கிருஷ்ணாரண்யம் போல பஞ்ச ராம க்ஷேத்ரங்கள் உண்டா?
?சதுர்வேதி, திரிவேதி என்ற வார்த்தைகள் எதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன?
- ம. ஸ்ரீ கிருஷ்ணா, மயிலாடுதுறை.
நான்கு வேதங்களையும் கற்றவர்களை சதுர்வேதி என்ற சொல்லாலும், மூன்று வேதங்களைக் கற்றவர்களை திரிவேதி என்ற சொல்லாலும் குறிப்பிடுகின்றோம். நான்கு வேதம் படித்தவர்களுக்கு ஒரு காலத்தில் அரசர்களால் வாழ்விடங்கள் தரப்பட்டன. அந்த வாழ்விடங்களை சதுர்வேதி மங்கலம் என்று அழைத்தார்கள்.
?பக்தியில் நாம் எதையாவது ஒன்றை எதிர்பார்த்து கோயிலுக்குச் செல்வது அத்தனை உயர்வானது இல்லை என்று சொல்கிறார்களே?
- த. சத்தியநாராயணன், அயன்புரம்.
பதில்: உண்மைதான். பக்தியில் காம்ய பத்தி என்றும் நிஷ் காம்ய பத்தி என்றும் சொல்வார்கள். காம்ய பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட பலனுக்காக நேர்த்திக்கடன் இருப்பது, கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொள்வது போன்றவற்றைச் சொல்லலாம். நிஷ்காம்ய பக்தி என்பது எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்வது. இது உயர்ந்த நிலை. இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம். நாம் விரும்பியது கிடைப்பதற்காகத்தானே கோயிலுக்குப் போகிறோம். நிஷ்காம்ய பக்தியால் என்ன பலன்? என்று கேட்கலாம். ஆனால், ஒரு சூட்சுமம் உண்டு. காம்ய பக்தியில் நீங்கள் கேட்டது மட்டும்தான் கிடைக்கும். நிஷ்காம்ய பக்தியில் நீங்கள் கேட்டது மட்டுமல்ல, கேட்காததும் கிடைக்கும், உங்களுக்கு நன்மை தருகின்ற அத்தனை விஷயங்களும் கிடைக்கும்.
?உலகத்தில் எண்ணூறு கோடி பேர் இருக்கிறார்கள். அது எப்படி 12 கட்டத்திற்குள் அத்தனை பேருக்கும் ஜாதகத்தை எழுதுகிறார்கள்?
- சதீஷ்குமார், மும்பை.
இந்தக் கேள்விக்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அறிவொளி அவர்கள் ஒரு முறை விளக்கம் அளித்து இருந்தார் அவர் சிறந்த ஜோதிடரும் கூட என்பது பல பேருக்குத் தெரியாது. அவர் ஒரு உதாரணத்தைக் கூறி இந்த விஷயத்தை விளக்கினார். நாம் காலணி வாங்குகின்றோம். கடையில் ஏழு அல்லது எட்டு எண்களில் தான் காலணிகள் இருக்கின்றன. சிலர் ஏழாம் நம்பர், சிலர் எட்டாம் நம்பர், சிலர் பத்தாம் நம்பர் என்று வாங்குகின்றனர். ஆனால் 800 கோடி பேருக்கும் இந்த குறிப்பிட்ட எண்களுக்குள் அமைந்து விடுகிறது. ஆனால் எல்லோருடைய பாதத்தின் அளவும் நுட்பமாக சற்று மாறுபாடாகத்தான் இருக்கும். ஆனாலும், பொருந்தி விடுகிறது. அதுபோல் 800 கோடி பேர்களுக்கும் 12 கட்டங்களில் ஜாதகம் அடங்கி விடுகிறது. ஆனால் அந்த நுட்பமான வேறுபாடுகளின் அடிப்படையில்தான் அவரவர்களுக்கான ஜாதக பலன்கள் சொல்லப்படுகின்றன.
?ஒவ்வொரு மாதத்திலும் எட்டாவது ராசியில் இரண்டரை நாட்கள் சந்திரன் இருப்பதால் இரண்டரை நாட்களும் சந்திராஷ்டமம் தானா?
- பிரபு, சேலம்.
ஒரு ராசிக்குள் இரண்டேகால் நட்சத்திரம் அமர்ந்திருக்கும். காரணமாக நீங்கள் கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் பிறந்தால் மேஷ ராசி. 2. கார்த்திகை இரண்டு, மூன்று, நான்காம் பாதங்களில் பிறந்தால் ரிஷப ராசி. கார்த்திகை நட்சத்திரம் இரண்டு ராசிகளிலும் இருப்பதால் எட்டாவது ராசியான விருச்சிக ராசியிலும், தனுசு ராசியிலும் பிரவேசிக்கும் காலங்களில் சந்திராஷ்டமம் வந்துவிடும். ஆனால், தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு 17ஆம் நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் காலம் சந்திராஷ்டம காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அஸ்வினி என்றால் அனுஷ நட்சத்திர நாள் சந்திராஷ்டம நாள் இரண்டு நாள் அனுஷம் இருந்தால் இரண்டு நாளும் சந்திராஷ்டமம். அதுதான் துல்லியமாக வரும். சந்திராஷ்டமம் வீரியமாக செயல்படும் காலம் அது.
?கிருஷ்ணாரண்யம் போல பஞ்ச ராம க்ஷேத்ரங்கள் உண்டா?
- லட்சுமி நாராயணன், திருநெல்வேலி.
உண்டு. திருவாரூரைச்சுற்றி உள்ள தலங்கள் சிலவற்றை பஞ்சராம க்ஷேத்ரங்கள் என்கிறார்கள்.
1. தில்லை விளாகம் - வீர கோதண்டராமர்,
2.வடுவூர் - கோதண்டராமர்
3. பருத்தியூர் - கோதண்டராமர்
4. முடிகொண்டான் - கோதண்டராமர்
5. அதம்பார் - கோதண்டராமர். ராமநவமி அன்று இந்தத் தலங்களை சென்று சேவிக்கலாம்.
?பிரதோஷ வேளை என்பது சிவபெருமானுக்கு மட்டும்தானா? சிவாலயங்களில் அன்று கூட்டம் அதிகமாக இருக்கிறது.
- சரத், சிவகங்கை.
உண்மைதான். பிரதோஷ கால பூஜை என்பது சிவாலயங்களில் இப்பொழுது மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. கூட்டமும் அதிகமாக இருக்கிறது. பிரதோஷ பலன் என்பது அற்புதமானது. வைணவர்களுக்கு இந்த பிரதோஷ வேளை என்பது நரசிம்ம பூஜைக்கும் ஜபத்துக்கும் உரிய காலம். இந்த பிரதோஷ வேலையில்தான் பிரகலாதனை காப்பாற்றுவதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்பதால் வைணவர்களுக்கும் பிரதோஷ வேளை சிறந்தது.
?பஞ்சாங்கத்தில் மேல்நோக்கு நாள்கள், கீழ்நோக்கு நாள்கள் என்று போட்டு இருக்கிறார்கள். இதனால் என்ன பிரயோஜனம்?
- ராதா, திருச்சி.
ஒரு நாள் முழுவதும் ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய 9 நட்சத்திரங்கள் இருந்தால் அந்த நாள் மேல் நோக்கு நாள். பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய நாள்கள் இருந்தால் அவை கீழ் நோக்கு நாள்கள் என்பார்கள். மேல்நோக்கு நாள் அன்று மாடி, கொடிமரம், மதில் சுவர், வாசல் கால், பந்தல் முதலிய வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று எடுத்துக் கொள்ளலாம். பூமிக்கு கீழே தோண்ட வேண்டிய குளம், கிணறு, முதலியவற்றைச் செய்வதற்கு கீழ்நோக்கு நாள்கள் ஏற்றவை. நாம் வீட்டுக்கு போர் போட வேண்டும் என்று சொன்னால் கீழ்நோக்கு நாளில் ஒன்றை எடுத்துக்கொண்டு போர் போடுவது சிறந்தது.
?திருவாசகம் தேவாரம் பாராயணம் செய்ய காலம் இருக்கிறதா?
- ராதாகிருஷ்ணன், சென்னை.
எப்பொழுதெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் பாராயணம் செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் பாராயணம் செய்வது என்பது நல்லதுதான். அது எல்லோருக்கும் வாய்க்காது. பாராயணம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகின்ற பொழுது பாராயணம் செய்யுங்கள். காரணம் அந்த நினைப்பு வந்த நேரம் எந்த நேரமாக இருந்தாலும் அது நல்ல நேரம்தான்.