தெளிவு பெறுவோம்
?பாவைநோன்பை யார் யார் செய்யலாம்?
- கே.முருகன்.
பெயரிலேயே விடையும் உள்ளதே. பாவை நோன்பு என்பது மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். கன்னிப் பெண்கள் விடியற்காலையில் நீராடி ஆண்டாள் இயற்றிய திருப்பாவைப் பாடல்களையும், மாணிக்கவாசகர் பெருமான் இயற்றிய திருவெம்பாவைப் பாடல்களையும் பாடி, இறைவனை வழிபட்டு, இந்த நோன்பினை மேற்கொள்வார்கள். இந்த நோன்பின் மூலம் பெண்கள் நல்ல குணவான் ஆன கணவனைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பாவை நோன்பு என்பது மிகவும் தொன்மையானது என்றும், இது தைநீராடல் என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் காணப்படுவதாகவும் வரலாற்றுக் குறிப்பும் உண்டு.
?சண்டிகேஸ்வரர் சந்நதியில் சிலர் கைதட்டுவதும் சிலர் நூல் போடுவதும் செய்கின்றனர்? இவற்றில் எது சரியானது?
- ம.கிருஷ்ணா, மயிலாடுதுறை.
இரண்டுமே சரியில்லை. பஞ்சமூர்த்தி களில் ஒருவராக சண்டிகேஸ்வரரும் இடம்பெற்றுள்ளார். சிவன் சொத்தினைக் காக்கும் கணக்காளராக இவரைக் கருதுவதால், ஆலயத்திற்கு வந்துவிட்டுச் செல்லும்போது அங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பது போல் அவரது சந்நதிக்கு முன்னால் கைகளைத் தட்டிக் காண்பிப்பது போல் இந்த பழக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. இன்னும் சிலர் சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பதால் அவருக்கு காது கேட்காது என்றும், கைகளை தட்டி நம் பிரார்த்தனைகளை அவரிடத்தில் முன்வைக்கும்போது நம் சார்பாக அவர் அதனை இறைவனிடத்தில் எடுத்துக் கூறுவார் என்றும் சொல்வார்கள்.
இந்தக் கருத்தினில் அவர் தியானத்தில் இருப்பவர் என்பது மட்டுமே சரி. அவரது தியானத்தைக் குலைக்கும் வகையில் நிச்சயமாக கைகளைத் தட்டக் கூடாது. வலதுகையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிரவிரல் இந்த மூன்று விரல்களையும் ஒன்றிணைத்து இடது உள்ளங்கையின் மேல் வைத்து வழிபடுவது என்பது சிவாகம முத்திரை வழிபாடுகளில் ஒன்று. அதனை ஆகமம் கற்றறிந்த அர்ச்சகர்கள் மட்டுமே செய்ய வேண்டும். அதனைப் பார்த்து நாமும் அதுபோல் செய்யக்கூடாது. அதேபோல் நம் ஆடையில் உள்ள நூலைப் பிரித்து அவர் சந்நதியில் போடுவதால் ஆடைகள் பெருகும் என்று சொல்வதும் மூடநம்பிக்கையே. நிச்சயமாக இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
?அன்றாடம் குளிப்பதில்கூட ஆன்மிக விதிமுறைகள் உள்ளனவா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆன்மிக விதிமுறைகள் என்று சொல்வதைவிட தர்மசாஸ்திரம் வலியுறுத்தும் விதிமுறைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, கிழக்கு முகமாக நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும், குளிக்கும்போது தெய்வத்தின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும், முக்கியமாக ஆடையில்லாமல் நிர்வாணமாக ஸ்நானம் செய்யக்கூடாது, குளிக்கும்போது சிறுநீர் கழிக்கக் கூடாது போன்ற விதிகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இதுபோக, புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வதற்கு என்று தனியாக விதிமுறைகள் உண்டு. இந்த விதிமுறைகள் அனைத்தும் நம் உடல்நலம் கருதியே வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
?ஆலயங்களில் எதிர்திசையில் சுற்றக் கூடாது என்கிறார்களே, ஏன்? ஆனால் சிலர் விநாயகரை இடது புறமாக பிரதட்சணம் செய்கிறார்கள், இது சரியா?
- ஏ.முனியசாமி, ராமநாதபுரம்.
எந்த ஆலயமாக இருந்தாலும் இடமிருந்து வலமாகச் சுற்றுவதே ``ப்ரதக்ஷிணம்’’ எனப்படும். எதிர்திசையில் சுற்றினால் அது அப்ரதக்ஷிணம் ஆகிவிடும். ``ப்ராச்யை திசே’’ என்றால் கிழக்கு திசை, ``தக்ஷிணம்’’ என்றால் தெற்கு. கிழக்கிலிருந்து தெற்காகச் செல்வதே ப்ரதக்ஷிணம் ஆகும். அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, பூமியானது இடமிருந்து வலமாக தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிவருகிறது. இந்த பூமியில் வாழும் மனிதர்கள் ஆகிய நாமும் பூமித்தாய் காட்டும் வழியிலேயே இடமிருந்து வலமாகத்தான் சுற்ற வேண்டும். எதிர்திசையில் சுற்றினால், எதிர்மறையான பலன்கள்தான் விளையும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?எல்லோரிடமும் சுமூகமான உறவு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
- சரண்யா, வேலூர்.
ஒருவரைப் பற்றி நாமாகவே நல்லவன் கெட்டவன் என்ற முடிந்த முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எல்லா நல்லவர்களிடத்திலும் சில கெட்ட குணங்கள் இருக்கும். எல்லா கெட்டவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் இருக்கும். இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, தகுதி அறிந்து, ஓர் எல்லையோடு பழகினால், எல்லோரிடமும் சுமூகமான உறவைக் கடைப் பிடிக்கலாம். அப்படிக் கடைப்பிடிக்கும்போது தேவையில்லாத மன அழுத்தங்கள் வராது. ‘‘குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’’ என்று இதைத்தான் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவரும் சொல்லுகின்றார். பல பிரச்னைகளுக்குத் திருக்குறளில் தீர்வு இருக்கிறது.
?தேதி மழை என்றால் என்ன?
- அருள்குமார், திருச்சி.
இது பஞ்சாங்கத்தில் உள்ள ஒரு விஷயம். இந்த மாதம் இன்ன தேதியில் மழை பெய்தால் அவ்வருடம் நல்ல மழை பெய்யும் என்பதை தேதி மழை என்பார்கள். ஆனி மாதம் பத்தாம் தேதி, ஆடி மாதம் எட்டாம் தேதி, ஆவணி மாதம் ஆறாம் தேதி, புரட்டாசி மாதம் 4 ஆம் தேதி, ஐப்பசி மாதம் இரண்டாம் தேதி, கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி என இந்தத் தேதி களில் மழை பெய்தால் அந்த மழையை தேதி மழை என்று சொல்வார்கள்.
?துறவு பெற்றால்தான் ஞானத்தை அடைய முடியுமா?
- டி.மாணிக்கம், மதுரை.
அப்படியெல்லாம் அவசியம் இல்லை. துறவு மேற்கொண்டு ஞானம் அடையாதவர்கள் உண்டு. இல்லறத்தில் இருந்த படியே ஞானத்தை அடைந்தவர்களும் உண்டு. மெய்ஞ்ஞானமாகிய உண்மையைக் கண்டடைவதுதான் துறவின் நோக்கம். உண்மை என்பது எங்கும் இருக்கிறது. அது துறவிலும் இருக்கிறது. இல்லறத்திலும் இருக்கிறது. அது இல்லாத இடம் இல்லை. துறவில்தான் உண்மை இருக்கிறது என்று சொன்னால் இல்லறத்தில் இல்லை என்று ஆகிவிடும். அப்படி உண்மை ஓரிடத்தில் இருந்து ஒரு இடத்தில் இல்லாமல் போனால் அதற்கு பெயர் உண்மை அல்ல. இதை உணர்வதுதான் ஞானம். அது இல்லறத்தில் இருந்தபடியே உணர முடியும்.
?ஒரு கையால் அஞ்சலி செய்யலாமா?
- இராம.கண்ணன், திருநெல்வேலி.
கூடவே கூடாது. இரண்டு கைகளையும் இணைத்து வணங்குவதற்குத்தான் அஞ்சலி என்ற பெயர். ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆச்சாரியர்கள் திருவுருவங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு தான் இருப்பார்கள். அதற்கு ``அஞ்சலி அஸ்தம்’’ என்று பெயர்.