எஜமானனாக இருங்கள்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 101 (பகவத்கீதை உரை)
நம்மை நம் மனமும், புலன்களும் அலைக்கழிப்பதை மேலும் விவரிக்கிறார் கிருஷ்ணன். இரண்டில் ஒன்று என்று தேர்வு செய்வதில் பெரும்பாலும் நாம் குழம்பித்தான் போகிறோம். இரண்டுமே வேண்டியிருக்கிறது. ஆனால் ஏதாவது ஒன்றை மட்டுமே ஏற்றுக் கொண்டால்தான் ஓட்டம் சீராக இருக்கும். இது புரிந்தாலும், தேர்வு செய்வதில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம்.
``பந்துராத்மாத்மனஸ்தஸ்ய யேனாத்மைவாத்மனா ஜித
அனாத்மனஸ்து சத்ருத்வே வர்தேதாத்மைவ சத்ருவத் (6:6)’’
‘‘ஒருவனுக்கு உலகத்தில் மிகப் பெரிய போராட்டம் எதுவாக இருக்கும் என்றால், அது தன்னைத் தானே வெல்வதுதான்! தன்னை வெல்லாதவனால் வேறு வெற்றிகள் சாத்தியமா என்பது சந்தேகமே!’’ விருந்து சுவையாக இருக்கிறது. விதவிதமான பதார்த்தங்கள், வெவ்வேறு ருசி. அவற்றின் பலவண்ணங்கள் கண்களைப் பசி கொள்ள வைக்கின்றன. நறுமணமோ நாசியைப் பசி கொள்ள வைக்கிறது. முதல் துண்டு நாக்கில் பட்டவுடனேயே நாக்கு அகோர பசி கொள்கிறது.
கபகபவென்று உணவுக் கவளம் கவளமாக, விள்ளல் விள்ளலாக, வாய்க்குள் போகிறது. ஆனால், எந்தவகை வண்ணத்துக்கும், வாசனைக்கும், ருசிக்கும் ஆட்படாத, அதேசமயம் தனக்குள் இடப்படும் உணவை செரிக்கும் ஒரே பணியை ஓயாமல் மேற்கொள்ளும் வயிறு மட்டும் போடப் போட ஏற்றுக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வயிறு நிரம்பி விடுகிறது. அதற்கு மேல் ஏற்க இடமில்லை.
‘ஹௌஸ் ஃபுல்’ என்கிறது வயிறு. ஆனால் கண்களும், நாசியும், நாக்கும் ‘அங்கே, இங்கே என்று எங்காவது இடம் இருக்கும், திணித்துக் கொள்’ என்று வயிற்றுக்கு உத்தரவிடுகின்றன. உங்களால் தீர்மானிக்க முடியவில்லை. வயிறு நிரம்பி விட்டதை உணர முடிகிறது. அதேபோல வாசனையும், ருசியும் திகட்டவும் இல்லை. என்ன செய்ய, மேலும் மேலும் சாப்பிடுவதா, நிறுத்திவிடுவதா? ஜீர்ண கோளாறு ஏற்படும் என்று தெரிகிறது, ஏற்கெனவே அனுபவமும் ஏற்பட்டிருக்கிறது, ஆனாலும் சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை; கோளாறு என்றால் மருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று கருதி வயிற்றை அவமதிக்கிறோம்.
சுவை என்பது ஒரு தருணத்தில் நிறுத்தப்பட முடியாததா? ‘போதும்’ என்று மறுக்க முடியாததா? அனால், ‘இன்னும் கொஞ்சூண்டு’ என்று ஆசை அலைக்கழிக்கிறது! ஒரே சமயத்தில் எதிரெதிராக இரு செயல்கள். இரண்டையும்விட முடியவில்லை. கடைசியில் ‘இரண்டும் கெட்டான்’ என்ற நிலைதான் உருவாகிறது. அந்த காலத்தில் செய்தித் தாளில் கார்ட்டூன் போடுவார்கள். இந்திய - சீன தலைவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருமே நட்புடன் தத்தமது வலது கையை முன்னே நீட்டுகிறார்கள்.
ஆனால் தன் முதுகுக்குப் பின்னால் மடித்து வைத்திருக்கும் சீனத் தலைவரின் கையில் ஒரு கத்தி இருக்கும். அதாவது நட்பு என்பது வெளித்தோற்றம், ஆனால் மனசுக்குள் வன்மம். ஒரே சமயத்தில் அப்போதைக்கு நட்பைத்தான் காட்ட முடிகிறது. ஆனால் வன்மத்தையும் காட்ட வேண்டும் என்று மனசு உத்தரவிடுகிறது! இப்போதுகூட நாம் அப்படித்தானே நடந்து கொள்கிறோம்! காலையில் வீட்டிலிருந்து படியிறங்கி சாலையைத் தொடும்போது தெரிந்தவர் எதிர்ப்படுகிறார் என்றால், நட்பாக முகம் மலர்கிறது, ஆனால், ‘காலங்கார்த்தால, முதன் முதலா இவன் முகத்திலா விழிக்க வேண்டும்!’ என்று மனசு கரித்துக்கொட்டு கிறது! இந்த இரட்டை உணர்வுகளுக்கும் நாம் ஒப்புதல் கொடுக்கிறோம்.
எதிர்ப் படுபவரை, அன்பாகப் பார்த்து, ‘‘வாங்க, வீட்டுக்கு வாங்க, ஒரு டம்ளர் தண்ணி குடிச்சுட்டுப் போங்க,’’ என்று வாயார அழைத்தோமென்றால், அது முதல் உணர்வுக்குத் தரும் மரியாதை. அல்லது அவரைப் பார்க்கப் பிடிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டு, அவரைத் தவிர்த்துவிட்டு தொடர்ந்து நடப்போமானால் இது இரண்டாவது உணர்வுக்குத் தரும் மரியாதை! ஆனால் நாம் இரண்டையும் செய்கிறோம்! அதாவது நட்பாகப் பகைத்துக் கொள்கிறோம் அல்லது பகையுடன் நட்பைப் பரிமாறிக் கொள்கிறோம்!
ஒரு வீட்டின் சொந்தக்காரர்கள் சில நாட்கள் வெளியூர் செல்கிறார்கள். வேலைக்காரர்களிடம் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களுடைய தலை மறைந்ததோ இல்லையோ, இங்கே எல்லா வேலைக்காரர்களும் எஜமானர்களாகிவிடுகிறார்கள். சுதந்திரம் கிடைத்துவிட்டது. கண்காணிப்போ, கண்டிப்போ, உத்தரவிடுதலோ, வசவோ எதுவு மில்லாத சுதந்திரம். இப்போது வேலைக்காரர்களிடையே போட்டி. யாருக்கு யார் தலைவர்? அவரவர் செய்யும் வேலைகளில் அலட்சியம் தொனிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டுச் சொந்தக்காரர்கள் பத்து நாட்கள் கழித்துதானே வருவார்கள், அந்த சமயத்தில் சுத்தம் செய்து கொள்ளலாம், இப்போது ஓய்வெடுக்கலாம், கூடுதல் நேரம் தூங்கலாம், என்று வீட்டைச்சுத்தம் செய்ய வேண்டியவர் யோசிக்கிறார். இதேபோல சமையல்காரரும், தன் வாய்க்கு ருசியாக சமைத்துக் கொள்கிறார். சக வேலைக்காரர்களின் பசி தீர்ப்பதாகிய அதிகாரத்தில், அவர்களிடம் கெடுபிடி காட்டுகிறார்.
ஆனால் இவரும் எஜமானரல்ல! நிஜமான எஜமானர் இல்லாத சுதந்திரத்தால் ஆளாளுக்கு எஜமானர்களாகிவிடுகிறார்கள்! அவர் வந்துவிட்டால் அனைவரும் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறார்கள். கிருஷ்ணன், ஆன்மா என்ற எஜமானருக்கு மரியாதை செலுத்து, அதனைக் கேவலப் படுத்தாதே என்று சொல்கிறார். அப்படி ஆன்மாவை மேன்மைப் படுத்தினால் இரண்டு தலைக் கொள்ளி எறும்பாக அவதிப்பட வேண்டாம் என்கிறார்.
ஆன்மாவுக்கு அடங்கி, அதாவது மனசாட்சிக்கு அடிபணிந்து முடிவுகளை எடுக்கும்போது ஒன்றே தோன்றும், அதுவும் நன்றே தோன்றும். ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் இறப்புக்குப் பிறகு நம்முடன் வரப்போவது ஏதுமில்லை; நம் சொந்தங்கள், சொத்துகள், பெயர், புகழ், எல்லாமும் உடலோடு பஸ்மமாகிப் போகிறவைதான்; தொடராது. ஆனால், நம்முடைய ஆன்மா மட்டும் தன் பயணத்தைத் தொடரும்.
நாம் செய்த பாப, புண்ணிய பலன்களை அது சுமந்து கொண்டு, அடுத்த உடலுக்காகக் காத்திருக்கும். இப்படி அடுத்த உடலுக்குப் போகும் அந்த ஆன்மாவை இப்போதே நாம் பரிசுத்தமானதாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா?‘‘யோகத்தில் நிலை பெறாத மனிதனிடம் இரண்டு இயல்புகள் இருக்கும்,’’ என்கிறார், சுவாமி சித்பவானந்தர்.
‘‘ஒன்று, கட்டுக்கடங்காத சிற்றியல்பு, இன்னொன்று தெய்வத் தொடர்புடைய பேரியல்பு. இவ்விரண்டில் சிற்றியல்பு மேலோங்கும்போது பேரியல்பு தலை குனிகிறது. அதேபோல பேரியல்பு வலுக்குமானால், சிற்றியல்பு சிதறிவிடுகிறது. உடல், புலன்கள், மனம், புத்தி எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது பேரியல்பு தலை நிமிர்கிறது.
இப்போது மனிதன் தன்னைத் தானே வென்றவனாகிறான். சிற்றியல்பு என்ற கீழான ஒழுக்கத்துக்கு அவன் ஆட்படும்போது, அவன் தன்னையே தோற்கடித்துக் கொள்கிறான், பாழாகிறான். ஒரு கோயிலுக்குள் பக்தி பூர்வமான அன்பர்கள் புழங்கினால் அந்தக் கோயில் புனித மடைகிறது, சிறந்து விளங்குகிறது. ஆனால் அவ்வாறு யாரும் வராவிட்டால், நாளாவட்டத்தில் உள்ளே பாம்பும், தேளும், பூரானும் சுதந்திரமாக உட்புகுகின்றன.
சிலந்திகளும் கொண்டாட்டத்துடன் வலைகள் பின்னி கோயிலை மேலும் சிதிலமடையச் செய்கின்றன. பராமரிப்பு இல்லாததால் உறுதியான சுவர்களும், தூண்களும்கூட சிதைந்துவிடுகின்றன. அதேபோலதான் நம் உடலும். ‘உடம்பே ஒரு கோயில்’ என்ற பேருண்மையை உணர்ந்தாலே சிற்றியல்புகள் தானாக விலகிவிடும். ‘‘ஒரு மனிதனுக்குப் புறத்தில் உள்ள பகைவன் ஏதோ சில வேளைகளில் மட்டும்தான் தாக்குகிறான். அப்படியே தாக்கினாலும், அதனால் துன்பமடையாத மனநிலையை ஒரு யோகியால் அடைய முடியும். ஆனால், அகத்தே உள்ள பகையோ அவனை அல்லும், பகலும் அலைக்கழிக்கிறது.
தோழன் போலவே நடித்து அது பெருந்தீங்கை உண்டாக்குகிறது. ஆகவே ஒருவன் அடையும் துக்கத்துக்கெல்லாம் அவனே முதற் காரணமாகிறான். ஆனால் யோகியோ தனக்குத் தானே நல்ல நண்பனாகிறான். பிற அனைவரும் ஆசை என்ற பகைவர்களின் கரங்களில் சிக்கி தங்களுக்குத் தாங்களே பகைவர்கள் ஆகிறார்கள்.’’வீட்டினுள் கணவன் - மனைவியிடையே ஏற்படும் சண்டையாகட்டும், உலக அளவில் இரு நாடுகளுக்கு இடையேயான பெரும் போராகட்டும், இவற்றின் மூல காரணத்தை அலசி ஆராய்ந்தோமானால், ரொம்பவும் அற்பமாக இருக்கும். ‘இதற்கா சண்டை?’ என்ற வியப்புக் கேள்வியும் எழும்.
ராமனுக்கும், ராவணனுக்கும் ஏற்பட்ட யுத்தம் ‘சீதை மீதான மோகம்’ என்ற ராவணனின் அற்ப சிந்தனையின் விளைவுதானே? அதேபோல, துரியோதனன் மீதான திரௌபதியின் கேலிச் சிரிப்புதானே குருக்ஷேத்திர யுத்தத்துக்கும் காரணமானது! பாண்டவர்களின் இந்திரபிரஸ்த மணி மண்டபத்தில், பளபளப்பான பளிங்குத் தரை ஓர் தடாகமோ என்றெண்ணி, துரியோதனன் தன் வேட்டியைத் தூக்கிப் பிடித்துகொண்டு, வழுக்கிவிடாமல் மெல்ல நடந்ததையும், கதவு என்றெண்ணி கதவு ஓவியம் வரையப்பட்ட சுவரில் முட்டிக் கொண்டதையும் பார்த்த திரௌபதி,
‘பார்வையிழந்தவனின் மகன்தானே, இவனுக்கும் பார்வை மங்கல்தானோ?’ என்று இளக்காரமாகச் சிரித்துப் பேசியதால்தானே? அமைதியாக இருக்க வேண்டும், அறியாமையை கேலி செய்யக் கூடாது என்ற எண்ணம் ஒரு பக்கம், தன் கணவன்மார்களுக்கு அவர்களுடைய பால்ய வயதிலிருந்தே பலவகைகளிலும் தொந்தரவு கொடுத்தவனல்லவா இவன் என்ற பகைமை உணர்வு இன்னொரு பக்கம். இவற்றில் திரௌபதிக்கு இரண்டாவதுதான் வென்றது. பழிக்குப் பழியாக அவள் துகிலுரியப்பட்டதும் நடந்ததே!
அடுத்தடுத்துப் பல குற்றங்கள் செய்தவனை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். விசாரணைகளுக்குப் பிறகு, நீதிபதி, ‘‘நீ செய்த குற்றங்களுக்கெல்லாம் உன்னுடைய குடிப் பழக்கம்தான் காரணம். ஆமாம், மதுபானம்தான் காரணம்,’’ என்று மிகுந்த எரிச்சலுடன் சொன்னார். உடனே குற்றவாளி, ‘‘அப்படிச் சொல்லுங்க யுவர் ஆனர். எல்லோரும் அந்தக் குற்றங்களுக்கு என்னைத்தான் பொறுப்பாளியாக ஆக்குகிறார்கள்.
நீங்கள் ஒருவர்தான் மிகச் சரியாக மதுதான் அத்தனைக் குற்றங்களுக்கும் காரணம் என்று சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி,’’ என்றான்! லகான் பூட்டப்பட்ட குதிரை கட்டுப்பாட்டோடு இருக்கும்; அதுவே லகானை அவிழ்த்துவிட்டால், சுதந்திரமாக ஓடும். எஜமானர் என்ன சொன்னாலும் அது கேட்கவே கேட்காது. அதன் முன் புல்லையும், கொள்ளையும் நீட்டினாலும் அது முரண்டு பிடித்து ஓடத்தான் செய்யும். ஏனென்றால், தன்னிச்சையாக நடந்து கொள்ள அதற்கு இப்போது விடுதலை கிடைத்துவிட்டது. இதேபோலதான் நம் இந்திரியங்களே நம்மைப் பள்ளத்தில் தள்ளுகின்றன.
உடலில் தெம்பு இருக்கும்போது புலன்களைக் கட்டுப்படுத்துவதில்தான், யோக நிலைக்கான தகுதி அமைகிறது. பல்லெல்லாம் போய்விட்டது ஒருவனுக்கு. பொக்கை. ‘நான் பட்சணங்கள் உண்பதை விட்டுவிட்டேன், அந்த ஆசையைத் துறந்துவிட்டேன்,’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? முடியாததைத் துறவு என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? புலன்கள் என்பவை கருவிகள் மாதிரி. தேவைப்படும்போது பயன்படுத்திக்கொண்டு, பிறகு பரணில் தூக்கிப் போட்டுவிட வேண்டும்.
பார்க்கும்போது கண், கேட்கும்போது காது, நுகரும்போது நாசி, உண்ணும்போதும், பேசும்போதும் நாக்கு என்று எப்போது அவசியமோ அப்போது மட்டும் புலன்களை இயக்கவும், பிறகு அடக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சி ஒருவனை தன்னைத் தானே வெல்ல வழிகாட்டும். இந்த வகையில் ஒரு யோகி, தன்னை வெல்பவன் ஆகிறான். அவனிடமே புலன்கள் இருந்தாலும், உணர்வால் அவனை விட்டு அவை விலகியிருக்கின்றன. அவசியத்துக்கு மட்டும் அவை அவனுக்காகப் பணி செய்கின்றன. அதாவது அவன்தான் எஜமானன், புலன்கள் அவனுடைய வேலைக்காரர்களே!
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்