சந்நியாசம்
சந்நியாஸ்ரமம் சென்ற உடனேயே அந்த துரீய நிலையில் நிலைத்து நின்று விடுவார்களா? ஆனால், இந்த மூன்று அவஸ்தைகளான ஜாக்ரத், சொப்பன, சுஷுப்தி மூன்று அவஸ்தைகளையும் தாண்டுவதற்குண்டான ஒரு வழியே இந்த சந்நியாச ஆஸ்ரமம் ஆகும். ஆனால், இலக்கு துரீயம் என்கிற உச்ச பட்சமான அத்வைத நிலையான ஞானமாகும்.ஒருவர் சந்நியாச தீட்சை எடுத்துக் கொண்டதற்குப் பிறகு சந்நியாசத்திற்குரிய அனுஷ்டானங்களை செய்வாரே தவிர, பிரம்மச்சரிய ஆஸ்ரமத்திற்குரிய அனுஷ்டானங்கள் கிடையாது.இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.
இங்கு முதலில் அவருடைய சிகையையும் (முடியையும்), யக்ஞோபவீதத்தையும் (பூணூலையும்) தியாகம் செய்ய வேண்டும். அவை இரண்டையும் ஜலத்தில் ஆஹுதி செய்ய வேண்டும். வழக்கமாக ஆஹுதி என்றால் அக்னியில்தான் செய்வோம். இந்த இடத்தில் பூணூலையும், சிகையையும் நீரில் விட்டு தியாகம் செய்ய வேண்டும். இதற்கு சிகா, யக்ஞோபவீத தியாகம் என்று பெயர்.
சந்நியாசம் என்பதில் எல்லாவற்றையும் விடுகிறார் என்று சொல்வதை விட, தனக்கு இருந்த குறுகிய வட்டத்தை விடுத்து அந்த வட்டத்தை விரிவாக்குகிறார் என்பதுதான் சரியாக இருக்கும். ஒரு குடும்பம் என்று இருந்ததை விரிவாக்கி எல்லாரையும் தன்னோடு இணைத்துக் கொள்வதற்காக விரிவாக்குகிறார். அந்த விரிவாக்கல் என்பது எங்கு வந்து முடியுமெனில், சர்வ பூத அபயப் பிரதானம் என்று பெயர். எல்லா உயிர்களுக்கும் நான் அபயம்… அபயம்… என்றும், எந்த உயிரும் என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம். எந்த உயிரையும் நான் பார்த்து பயப்படுவதில்லை. எல்லோரும் எனக்கானவர்கள். எல்லோருக்கும் நான் உரியவன் என்று தன்னுடைய வட்டத்தை விரிவாக்குகிறார்.
உண்மையான சந்நியாசம் என்பது பயமற்ற நிலையே… சந்நியாசம் என்பது அகந்தையை துறத்தலே. அகந்தை இருக்குமட்டும் பயம் இருக்கும். ஏனெனில், அகந்தையை பயமே காப்பாற்றி போஷிக்கும். அகந்தையின் செல்லக் குழந்தையே பயம். அதனாலேயே அதனால்தான், இந்தியாவின் பெரிய ஜைன ஞானியை மகாவீரர் என்கிறார்கள்.
கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)