிருஷ்ண ஜெயந்தியை மட்டும்தான் குறிக்கும். மற்ற தேவதைகளுக்கோ, மஹான்களுக்கோ ஜெயந்தி என்ற பெயருடன் அவதார தினமாகக் கொண்டாடப்படுவது என்பது உபச்சாரக் கிரமத்தில்தான். ஆனால், வைணவத்தில் ஜெயந்தி என்கிற வார்த்தையோடு மற்ற அவதார தினங்களை இணைக்க மாட்டார்கள். ஸ்ரீ ராம ஜெயந்தி என்று கொண்டாடுவது கிடையாது. ஸ்ரீ ராம நவமிதான். அதைப்போல ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி, நம்மாழ்வார் ஜெயந்தி, ஆண்டாள் ஜெயந்தி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டாடுவதில்லை. ஆண்டாள் ஆடிப்பூரம் என்றும், ராமானுஜர் சித்திரை திருவாதிரை என்றும், அவதாரத் திருநட்சத்திர தினம் என்றுதான் கொண்டாடுவார்கள். காரணம் அஷ்டமி திதியோடு ரோகிணி நட்சத்திரம் இணைந்து வரும் நாளுக்குத்தான் ஜெயந்தி என்ற பெயர். அந்த நாளில் கண்ணன் அவதரித்ததால் ஸ்ரீ ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள். ஜெயந்தி என்றால் வெற்றி தரும் நாள் என்று பொருள்.

கிருஷ்ண ஜெயந்தி

மகாலட்சுமித் தாயாரை வரவேற்று விட்டோம். திரு வந்தாலே பின்னால் திருவைத் தேடி மால் வந்துவிடுவார். ‘‘மாலே செய்து மயக்கும் மணாளன்’’ என்று ஆழ்வார் கண்ணனைக் கொண்டாடுகிறார். வரலட்சுமி விரதம் முடிந்தவுடன் ஆடி மாதம் 31-ஆம் தேதி சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நாடெங்கும் கிருஷ்ணஜெயந்தி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. சனிக்கிழமை ஸ்திர வாரம். பெருமாளுக்கு உரிய தினம். இன்று கிருஷ்ணஜெயந்தி உற்சவம் கொண்டாடப்படுவது சாலச் சிறந்தது. அன்று காலை 11:00 மணி வரை அஷ்டமி இருக்கிறது. பரணி நட்சத்திரம் காலை 8:15 மணி வரை இருக்கிறது. பின் ரோகிணி வந்துவிடுகிறது. சனிக்கிழமை இரவு கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படும் நேரத்தில் ரோகிணி வந்துவிடுகிறது. ரோகிணிதான் கண்ணனின் திருநட்சத்திரம். எனவே அன்று மாலை கிருஷ்ணஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அன்று என்ன செய்ய வேண்டும்?

வழக்கம் போல வீடு முழுக்க நன்கு சுத்தப்படுத்தி வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் மாக்கோலம் போட வேண்டும். மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும். வீடு முழுக்கக் குழந்தைக் கண்ணனை வரவேற்பது போல் பூஜை அறை வரை கிருஷ்ணர் பாதம் வரைந்து வரவேற்க வேண்டும். வீட்டுக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேஷம் போட்டு, பூஜையில் பங்கெடுக்கச் செய்யலாம். எளிமையான ஸ்தோத்திரங்களையும் கண்ணன் பாடல்களையும் பாடலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தைகள் அதிகம் சாப்பிடும் பட்சணங்களை படைக்கவேண்டும். பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம், வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம். அவசியம் நாவல் பழமும் வெண்ணெயும் வைக்க வேண்டும்.

சுத்தமாக நீராடி, பூஜை செய்து முடித்து விட்டு, நிவேதித்த பிரசாதங்களை அருகில் இருக்கக்கூடிய சிறுவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கானது

குழந்தைகளுக்கான மிகச் சிறப்பான பண்டிகை கிருஷ்ணஜெயந்தி என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. அன்று தயாரிக்கப்படும் பிரசாதங்கள் எல்லாமே குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுகின்ற சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், (ஒரு உத்தரணி தீர்த்தம்) வெண்ணெய், பால்திரட்டு, நாட்டுச் சர்க்கரை, வடை போன்ற பிரசாதங்கள். இவைகள் விரும்பாத குழந்தைகள் உண்டா? அடுத்து, எந்தக் குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தையை ஆசையோடு அழைக்கின்ற பொழுது வைக்கும் பேர் “கண்ணா”. இந்தப் பெயர் கிருஷ்ணனுக்கு உரியது அல்லவா. அடுத்து அந்த விழாவில் குழந்தைகளுக்கு கிருஷ்ணனாக வேடமிட்டு பெரியவர்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அன்றைக்கு குழந்தைகளை கிருஷ்ணனாகவே பாவிக்கிறோம். ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும், மயில் கிரீடம் வைத்து ஒரு புல்லாங்குழல் கொடுத்துவிட்டால் கிருஷ்ணனாக மாறி விடும் மகிழ்ச்சியைக் காண்கின்றோம். இப்படிக் குழந்தைகளும் கலந்துகொள்ளும் மகத்தான பண்டிகை வேறு என்ன இருக்கமுடியும்?

வடஇந்தியாவில் தகி அண்டி

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. கண்ணன் மேலே உறியில் கட்டப்பட்டிருந்த வெண்ணெயை நண்பர்களோடு களவு கொண்டான் என்று பாகவதத்தில் வருகிறது. இதன் தத்துவார்த்தம் வேறு. இருப்பினும் இந்த நிகழ்வு பக்தர்களைக் கவர்ந்தது. மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள வெண்ணெய்த் தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பார்கள்.

இதற்காக தெருக்களில் உயரமான இடங்களில் பானைகளில் தயிர் நிரப்பப்பட்டு கட்டப்படுகிறது. இதனுடன் பணமுடிப்பும் கட்டப்படுகிறது. கோவிந்தாக்கள் குழுக்களை அமைத்து இரண்டு, மூன்று தகி அண்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுண்டு. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் இசை வாத்தியங்களை முழங்குவதும்,

விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

ராச லீலா

இராமாவதாரத்தில், காட்டில் இருந்த முனிவர்கள், இராமனின் அழகைக் கண்டு, தாங்கள் பெண்ணாக இருந்தால் அவனை அடையலாமே என்று விரும்பினார்களாம். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கிருஷ்ணாவதாரத்தில் ஆயர் குலத்தில் பெண்களாக பிறந்தார்களாம். அவர்கள் விருப்பத்தை கண்ணன் நிறைவேற்றியதுதான் ராசலீலை. இதை அற்புதமாக விளக்குவது ஜெயதேவரின் அஷ்டபதி. தத்துவ ரீதியில் பெண்கள் எல்லோரும் ஜீவாத்மாக்கள். பகவான் கண்ணன் மட்டுமே பரமபுருஷன். (பரமாத்மா.) ஜீவன்களின் லட்சியம் பரமாத்மாவை அடைந்து இன்புறுவது என்பதை விளக்குவது தான் ராசலீலை.

கண்ணனின் ராசலீலைகளை விளக்கும் `கர்பா’ என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ்நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.

கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி

கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.

ராதே கிருஷ்ணா

கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார். வட இந்தியாவில் கண்ணனின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பகுதிகளில் எல்லாம் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்றைக்கும் எளிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்பொழுது, வணக்கம் தெரிவித்துக் கொள்வது போல ராதேகிருஷ்ணா என்கின்ற வார்த்தையைத்தான் பரிமாறிக் கொள்வார்கள். ஸ்ரீகிருஷ்ணரை, தங்கள் இதயத்திலும் நாவிலும் சதாசர்வகாலமும் வைத்து பூஜிக்கும் பழக்கம் இப்பகுதி மக்களிடம் உண்டு. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள்.

பாகவதத்தில்…

கிருஷ்ண லீலையை மனம் ஒன்றிக் கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். பாராயணத்தைக் கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவத் தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் தனது படைகளுக்கு முன்பு கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றிபெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

சங்க இலக்கியங்களில் கண்ணன்

பரிபாடல் தொகுப்பில் எழுபது பாடல்கள் இருந்தன. தற்போது இருபத்தி இரண்டு பாடல்களே கிடைக்கின்றன. இருபத்தி இரண்டில் மாயோன் மீது ஆறு பாடல்களும் இருக்கின்றன. இதில் கண்ணனைப் பற்றிய அத்தனை புராணச் செய்திகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. எட்டுத்தொகை நூற்களில்,நற்றிணையில் கடவுள் வாழ்த்தாக ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்ற சங்கப்புலவர் பாடிய அற்புதமான பாடல் ஒன்று மாயோனின் மீது இருக்கிறது.

மாநிலம் சேவடியாகத் தூநீர்

வளை நரல் பௌவம் உடுக்கையாக

விசும்பு மெய்யாகத் திசை கையாக

பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக

இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய

வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரியோனே.

‘‘சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை கிருஷ்ணனின் அத்தனை பண்புகளையும் புராண இதிகாசச் செய்திகளையும் பேசுகிறது.பலராமன் குறித்தும், நப்பின்னை குறித்தும், யாதவகுலம் குறித்தும், ராதையைக் குறித்தும் கூறப்பட்டுள்ளது. நீளாதேவியின் அம்சமான நப்பின்னையை குறித்து ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

தமிழ் இலக்கியங்களில் கண்ணன்

பதினெண்கீழ்கணக்கு நூற்களில் ஒன்றான திரிகடுகம் கடவுள் வாழ்த்து மாயோனைப் போற்றுகிறது.

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்

தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய

மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்

பூவைப்பூ வண்ணன் அடி

ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டதால் பூமி இருள டைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது. கண்ணன் குருந்த மரத்தை ஆய மகளிர்க்கு (கோபியர்) வளைத்துத் தந்தது போன்று ஆண்யானை ஒன்று, தன் பெண் யானை உண்ணும் படியாக மரத்தின் கிளையை வளைத்துத் தந்தது என்று கண்ணனின் கதையை இணைத்துப் பாடும் அகப் பாடல் இது.

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை

அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்

மரம் செல மிதித்த மா அல் போல

புன் தலை மடப்பிடி உணீ இயர்

அகம் 59 (மதுரை மருதன் இளநாகன்)

இப்படிப் பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

சகலமும் கிருஷ்ணார்ப்பணம்

“புண்ணியம் இது என்று உலகம் சொன்னால்

அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே

போற்றுவார் போற்றலும் தூற்றுவார்

தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே”

என்று கீதையின் சாரமாக அமைந்த ஒரு பாடல் உண்டு. எந்தப் பூஜையோ, ஸம்ஸ்காரங்களோ அவற்றின் முடிவில், நமது ஆத் மார்த்த சமர்ப்பணத்தை இறைவனிடம் சொல்லிக் கொள்கின்ற ஒரு ஸ்லோகம்.“விஷ்ணு ஸஹஸ்ரநாம” பாராயணத்தின் முடிவில் வருகின்ற ஸ்லோகம்தான்.

“காயேன வாசா மனஸேந்த்ரியை வா

புத்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி”.

இதன் பொருள்: காயேன உடலாலோ,வாசா வாக்கினாலோ,மனஸ் மனதினாலோ, இந்த்ரியை (வா) இந்த்ரியங்களினாலோ,புத்தி அறிவினாலோ, ஆத்மனா (வா)- ஆத்மாவினாலோ, ப்ரக்ருதே ஸ்வபாவாத் இயற்கையான குணவிஷேஸத்தினாலோ, யத்யத் எது எதை, கரோமி - செய்கின் றேனோ, ஸகலம் அவை அனைத்தையும்,பரஸ்மை நாராயணா இதி பரமபுருஷனாகிய நாராயணனுக்கே, ஸமர்ப்பயாமி ஸமர்ப்பிக்கிறேன் (அர்ப்பணிக்கிறேன்).

காரணம், கீதையிலே பகவான் “சர்வ தர்மான் பரித்யஜ்ய” என்று எல்லாவற்றையும் எனக்கே சமர்ப்பணம் செய்வதன் மூலமாக, நீ தோஷங்களிலிருந்து விடுபடுகிறாய் என்று சொன்னார் அல்லவா. அது தான் காரணம். இது

கிருஷ்ணாவதாரத்திற்கே உரியது.

பூரண அவதாரங்கள்

பகவான் பல அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். அதில் முக்கியமாக தசாவதாரங்களைச் சொல்வார்கள்.

மீனோடு ஆமை கேழல் அரி

குறளாய் முன்னும் இராமனாய்த்

தானாய்ப் பின்னும் இராமனாய்த்

தாமோதரனாய்க் கற்கியும்

ஆனான் தன்னைக் கண்ணபுரத்து

அடியன் கலியன் ஒலி செய்த

தேனார் இன்சொல் தமிழ்மாலை

செப்பப் பாவம் நில்லாவே

- என்று பகவான் எடுத்த பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டில் விவரித் துப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார். இதில் இரண்டு அவதாரங்கள் பூர்ண அவதாரங்கள்.

1. இராம அவதாரம் 2. கிருஷ்ணாவதாரம். இரண்டிலும் தாயின் கர்ப்பத்தில் அவதரித்ததிலிருந்து, அவதாரத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய சோதிக்குத் திரும்புகின்ற வரை உள்ள நிகழ்ச்சிகள் பூரணமாக இருக்கின்றன. இராம அவதாரத்தை விவரிப்பது வால்மீகி ராமாயணம். கிருஷ்ணாவதாரத்தை விவரிப்பது ஸ்ரீமத் பாகவதம். ஒன்றை இதிகாசங்களில் சிறந்ததாகவும் இன்னொன்றை புராணங்களில் சிறந்ததாகவும் நம்முடைய சான்றோர்கள் பாராயணம் செய்வதுண்டு.

லீலைகள் அதிகம்

இந்த இரண்டு அவதாரங்களிலும் மிகவும் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். ஆழ்வார்கள் அத்தனை பேருமே கிருஷ்ணாவதாரத்தில் ஆழங்கால் பட்டிருக்கிறார்கள். இன்னும் பல மகான்கள் கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு பல பலப் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். காரணம், கிருஷ்ணாவதாரத்தில் உள்ள பால லீலைகள்.

மனதை மயக்கும் சம்பவங்களும், கருத்தைக் கவரும் தத்துவங்களும் கிருஷ்ணாவதாரத்தில் அதிகம். இன்னொரு விஷயமும் உண்டு. இராமாவதாரத்தில் கடைசிவரை இராமன் தன்னை அவதார புருஷனாகவே நினைத்துக் கொள்ளவில்லை. “அஹம் மானுஷம் மன்யே”என்று தன்னை மனிதனாகவே சொல்லிக் கொள்கின்றார். ஆனால், பிறந்த கணத்தில் இருந்து, கண்ணன் தன்னுடைய மாயங்களையும், லீலைகளையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றான். தாயான யசோதைக்கு தெரிந்து விடுகிறது தனக்கு பிறந்த குழந்தை அந்த தேவாதி தேவன்தான் என்று. இது பெரியாழ்வார் பாடல்.

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்

ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்

பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்

மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே

இந்த லீலைகளும் மாயங்களும்தான் நம்மை மயக்குகின்றன. இந்தச் சுவைகள் இராமாவதாரத்தில் குறைவு என்பதால் கிருஷ்ணாவதாரம் சற்று விஞ்சி நிற்கிறது.

எத்தனை எத்தனை கோலங்கள்

“கிருஷ்ண விக்ரகம்” என்று அழகை வர்ணிப்பார்கள். எந்தக் கோயில்களிலும் கண்ணனுடைய திருவுருவம் கண்களுக்கு விருந்தாக இருக்கும். இந்த உருவ அமைப்புக்கள் பலப்பல. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அழகு. எட்டாவது திதியில் (அஷ்டமி) பிறந்து, எட்டெழுத்து மந்திரத்திற்கு பொருளான கண்ணனின் திருவுருவங்களை எட்டு விதமாக பக்தர்கள் அனுபவிக்கின்றனர்.

*சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

*பாலகிருஷ்ணன்: தவழும் கோலம்.

*காளிங்க நர்த்தனகிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

*கோவர்த்தன கிருஷ்ணன்: கிருஷ்ணன் தன் சுண்டுவிரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

*ராதா - கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

*முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம்.

*மதனகோபாலன்: அஷ்டபுஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.

*பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

பலன் என்ன?

சந்தான கோபால ஹோமம் செய்வது ரொம்ப விசேஷம். குழந்தையில்லாதவர்கள் இந்த ஹோமத்தைச் செய்தால் கண்டிப்பாக கிருஷ்ணரே வந்து பிறப்பார் என்பது நம்பிக்கை. சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.

முதல் மந்திரம்

``ஓம் தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே

தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:’’

பொருள்: தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.

இரண்டாவது மந்திரம்

``தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ

தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்வினம்’’

பொருள்: தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு!

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினால்,

*ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நாசமடையும்.

*அஸ்வமேத யாக பலன் கிடைக்கும். எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ, அது கிருஷ்ண ஜெயந்தி விரதத்தால் கிடைத்து விடும்.

*ஆயிரம் காராம் பசுக்கள், ஆயிரக்கணக்கான குதிரைகள், யானைகள் தானம் செய்த பலன் கிடைக்கும்.

*அளவற்ற ஆபரணங்களை குருஷேத்திரத்தில் தானம் கொடுத்த பலனும், கோடி கோ தானம் செய்த பலனும் கிடைக்கும். நமது எல்லாக் கோரிக்கைகளும் நிறைவேறும். மூன்றே முக்கால் நாழிகை கிருஷ்ணனை நினைத்து பூஜை செய்ய, பாவங்களெல்லாம் விலகும்.

அறம் பொருள் இன்பம் வீடுபேறு எனும் நான்கு வித பலன்கள் கை கூடிவரும்.

Related News