தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரம்ம முஹூர்த்தம்

ஒருமுறை, பரிவாரங்களுடன் தென் மாவட்டம் செல்லும் வழியில் புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார், காஞ்சி ஆச்சார்யாள். மெயின் ரோட்டில் இருந்த ஒரு பெரிய சத்திரத்தில் தங்கியிருந்து, அன்று இரவு, ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார், ஸ்வாமிகள். தனக்குப் பணிவிடை செய்யும் நாகராஜன் என்ற இளைஞனை அருகில் அழைத்து,

Advertisement

“அப்பா நாகு… நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நா எழுந்து ஸ்நானம் பண்ணியாகணும். நீ ஞாபகம் வெச்சுக்கோ” என்று கட்டளையிட்டார் ஆச்சார்யாள்.

உடனே அந்த இளைஞன் நாகு, மிக அடக்கத்துடன், “உத்தரவு பெரியவா. நீங்க ஆக்ஞாபித்தபடியே சரியா மூணரைக்கு, ‘ஹரஹர சங்கர… ஜெயஜெய சங்கர’னு நாமாவளி கோஷம் பண்றேன் பெரியவா” என பவ்வியத்துடன் தெரிவித்துக் கொண்டான். பெரியவா புரிந்து கொண்டு, லேசாகப் புன்னகைத்தபடியே, “மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன் பெரியவானு சொன்னா அவ்வளவா நன்னா இருக்காதுங்கறதாலே, ‘ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’னு சொல்லி எழுப்பறேங்கறயாக்கும்” என்று நாகுவைப் பார்த்துப் பளிச் சென்று கேட்டார். நாகு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். இதற்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை.

“சரி… சரி. அப்படியே பண்ணு” என்று கூறிவிட்டு, உள்ளே சென்றுவிட்டார் ஆச்சார்யாள். இரவு மணி பதினொன்று. சத்திரம் உறக்கத்தில் ஆழ்ந்தது. பெரியவாளும் சயனத்துக்குச் சென்றுவிட்டார். நாகுவுக்குத் தூக்கமே வரவில்லை. கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. அந்தச் சத்திரத்தில் சுவர்க் கடிகாரமோ, அலாரம் டைம்பீஸோ இருக்கவில்லை.

மடத்திலும் இல்லை. நாகுவிடம் இருப்பதோ அவனுடைய மாமா, பூணூல் கல்யாணத்தில் பரிசளித்த ரொம்பப் பழைய வாட்ச் ஒன்றுதான். பெரியவாளோடேயே எப்போதும் இருக்கவேண்டி உள்ளதால், அதையும் கையில் கட்டிக் கொள்வதில்லை. அது நாகுவின் பழைய டிரங்க் பெட்டிக்குள்ளேயே அடைக்கலமாகி இருக்கும். ஒவ்வொரு நாளும் நாகு அதற்கு ‘கீ’ கொடுக்க எடுத்துப் பார்ப்பதோடு சரி… அப்புறம் தொடுவதில்லை.

‘தானும் படுத்துத் தூங்கிவிட்டால் விடியக்காலம் மூணரைக்குப் பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்?’ என்ற கவலை நாகுவைத் தொற்றிக் கொண்டது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவன், நேராக ஸ்டோர் ரூமுக்குப் போனான். டிரங்க் பெட்டியைத் திறந்து கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டான். நேராக ஸ்வாமிகள் சயனித்திருக்கும் அறைக்கு வெளியே சத்தமின்றி வந்து அமர்ந்தான். சத்தம் துளிக்கூட வெளியில் கேட்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் பண்ண ஆரம்பித்துவிட்டான்.

திரும்பத்திரும்பப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். தனது கடிகாரத்தைப் பார்த்தான். மணி சரியாக 3.30க்கு நாகு அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தான். கண்களைத் துடைத்துக் கொண்டான். கைகளைக் கட்டிக் கொண்டு, ஸ்வாமிகள் சயனிக்கும் அறையைப் பார்த்தபடியே, சன்னமான குரலில், ‘ஹரஹர சங்கர… ஜெயஜெய சங்கர…’ என நாமாவளி கோஷம் எழுப்பினான். சற்று நேரத்திலேயே அறைக் கதவு திறந்தது. சாட்சாத் ஸ்ரீ பரமேஸ்வரனே நடந்து வருவது போல சிரித்தபடியே மந்தகாசத்துடன் வெளிப்பட்டு, ‘சுப்ரபாத’ தரிசனமளித்தார் ஆச்சார்யாள்.

அந்த தரிசன பாக்கியம் அன்று நாகுக்கு மட்டுமே கிடைத்தது. ஆச்சார்யாள், அந்தச் சத்திரத்து வாசற்படி வரை மெதுவாக நடந்து போய்விட்டு வந்தார். ஸ்நானத்துக்கு ஏற்பாடு செய்ய விரைந்தான் நாகு. சத்திரம் விழித்துக் கொண்டது. அடுத்த நாளும், அதற்கு அடுத்த நாளும் அதே மாதிரியே நாகுவின் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணம், ஹரஹர சங்கர… ஜெய ஜெய சங்கர… நாமகோஷம் எனத் தொடர்ந்தது. நான்காவது நாள் இரவு. தன் இடுப்பில் கைக் கடிகாரத்தைச் செருகிக் கொண்டு ஸ்வாமிகளின் அறைக்கு வெளியே விஷ்ணுசஹஸ்ர நாமப் பாராயணம் செய்தபடியே விழித்துக் கொண்டு இருந்த நாகு, தன்னையும் அறியாமல் கண்ணயர்ந்து விட்டான்.

திடீரென்று, ‘ஹரஹர சங்கர… ஜெயஜெய சங்கர…’ என்று ஒரு தெய்வீகக் குரல் நாகுவைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது. தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான். எதிரே, கருணை ததும்பச் சிரித்த முகத்துடன் ஆச்சார்யாள். ஸ்வாமிகள் வாத்சல்யத்துடன், “கொழந்தே, மணி சரியா மூணர ஆறதுடாப்பா. அசதிலே நீ தூங்கிப் போயிட்டே போலருக்கு. பாவம்… நோக்கும் நாள் பூரா கைங்கர்யம். சரீர சிரமம் இருக்குமோன்னோ?” என்று சிரித்தபடியே கூறிவிட்டு, வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார். இடுப்பில் செருகியிருந்த கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான் நாகு. மணி சரியாக 3.30. மிகவும் ஆச்சரியப்பட்டான் நாகு. ‘நாம குரல் கொடுக்காமலே எழுந்து வந்து ‘மணி மூணரை’னு சரியா சொல்றாளே பெரியவா! இது எப்படி சாத்தியம்?’ என்று மிகவும் குழம்பினான். அவன் காதுகளில் ‘ஹரஹர சங்கர… ஜெயஜெய சங்கர…’ என்ற அந்த நடமாடும் தெய்வத்தின் தெய்வீகக் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டு இருந்தது.

இதுவரை அப்படி அவன் கேட்டதே இல்லை. அன்றிரவு பதினோரு மணி. பெரியவா, சயனத்துக்குச் சென்றுவிட்டார். ‘எப்படியும் இன்று இரவு கண்ணயரவே கூடாது’ என்ற திட வைராக்கியத்துடன் ஸ்வாமிகளின் அறை வாசலில் வந்தமர்ந்தான் நாகு. கையோடு ஒரு சிறிய பித்தளை செம்பில் ஜலம். ஒருவேளை அசதியின் மிகுதியால் தூக்கம் வந்துவிட்டால் கண்களைத் துடைத்துக் கொள்ளவே ஜலம். இரவு மணி 2.30. அதுவரை தூங்காமல் தாக்குப்பிடித்து விட்டான் நாகு.

ஆனால், தொடர் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணத்தையும் மீறி அவனுக்குத் தூக்கம் வந்துவிட்டது. தன்னையும் அறியாமல் கீழே சுருண்டு படுத்தான். உறங்கிவிட்டான். கதவு திறந்தது. ஆச்சார்யாள் மெதுவாக வெளியே வந்தார். உறங்கிக் கொண்டிருந்த நாகுவைப் பார்த்தார்; அவனுக்குப் பக்கத்தில் இருந்த செம்பையும் பார்த்தார். புரிந்துகொண்டார். சிரித்தார்.

“ஹரஹர சங்கர… ஜெயஜெய சங்கர… நாகு… எழுந்துர்றாப்பா” என மிருதுவாகக் குரல் கொடுத்தார் ஆச்சார்யாள். தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான் நாகு. எதிரே புன்முறுவலுடன் பெரியவா.“நாகு, மணி சரியா மூணரை. பாவம்… இன்னிக்கும் முடியாம தூங்கிட்டே போலிருக்கு. சரி… சரி. ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்று சொல்லிவிட்டு, வழக்கப்படி வாசற்புறம் நோக்கி மெதுவாக நடந்தார் ஸ்வாமிகள்.

தனது கடிகாரத்தைப் பார்த்தான் நாகு. சரியாக மூணரை. வியந்து நின்றான். அன்று மதியம் பூஜையை முடித்துவிட்டு, ஏகாந்தமாக அமர்ந்திருந்தார் ஆச்சார்யாள். மெதுவாக அவரருகே வந்து நமஸ்கரித்துவிட்டு எழுந்து நின்றான் நாகு. வாய் திறந்து அவன் ஒன்றும் பேசவில்லை. ஸ்வாமிகளே பேசினார், “ஏண்டாப்பா நாகு… நீ நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறத பாத்தா, ஏதோ எங்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்க வந்துருக்காப்ல படறதே. என்ன தெரியணும்? கேளு…சங்கோஜப்படாதே” நாகு மிகவும் தயங்கினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா…” என்று இழுத்தான். உடனே ஸ்வாமிகள், புன்முறுவல் பூத்தபடியே, “ஒம் மனசுலே என்ன கேக்க நெனச்சுண்டு நீ தயங்கறேங்கறது நேக்கு புரியறது. ‘ரண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே… பெரியவா எப்படி அவ்வளவு கரெக்டா மூணரைக்கு ஏந்துண்டு வர்றார்? அவர்ட்டேதான் ஒரு கடியாரமும் இல்லியே… எப்படி முழுச்சுக்றார்’னு கொழம்பிண்ருக்கே… இல்லியா?” என்று கேட்டார். நாகுவுக்கு இப்போது தைரியம் வந்துவிட்டது.

“ஆமா பெரியவா… என்னன்னே தெரியலே. ரண்டு நாளா நா, என்னயும் அறியாம தூங்கிப் போயிடறேன். பெரியவாதான் சரியா மூணரை மணிக்கு ஏந்து வந்து என்னயும் எழுப்பி விடறேள். நேக்கே ரொம்ப வெக்கமா இருக்கு. சரியா மணி மூணரைனு எப்படி பெரியவாளுக்கு…” என்று நாகு முடிப்பதற்குள்… ஸ்வாமிகள், “ஏதாவது கர்ணயக்ஷிணி (காதில் வந்து சொல்லும் தேவதை) காதுலே மணிய சொல்றதானு சந்தேகம் வந்துடுத்தோ நோக்கு?” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்… பெரியவா” என்று தயங்கித்தயங்கிச் சொன்னான் நாகு. பெரியவா சொல்ல ஆரம்பித்தார், “எங் காதுலே ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே. எங் காதுல மணி மூணரைங்கறத வந்து சொன்னது ஒரு பஸ். மதுரை டி.வி.எஸ். கம்பனி பஸ். ஆச்சர்யப்படாதே. மொத நாள் சரியா மூணரைக்கு நீ, ‘ஹரஹர சங்கர…’ சொல்லி எழுப்பிவிட்டே. வெளில வந்த நா, வாசப் பக்கம் வந்தேனா… அப்போ ஒரு பஸ் சத்திர வாசலக் கடந்து டவுனுக்குள்ளே போச்சு.

அடுத்தடுத்து ரண்டு நாளும் பாத்தேன். அதே மூணரைக்கு அந்த பஸ் சத்திர வாசலத் தாண்டித்து. அப்பறமா விசாரிச்சேன். அது டி.வி.எஸ். கம்பனியோட பஸ். மதுரேலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக் காலம் வர மொதல் பஸ்ஸுனும் சொன்னா… சத்திர வாசலுக்கு அந்த பஸ் விடியக் காலம் சரியா மூணரைக்கு வந்து தாண்டிப் போறது. ஒரு செகண்ட் இப்படி… அப்படி மாறல்லே. டி.வி.எஸ். பஸ் ஒரு எடத்துக்கு வர குறிப்பிட்ட டயத்த வெச்சுண்டே, நம்ம கடியாரத்த கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்னு சொல்லுவா.

அது வாஸ்தவம்தான். மூணு நாள் சரியா பாத்து வெச்சிண்டேன். நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா ஏந்ருந்துட்டேன்… வேற ஒரு ரகசியம் இல்லேடாப்பா நாகு…!” பெரியவா தன்னை மறந்து சிரித்தார். பதில் சொன்ன ஆச்சார்யாளின் முகத்தையே மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் நாகு.

(மகிமை தொடரும்...)

தொகுப்பு: ரமணி அண்ணா

Advertisement

Related News