கலக்கம் போக்குவாள் காளராத்ரி
ராமாயணத்தில் காளராத்ரி துர்கைஅசோக வனத்தை, ஆஞ்சநேயர் துவம்சம் செய்ததும், ஆஞ்சநேயரை, இந்திரஜித் பிரம்மாஸ்திரம் எய்து, அவரை கைது செய்து ராவணன் முன்னிலையில் நிறுத்துகிறான். ராவணன் முன்னிலையில், ஆஞ்சநேயர் ராவணனைக் காணவேண்டும் என்றே பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டதாக சொல்கிறார். அதன் பிறகு,
“யாம் சீதா, இதி அபிஜனாசி யாம் இயம் திஷ்டதி தே வசே
காளராத்ரீதி தா இதம் வித்தி சர்வ லங்கா வினாசினீம்’’
என்று சொல்கிறார்.
அதாவது, நீ அடிமையாக்கி வைத்திருக்கும் சீதையாக நீ அறிந்து கொண்டிருப்பவள் வேறு யாரும் அல்ல, முழு லங்காவையும் அழிக்கத் திறனுடைய காளராத்திரி தேவியே ஆவாளென்று அறிந்து கொள். என்று சொல்கிறார். ஆகவே ராமாயணத்தில் சீதாதேவியாக பிறந்ததும் இந்த துர்க்கையே என்றால் அது மிகையல்ல.
சிவ தாண்டவமும் காளராத்ரி துர்கையும்
ஈசன் தருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தையும், அவர்களின் மனைவிகளின் ஆணவத்தையும் அழிக்க பிட்சாடனர் வடிவில் தாருகாவனத்தில் தோன்றினார். அங்கே அவர்கள் அபிசார வேள்வி செய்து அதன் பயனாக வேள்வித் தீயில் தோன்றிய காட்டு யானையை, ஈசனை நோக்கி ஏவினார்கள். தன்னை எதிர்த்து வந்த அசுர யானையை வதைத்து, அதன் தோலை மேலங்கியாக போர்த்திக் கொண்டார். அந்த சமயத்தில் அவர் ஆடிய நடனத்துக்கு பூதத் தாண்டவம் என்று பெயர். அந்த தாண்டவத்தில் இருந்து தோன்றியவள்தான் காளராத்ரி துர்கை.
நவ கிரகங்களும் காளராத்ரி துர்கையும்
நவகிரகங்களில் முக்கியமானவர் சனிபகவான் ஆவார். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் இவர்தான். அவரவர் செய்த கர்ம வினைப்பலனை பாரபட்சம் இன்றி அவர்களுக்கு வழங்குபவர் இவர். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை. சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்ற பழமொழி இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.
ஜாதகத்தில் சனிபகவான் நீச்சமாக இருந்தால், பலவிதமான கோளாறுகள் வரலாம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற காலங்களிலும், பல விதமான தொல்லைகள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள், காளராத்ரி துர்கையை வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் நன்மை ஏற்படும் என்பது பக்தர்கள் பலரும் அனுபவத்தில் கண்ட ஒன்றாகும்.
காளராத்ரி தேவியின் தோற்றம்
அன்னை துர்கையின் ஏழாவது சக்தி காளராத்ரி தேவி என்று அழைக்கப்படுகிறாள். இந்த தேவியின் உடலின் நிறம் அடர்ந்த இருளைப் போல முற்றிலும் கருப்பாக இருக்கிறது. நான்கு திசையிலும், இந்த அம்பிகையின் கார்குழல் பறந்துகொண்டே இருக்கிறது. கழுத்தில் மின்சாரம் போல் ஜொலிக்கும் மாலையை இந்த தேவி தரித்திருக்கிறாள். இந்த அன்னைக்கு மூன்று கண்கள். இந்த மூன்று கண்களைக்கொண்டும் இந்த பிரபஞ்சத்தை, கருணையோடு கடாட்சித்து நோக்கி இந்த தேவி அருள் செய்கிறாள்.
இந்த அற்புதமான மூன்று கண்களில் இருந்து மின்சாரம் போன்ற பிரகாசமான கதிர்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. அம்பிகையின் நாசியில் இருந்து வெளிப்படும் சுவாசத்திலிருந்து கடுமையான நெருப்புச் சுடர்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இந்த தேவியின் வாகனம் கழுதை ஆகும். தன் வலது கையை உயர்த்திய வரமுத்திரையுடன் அனைவருக்கும் வரங்களை வழங்குகிறாள் இந்த அம்பிகை. வலது பக்கம் கீழே இருக்கும் கரம் அபய முத்திரையில் உள்ளது. அது பக்தனின் பயத்தைப் போக்குகிறது. இடது புறம் மேல் கையில் இரும்புக் கொக்கியும், கீழ்கையில் வாளும் உள்ளது.
இந்த அம்பிகையின் வடிவம் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருக்கிறது. ஆனால், அவள் எப்போதும் நல்ல வரங்களையும் மங்கலங்களையும் தருவதில் இந்த அம்பிகைக்கு நிகர் வேறு யாரும் இல்லை. ஆகவே, இந்த அம்பிகை `சுபங்கரி’ என்று அழைக்கப்படுகிறாள். எனவே, இந்த அம்பிகையின் தோற்றத்தைக் கண்டு பக்தர்கள் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை.
குண்டலினி யோகத்திலும் நவராத்திரி பூஜையிலும் காளராத்ரி துர்கைநவராத்திரியில் செய்யப்படும் துர்கா பூஜையின் ஏழாவது நாளில், காளராத்ரி துர்கையை வழிபடும் மரபு தொன்றுதொட்டே அம்பிகையை வழிபடும் உபாசகர்களிடம் உள்ளது.
நமது, முதுகுத் தண்டின் அடிப்பகுதியில், முக்கோண வடிவில் இருக்கும் ஒரு குழியில் குண்டலினி என்னும் சக்தி இருக்கிறது. இந்த சக்தி ஒரு பாம்பின் வடிவில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒரு பாம்பின் வடிவில் இருக்கும் இந்த சக்தி, மூன்று சுற்றாக சுற்றிக் கொண்டு, தனது வாலைத் தானே கடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கிறது.ஒரு யோக சாதகன், தனது யோகப் பயிற்சியின் மூலமாகவும், சாதனைகளின் மூலமாகவும், படுத்துக் கிடக்கும் இந்த சக்தியை எழுப்பி, தலை உச்சியில் இருக்கும் சஹஸ்ராரம் என்ற சூட்சும யோக சக்கரத்திற்கு கொண்டு வந்து அங்கே இறைவனோடு கலந்தால் இன்புற்று வாழலாம். இந்த சாதனைக்கு பெயர் குண்டலினி யோகம்.
நவ ராத்திரியின் ஏழாம் நாளில் உபாசகன், தனது தலையின் உச்சியில் இருக்கும் சூட்சுமமான ‘சஹஸ்ரார’ சக்கரத்தில் இந்த அம்பிகையை வைத்து பூஜிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படி பூஜிக்கும் போது, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சித்திகளும் சாதகனுக்கு கிடைக்கிறது. சஹஸ்ரார சக்கரத்தில் காளராத்ரி துர்க்கையை வைத்து பூஜிக்க பல ஜென்மங்களில் தவம் செய்திருந்தால் மட்டுமே முடியும் என்பது, மகான்களின் முடிவான முடிவு. அப்படி பூஜிக்கும் போது, உபாசகனின் பாபங்கள் நாசமாகிறது. புண்ணியமான லோகங்களுக்கு செல்வதற்கு, சாதகன், இந்த அம்பிகையை பூஜித்ததால் தகுதி உடையவனாக ஆகிறான்.
காளராத்ரி துர்கையை பூஜிப்பதால் வரும் நன்மைகள்
அன்னை காளராத்ரி தீயவர்களை அழிப்பவள். துஷ்டர்கள், தைத்தியர்கள், தானவர்கள், ராட்சஸர்கள், பூதங்கள், பிரேதங்கள், பிசாசுகள் போன்ற துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த தேவியை நினைத்த மாத்திரத்தில், பயந்து நம்மை விட்டு ஓடிவிடுகின்றன. நவகோள்களால் ஏற்படும் தீமையும், இந்த அம்பிகையை வணங்குவதால் நீங்குகிறது.நெருப்பு, நீர், விலங்குகள், எதிரிகள், இருள் போன்றவற்றால், இந்த தேவியின் உபாசகனுக்கு ஒருபோதும் தீமை ஏற்படுவதில்லை. இந்த அம்பிகையின் அருளால் பரந்த இந்த பூமியில் அச்சமற்று வாழலாம்.
எப்படி வழிபடுவது
காளராத்திரி தேவியின் திருவுருவத்தை நெஞ்சில் வைத்து பக்தியுடன் தியானம் செய்யவேண்டும். யமம், நியமம் போன்றவற்றை கடைப்பிடித்து யோகத்தால் இந்த தேவியை அடைவது சாலச் சிறந்தது. இந்த தேவியை வழிபடும் உபாசகனின் மனம், மொழி மெய் மூன்றும் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த அம்பிகை அருள் தருவதால் கற்பக விருட்சம் போல ஆவார். இந்த அம்பிகையை வழிபட்டால் வரும் ஐஸ்வர்யங்களை அளவிட முடியாது.
இந்த அம்பிகையைத் தொடர்ந்து தியானம் செய்து வழிபடுவது மிகவும் அற்புதமான பலன்களைத் தரும். தூய்மையான மனத்தோடு, அம்மா சரணம் என்றால்கூட கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் தேவி இவள். ஆகவே, உண்மையான பக்தியோடும் இந்த அம்பிகையை அடையலாம். இப்படி அற்புதமான பலன்களைத் தரும் இந்த அம்பிகையை நாமும் வணங்கி பெறுவதற்கு அரிய பேறுகளை பெறுவோம்.
தொகுப்பு: ஜி.மகேஷ்