அர்ச்சுனன் ரதத்தில் அனுமன் கொடி
அர்ச்சுனனுக்கு ஒருமுறை ஒரு சந்தேகம் எழுந்தது. ராமர் ஆகச்சிறந்த வில்லாளியாக இருந்தாரென்றால் ஏன் வில்லைக்கொண்டே சேதுவுக்குப் பாலம் கட்டவில்லை, வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார் என்பதே அந்த சந்தேகம். இதற்கு விடை கண்டேயாக வேண்டுமென ஒரு வண்டு அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தைத் தேடி பயணம் செய்து கொண்டிருக்கையில் யதேச்சையாக தனது சுயஉருவை மறைத்து சாதாரண வானரமாக ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்த அனுமனைக் காணநேர்ந்தது. அவனிடம் சென்ற அர்ச்சுனன் “ஏய் வானரமே உன் ராமன் பேராண்மை உடையவனாக இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டி இருக்கலாமே, ஏன் வானரப்படைகளை பாலம் கட்ட அனுப்பினார்” என்றான் ஏளனமாக.தியானம் கலைந்த அனுமன் எதிரில் நிற்பவன் அர்ச்சுனன் என உணர்ந்து கொண்டான்.
ராமனை பரம்பொருள் என்று வணங்கி நிற்காது அவரது வீரத்தை இழிவாகப் பேசிய அர்ச்சுனனின் ஆணவத்தை அடக்க வைராக்கியம் கொண்டான். “சரப்பாலம் என் ஒருவனின் பாரத்தையே தாங்காது எனும் போது ஒட்டுமொத்த வானரப் படைகளை எப்படித் தாங்கும்..” என்றான் அனுமன் அர்ச்சுனனைப் பார்த்து. அதற்கு அர்ச்சுனன் “இந்த நதியின் குறுக்கே நான் பாலம் கட்டுகிறேன் உன்னை மட்டுமல்ல எத்தனை வானரங்கள் படைதிரட்டிக் கொண்டுவந்தாலும் பாலத்தின் சிறிய அணுவைக்கூட அவர்களால் அசைக்க முடியாது..” என்று கொக்கரித்தான். அதுமட்டுமில்லாமல் தனது காண்டீபத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட அர்ச்சுனன், இந்தப் பந்தயத்தில் நான் தோற்றால் வேள்வித் தீயில் குதித்து உயிர் துறப்பேன் என்று சவால் விட்டான்.
பதிலுக்கு அனுமனோ, நான் தோற்றால் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க் கொடியில் இடம் பெறுவேன் என்கிறான். அர்ச்சுனன் வில்லால் சரப்பாலம் கட்டத் தொடங்க, அனுமனோ ஒரு ஓரத்தில் அமர்ந்து ராம நாமம் ஜெபித்துக் கொண்டிருந்தான். அர்ச்சுனன் பாலம் கட்டி முடித்ததுதான் தாமதம் அனுமன் விரல் நுனிபட பாலம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியது. அனுமன் ஆனந்தக் கூத்தாட, அர்ச்சுனனோ அவமானம் பொங்கிஎழ வெட்கி தலை குனிந்தான்.
அனுமன் அர்ச்சுனனைப் பார்த்து பார்த்தாயா என் ராமனின் சக்தியை என்று தொடை தட்டினான். தனது நம்பிக்கை பொய்த்து விட்டதை ஜீரணிக்க முடியாத அர்ச்சுனன், பாசுபதாஸ்திரத்தை தேடி வந்த நான் வீணாக இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டேனே என அங்கலாய்த்தான். என்னுடைய ஆணவத்தை இந்த வானரம் அடக்கிவிட்டதே, நான் மாண்டுபோனால் எனது சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள் என கலங்கினான்.
கிருஷ்ணா என்று விளித்து தன் பிழை பொறுத்து அருளுமாறு வேண்டி வேள்வித் தீயில் விழுந்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்றபோது அனுமன் தடுக்க, அர்ச்சுனன் செவிசாய்க்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்தான். அப்போது “என்ன நடக்கிறது இங்கே...” என்று ஒரு குரல் கேட்டது. குரல்கேட்ட திசையில் ஒரு அந்தணர் தென்பட்டார், இருவரும் அவரை வணங்கி நடந்ததைக் கூறினர். அதற்கு அந்த அந்தணர் பந்தயம் என்றால் சாட்சி வேண்டும் சாட்சி இல்லாத பந்தயம் செல்லு படியாகாது என்று கூறியதுடன் நிற்காமல் அர்ச்சுனா நீ மற்றொருமுறை பாலம் கட்டு அதை இந்த வானரம் நொறுக்கட்டும் அப்போது முடிவு செய்து கொள்ளலாம் யார் பலசாலி என்று..” அந்தணர் கூற, இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
அர்ச்சுனன் சோர்ந்திருந்தான் இரண்டாவதாக பாலம் கட்டினால் அப்படியென்ன அதிசயம் நடந்து விடப் போகின்றது என எண்ணியபடியே கிருஷ்ண நாமத்தை ஜெபித்தபடியே பாலம் கட்டினான். தனது பலம் என்னவென்று தனக்கே தெரியாதவன் அனுமன், இருந்தாலும் ஏற்கனவே பாலத்தை உடைத்ததனால் அவன் கர்வம் தலைக்கேறி இருந்தது. அவனை ஆணவம் ஆட்டிப்படைக்க ராம நாமத்தை உச்சரிக்க மறந்துபோனான். அர்ச்சுனன் புதிதாக கட்டிய பாலத்தின் மீது அனுமன் ஏறி ஓடுகிறான் ஆடுகிறான் ஆனால் பாலத்துக்கு சிறிய அளவுகூட விரிசலோ சேதமோ ஏற்படவில்லை. ஜெயித்துவிட்ட சந்தோஷத்தில் அர்ச்சுனன் பாத்தாயா கிருஷ்ணரின் மகிமையை என்று கூக்குரலிட அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
அங்கு சாட்சியாக நின்று கொண்டிருந்த அந்தணரை நோக்கி வந்து, ‘நீங்கள் யார்...’ என அனுமன் கேட்க, அங்கு அந்தணர் உருவம் மறைந்து பரந்தாமன் சங்கு சக்கரதாரியாக இருவருக்கும் காட்சி தருகிறார். இருவரும் அவர் பாதங்களில் விழுந்து வணங்க, பரந்தாமன் திருவாய் மலர்ந்து ‘நீங்கள் இருவருமே தோற்கவில்லை, ஜெயித்தது நாம ஸ்மரணை தான்...’ என்று கூறியதுடன், ‘அர்ச்சுனன் முதல்தடவை பாலம் கட்டியபோது என்னை மறந்து அகங்காரத்துக்கு இடமளித்துவிட்டான்.
அனுமனோ இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தான். ஈரேழு பதினான்கு உலகங்களிலும் ராம நாமம் தோற்காது எனவே முதல்முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை பாலம் கட்டியபோது அர்ச்சுனன் அவனது அகந்தையைக் கொல்ல என்னை துணைக்கு அழைத்தான். அனுமனோ முதல்முறை ஜெயித்துவிட்டோம் என்ற மமதையில் ராம நாமத்தை மறந்து கர்த்தா நானே என நினைத்ததால் இரண்டாம் முறை தோற்றான்.
எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணைதானே தவிர நீங்களல்ல’ என்றார் பரந்தாமன். ‘கர்வம் தோன்றும்போது கடமையும், பொறுப்புகளும் மறந்துபோய்விடுகின்றன எனவே சும்மா இருந்த அனுமனை சீண்டிப் பார்த்து பந்தயத்தில் இறங்கினான் அர்ச்சுனன். உங்கள் இருவரின் பக்திக்கு ஈடுஇணையில்லை. ஆனால் இறைவன் ஒருவனே என்பதை மறந்துவிட்டீர்கள். அதை உங்களுக்கு உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் பரந்தாமன் அர்ச்சுனனை அருகில் அழைத்து இந்த வானரம் வேறுயாருமல்ல சிரஞ்சீவி அனுமனே தான்..’ என்று சொல்ல, அனுமன் தனது சுயஉருவத்தை தோன்றும்படி செய்ய, அர்ச்சுனன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார்.
அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர் ‘ஆஞ்சநேயா பாரதப்போரில் அர்ச்சுனனுக்கு உன் உதவி தேவை. போர் முடிவுக்கு வரும் வரை அர்ச்சுனன் தேர் கொடியில் எழுந்தருளி அவனைக் காத்து இரட்சிக்க வேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன்..’ என்று கூறினார். அது என் பாக்கியம் என ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட மீண்டும் கிருஷ்ணரின் தாழ்பணிந்தான் அனுமன். இதுதான் அர்ச்சுனன் தேர்க்கொடியில் அனுமன் இடம்பெற்ற கதை.
மதியழகன்