?அன்றாடம் குளிப்பதில்கூட ஆன்மிக விதிமுறைகள் உள்ளனவா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆன்மிக விதிமுறைகள் என்று சொல்வதைவிட, தர்மசாஸ்திரம் வலியுறுத்தும் விதிமுறைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, கிழக்கு முகமாக நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். குளிக்கும்போது தெய்வத்தின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக, ஆடையில்லாமல் நிர்வாணமாக ஸ்நானம் செய்யக்கூடாது. குளிக்கும்போது சிறுநீர் கழிக்கக் கூடாது போன்ற விதிகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இதுபோக, புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதற்கு என்று தனியாக விதிமுறைகள் உண்டு. இந்த விதிமுறைகள் அனைத்தும் நம் உடல்நலம் கருதியே வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
?குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத் தருவது எப்படி?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
பொதுவாகவே, இளம் சிறார்களுக்கு தெய்வீகக் கதைகள் என்றாலே நிரம்பப் பிடிக்கும். பச்சிளம் பிராயத்தில் குழந்தைக்கு சோறு ஊட்டும்பொழுது அன்னை சொல்லும் ராமாயண, மகாபாரதக் கதைகள் வளர்ந்த பிறகும் அவர்களின் நினைவில் நிற்கும். குறிப்பாக, அனுமனின் வீரதீர சாகசங்களும், குழல் ஊதும் கண்ணனின் குறும்புச்செயல்களும் அவர்களின் நினைவில் நீங்கா இடம் பெறும். ஆக, இவ்வாறான கதைகளை பச்சிளம் பிராயத்தில் இருந்தே அவர்களைக் கேட்கச் செய்வதால் தெய்வீகக் கதைகளின் மீதான அவர்களது ஆர்வத்தினை அதிகரிக்கச் செய்யலாம். மீடியா கலாச்சாரம் முக்கியத்துவம் பெற்றிருக்கும் தற்காலச் சூழலில், தொலைக்காட்சிகள் தெய்வீகக் கதைகள் மற்றும் நீதிக்கதைகளை அதிக அளவில் ஒளிபரப்பி வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நம் வீட்டுக் குழந்தைகள் அலாதியான ஆர்வத்துடன் கண்டு கருத்துக்களைப் புரிந்துகொள்ள நாம் துணைநிற்க வேண்டும்.
அதனை விடுத்து, தொலைக்காட்சிகளில் இடம் பெறுகின்ற வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மட்டும் பெற்றோர்கள் ஆர்வத்தைச் செலுத்தக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனது தாய், தந்தையரின் செயல்களைப் பின்பற்றுவதுஇயற்கை. பெற்றோர்கள் எந்த வழியில் நடக்கிறார்களோ, அதைத்தான் குழந்தைகளும் பின்பற்றுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே போல, படக்கதைகளின் மூலமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் நூல்களைப் படிக்கச் செய்யலாம். காமிக்ஸ், கார்ட்டூன் புத்தகங்கள் குழந்தைகளுக்கு நிரம்பப் பிடிக்கும். இந்த வகையில், தெய்வீக சிந்தனைகளை ஊட்டுகின்ற நமது தினகரன் ஆன்மிகம் போன்ற புத்தகங்கள் தற்காலத்தில் நிறைய வெளிவருகின்றன. குழந்தைகளின் கண்எதிரே பெற்றோர்கள் அதிக அளவில் நூல்களைப் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வீட்டிலிருக்கும் தாத்தா பாட்டி போன்ற பெரியோர்கள், தாத்தாவுக்கு கண்ணு தெரியலப்பா, நீ கொஞ்சம் படிச்சு சொல்லுடாம்மா போன்ற காரணங்களைச் சொல்லி குழந்தைகளை நீதி நூல்களைப் படிக்கச் செய்யலாம். இடையிடையே வருகின்ற, அவர்களுக்குப் புரியாத, கடினமான வார்த்தைகளை சிறுசிறு கதைகளின் மூலம் பெரியவர்கள் விளக்கிச் சொல்லும்போது, அவர்களுக்கு அதில் தனி ஆர்வம் உண்டாகும். கதைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலாவது அவர்கள் நீதி நூல்களைப் படிக்கத் துவங்குவார்கள். இதனை விடுத்து, குழந்தைகளைக் கண்டித்தோ அல்லது அவர்களுக்குப் பிடித்தமான தின்பண்டங்களை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைச் சொல்லியோ படிக்க வைப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. இம்முறைகள் தற்காலிகமானதே தவிர, நிரந்தரமானவை அல்ல. குழந்தைகளை தெய்வீக நூல்கள் மற்றும் நீதிபோதனை தரும் நூல்களைப் படிக்கச் சொல்லி பெரியவர்கள் அதனைக் காதால் கேட்டு, இடையிடையே நற்கருத்துக்களை அவர்களுக்கு விளக்கிச் சொல்வதன் மூலமாக மட்டுமே அவர்களிடத்தில் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டுவர முடியும் என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.
?ஆலயங்களில் எதிர்திசையில் சுற்றக் கூடாது என்கிறார்களே, ஏன்? ஆனால் சிலர் விநாயகரை இடது புறமாக பிரதட்சணம் செய்கிறார்கள், இது சரியா?
- ஏ.முனியசாமி, ராமநாதபுரம்.
எந்த ஆலயமாக இருந்தாலும் இடமிருந்து வலமாகச் சுற்றுவதே பிரதட்சணம் எனப்படும். எதிர்திசையில் சுற்றினால் அது அபிரதட்சணம் ஆகிவிடும். `பிராச்யை திசே’ என்றால் கிழக்குத் திசை, தட்சிணம் என்றால் தெற்கு. கிழக்கிலிருந்து தெற்காகச் செல்வதே பிரதட்சணம் ஆகும். அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, பூமியானது இடமிருந்து வலமாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றிவருகிறது. இந்த பூமியில் வாழும் மனிதர்கள் ஆகிய நாமும் பூமித்தாய் காட்டும் வழியிலேயே இடமிருந்து வலமாகத்தான் சுற்ற வேண்டும். எதிர்திசையில் சுற்றினால் எதிர்மறையான பலன்கள்தான் விளையும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?வீட்டில் கண்திருஷ்டி பொம்மைகள் மற்றும் கண் திருஷ்டி கணபதி படம் வைப்பதால், திருஷ்டி தோஷம் குறையுமா?
- ம.கிருஷ்ணா, வழுவூர்.
திருஷ்டி தோஷத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதால்தான் இதுபோன்ற சம்ப்ரதாயங்களை பெரியவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். திருஷ்டி என்பது பார்வையின் மூலமாக உண்டாகும் வீரியம் நிறைந்த உணர்வு. வித்தியாசமான பொம்மைகள் மற்றும் படங்களின் மீது எதிர்மறை எண்ணங்களை உடையவர்களின் பார்வை செல்லும்போது அதன் வீரியம் என்பது குறையும் அல்லவா, அதனால்தான் அதுபோன்ற படங்களை மாட்டி வைக்கிறார்கள். பூசணிக்காய் சுற்றி உடைப்பது, எலுமிச்சம்பழத்தினை அறுத்து வைப்பது, தேங்காய் சுற்றி உடைப்பது, ஆரத்தி சுற்றுவது, உப்புச் சுற்றிப் போடுவது போன்ற பழக்கங்களும் திருஷ்டி தோஷத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காகத்தான்.
?ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிக்கும் என்பது நமக்குத் தெரிந்த செய்தி என்றாலும், ஆண்களுக்கும் அதுபோல் பேய் பிடிக்குமா?
- கே.எம்.ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.
பேய் பிடிப்பது என்பது ஒருவிதமான மனோவியாதி. மனதளவில் பலவீனமாக இருப்பவர்கள் இதுபோன்ற அமானுஷ்யமான விஷயங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஆண் -பெண், ஏழை - பணக்காரர் மற்றும் ஜாதி, மத, இன பேதம் எதுவும் இல்லை. மனதளவில் பலம் பெற அன்றாடம் சூரிய நமஸ்காரம் செய்வதும், இறைவனின் திருநாமத்தினை உச்சரிப்பதும் துணை நிற்கும்.