பிரம்மச்சரியம்
பிரம்மச்சரியம் என்கிற சொல்லுக்கு காமத்தை துறத்தல், பெண் தொடர்பை விலக்கல் என்ற பொருளே இங்கு பொதுவாக உள்ளது. ஆங்கிலத்தில் இதை Celibacy என்று சொல்வார்கள். ஆனால், பிரம்மச்சரியம் என்பதற்கு பிரம்மத்தை ஆஸ்ரயித்தல் என்பதே உண்மையான பொருளாகும். அதாவது பிரம்மத்தை நோக்கிய பயணம். தன் சொரூபமான பிரம்மம் என்கிற அகத்தே ஒளிரும் பெருஞ்சக்தியை நோக்கியிருத்தல். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்த்தால் தன்னை நோக்கிய பயணத்தில் எவையெல்லாம் தடைகளை ஏற்படுத்துமோ அவை அனைத்தையுமே விலக்குதல். பிரம்மச்சரியம் என்பது, ஏதோ காமத்தை மட்டும் அனுபவிக்காது இருப்பதல்ல. ஏதோ ஒரு புலன் வழியே மனம் அனுபவிக்கும் இன்பத்தை அடக்குவதல்ல. ஐம்புலன்களுக்குமே பிரம்மச்சரியம் உண்டு. மெய் எனப்படும் தீண்டலால் ஏற்படும் இன்பத்தை குறைத்துக் கொள்ளுதல். காதால் எதைக் கேட்க வேண்டுமோ அதை மட்டுமே கேட்டல். இனிமையான தெய்வீக விஷயங்களை மட்டுமே அல்லது எவையெல்லாம் புற உலகில் இழுத்துப்போட்டு மனதை அலை கழித்து அக உலகை காண முடியாமல் செய்கின்றதோ அந்தச் சொற்களையெல்லாம் கேட்காமல் தடுத்து நிறுத்துவது. எந்தச் சொற்களெல்லாம் உங்களின் ஆத்மீக வாழ்க்கைக்கு உபயோகப்படுகின்றதோ அதை மட்டுமே பேசுவது. மித மிஞ்சிய பேச்சால் மனதின் இரைச்சல் அதிகமாகும். நீங்கள் செல்லும் ஆன்மிகப் பாதை தடம் மாறும். எனவே, சொற்களில் கவனத்தோடு இருந்து நாக்கிற்கும் அது உதிர்க்கும் சொற்களின் மூலமான மனதிற்கும் பிரம்மச்சரியம் தேவைப் படுகின்றது.
எதை உண்டால் இந்த உயிர் பிழைத்திருக்கின்றதோ அதை மட்டுமே உண்ணல். ஏனெனில், உணவே மனதாக வடிவெடுக்கின்றது. உணவே மனதின் சூட்சுமம். உணவுகள் சில உணர்ச்சிகளை மனதில் தோற்றுவித்து அலைகழிப்பை ஏற்படுத்தும். எனவே, தாமஸ, ராஜஸ உணவுகளை விட்டுவிட்டு சாத்வீகமான உணவை மட்டுமே புசிப்பதும் பிரம்மச்சரியம்தான். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது கண்களே. எதை காண்கிறீர்களோ அதையே மனம் முதலில் கிரகிக்கும். அதைக் கொண்டே மனம் கொழிக்கும். கண்டவற்றை காணும்போது உங்களை குப்புறத் தள்ளும். எனவே, காணலை கவனத்தோடு கையாள வேண்டும். ஒரு கட்டத்தில் நீங்கள் காணும்போதே அந்தக் காட்சியிலிருந்து உங்களால் விலகியிருக்கும் விவேகத்தை கைக்கொள்ள வேண்டும். இதுவே கண்களுக்கான பிரம்மச்சரியம். மூக்கினால் எதை நுகர்வது என்பதில் கூட பிரம்மச்சரியம் உண்டு. மனதிற்கு இதமான சந்தனம், குங்குமாதி விஷயங்களை நுகரும்போதே உங்கள் மனம் மென்மையாக லயப்படும். அதனாலேயே வீட்டிலுள்ள பூஜையறையில் பூக்களுக்கும், சாம்பிராணி வாசனைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.எனவே, பிரம்மச்சரியம் என்பது ஐம்புலன்களால் பின்பற்றப்பட வேண்டியது. புற வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையென உணரும் ஒரு தியானி அக வாழ்வினுள் நுழைய பிரம்மச்சரியத்தை கைக்கொள்ள வேண்டியது அவசியமாகும். பிரம்மம் அகமே… என்கிற திட நிச்சயம் கொண்ட மனம் பிரம்மச்சரியத்தை தன்னியல்பாக கைக்கொள்ளும். அப்படி கைக்கொண்டவரை ஐந்து கரங்கள் கொண்டு ஐங்கரன் என்கிற பிரம்மச்சாரி அரவணைத்துக் கொள்வார். ஞானம் என்கிற பழத்தை
அருளுவார்.