அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே, இது திருமணத்தடை நீக்கும் தலமாகும்.இந்த தலம் திருஅன்னியூர் என்றும் திருவன்னியூர் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சன் நடத்திய யாகத்தில் அக்னி தேவன் கலந்துகொண்டான்.
இந்த யாகத்தில் தட்சன் வேண்டுமென்றே மருமகனாகிய சிவபெருமானை அழைக்கவில்லை. கோபம் கொண்ட சிவபெருமான் வீரபத்திரர் மற்றும் பத்ரகாளியிடம் தண்டிக்கும்படி பணித்தார். ்தண்டனையை பெற்ற அக்னி பகவான் தனது கைகளையும் நாக்கையும் இழந்து சாபங்களின் காரணத்தால் எந்த யாகத்திலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பருவ மழை பொய்த்தது. எல்லா இடங்களும் வறண்டது கண்டு மனம் வருந்தி அக்னீஸ்வரர் கோயிலின் அருகே குளம் அமைத்து வன்னி மரத்தின் இலைகளைக் கொண்டு இறைவனை வழிபட மனம் குளிர்வுற்ற பார்வதி தேவியின் மணாளன் அக்னி தேவனை மன்னித்து பாவ விமோச்சனம் வழங்கினார். பின்பு அக்னி தேவனின் உறுப்புகள் எல்லாம் உயிர்ப்பித்து பழைய நிலைக்கு திரும்பினான்.
இத்திருத்தலம் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமாக விளங்குவது சிறப்பாகும். இத்திருத்தலத்திற்கு சூரியன், செவ்வாய், வியாழன், குரு, சுக்ரன், சனி ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளன.
* ஜாதகத்தில் லக்னம் மற்றும் ஏழாம் பாவகத்தில் சுக்ரன் இருந்தால் திருமணம் தாமதமாகும். இரவு தூங்கும்பொழுது படுக்கை தலையணை அருகே ஒரு சொம்பில் பால்வைத்து அதில் வெள்ளை மொச்சை ஊறவைத்து தலைமாட்டில் வைத்துப் படுக்க வேண்டும். பிறகு இதனை இந்த திருத்தலத்தில் உள்ள வன்னி மரத்திற்கு ஊற்றி சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டுவந்தால் திருமணம் விரைவில் நடக்கும்.
* ஜாதகத்தில் ஆறாம் பாவகத்தில் வியாழன், சுக்ரன், ராகு ஆகியவற்றின் பார்வை இருந்தால் சருமம் தொடர்பான நோய்கள் இருந்தாலும் உஷ்ணம் தொடர்பான ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் இருந்தாலும் இங்குள்ள தீர்த்தத்்தில் நீராடி சிவபெருமானுக்கு கோதுமையால் செய்த பொருளை நைவேத்யம் செய்து வழிபட்டால் குணமாகும்.
* ஜாதகத்தில் எட்டாம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை பார்வை அல்லது பார்வை பெற்று இருந்தால் வீடு கட்டுவதிலும் தொழிற்சாலை கட்டுவதிலும் சில பிரச்னைகள் உருவாகின்றன. இத்தலத்தில் வறுத்த எள்ளுடன் வெல்லம் சேர்த்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தையோ அல்லது மண்ணையோ எடுத்து சென்று கட்டடம் கட்டும் இடத்தில் போட்டால் கட்டட வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடியும்.
* ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் உள்ளவர்கள் முதலாளிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் இருப்பார்கள். சில வேளைகளில் தொழிலில், லாபத்தில், முதலீட்டில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அவர்கள் இங்கு கோதுமை பொடி, பழுப்பு நிற சர்க்கரையை நைவேத்யமாக சுவாமிக்கு படைத்து பின்பு அதனை வானரங்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் வழங்கினால் முதலீடுகள் மற்றும் லாபம் இரண்டு மடங்காக அதிகமாகும்.
* கும்பகோணத்திலிருந்து (24 கி.மீ) காரைக்கால் செல்லும் பேருந்துகளில் எஸ் புதூரில் இறங்க வேண்டும் இங்கிருந்து ஆட்டோக்களில் 5 கி.மீ சென்றால் வன்னியூரை அடையலாம்