ஏகாதசி அன்று திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்யலாமா?
சிவன், விஷ்ணு போல பிரம்மா வணங்கப்படாதது ஏன்? பிரம்மனை பூஜித்து வணங்கலாமா, கூடாதா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பிரம்மா சிவனின் முடியைக் கண்டதாக பொய் சொன்னதால் அவரை மூலஸ்தானமாகக் கொண்ட ஆலயங்கள் இல்லை என்று ஒரு புராணமும் பிருகு முனிவரின் சாபம் காரணமாக அவர் மூலவராக அமர இயலவில்லை என்று மற்றொரு புராணமும் சொல்லும். மூலவராகத்தான் பிரம்மா வணங்கப்படுவதில்லையே தவிர, மற்றபடி யாகங்களிலும் ஆலயத்தில் பரிவார தேவதையாகவும் அவருக்கு என்று தனிமுக்கியத்துவம் உண்டு. சிவாலயங்களில் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு நாளன்றும் பிரம்மா பூஜை என்பது விசேஷமாகச் செய்யப்படுகிறது. அரசமரத்தைச் சுற்றி வரும் போதுகூட மூலதோ பிரம்ம ரூபாய என்று மந்திரம் சொல்லித்தான் வழிபடுவார்கள். அரசமரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மா இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக, பிரம்மா பூஜை என்பதும் இந்துமதத்தில் உண்டு. மும்மூர்த்திகளில் ஒருவர் என்பதால் தாராளமாக பிரம்மாவை பூஜித்து வணங்கலாம்.
திருப்பதி ஏழுமலையான், குபேரனிடம் கடன் வாங்கியதாக சொல்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் செல்வந்தர் ஆனது எப்படி?
- பொன்விழி, அன்னூர்.
தனது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதற்கான வட்டித் தொகையைத்தான் ஏழுமலையான் இன்றளவும் தனது பக்தர்கள் தரும் காணிக்கையைக் கொண்டு செலுத்தி வருவதாகச் சொல்வார்கள். ஆக, ஏழுமலையான் இன்றளவும் கடன்பெற்றவராகத்தான் இருக்கிறார். இந்த கருத்தில் உள்ளிருக்கும் தத்துவம் என்னவென்றால் கர்மாவின் காரணமாக நாம் கண்டுவரும் பிறவிக்கடன்கள் அனைத்தையும் நமக்காக பெருமாள் சுமந்து கொண்டிருக்கிறார். தனது பக்தர்களைக் பிறவிக்கடன்களில் இருந்து காக்கும் பொருட்டு பெருமாளே அந்தக் கடன்களை சுமந்துகொண்டிருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நவகிரக படங்கள், எந்திரத் தகடுகளை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இறைவன் இட்ட பணியைச் செய்யும் பணியாளர்கள்தான் நவகிரஹங்கள். அந்த நவகிரஹங்களை தெய்வத்திற்கு இணையாக பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டிய அவசியம் இல்லை. ஆலயத்தில் நவகிரகங்களை வைத்திருக்கிறார்களே என்ற கேள்வி எழலாம். ஒரு அரண்மனை என்று இருக்கும்போது அங்கே அரசன், அரசி, அமைச்சர், படைத்தளபதி மற்றும் காவலர்கள், பணியாளர்கள் என எல்லோரும்தான் இருப்பார்கள். அதுபோலத்தான் ஆலயங்களிலும் பரிவார தேவதைகளில் ஒன்றாக நவகிரஹங்களை வைத்திருக்கிறார்கள். ஆலயத்திற்குச் செல்லும்போது பரிவார தேவதைகளை வணங்கினால் போதுமானது. பரிவார தேவதைகளின் படங்களை வீட்டுப் பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏகாதசி அன்று திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்யலாமா?
- ரவிராஜன், திருப்பூர்.
செய்யலாம் என்பதால்தானே பஞ்சாங்கத்தில் ஏகாதசி நாளன்றும் சுபமுகூர்த்தம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏகாதசி நாளில் விரதம் இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அவ்வாறு விரதம் இருக்கும் நாளில் சுபநிகழ்ச்சிகளை நடத்தினால், அங்கு வருபவர்கள் உணவு அருந்த இயலாதே என்ற காரணத்தினால் வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை கடைபிடிப்பவர்கள் ஏகாதசி நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்வதைத் தவிர்க்கிறார்கள். மற்றபடி ஏகாதசி என்பது முகூர்த்தத்தில் ஒதுக்கப்பட வேண்டிய திதியாக சொல்லப்படவில்லை.
திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு செல்லும் மணப்பெண்ணை வலதுகாலை முதலில் ஏன் எடுத்து வைக்கச் சொல்கிறோம்?
- கே.எம்.ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.
புதிதாக திருமணம் முடித்து வரும் மணப்பெண் மட்டுமல்ல, அந்த மணமகனும் வலதுகாலை எடுத்துவைத்துத்தான் உள்ளே வரவேண்டும். திருமணம் மட்டுமல்லாது புதுமனைப் புகுவிழாவின்போதும் மனை ஏறும் தம்பதியர் மட்டுமல்லாது உறவினர்கள் அனைவரையும் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வாருங்கள் என்று புரோஹிதர் சொல்வதைக் காண இயலும். ஜோதிடவியல் ரீதியாக நமது உடம்பின் வலதுபகுதியை ஆன்ம காரகன் எனும் சூரியனும் இடது பாகத்தை மனோகாரகன் எனும் சந்திரனும் ஆட்சி செய்கிறார்கள். ஆன்மாவினைப் பின்தொடர்ந்துதான் மனிதனின் மனமும் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே வரச் சொல்கிறார்கள். மனம்போன போக்கில் மனிதன் போகக் கூடாது என்பதாகவும் அந்த மனதினைக் கட்டுப்படுத்துவது மனிதனின் ஆன்மாவாகத்தான் இருக்க வேண்டும் என்பதாகவும் இந்த சம்பிரதாயத்தின் பொருளாகப் பார்க்கப்படுகிறது.
அதிர்ஷ்டம் என்ற ஒன்று கிடைக்க எந்த தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்?
- ம.ஸ்ரீகிருஷ்ணா, வழுவூர்.
கடுமையாக உழைக்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும். தொழிலுக்கு கிளம்புவதற்கு முன்னால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை உணர்ந்து கண்ணுக்குத் தெரிந்த கடவுளாகிய பெற்றோரை வணங்கிவிட்டுச் சென்றால் கண்ணுக்குத் தெரியாத அதிர்ஷ்டம் என்பதும் வந்து சேரும்.
மறைந்த முன்னோர்களின் பொருட்களை வீட்டில் வைத்து பாதுகாக்கலாமா?
- டி. நரசிம்மராஜ், மதுரை.
மறைந்த முன்னோர்களின் உடலோடு ஒட்டி உறவாடிய பொருட்களாக இருந்தால் அதாவது அவர்களது ஆடைகள், பாய், தலையணை, காலணிகள் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் அவர்கள் உபயோகித்த வீடு, வண்டி, வாகனங்கள், மரச் சாமான்கள், நிலபுலன்கள், போன்றவற்றை பாதுகாக்கலாம். எந்தப் பொருள் என்பதைப் பொறுத்து இந்தக் கேள்விக்கான பதில் மாறுபடும்.
அமாவாசை அன்று மாலை 06.00 மணிக்கு காகம் வீட்டிற்குள் வந்துவிட்டு சென்றுவிட்டது. இது நல்லதா? கெட்டதா? நாங்கள் தினமும் காகத்திற்கு உணவு அளித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஏதாவது பிரச்னை ஏற்படுமா? பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
- ரா.ராமநாதன், சேலம்.
பிரச்னைகள் ஏதும் வராது. தினந்தோறும் காகத்திற்கு உணவு அளித்துவருவதாகச் சொல்கிறீர்கள். இதுவே மிகச் சிறந்த பரிகாரம் ஆகும். அமாவாசை அன்று செய்யும் முன்னோர் வழிபாட்டினை கூடுதல் சிரத்தையுடன் செய்து வாருங்கள். நன்மையே உண்டாகும். கவலை வேண்டாம்.
வீட்டினுள் கட்டும் குளவிக் கூட்டினை உடைத்து அழிக்கக் கூடாது என்பது எதனால்?
- என். இளங்கோவன், மயிலாடுதுறை.
எந்த ஒரு உயிரினத்தையும் நாம் அழிக்கக் கூடாது என்பதால்தான். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இவ்வாறு சொல்கிறார்கள். அதே நேரத்தில், மனிதன் வசிக்கும் வீட்டிற்குள் பூனை, நாய் உட்பட மற்ற உயிரினங்களுக்கு அனுமதி இல்லை என்றுதான் சாஸ்திரம் வலியுறுத்தும். கூட்டிற்குள் எந்த பூச்சியும் இல்லை, இறக்கை முளைத்து பறந்துவிட்டது என்பது தெரிந்தால் தாராளமாக குளவிக்கூட்டினை அழித்துவிடலாம். அதில் எந்தவிதமான தவறும் உண்டாகாது.