ஆராயாது அருள் தரமுடியுமா? அப்படித் தந்தால் விபரீதம்தானே?
தமிழகத்தில் நிறைய ஆலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயத்திலும் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்கின்றனர். வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரார்த்தனை உண்டு.
“பிள்ளைகளுக்குத் திருமணமாக வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும்.” - இப்படி எத்தனையோ அபிலாஷைகள் உண்டு. அந்த எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றனர். சிலர் பட்டம் பதவி வேண்டி வருகின்றனர். ஒவ்வொருவர் வேண்டுகோளும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இது தவறா என்றால் தவறில்லை.
பகவான் கீதையில், தன்னைத் தரிசிக்க வருபவர்களை நான்கு விதமாகப் பிரிக்கிறான்.
சதுர்விதா பஜந்தே மாம் ஸுக்ரிதிநோர்ஜுனா |
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்தீ ஜ்ஞானீ ச பரதர்ஷபா ||
- அத்யாயம் 7 சுலோகம் 16 ||
1. ஆர்தோ: துன்பத்தில் இருப்பவர்கள்
2. ஜிஜ்ஞாஸு: உண்மை அறிய ஆர்வமுள்ளவர்கள்
3. அர்த்தார்தீ: பொருள் வேண்டும் என்று விரும்புபவர்கள்
4. ஜ்ஞானீ: ஞானம் பெற்றவர்கள்
முதல் ரகம் துன்பத்திலிருந்து விடுதலை பெற வந்தவர்கள். இரண்டாவது ரகம் பொருளை விரும்பி வந்தவர்கள். அதிலும் இழந்ததைப் பெற வந்தவர்கள், புதிதாகத் பெற வந்தவர்கள் என இரண்டு வகை. கோமகனான இந்திரனே தன்னுடைய இந்திரப் பதவி போனவுடன், பகவானிடம் வந்து வேண்டுகின்றான். ‘‘எங்கள் செல்வம் போய்விட்டது. அதை எல்லாம் பெற்றுத்தர வேண்டும்’’ என்கின்ற கோரிக்கையை வைக்கிறான்.
பகவானும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் தானம் வேண்டி அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்கின்றார்.
இப்படி இழந்த செல்வத்தைப் பெற வந்தவர்கள் ஒருவகை. இன்னொரு வகையினர் எவ்வளவு செல்வம் இருந்தாலும், மேலும் மேலும் வேண்டுபவர்கள்.
மூன்றாவது வகையினர் வித்தியாசமானவர்கள். என்னதான் ஆன்மிகத்தில் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்வதற்காக வந்தவர்கள். நான்காவதாகப் பகவானிடம் ஞானத்தோடு வந்து சரணடைந்தவர்கள். பகவானே எல்லாம் என்று நினைப்பவர்கள்.
இந்த நான்கு வகை பக்தர்களில் முதல் இரண்டு வகை பக்தர்கள்தான் அதிகம். துன்பங்கள் தீர வேண்டும், செல்வம் சேர வேண்டும் என்று வருபவர்கள். அதற்காகப் பிரார்த்தனை செய்பவர்கள்.
பகவானிடத்தில் நாம் பிரார்த்தனை வைப்பது சரி. ஆனால், எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்கு ஆண்டாள் ஒரு வழி காட்டுகின்றாள். ஒரு அருமையான பாசுரம். இந்தப் பாசுரத்திற்கு நாம் விளக்கம் கொடுக்கப் போவதில்லை. ஆனால், அதிலே ஒரு சொல் மிக முக்கியமானது. முதலில் பாசுரத்தைப் பார்த்து விடுவோம்.
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி,
கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்து,
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
சுருக்கமான பொருள் இதுதான்.
மழைக்காலத்தில் மலைக்குகையில் படுத்துத் தூங்கும் வீரமுள்ள சிங்கம், தூக்கம் தெளிந்து எழும்பொழுது நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து, உடம்பை நாலு பக்கமும் அசைத்துச் சோம்பல் முறித்து கர்ஜனை செய்து வெளியில் வருவது போல காயாம்பூ போன்ற நீலநிறமுடையவனே! நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிங்காசனத்தில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும். இதில் கடைசி வரி முக்கியம்.
யாம் தந்த காரியத்தை அருள் என்று சொல்லி இருந்திருக்கலாம். ஆனால், ஆராய்ந்து அருள் என்று பிரார்த்தனை வைப்பதற்கு காரணம் உண்டு.
ஆராயாமல் அருளினால் அது பகவானுக்கும் சங்கடத்தைத் தரும். வரம் வாங்கியவருக்கும் சங்கடத்தைத் தரும்.
ஒரு கற்பனைக்கதை
ஒரு மனிதனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை. அவன் தினமும் கோயிலுக்குப் போய் பிரார்த்தனை செய்து வந்தான். பகவான் அவனுடைய பிரார்த்தனையை காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஒரு நாள் பகவானிடம், ‘‘நான் இத்தனை நாள் உன் கோயிலில் வந்து பூஜை செய்து, பிரார்த்தனை செய்தும் என்ன புண்ணியம்? உன்னுடைய பத்தன் ஒரு மோட்டார் சைக்கிளைக் கேட்கிறான்? நீ வாங்கித் தரவில்லையே? என்று கோபித்துக்
கொள்ளுகின்றான்.
இறைவனுக்கு வேறு வழி இல்லை. அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் கிடைப்பதற்கு அருள் புரிகின்றார். யாரோ ஒருவர் உதவுகின்றார். ஏதோ ஒரு விதத்தில் பணம் வருகின்றது. அவர் மோட்டார் சைக்கிளை வாங்கி விடுகின்றார்.
ஒரு வாரம் போயிற்று. அவருடைய 15 வயது பையன் மோட்டார் சைக்கிளை நான் ஒரு சுற்றுச் சுற்றி விட்டுத் தருகிறேன் என்று நச்சரித்துக் கொண்டிருக்க, அப்பா இசையவில்லை.
“பையனுடைய அம்மா, அவன்தான் ஆசைப்பட்டு கேட்கிறானே, ஒரு சுற்று தந்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்று சிபாரிசுக்கு வர, அவர் சரி என்று தந்து விடுகிறார்.
அவன் எடுத்துச் சென்று ஐந்து நிமிடத்தில் ஒரு விபத்தை ஏற்படுத்தி விட்டு வீட்டிற்கு வந்து சேருகின்றான். அதற்குப் பிறகு ஆஸ்பத்திரி, காவல் நிலையம், கோர்ட் கேஸ் என்று அலையும் படியாக ஆகிவிடுகிறது.
ஏதோ ஒரு காரணத்தினால், இவனுக்கு நேரம் சரியில்லை, இப்பொழுது இவனுக்கு தர வேண்டாம் என்று நினைத்து இறைவன் தள்ளிப் போட்டு இருப்பார். ஆனால் நச்சரிப்புத் தாங்காமல் தந்துவிட்டார்.
இப்போது ஒரு பக்தனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று இறைவனுக்கும் சங்கடம். நாம்தான் ஏதோ கேட்டோம்; பகவான் தராமல் இருந்து இந்த ஆபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றி இருக்கலாமே என்று பக்தன் நினைக்க
ஆரம்பித்து விட்டான்.
இது கதையைப் போல் இருந்தாலும் இதிலுள்ள நடைமுறை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனால் தான் ஆண்டாள் மிகவும் எச்சரிக்கையாக, நாங்கள் வந்த காரியத்தை முடித்துத் தர வேண்டும் என்று கேட்காமல், ஆராய்ந்து அருள் என்று வேண்டுகிறாள்.
ஆராயாமல் அருளினால் என்ன ஆகும்? புராணக்கதையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அரக்கர் குலத்தலைவன் பத்மாசுரன் மாபெரும் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். சிவனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவன். அல்லும் பகலும் தவம் செய்தான். தன்னையே இடைவிடாது தியானிப்பது அறிந்து சிவனே மகிழ்ந்து போனார். அவன் கோரிய வரத்தைத் தர விரும்பினார். அவன் முன்னே தோன்றி “பத்மாசுரா! உன் தவத்தைக் கண்டு மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேள்!. எது கேட்டாலும் தருகிறேன்’’. ஈசன் வரம் கொடுக்கத் தயாரானார்.” ஈசனே, நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் பஸ்பமாகிவிடவேண்டும்.” பத்மாசுரன் இப்படி ஒரு வரத்தைக் கேட்பான் என்று ஈசனே எதிர்பார்க்கவில்லை.
என்ன செய்வது, வாக்குக் கொடுத்தாயிற்று. “அப்படியே ஆகட்டும் பத்மாசுரா. நீ கோரிய வரம் தந்தேன்”.
வரம் பெற்ற மறுகணமே அவர் கொடுத்த வரத்தைப் பரிசோதிக்க எண்ணினான் பத்மாசுரன். யாரிடம் பரிசோதிப்பது? ஏன் தனக்கு வரம் கொடுத்த சிவனே எதிரில் இருக்கிறாரே. அவரிடமே பரிசோதித்து விடுவோம் என முன்னே வந்தான் பத்மாசுரன்.
ஆராயாது அருளிய விளைவு இது. பிறகு? அடுத்தவாரம் பார்ப்போம்.