இறை உணர்வை உரைக்க முடியுமா?
ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தரின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். ‘இறைக் காட்சி பெற்ற பிறகுதான் அவரைப்பற்றி சரியாகப் பேச முடியும். அப்படி இறைக் காட்சி பெற்றவனுக்கு, இறைவன் உருவம் உடையவர், அதே வேளையில் உருவம் அற்றவர் என்பது தெரியும். அவர் இன்னும் என்னென்னவாகவோ உள்ளார், அவற்றைப்பற்றி கூறுவது சாத்தியம் அல்ல.
‘ஒருநாள் குருடர்கள் சிலர் ஒரு யானைகள் அருகில் செல்ல நேர்ந்தது. ஒருவன் அவர்களிடம், ‘‘இந்த மிருகத்தின் பெயர் யானை’’ என்று தெரிவித்தார். ‘‘யானை எப்படி இருக்கும்?’ என்று கேட்டபடி குருடர்கள் யானையின் உடலைத் தொட்டுப் பார்க்கத் தொடங்கினார்கள். ஒருவன், ‘‘யானை ஒரு தூணைப்போல் இருக்கிறது’’ என்றான். அவன் யானையின் காலை மட்டும் தொட்டவன். இன்னொருவன் ‘‘யானை ஒரு முறம் போன்றது’’ என்று சொன்னான். அவன் அதன் காதில் கையை வைத்துப் பார்த்தவன். இதுபோல் துதிக்கையையோ வயிற்றையோ தொட்டுப் பார்த்தவர்கள் தாங்கள் அறிந்தபடியே தெரிவித்தார்கள். அதுபோல், இறைவனை யார் எவ்வளவு தூரம் கண்டிருக்கிறாரோ, அதற்கேற்ப இறைவன் இப்படிப்பட்டவர், வேறு எப்படிப்பட்டவராகவும் அவர் இருக்க முடியாது என்று எண்ணி விடுகிறார்கள்.
‘வெளியே சென்று திரும்பிய ஒருவன், ‘‘மரத்தடியில் அழகான செந்நிறப் பிராணியைக் கண்டேன்’’ என்று சொன்னான். வேறொருவனோ, ‘‘நான் உனக்கு முன்பே அந்த மரத்தடிக்குச் சென்றிருந்தேன். அது சிவப்பு நிறமாகவா இருக்கிறது? பச்சை நிறத்தில் இருந்ததை என் இரு கண்களால் கண்டேன்!’ என்று தெரிவித்தான். மற்றொருவன், ‘‘உங்களுக்கெல்லாம் முன்னதாகவே நான் அங்கே சென்று வந்தேன். அந்தப் பிராணியை நானும் பார்த்தேன். அது சிவப்பாகவும் இல்லை, பச்சையாகவும் இல்லை; நீலநிறமாக இருந்ததை என் கண்களால் கண்டேன்’’ என்று கூறினான்.
மேலும் அங்கிருந்த இருவர், ‘‘அது மஞ்சள் நிறத்தில் இருந்தது’’ என்றும், ‘‘சாம்பல் நிறத்தில் இருந்தது’’ என்றும் கூறினார்கள். இதுபோலவே பல்வேறு நிறங்கள். இறுதியில் சச்சரவு எழுந்தது. ‘‘நான் கண்டதுதான் சரியானது’’ என்று ஒவ்வொருவருமே நினைத்தார்கள். அவர்களுடைய சண்டையைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவன் அவர்களிடம், ‘‘விஷயம் என்ன?’’ என்று கேட்டான். அவர்கள் கூறிய விவரங்களைக் கேட்டுவிட்டு, ‘‘நான் அந்த மரத்தடியிலேயே வசித்து வருகிறேன். அந்தப் பிராணி எதுவென்று எனக்குப் புரிகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் என்னென்ன சொன்னீர்களோ அவை யாவுமே உண்மைதான். அது ஒரு பச்சோந்தி. ஒருசமயம் பச்சையாக இருக்கும், மற்றொரு சமயம் நீலமாக இருக்கும். பல்வேறு நிறங்களுடன் அது இருக்கும். சில வேளைகளில் அது எந்த நிறமும் இல்லாமல் நிர்க்குணமாக இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்’’ என்று விளக்கினான்.
‘எனவே, இறைவன் உருவம் உடையவர் மட்டுமே என்று சொல்வதில் என்ன பயன்? அவர் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல் மனிதனாக வருகிறார் என்பதும் உண்மை. பல உருவங்களில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் என்பதும் உண்மை. அதே வேளையில் அவர் உருவமற்றவர், அகண்ட சச்சிதானந்தம் என்பதும் உண்மை. வேதங்கள் அவரை உருவமுள்ளவர், உருவமற்றவர் என்ற இரண்டு நிலைகளிலும் கூறுகின்றன; குணங்கள் உடையவராகவும் குணங்கள்
அற்றவராகவும் பேசுகின்றன.
‘எப்படி தெரியுமா? சச்சிதானந்தம் எல்லையற்ற கடலைப் போன்றது. குளிர்ச்சியின் காரணமாகக் கடல்நீர் பனிக்கட்டியாக உறைகிறது, பல உருவங்களோடு பனிக்கட்டிகள் கடல்நீரில் மிதக்கின்றன. அதுபோல், பக்தி என்னும் குளிர்ச்சியின் காரணமாக சச்சிதானந்தக் கடலில் உருவக் கடவுள் தோன்றுகிறார். பக்தர்களின் பொருட்டே இறைவன் உருவம் தாங்குகிறார். ஞான சூரியன் உதிக்கும்போது பனிக்கட்டி உருகி மீண்டும் தண்ணீராகி விடுகிறது, மேலும் கீழும் எங்கும் ஒரே தண்ணீர்மயம்.