தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போராட்டம் இல்லாமல் வாழ முடியாதா?

?போராட்டம் இல்லாமல் வாழ முடியாதா?

Advertisement

- கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

போராட்டம் தான் நம்மை வாழ வைக்கிறது. நம்முடைய உடலையே எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளுக்குள் எத்தனை போராட்டம் நடக்கிறது தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான கிருமி களும் பாக்டீரியாக்களும் உண்ணும் உணவின் மூலமும் சுவாசிக்கும் காற்றின் மூலமும் இருக்கும் இடத்தின் மூலமும் உள்ளே போய்க்கொண்டே இருக்கின்றன. உள்ளுக்குள் இவற்றையெல்லாம் அடித்து துரத்த ஒரு போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. இதனை மருத்துவர்கள் நோய் எதிர்ப்புத் திறன் என்று குறிப்பிடுவார்கள். அது இருக்கும் வரை அதாவது போராட்டம் இருக்கும் வரைதான் நமக்கு வாழ்வு. உள்ளுக்குள் இருக்கக் கூடிய இந்த விஷயங்கள் எல்லாம் போராடாமல் அமைதியாக இருக்கலாம் என்று சொன்னால் நாமும் அமைதி அடைய வேண்டியதுதான். பிறந்துவிட்டோம். போராடித்தான் வாழ வேண்டும். வேறு வழியில்லை என்பதை புரிந்து கொள்வது தான் இதனை எதிர்கொள்ளும் வழி.

?அதிர்ஷ்டம் என்பது என்ன?

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

எதிர்பாராத ஒரு நன்மை நடப்பதை அதிர்ஷ்டம் என்கிறோம். நம் இஷ்டத்துக்கு வராமல் அது இஷ்டத்துக்கு வருவதை அதிர்ஷ்டம் என்பார்கள். ஆனால், அதிர்ஷ்டம் என்பது இது மட்டுமல்ல. அது ஒரு குணம். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுகின்ற திறமை கூட அதிர்ஷ்டம்தான். ஒரு அரேபியப் பழமொழி உண்டு. ‘‘நைல் நதியில் தள்ளிவிட்டாலும் அதிர்ஷ்டக்காரன் அங்கே ஒரு மீனை கவ்விக் கொண்டு வெளியே வந்து விடுவான்.’’ இது ஒரு நுட்பமான பொருளைச் சொல்லுகின்றது. கஷ்டத்தைச் சமாளித்துக் கொண்டு வருவான் என்பது மட்டும் இதன் பொருள் அல்ல. அந்த கஷ்டத்தின் மூலம் வெளியே வரும் பொழுது தனக்குரிய நன்மை ஒன்றையும் எடுத்துக்கொண்டு வருவான் என்று பொருள். இந்த அதிர்ஷ்ட குணம் இருந்துவிட்டால் எந்த கஷ்டத்தையும் கடந்து முன்னேறிவிடலாம்.

?இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்கிறார்களே?

- கே.எல். பகவதி, சென்னை.

உயர்ந்த பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது ஆகம முறை. சந்தனம், இளநீர், பால், பன்னீர் முதலிய உயர்ந்த பொருட்களால் அபிஷேகம் செய்வது போலவே பஞ்சாமிர்த அபிஷேகமும் சிறப்பானது. ஆனி மாதம் பௌர்ணமியில் சிவன் கோயில்களில் மூவகைப் பழங்களான மா, பலா வாழை என அபிஷேகம் செய்வார்கள். அந்த அபிஷேகங்களை கண்ணால் தரிசிப்பது மிகுந்த சிறப்பு. அந்தப் பழங்களைப் போலவே இனிமையான வாழ்க்கையைத் தரும் .

?இழந்த சொத்துக்களைப் பெற யாரை வணங்க வேண்டும்?

- பாபு, இராணிப்பேட்டை.

இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பதவி உயர்வுக்கு உலகளந்த பெருமாளை வணங்க வேண்டும். வீடு, நிலம் போன்றவற்றுக்கு வராகப் பெருமானையும் பொதுவாக லட்சுமி நாராயணரையும் வணங்கலாம். இந்திரன் இந்திரப் பதவியை இழந்தான். அப்பொழுது அந்தப் பதவியை அவனுக்குப் பெற்றுத் தந்தவர், உலகளந்த பெருமாள். வாமனனாக அவதரித்து இந்திரனுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார். எனவேதான் இழந்த பதவியைப் பெற வாமன திரிவிக்ரம அவதாரத்தை வணங்க வேண்டும்.

?மனைவி கர்ப்பமாக இருக்கும்போது முதல் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தலாமா?

- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பெரும்பாலும் கூடாது. முறை இல்லை. ஆனாலும். ஒரு சில சம்பிரதாயத்தில் செய்கின்றார்கள். இந்த மாதிரி விஷயங்களில் உங்கள் வீட்டில் என்ன மரபு என்று பாருங்கள். உங்கள் குருமார்களோ அல்லது உங்கள் வீட்டில் பெரியவர்களோ இதுவரை எப்படிக் கடைப்பிடித்தார்களோ அப்படிச் செய்யுங்கள்.

?நீண்ட காலம் வாழ எதில் கவனம் செலுத்த வேண்டும்?

- வண்ணை கணேசன், சென்னை.

நம்முடைய முன்னோர்கள் மிக அதிக காலம் வாழ்வதற்குக் காரணம் உடற்பயிற்சிகள் மட்டுமல்ல மிக முக்கியமான காரணம் பிராணயாமம் என்று சொல்லப்படும் மூச்சுப் பயிற்சி. நம்முடைய வாழ்நாளைக் கட்டுப்படுத்துவது மூச்சுதான். ஒரு மூச்சு உள்ளே போகவும் ஒரு மூச்சு வெளியேறவும் நம்முடைய உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. உற்சாகமோ, சோம்பலோ, தூக்கமோ, உடல் வளர்ச்சியோ, உடல் தளர்ச்சியோ இதைப் பொறுத்துதான் இருக்கிறது. நம்முடைய வாழ்நாள் 50 வருடம் 60 வருடம் நூறு வருடம் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா. அதெல்லாம் கணக்கு அல்ல. எத்தனை மூச்சுகள் என்பதுதான் கணக்கு. ஒரு தரம் மூச்சு உள்ளே போய் வெளியே வந்தால் நம்முடைய உடம்பின் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. ஒரு மூச்சால் உடல் தேய்கிறது ஒரு மூச்சால் உடல் வளர்கிறது. உள்ளே ஆழமாக இழுத்து நிறுத்தி நிதானமாக வெளியே விடுவதன் மூலமாக நம்முடைய வாழ்நாள் அதிகரிக்கிறது. ஒரு மரத்தை வேகமாக அறுப்பதற்கும் நிதானமாக அறுப்பதற்கும் உள்ள வேறுபாடுதான் இது.

?கோயில்களில் எதிர்ச் சுற்றாக சுற்றலாமா?

- ராமகிருஷ்ணன், விழுப்புரம்.

சுற்றக்கூடாது. அப்படி எதுவும் விதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. விதிப்படி செய்வது வேறு. விருப்பப்படி செய்வது வேறு. நம்முடைய முன்னோர்களும் குருமார்களும் எப்படிச் செய்தார்களோ அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். ஆனால், ஒரு விஷயம். கோயில் பிராகாரங்களை வலம் வரும்போது ஜெட் வேகத்தில் வலம் வருவதும் தவறு.

?சிறியவர்கள் அறிவுரை சொல்லலாமா?

- சங்கர், வேலூர்.

அறிவுரையை யாரும் சொல்லலாம். இளம் வயதில் நல்ல அறிவும் தெளிவும் இருந்தால் ஞானத்தில் அவர் மூத்தவராகவே கருதப்படுவார். எனவே சிறுவர்கள் அறிவுரை சொல்வதில் பிழை இல்லை. ஆனால், சிறுவர்கள் அறிவுரை சொல்லும்படி பெரியவர்கள் நடந்து கொள்ளக்கூடாது. பேராசிரியர் ஒருவருக்கு பொடி போடும் பழக்கம் வெகுகாலமாக இருந்தது. இதைச் சகிக்காத அவர் மகன் ஒருமுறை நேரடியாகவே சொல்லிவிட்டார். ‘‘இந்தச் சனியனை விட்டுத் தொலையேன்’’ என்று அன்றோடு பேராசிரியர் பொடி போடும் பழக்கத்தை விட்டு விட்டார். அறிவுரையை ஏற்றுக் கொண்டால் பெரியவர் இன்னமும் பெரியவராகி விடுவார்.

?அபிஷேகப் பொருட்களுக்கு வரிசைக்கிரம நியதி உண்டா?.

- ராணி, திண்டுக்கல்

உண்டு. இது சைவத்திலும் வைணவத்திலும் மாறும். சைவத்தில் வைதீகமாகச் செய்யும்போது சந்தனத் தைலம் பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், பழரசம், கரும்புச்சாறு, இளநீர், சந்தனம் என்று அபிஷேகம் செய்வார்கள். வைணவத்தில் இந்த வரிசை மாறும். அதிலும் பாஞ்சராத்ர ஆகம வரிசைக்கும், வைகானச முறைக்கும் வேறுபாடு இருக்கும்.

?எழுத்துக்கும் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?

- பெருமாள், திருநெல்வேலி.

எழுத்து அர்த்தம் மாறாது. பேச்சு அர்த்தம் மாறும். நோ என்கிற வார்த்தையை நாம் வெறும் உச்சரிப்பில் சொன்னால் அது சொல்லும் இடத்தை வைத்து பொருள் மாறும். அதுவும் நேர் எதிர்ப் பொருளைத் தரும். நோ(KNOW) என்றால் தெரியும் என்று அர்த்தம். தெரியாது(NO) என்றும் அர்த்தம்.

?உறவுகள் இப்போது எப்படி இருக்கின்றன?

- மகேஷ்குமார், கடலூர்.

ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். பெரும் பணக்காரர்கள் நமக்கு சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால். நேற்று வரை நம்மோடு இருந்த நம்முடைய உறவினர் ஒருவர் நல்ல நிலைமைக்கு உயர்ந்துவிட்டால் நாம் அவரை விரும்பு வோமா என்று சிந்தித்துப் பாருங்கள். இது ஒரு முரண்பாடு. உறவுகள் இந்த முரண்பாடுகளோடுதான் இருக்கின்றன. தானும் நன்றாகத்தானே இருக்கிறோம் என்று துரியோதனன் நினைக்க வில்லையே... பாண்டவர்களின் வாழ்வல்லவா அவனை நிம்மதியில்லாமல் பாடாய்ப்படுத்தியது.

Advertisement

Related News