தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமை நீதிபதி ‘‘காணிப்பாக்கம் கணபதி’’

ஆந்திரா - காணிப்பாக்கம் விநாயகர் கோயில்

Advertisement

ஆந்திர மாநிலத்தில் காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 165 கி.மீ. தொலைவிலும், திருப் பதியிலிருந்து 72 கி.மீ. தொலைவிலும் உள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ சுயம்பு தலங்கள் உள்ளன. அந்த ‘‘சுயம்பு’’கள் கவசம் போட்டு வைத்து வழிபடப்படுகின்றன. ஆனால், எந்த ஒரு சுயம்பு மூர்த்தமும் வளர்ந்து வருவதாக வரலாறு இல்லை. ஆனால், காணிப்பாக்கத்தில் சுயம்பு வடிவில் வெளிப்பட்ட விநாயகர் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்தபடி உள்ளார்.

இது ஒரு அதிசயமான நிகழ்வாக இத்தலத்தில் கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுயம்பு வெளிப்பட்டபோது முனைப்பகுதி மட்டும் தெரிந்தது. அதில் கடப்பாரை பட்ட வடு இன்றும் உள்ளது. அந்த ‘சுயம்பு’ வளர, வளர விநாயகர் வடிவம் பெற்றது. தற்போது விநாயகரின் தொப்பை வரை தெரிகிறது. இந்த சுயம்பு விநாயகர் மீது ஆந்திர மாநிலம் அரகொண்ட கொல்லப்பள்ளி என்பவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் 1947 ஆம் ஆண்டு சுயம்பு விநாயகருக்கு ஒரு வெள்ளிக் கவசம் செய்து கொடுத்தார்.

சுமார் 50- ஆண்டுகள் அந்தக் கவசம் பயன்படுத்தப்பட்ட நிலையில் ‘சுயம்பு’ விநாயகர் வளர்ந்துவிட்டார். எனவே லட்சுமி யம்மா செய்து கொடுத்த வெள்ளிக் கவசம் பயன்படுத்த முடியாதபடி மிகவும் சிறியதாகிவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு சித்தூர் தொகுதி எம்.பி. ஆதிகேசவலுநாயுடு புதிதாக வேறொரு பெரிய வெள்ளிக்கவசம் செய்து கொடுத்தார். தற்போது அந்த வெள்ளிக் கவசமும் பயன்படுத்த முடியாத வண்ணம் விநாயகர் வளர்ந்துவிட்டார். மறுபடியும் வளர்ந்து வரும் அவரது உருவத்துக்கு ஏற்றவாறு வெள்ளிக் கவசம் தயாரிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறார்கள்.

இப்படி சுயம்பு விநாயகர் வளர்வது காணிப்பாக்கம் மக்களிடம் மட்டுமின்றி ஆந்திராவில் உள்ள விநாயக பக்தர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்திவருகிறது. சுயம்பு விநாயகருக்குப்பயன்படுத்தப்பட்ட வெள்ளிக்கவசங்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதை ஒரு அரிய பொருட் காட்சியாக வைத்து, பிரத்யேக தரிசனமாக ரூ.100 பெற்றுக்கொண்டு, தரிசன பாதை தொடங்கும் பகுதியில் அந்த வெள்ளிக் கவசங்களைக் காணும் வண்ணம் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் ஆலயத்தில் கருவறையில் விநாயகர் உள்ள இடத்தைச் சுற்றி எப்போதும் தண்ணீர் தேங்கிநிற்கும்.

சிறு கிணற்றில் இருந்து வெளிப்பட்ட இந்த விநாயகர் அதே இடத்தில் வைத்து வழிபடுவதால், அந்த கிணற்றுத் தண்ணீர் ஊற்றெடுத்து ஓடுவ தாகக் கருதப்படுகிறது. மழைக் காலங்களில் அருகில் உள்ள பகுதாநதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயங்களில் சுயம்பு விநாயகரை சுற்றியும் அதிகமாக நீர்பெருகும். இதைத்தான் தீர்த்தமாக எடுத்து பக்தர்களுக்குக் கொடுக்கிறார்கள். சுயம்பு விநா யகர் பாதம் பட்ட இந்த தீர்த்தம் மிகவும் புனிதமானதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் கருதுகிறார்கள். எனவே பக்தர்கள் இதை ‘‘பவித்திர தீர்த்தம்’’ என்கிறார்கள்.

காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர்

ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் பெரிய நிலப்பரப்பில், பெரிய திருக்குளத்துடன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது. இத்திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.காணிப்பாக்கம் விநாயகரின்அற்புத ஆற்றல்களையும் சிறப்புகளையும் தெரிந்துகொள்ள ஒரு பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனம் எல்லா ஊர்களுக்கும் சென்று சுயம்பு விநாயகரின் பெருமையைப் பரப்பிவருகிறது. காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் மிக மிக எளிமையானவர். ஆனால் தன்னைத் தேடி, நாடி வரும் பக்தர்களை எளிமையிலிருந்து சகல போகங்களையும் கொடுத்து அனுபவிக்க வைத்து, இந்த ஜென்மப்பிறவியை நிறைவாக மாற்றும் அற்புத ஆற்றல் கொண்டவர்.காணிப்பாக்கம் விநாயகரை வழிபட வழிபட, அவர் நம்மை மேம்படுத்துவார். ஆந்திர மாநில மக்கள் மத்தியில் இன்று காணிப்பாக்கம் விநாயகர் பெரும் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் காணிப்பாக்கம் வந்து சுயம்பு வடிவ விநாயகரை வழிபட்டு மெய்சிலிர்க்க மகிழ்ச்சி யுடன் திரும்பிச் செல்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் எப்படி பொறிவைத்துப் பிடித்து பக்தர்களை தன் வசமாக்கி, அவர்களது ஆன்மாவைளின்சுத்தப்படுத்திபக்குவப்படுத்துகிறாரோ, அப்படி காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரும் பக்தர்களை தன்வசம் ஈர்த்து அருள்பாலித்து, அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விக்னங்களை எல்லாம் துடைத்தெறிந்து வருகிறார்.

இந்த சக்தி வாய்ந்த விநாயகர் கோயிலை ஆந்திர மாநில அரசின் இந்து அறநிலையத் துறை நன்கு பராமரித்து வருகிறது. பக்தர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. காணிப்பாக்கம் சென்று வந்தால் கவலைகள் தீரும் என்பது நிதரிசனமான உண்மை. அதனால்தான் ஆந்திர மாநில எல்லையையும் தாண்டி காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரின் அருள் புகழ் நாடெங்கும் நாலாப்புறமும் பரவிக் கொண்டிருக்கிறது.

காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் தன்னைத் தானே இத்திருத்தலத்தில் பூமியில் இருந்து வெளிப்படுத்திக்கொண்டவர். அதாவது சுயம்புவாகத் தோன்றியவர் ஆதலால் இத்தலத்தில் மட்டும்தான் ஈடு இணையற்றவராகத் திகழ்கிறார்.1336-ம் ஆண்டு இப்பகுதி முழுவதும் விஜயநகர மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. அவர்கள் இக்கோயிலுக்கு ஏராளமான நன்கொடைகள் வழங்கியதோடு ஆலயத்தையும் விரிவுபடுத்தினார்கள். அது மட்டுமின்றி சுயம்பு விநாயகர் ஆலயத்தில் பல மண்டபங்களும் கட்டினார்கள்.ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலும் இக்கோயில் புகழ் பெற்றிருந்தது. சுயம்பு விநாயகரின் அருளையும் அற்புதங்களையும் கண்டு ஆங்கிலேயர்கள் பிரமித்தனர்.

தமிழ்நாட்டில் முருகனுக்குத்தான் ‘அரோகரா’ போட்டபடி ‘காவடி’ எடுத்துச் செல்வார்கள். அதேபோன்று காணிப்பாக்கம் சுயம்பு விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று நூற்றுக் கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருகிறார்கள். பக்தர்கள் இருமுடி கட்டி, சரண கோஷம் போட்டபடி செல்வதை அய்யப்பனுக்கு மட்டுமே உரிய தனித்துவமான ஒரு வழிபாடாகவே இதுவரை நினைத்திருந்தோம். தற்போது அச்சு அசல் அதே மாதிரியான ஒரு வழிபாடு காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை மையமாக வைத்து ஆந்திரா மாநிலம் முழுவதுமாக ஓசையின்றி நடந்துவருகிறது. ஆம்! காணிப்பாக்கம் விநாயகரையும் ஆந்திர மாநில மக்கள் இருமுடி கட்டி நடந்து வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

இந்த வழிபாடு அப்படியே அய்யப்ப பக்தர்கள் வழிபாட்டு முறைகள் போலவே உள்ளது. இதனால் காணிப்பாக்கம் விநாயகருக்கு இருமுடிகட்டி விரதம் இருந்து செல்லும் புதிய வழிபாடு முறை ஆந்திரா முழுவதும் தற்போது புகழ்பெற்று வருகிறது.காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் ‘விநாயகர் சதுர்த்தியே’ மிகப் பெரிய விழாவாக 21-நாட்கள் மிகவும் விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தொடங்கி இந்த 21- நாட்களும் எல்லா சமுதாய மக்களும் பங்குகொண்டு, சிறப்பாக சேவை செய்து கொண்டாடுகிறார்கள். அனைத்து மக்களும் தங்கள் செலவில் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுகிறார்கள். உற்சவ விநாயகர் இந்த 21-நாட்களும் வெவ்வேறு வாகனங்களிலும் திருவீதி உலா வருவது காணக்கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தினமும் நடைபெறுவது போலவே இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருப்பதி கோயிலைப் போலவே இங்கும் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தந்து வழி பட்டுச் செல்கிறார்கள். இதில் இஸ்லாமியப் பெருமக்களும், வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களும் அடங்குவர். இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குவதால் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் சுவாமியின் முன் வைக்கிறார்கள். இத்தலம் ஆந்திர மாநிலத்தில் இருந்தாலும் சித்தூர் மற்றும் காணிப்பாக்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் அழகாகத் தமிழில் பேசுகிறார்கள்.

காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் எத்தனையோ விதமான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் முற்றிலும் வித்தியாசமானது ‘‘சத்திய பிரமாணம்’’ என்ற வழிபாடாகும். அதாவது ஒருவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் முன்பு சூடத்தை அணைத்து செய்துகொடுக்கும் சத்தியம் ஆகும். இதைத்தான் ‘‘சத்திய பிரமாண’’ வழிபாடு என்கிறார்கள். இந்தியாவில் எந்த ஒரு ஆலயத்திலும் கருவறையில் இருக்கும் கடவுளை நீதிபதியாகக் கருதி இத்தகைய சத்திய பிரமாணம் செய்யப்படு வதாகத் தெரியவில்லை. காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் மட்டுமே இப்படி ‘சத்தியம்’ செய்யும் வழிபாடு நடத்தப்படுகிறது.

சுயம்பு விநாயகர் முன்பு சத்தியம் செய்யும் பழக்கம், இத்தலத்தில் இன்று, நேற்று தோன்றியது அல்ல, விநாயகப் பெருமான் சுயம்புவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட காலத்திலிருந்தே நடைபெற்று வருவதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. தற்போது நாட்டில் எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்கள், நவீன மாறுதல்கள், நீதிமன்றங்கள் எனப்பல துறைகள் வந்து விட்டன. ஆனால், அத்தனை மாற்றங்களையும் மீறி காலங்காலமாக இந்த சத்திய வழிபாடு தொடர்ந்து இங்கு தினமும் நடைபெற்றுக் கொண்டிருப்பது மிகவும் வியப்புக்குரியதாகும்.

பொதுவாக நமது உைடமைகளில் ஏதாவது ஒன்று திருடு போகும் போது நம்மையும் அறியாமல் சிலர் மீது சந்தேகம் வரும். அவர்களிடம் கேட்டால், ‘‘அய்யய்யோ! உங்க பொருளை நான் எடுக்கவில்லை. கடவுள் மேல் சத்தியம்!’’ என்பார்கள். மற்றும் சிலர் எடுத்த எடுப்பிலேயே ‘‘சாமி சத்தியமா நான் திருடவில்லை!’’ என்பார்கள். ‘‘சாமிமேலே சத்தியம் செய்து விட்டானே!’’ என நம்பி அவனை விட்டு விடுவார்கள். ஆனால், ஆந்திர மாநில மக்கள் குறிப்பாக சித்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் அப்படி எளிதில் விட்டுவிடமாட்டார்கள்.

‘‘அப்படியா? சரி, வா காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் முன்பு சூடம் ஏற்றி சத்தியம் செய்து சொல்!’’ என்று அழைத்துச் சென்றுவிடுவார்கள். ‘சுயம்பு விநாயகர் முன்பு சூடத்தை அணைத்து சத்தியம் செய்’ என்பார்கள். இப்படி சத்தியம் செய்வதற்காகவே இந்த விநாயகர் கோயிலுக்கு தினமும் நிறையப் பேர் வருகிறார்கள். அவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தினமும் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படுகிறது.குற்றம் சொல்பவரும், குற்றம் சாட்டப்பட்ட வரும் இருவரும் இந்த சத்தியம் செய்ய நேரில் வர வேண்டும். திருக்கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு இருவரும் கோயில்எதிரில் உள்ள திருக்குளத்தில் நீராட வேண்டும்.

பிறகு ஈரஉடையுடன் கோயிலுக்குள் செல்ல வேண்டும். அவர்கள் சென்றதும், விநாயகருக்கு பூஜை செய்பவர் வெளியில் வந்து விடுவார். குற்றச்சாட்டு சொன்னவரும், குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்ட வரும் இருவர் மட்டுமே உள்ளே நிற்பார்கள். ‘‘என் பொருளை எடுக்கவில்லை என்று சத்தியம் செய்!’’ என்பார். மற்றவர் சூடம் ஏற்றி சத்தியம் செய்வார். விநாயகப் பெருமான் முன்பு நடைபெறும் இந்த சத்திய வழிபாடு ஒவ்வொருவருக்கும் ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிடும். வெறும் சத்தியம்தானே என்று இந்த வழிபாட்டையாரும் கருதுவதில்லை. அலட்சியப்படுத்துவதுமில்லை. ஏனெனில் இந்த வரசக்தி விநாயகர் முன்பு பொயச்சத்தியம் செய்தால் 40- நாட்களுக்குள் சுவாமி கடுமையாக தண்டித்து விடுவார் என்ற நம்பிக்கை பக்தர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

காணிப்பாக்கம் விநாயகர் முன்பு பொய் சத்தியம் செய்த பலரும் குறிப்பிட்ட நாட்களுக்குள் பாதிக்கப்பட்டு விடுகிறார்களாலம். பொய்சத்தியம் செய்தவர்களுக்கு மன நலம் பாதிக்கும் அல்லது கை கால்கள் பாதிக்கப்படும். சிலர் விநாயகர் பெருமானின் கோபத்துக்கு உள்ளாகி மரணம் கூட அடைந்துள்ளார்களாம். இது இன்றும் நடப்பதாக கோயில் பணியாளர்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். காலம் காலமாக நடந்துவரும். இந்த சத்தியம் வழிபாட்டுக்கு தற்போது வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு

வருகிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலும் இந்த விநாயகர் முன்பு சத்தியம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகளும், நீதிபதிகளும் இதில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர் அன்று நீதிமன்றங்களில் கூட, ‘‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. காணிப்பாக்கம் விநாயகர் மீது சத்தியம் செய்துள்ளேன்!’’ என்று சொன்னால் அதை சித்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் கூட ஏற்றுக் கொண்டார்களாம். இதற்கு ஆதாரமான ஆவணங்கள் இப்போதும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மாலை 5.30 மணிக்கு இந்த பூஜை முடிந்ததும் விநாயகருக்கு பரிகார பூஜை செய்கிறார்கள். பொயச்சத்தியம் செய்பவர்களால் விநாயகர் கடும் ஆவேசம் அடைந்துவிடுவார் என்றும் அவரை சாந்தப்படுத்த பால் அபிஷேகம் செய்கிறார்கள். பிறகு பரிகார பூஜைகள் செய்து விநாயகரை அணிமணி ஆடைகளால் அலங்காரம் செய்து, அவருக்குப் பிரியமான நைவேத்தியம் படைத்து 6.00 மணி சுமாருக்கு ஆராதனை வழிபாடு நடத்துகிறார்கள். தினந்தோறும் இந்த வழிபாடு மாலையில் நடத்தப்படுகிறது.

தினமும் சராசரியாக இருபதுக்கும் மேற்பட்டோர்கள் சுயம்பு விநாயகர் முன்பு சத்தியம் செய்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படி சுயம்பு விநாயகப் பெருமான் முன்பு சத்தியம் செய்துவிட்டால் செய்தது தான். ஏனெனில் ஆந்திர மாநில மக்கள் இந்த விநாயகரை தலைமை நீதிபதியாகக் கருதுகிறார்கள். அவர் முன்பு செய்யப்படும் சத்தியத்துக்குப் பிறகு வேறு ‘அப்பீலே’ கிடையாது. இதனால் விநாயகப் பெருமானின் தீர்ப்பில் பக்தர்கள் மன மகிழ்ச்சியுடன் வணங்கி விட்டுச் செல்கிறார்கள்.

காணிப்பாக்கம் கணபதியிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கிறது என்பதால், இங்கு காவடி எடுத்து வருவோர், இருமுடி கட்டி வருவோர், சத்திய பிரமாணம் செய்ய விரும்பு வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோயிலை மேலும் மேம்படுத்த ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு இக்கோயிலில் 75-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமனம் செய்துள்ளனர்.

அமைவிடம்: ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள இருளா மண்டல் என்னுமிடத்தில் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் உள்ளது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், திருப்பதி, பெங்களூரு உட்பட பல நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. வேலூரிலிருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் நிறைய உள்ளன. பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும். தொடர்புக்கு: 08573-281540, 08573-281640.

டி.எம்.ரத்தினவேல்

 

Advertisement

Related News