தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிடி சுற்றிப் போடுதல்

திருமண நிகழ்வுகளைப் பற்றி முக்கூரார் சொல்வது இது. திருமணம் என்பது ஒரு சம்ஸ்காரம். ஆலயத்தில் விக்கிரக பிரதிஷ்டை செய்வது போல! வரன்களை அதாவது மணமக்களை கல்யாணம் என்னும் சம்ஸ்காரத்தால் பிரதிஷ்டை செய்கிறோம். விவாக மந்திரங்கள் எல்லாம் உத்தமமானவை. மங்களகரமானவை. மற்ற ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டு, வேத மந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாகம் நடத்த வேண்டும். எப்படி வாழ்க்கை நடத்த ேவண்டும் என்பதை அறிவுரையாக - உறுதிமொழியாக - மண வேதிகையில் நடத்திக் காட்டப்படுகின்றது. ஆனால், இதை உணர்ந்து இன்று திருமண நிகழ்வுகள் நடத்துவதாகத் தெரியவில்லை. ஏதோ ஒன்று முடிந்தால் சரி என்று முடித்து விடுகிறோம். செலவு மட்டும் லட்சக் கணக்கில் ஆகிறது.

Advertisement

தாலி கட்டுதல்தான் முக்கிய நிகழ்வு என்று கருதுகிறோம். கடகடவென்று தாலிகட்டி முடிந்தவுடன் திருமணம் முடிந்துவிட்டது என்று எழுந்து கையில் கொடுக்கப்பட்ட மஞ்சள் அட்ஷதையை தூக்கி யார் தலையிலாவது வீசி விட்டு சாப்பாட்டுக் கூடத்தைத் தேடி ஓடுகிறோம்.இனியாவது நாம் - இதனை - பக்திபூர்வமாக; முறையாகவும் - பொறுமையுடனும் - சிரத்தையுடனும் நடத்த வேண்டும். கன்னிகாதானத்துக்கு முன் பிடி சுற்றிப் போடும் நிகழ்ச்சி என்று ஒன்று இருக்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் இப்போது இதைப் பார்க்க முடிவதில்லை. இதற்கு மந்திரங்களும், சூத்திரங்களும் ஆபஸ்தம்பரால் வகுக்கப்படவில்லை; ஆயினும் ஒரு மரபாக வெகு காலமாக நடைபெற்று வருகிறது. மஞ்சள், சிவப்பு, பச்சை, வெள்ளை, கருப்பு என்று வண்ணப்பொடிகளை சாதத்துடன் சேர்த்து உருண்டையாக வைத்துக் கொள்வார்கள். நிதானமாக இந்த உருண்டைகளை சுமங்கலிப்பெண்கள் சுற்றி திசைக்கு ஒன்றாகப் போடவேண்டும். வாழ்க்கையில் தம்பதிகள் நல்ல முறையில் வாழவும் கருத்தொருமிக்கவர்களாக இருக்கவும் திருஷ்டி தோஷம் கழிய இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கங்கணம் கட்டுதலுக்கு அடுத்த நிகழ்வாக ஆண்டாள் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறாள்.

``கதிர்ஒளி தீபம் கலசம் உடன் ஏந்தி

சதிர்இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலைதொட்டு, எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீ நான்’’

இந்த பிடி சுற்றும் நிகழ்ச்சிக்கு ஒரு அருமையான கதை இருக்கிறது. பிடி சுற்றுதல் பற்றி ஓர் கதையைப் பார்ப்போம். அப்போது தான் அதன் முக்கியத்துவமும் சிறப்பும் புரியும்.வேதத்தில் இரண்டாவது பிரச்னத்தில் உள்ள பல கதைகளில் ஒன்று இது. நான் முகனான பிரம்மா சந்திரனை கொள்ளை அழகோடு சிருஷ்டி செய்தான். சந்திரன் எல்லோரையும் ஆகர்ஷித்தான். பிரம்மாவுக்கே மனச்சலனம் ஏற்பட்டது. சந்திரனை மாப்பிள்ளையாக வைத்துக்கொள்ளலாமே என்று தோன்றிவிட்டது. மாப்பிள்ளை ஆக்க பெண் வேண்டுமே.அதற்காக பிரம்மா சூரியனிடம் ஒரு பெண்ணை உருவாக்கினார். அவளுக்கு சீதா என்று பெயர் வைத்தார். சீதாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். இவளோடு எனக்கு என்ன கொடுப்பீர்? என்று கேட்டான் சந்திரன்.

பிராமண தனம் வேதம்

பிரம்மா, வேதத்தை அழகான ஒரு பெட்டியில் வைத்துச் சந்திரனிடம் சீதனமாகக் கொடுத்தார். சீதாவிடம் சந்திரனை கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டார். சீதா சந்திரனைப் பார்த்தாள். பிடித்து விட்டது. உடனே “சந்திரனைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்றாள். ஏன்? சந்திரனிடம் வேதம் இருந்ததால் உடனே சம்மதித்து விட்டாள். சந்திரனுக்கும் சீதைக்கும் பிரம்ம லோகத்தில் விமரிசையாக கல்யாணம் நடந்தது. சந்திரனுடன் சீதையை பிரம்மா அனுப்பி வைக்கிறார்.நன்றாக குடும்பம் போயிற்று. சந்திரலோகத்தில் ஷ்ரத்தா என்று ஒரு கன்னிப்பெண். ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டிருந்தாள். சந்திரன் ஷ்ரத்தாவைப் பார்த்தவுடன் ஆசை வந்து விட்டது.சீதையைக் கைவிட்டு விட்டு அவள் கையைப் பிடித்து சிம்மாச னத்தில் வைத்துக் கொண்டான். சீதாவுக்கு தன் துக்கத்தை யாரிடத்தில் சொல்வது என்று தெரியவில்லை.ஒரு நாள் பிரம்மலோகம் வந்து, தந்தையான பிரம்மாவைப் பார்த்து அஞ்சலி செய்தாள் சீதா. “தந்தையே, நல்ல முறையில் கல்யாணம் செய்து வைத்தீர்கள். ஆனால் கணவனின் அன்பு ஏற்படவில்லை. அவர் ஷ்ரத்தா என்ற பெண்ணிடத்தில் அன்போடு இருக்கிறார். என்னைக் கைவிட்டு விட்டார்” பிரம்மா பதறிப்போனார்.

“தந்தையே, உங்கள் மீது குற்றமில்லை. நான் பூர்வ ஜென்மத்தில் செய்த மகா பாவத்தின் பலன்தான் இது” பிரம்மாசொன்னார். ‘‘அம்மா.... யாரையும் தோஷம் சொல்லாமல் பேசுகிறாய். நல்லது. உலகத்தில் மக்கள், மற்றவர்கள் மேலே எகிறி விழுவார்கள். ஆனால் நீயோ மொத்த பாவத்தையும் உன் மேலேயே போட்டுக்கொள்கிறாய். இந்த உத்தம குணமே உன்னை உயர்த்தும்’’ என்றார்.‘‘உன் கணவன் உன்னை விரும்பும்படியாகச் செய்கிறேன்” என்று வாசனைத் திரவியங்களைக் குழைத்து அவள் முகத்தில் திலகம் இட்டார். நான்கு பக்கமும் (பிடி)சுற்றிப் போட்டார். பிரம்மாவால் அலங்கரிக்கப்பட்ட சீதை சந்திரலோகம் வருகிறாள். சீதை வருவதைப் பார்த்ததும் சந்திரன், ஷ்ரத்தாவை விலக்கிவிட்டு சீதையை மடியில் வைத்துக் கொண்டான்.

முதலில் இல்லாத வசீகரம் இப்போது எங்கே வந்தது. பிரம்மாவால் அலங்கரிக்கப்பட்டதால் வசீகரம் வந்தது. சீதாவுக்கு பிரம்மா செய்த அதே காரியத்தை இங்கு கல்யாணத்தின்போதும் செய்கிறோம். அதுதான் பிடி சுற்றுதல். பின்னால் கருத்தொருமித்த வாழ்க்கை வாழவும் அவர்களின் வாழ்க்கை சலிக்காமல் இருக்கவும் பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியம் இது. பஞ்ச பாலிகைகளை வைத்து எல்லாத் தேவதைகளையும் ஆராதனம் செய்கிறோம். அங்குரார்ப்பணம் என்று இதற்குப் பெயர். அந்தக் காலத்தில் ஐந்து நாட்கள் கல்யாணம் நடக்கும். அப்போது பீஜம் நன்றாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை நித்தியம் பூஜை செய்வார்கள். வது, வரன் இருவரும் அதைக் கண்ணால் பார்க்க வேண்டுமாம்.

எதற்கு? இது எப்படி வளர்கிறதோ அப்படி இவர்கள் குடும்பம் நன்றாக வளர்ந்து சத்சந்தான சௌ பாக்கியம் ஏற்பட்டு, அவர்கள் கிரகத்தில் உற்றார் உறவினர் எல்லாரும் வந்து தங்க வேண்டும். அப்படிப்பட்ட நிழல் தரும் மரமாக, தர்ம விருட்சமாக இவர்கள் இருக்க வேண்டும் என்பதைக் காட்டவே இது நடத்தப்படுகிறது. பூக்காத, காய்க்காத மரங்கள் எல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கட்டும்; யாரும் மலட்டுத்தன்மை இல்லாமல் சத்சந்தான சௌபாக்கியத்தோடு இந்தக் குடும்பம் இருக்கட்டும் என்னும் பொருட்டு பாலிகை ஆராதனம் பரம மங்களமாக நடத்தப்படுகிறது.

Advertisement

Related News