ஆவினன்குடியும் பழனியும்
திருவாவினன் குடியென்பது இன்று பழனியென்று புகழ்பெற்று விளங்கும் தலம். இப்போது மலைமேலுள்ள திருக்கோயிலைப் பழனியென்றும், அடிவாரத்திலுள்ள திருக்கோயிலைத் திருவாவினன்குடி என்றும் வழங்கு கின்றனர். நகருக்கும் பழனியென்ற பெயரே இப்போது வழங்குகின்றது.பழங்காலத்தில் அந்த ஊருக்கு ஆவினன்குடி என்று பெயர். ஆவியர்குடி என்பது குறுநில மன்னர்களின் குடிகளில் ஒன்று. அவர்கள் அரசாண்டு வந்த இடம் இது. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் இந்தக் குடியில் தோன்றியவன். வையாவிக் கோப்பெரும் பேகன் என்பது அவன் முழுப்பெயர். ஆவி, வையாவி என்னும் இரண்டும் அக்குடிக்கு உரிய பெயர்.
அவர்கள் வாழ்ந்த இடத்தை ஆவினன்குடி என்றும் வையாவியூர் என்றும் வழங்கினர். வையாவிபுரி என்றும் கூறுவதுண்டு. பழனியின் மற்றொரு பெயராகிய வையாபுரி என்பது வையாவிபுரி என்பதன் திரிபேயாகும். நாளடைவில் வையாவிபுரி வையாவூர் ஆகி அதை உள்ளிட்ட நாடு வைகாவூர் நாடு என்று ஆகிவிட்டது. “வைகாவூர் நனாடத்தில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே” என்று இந்த நாட்டையும் ஊரையும் அருணகிரியார் பாடுகிறார்.பொதினி என்பது பிறகு பழனியென்று மருவியது. பழங்காலத்தில் மலையின்மேலும் கோயில் இருந்தது என்று சங்க நூல்களால் தெரியவருகிறது. பேகனுடைய குலதெய்வம் முருகன்.
பிற்காலத்தில் பழனிக்குப் புராணம் ஒன்று எழுந்தது. திருவாகிய இலக்குமியும் ஆவாகிய காமதேனுவும் இனனாகிய கதிரவனும் பூசித்தமையால் திருவாவினன்குடி என்று பெயர் வந்ததென்றும், தம்மை வலம் வந்த விநாயகருக்குச் சிவபெருமான் மாங்கனியைக் கொடுத்து விட்டு உலகை வலம் வந்த முருகனுக்குக் கொடுக்காததனால் அவன் சினந்து இம்மலைமேல் வந்து நிற்க, அவனைத் தேடி வந்த சிவபெருமான் “பழம் நீயே” என்று கூற, அதுவே பழனியாயிற்றென்றும் புராணம் கூறும்.
சிவ.சதீஸ்குமார்