வஜ்ர யோகம் எனும் சக்கர யோகம்
நீடித்த பொருளாதாரம், வருவாயுடன் உள்ள சக்கரவர்த்தி போன்று வாழ வேண்டும் என்ற திண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்கும் கிரகங்கள் ஒரு ஜாதகருக்கு துணை புரிந்தால்தான் நல்ல சூழ்நிலைகளும் நீடித்த பாக்கியங்களும் யோகங்களும் உண்டாகும் என்பது நிச்சயமாகும். ஒவ்வொருவரும் வாழ்வின் அந்தந்த சூழ்நிலை களில் அந்தந்த வயதிற்கேற்ற வாழ்க்கையை வெற்றி பெற்ற அமைப்பை கொடுப்பதே வாழ்வின் சிறந்த வெற்றியாக கொள்ளலாம். சிலருக்கு முன் வாழ்க்கை மிகவும் கஷ்டம் நிறைந்ததாகவும் பின் வாழ்க்கை யோகம் நிறைந்ததாகவும் இன்னும் சிலருக்கு முன் வாழ்க்கை சிறப்பாகவும் பின் வாழ்க்கை மிகவும் சிரமம் உள்ளதாகவும் உள்ள அமைப்பை காண்கிறோம். ஒவ்வொரு மனிதருக்கும் நமக்கு ஏன் இது நிகழ வேண்டும் என்ற சிந்தனை கண்டிப்பாக உண்டாகும். ஆனால், அதற்கான காரணங்கள், காரியங்கள் அறியாமல் தேடாமல், வாழ்வின் நித்திய தேவைகளுக்கும் கடமைகளுக்கும் காலத்திற்குள் அடைபட்டு இருந்து விடுகிறோம். அந்தந்த பருவத்தில் சிலருக்கு மட்டும் தேவையான தருணத்தில் கிடைப்பதும் ஒரு சிறந்த யோக அமைப்பாக கொள்ளலாம். அவ்வாறு உள்ள சில யோகங்களில் வஜ்ர யோகம் ஒன்றாகும்.
வஜ்ர யோகம் என்பது என்ன?
பொதுவாக வஜ்ரம் என்பதை நாம் வலிமை என்று சொல்வோம். ஜோதிடத்தில் வஜ்ர யோகம் என்பது வலிமையான பாக்கியங்களை கொடுக்கும் அமைப்பு என எடுத்துக் கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தில் கேந்திரம் என்பது வலிமை என்று சொல்லப்படுகிறது. இந்த கேந்திரம் அமைப்பானது ஒரு கிரகம் ஆட்சி பெற்றதற்கான அமைப்பை செய்கிறது எனவும் கொள்ளலாம்.
அவ்வாறே, கேந்திரங்களான லக்ன பாவகம் (1), நான்காம் பாவகம் (4), ஏழாம் பாவகம் (7), பத்தாம் பாவகம் (10) என்பதில், லக்னத்திலும் (1ம்), ஏழாம் பாவகத்திலும் (7ம்) சுபகிரகங்களான சந்திரன் (வளர்பிறை), சுக்ரன், வியாழன் மற்றும் புதன் கிரகங்கள் அமர்ந்து நான்காம் (4ம்) பாவகத்திலும் பத்தாம் (10ம்) பாவகத்திலும் அசுப கிரகங்களான செவ்வாய், சூரியன், சந்திரன் (தேய்பிறை) மற்றும் சனி கிரகங்கள் இருப்பது வஜ்ர யோகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இதில், சாயா கிரகங்களான ராகு - கேதுக்கள் இந்த யோகத்தில் வராது.
வஜ்ர யோகத்தின் பலன்கள்...
* நீடித்த ஆயுள் மற்றும் ஆரோக்கியம் சுறுசுறுப்புடன் இயங்கும் தன்மை
கொடுக்கக் கூடியது.
* சமூகத்திலும் நட்பர்கள் வட்டத்திலும் எப்பொழுதும் நற்பெயருடன் நல்ல நண்பர்களை பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும்.
* காலத்திற்கேற்றாற்போல் சிந்திக்கும் திறனும் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை பெற்றவர்களாக இருப்பது.
* எப்பொழுதும் தொழிலில் வேகமும் கடினமான உழைப்பையும் செய்வது சிறப்பான அமைப்பாக கொள்ளப்படுகிறது.
* இவர்களுக்கு 24 மணி நேரம் என்பது போதாது. எதையாவது சிந்தித்திக் கொண்டே இருப்பது... அதனை செயல் படுத்தி பார்ப்பது இவர்களின் சிறப்பாக சொல்லலாம்.
* நல்ல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பும் இவர்களுக்கு தொடர்ந்து ஏற்படும்.
* நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதிலும் புதிதாக வரும் சிந்தனைகளை ஏற்றுக்கொள்வதிலும் திறன் மிக்கவர்கள்.
* அதே போன்று, கற்றுக்கொள்வதிலும் புதிதாக வரும் விஷயத்தை தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதும், கற்றுக் கொள்வதும் சிறப்பாக இருக்கும்.
* வாகனங்களை இவர்கள் கவனமாக கையாள வேண்டும். இல்லாவிடில்,
சிரமங்கள் உண்டாகலாம்.
* தொழிலில் நம்பிக்கையானவர்களை வைத்துக் கொண்டு அவர்களை நன்கு கையாள்வதும் சிறப்பான தொழில் அமைப்பை ஏற்படுத்தும்.
* எல்லாம் இருந்தும் தரையில் படுத்து உறங்கும் பண்பை கொண்டிருப்பார்கள்.
* சில நேரங்களில் அதிக சிந்தனையின் காரணமாக தூக்கத்தை இழக்கும்
அபாயம் இவர்களுக்கு உண்டாகலாம்.
* கல்லூரியில் இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் சிலருக்கும், சிலருக்கு கல்லூரிப் படிப்பை பாதியில் தவற விடும் அமைப்பாக இருக்கும்.
* வாழ்வின் அனைத்து தருணத்திலும் சிறப்பான அமைப்பை கொண்டிருப்பர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
* வீடு, வாகனம், தொழில், நண்பர்கள் ஆகிய அனைத்தையும் பெற்ற அமைப்பினராக இருப்பர். ஆனால், தொழில் கையாளும் இடத்திலும் வீட்டிற்கான நிலத்திலும் தோஷங்களும் வாஸ்து குறைகளும் உண்டாகும் அமைப்பாகும். அதனால் நிலங்களை கையாளும் பொழுது அதிக கவனம் தேவை.
* சில நேரங்களில் நல்லவர்களாகவும் சில நேரங்களில் கெட்டவர்களாகவும் மற்றவர்களின் பார்வைக்கு தெரியும். ஏனெனில், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு ஒரே முடிவை மேற்கொள்ளாமல் மாறி மாறி முடிவெடுப்பதால் அப்படி தோன்றும்.
வஜ்ர யோகத்தின் அசுபங்கள் எச்சரிக்கை...
* கேந்திராதிபத்திய தோஷம் சிலருக்கு ஏற்படலாம். ஆகவே, புரிதல் மிக அவசியம்.
* கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் கேந்திரத்தில அமரும் பொழுது சில விஷயங்கள் கைகளில் இருந்தும் பயன்படாமல் இருக்கும்.
* லக்னத்தை சில கிரகங்கள் தொடர்பு கொள்ளும் தருணத்தில் வழுக்கை ஏற்படும் தன்மை சிலருக்கு உண்டாகும்.
* சப்தம ஸ்தானங்களில் சுபகிரகங்களோடு சாயா கிரகங்கள் இணைவதால் வாழ்வில் சில தருணங்களை கவனத்துடன் நேர்மையுடன் கையாள்வது சாலச்சிறந்தது. இல்லாவிடில் தேவையற்ற அவமானங்களை வெறுப்புகளை சந்திக்க வேண்டிய தருணம் உண்டாகும்.
* இண்டஸ்ரியல், கட்டிடத்துறை போன்றவற்றில் சாதிக்கும் அமைப்புகள் உண்டாகலாம். கவனத்துடன் கையாள்வது அவசியம்.
* தூக்கத்தை துறக்கும் தருணங்கள் அடிக்கடி ஏற்படும். அதனால் சில உடல் உபாதைகளை எப்பொழுதும் தன்னுடன் இருக்கும் அமைப்புகள் உண்டாக்கலாம்.
* திடீரென ஏற்படும் கோப உணர்வு கொந்தளிக்கும் தன்மை உடையதாக இருப்பதில் எச்சரிக்கை தேவை.
கலாவதி