தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பயத்தை போக்கி தைரியத்தை அருளும் பயலு ஆஞ்சநேயர்

``துமகுரு’’ என்னும் பகுதி, கர்நாடகாவின் மிக முக்கியமான பகுதியாகும். தமிழில் ``தும்பை ஊர்’’ என்று பிரபலமாகியிருக்கிறது. இங்குதான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த எண்ணற்ற பல அனுமன்களை காணலாம். அதனால்தான் என்னவோ இவ்வூர், வளமும் வலிமையையும் மிக்க ஊராக திகழ்கிறது. இந்த துமகுரு பகுதிதான் காலப் போக்கில் ``தும்கூர்’’ ஆனது.

தும்கூர் சிறப்பு

இங்குதான், இந்தியாவின் முதல் மிகப் பெரிய உணவுப் பூங்கா அமைந்துள்ளது. ``ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன்’’ பட்டியலிலும் தும்கூர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மேம்படுத்தப்படவுள்ள 100 ஸ்மார்ட் நகரங்களில் தும்கூரும் ஒன்றாகும். இத்தகைய பெருமைவாய்ந்த தும்கூர் மாவட்டம், முன்னொரு காலத்தில் பல பிரபலமான வம்சங்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவற்றில், மேற்கு கங்கா வம்சம், ராஷ்ட்ரகூதர்கள் மற்றும் சாளுக்கியர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை தும்கூர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பின், மைசூர் உடையார்கள் (Mysore Wodeyars) இந்தப் பகுதியை ஆட்சி செய்தார்கள். மைசூர் உடையார் காலத்தில்தான், 1916 - ஆம் ஆண்டில் இந்த நகரம், நகராட்சியாக மாற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டில், தும்கூர் நகரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அது மட்டுமா! தும்கூரில் இருந்து சுமார் 2 மணிநேரத்தில் பெங்களூரை அடைந்துவிடலாம். ஆகையால், இங்கிருந்தே சில வணிகர்களும் அரசு ஊழியர்களும் பணிகளை மேற்கொள்ள தினமும் பெங்களூருக்கு சென்று வர விரும்புகிறார்கள். தும்கூரில், ``கோட்டே ஆஞ்சநேய சுவாமி’’, ``ஷெட்டிஹள்ளி கேட் ஆஞ்சநேயர் சுவாமி ஆகியவை குறிப்பிடத்தக்க அனுமன் கோயில்கள் ஆகும். இந்த ஆஞ்சநேயர்களை பக்தர்கள் அதிகளவில் தரிசித்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோயில்கள் அனைத்தும் மிகவும் பழமையானவை. வெவ்வேறு ஆட்சியாளர்களின் காலத்தில் அரசர்களிடமிருந்து நிதி பெறப்பட்டு கோயிலாக்கப்பட்டவை.

ஹனுமந்தபுராவில் பயலு அனுமன்

தும்கூரில் உள்ள பெரும்பான்மையான அனுமன் கோயில்கள், மகான்  வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. தற்போது இந்த இதழில் நாம் காணவிருக்கும் அனுமனும் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்த அனுமன்தான். அனுமனின் பெயர், ``ஸ்ரீ பயலு ஆஞ்சநேய சுவாமி’’. இவர் தும்கூர் நகரத்திலிருந்து 6 கி.மீ., தொலைவில், ``ஹனுமந்தபுரா’’ (Hanumanthapura) என்னும் இடத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். கோயிலை அடைந்ததும், தேர் வைக்கப்பட்டிருக்கும் தேர் கொட்டகையைக் காணலாம். அதன் அருகில் சென்றதும், சிறிய வளைவான நுழைவாயில், பக்தர்களை கோயிலுக்கு வரவேற்கிறது. அங்கிருந்தே, அதாவது பக்தர்கள் வாசலில் இருந்தே பயலு அனுமனை தரிசிக்கலாம்.

பயலு அனுமனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, ராமாயண காலத்தில் நடந்த ஒரு கதையினை காண்போம்.

லட்சுமணரையும் கடத்த முயன்ற ராவணன்

சீதைக்காக, ராமபிரானை எதிர்த்து முதன்முறையாக தன் முழு பலத்தைக் கொண்டு, போர்க்களத்திற்கு வருகிறான் ராவணன். ராமருக்கும் - ராவணனுக்கும் பலத்த போர் மூண்டுகிறது. ஒரு கட்டத்தில், லட்சுமணனை எதிர்கொண்டு அவனுடன் சண்டையிடுகிறான், ராவணன். லட்சுமணனை சமாளிக்க முடியாது திணறுகிறான் ராவணன். அதன் பின், பிரம்ம தேவனால் பரிசாக வழங்கப்பட்ட ஒரு ஆயுதத்தை, லட்சுமணனின் மீது ராவணன் பிரயோகிக்கிறான். பிரயோகிக்கப்பட்ட அந்த சக்திவாய்ந்த ஆயுதம் நேராக லட்சுமணனை தாக்குகிறது. இதனால், தரையில் விழுந்து மயக்கமடைகிறார். சீதையை எப்படி கடத்தி சென்றானோ, அதே போல் லட்சுமணனையும் கடத்த முயல்கிறான் ராவணன். ஆனால், அவனால் லட்சுமணரை நகர்த்தகூட முடியவில்லை. அதற்குள் அந்தமம் வேலை வருகிறது. சங்கு ஊதப்படுகிறது. அன்றைய தினத்திற்கான போர் புரியும் நேரம் முடிவடைகிறது. ஆகையால் ராவணன், லட்சுமணனை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடுகிறான். அதன் பிறகுதான், சஞ்சீவி மலையினை அனுமன் கொண்டுவருகிறார் அதிலிருந்து மூலிகை எடுத்து லட்சுமணனை குணப்படுத்துகிறார்கள் என்பது எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே...

அன்பு கட்டளையிட்ட அனுமன்

லட்சுமணனை அடித்ததால், ராவணனின் மீது அனுமனுக்கு பயங்கரமான கோபம் வருகிறது. மறுநாள் போர் நேரம் தொடங்கும் போது, ராவணனை பலமாக அடிக்கிறார், அனுமன். இதில் தரையில் விழுகிறான் ராவணன். மேலும், ராவணனின் வாய், காதுகள் மற்றும் கண்களில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. இதைக் கண்ட ராவணன், அதிர்ச்சியடைந்து தனது தேரில் ஏறுகிறார். அனுமனை எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற விரக்தியில், வானரப் படையினர்களின் மீது சரமாரியாக ராவணன் தாக்குகிறான். இதைக் கண்ட, ராமபிரான் ராவணனை நோக்கி விரைகிறார். அனுமனுடன் சேர்ந்து ராமரும் ராவணனுடன் கடும் சண்டையில் ஈடுபடுகிறார். ராவணன் உயரமான தேரில் நின்று கொண்டு சண்டையிடுகிறான். ராமர் தரையிலேயே நின்று சண்டையிடுகிறார். இதைக் கண்ட அனுமன், ``என் பிரபு... (ராமர்) கீழே நின்று கொண்டு சண்டையிடுவதா?’’ என எண்ணி, ``பிரபோ... எனது முதுகின் மீது ஏறிக் கொள்ளுங்கள். கீழே தரையில் நிற்க வேண்டாம்’’ என ராமருக்கு அன்பு கட்டளையிட்டார், அனுமன். அன்பு கட்டளையை ஏற்ற ராமர், சற்றும் யோசிக்காது அனுமனின் தோள்பட்டையின் மீதேறி, ராவணனை தாக்க ஆயத்தமானார். அனுமனின் ஆஜானுபாக உடலானது மேலும் பல அடி உயரம் உயரத் தொடங்கியது. ராவணனுக்கு ஒரே ஆச்சரியம்! ராவணனின் தேரின் உயரத்திற்கும் மேலாக ஒரு அடி உயரத்தில் அனுமன் இருந்தார். ராமருக்கும் - ராவணனுக்கும் கடும் சண்டை நடைபெறுகிறது.

பிழைத்து போ...

ராவணன், கோபத்தின் எல்லைக்கே செல்ல, ஒரு கட்டத்தில் ராமனை சுமந்திருந்த அனுமனை கடுமையாக தாக்குகிறான். ராவணனால், தன் அன்பு அனுமன் தாக்கப்படுவதைக் கண்ட ராமன், ராவணனின் தேரை இழுத்து இடித்துத் தள்ளுகிறார். இதில், நிலைதடுமாறி தேரில் இருந்து கீழே விழுகிறான், ராவணன். இதனைக் கண்ட ராமர், தன் தோள்பட்டைக்கு பின்னால் இருக்கும் ஒரு அம்பை எடுத்து ராவணனின் தலைக்கு குறிவைக்கிறார். நிராயுதபாணியாக இருக்கும் ராவணனின் முகம் அச்சத்தில் உறைகிறது. அம்பை பின்னோக்கி இழுத்து ஒரு இன்ச் மேலே தூக்கி அம்பை விடுகிறார். ராமர் விட்ட அம்பு, சரியாக ராவணனின் தலையில் உள்ள கிரீடத்தை தள்ளிவிட்டு சென்றது. ராமபிரான்

சிரித்துக் கொண்டே சொல்கிறார், ``நீ நிராயுதபாணியாக இருக்கிறாய். அந்தோ பரிதாபம். இந்த நிலையில், உன்னை மரணத்தின் பிடியில் வைக்க நான் விரும்பவில்லை. மீண்டும் இலங்கைக்கு செல்.. உன் தேரில் உன் வில்லுடன் திரும்பி வா.. இதே போல் உன் தேரில் நின்றுக்கொண்டு, உனது வீரத்தை காட்டு. அப்போது நான் என் வீரத்தை காட்டுகிறேன். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்த்துக் கொள்வோம்’’ என்று ராமர் கூறியதும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ராவணன் ஓடி விடுகிறான். (இப்படியாக ராமாயண கதை நீள்கிறது)மேலே கூறிய இந்த கதையை வால்மீகி ராமாயணத்தில் இன்னும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து சிறு துளியை மட்டுமே எடுத்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கதையின் காட்சியினை விளக்கும் அதாவது அனுமன், ராமரை சுமந்து செல்லும் காட்சியினை பலரும் ஓவியங்களாக வரைந்திருக்கின்றார்கள். அவற்றை இன்றும் சிலர் பொக்கிஷங்களாக பாதுகாத்து வருகிறார்கள். ஆனால், சிலா வடிவில் இக்கோயிலில் மட்டுமே காணமுடியும்.

பயலு அனுமனின் தோள்களில் ராமர்

ஆம்... மூலவரான பயலு ஆஞ்சநேயர் சுவாமியின் தோள்களில் ராமர் ஏறி அமர்ந்து, ராவணனை சண்டையிடுவதுபோல் காட்சியளிக்கிறார். இத்தகைய வடிவம் வேறெங்கும் காண இயலாது. ராமருக்கு அனுமன் தேராக இருந்த காட்சியினை இக்கோயிலில் உள்ள ஒரு பாறையில், வியாசராஜர் தத்துரூபமாக வரைந்து, பின் அதுவே சிலை ரூபமாக மாறியதாக வரலாற்று சான்று விவரிக்கிறது. மேலும், ராமபிரானும் - அனுமனும் ஒரே சிலா வடிவில் இருப்பது அரிதான ஒன்றாக பக்தர்கள் கருதுகிறார்கள். ‘பயலு’ என்றால் கன்னட மொழியில், ``திறந்தவெளி’’ அல்லது ``வெட்டவெளி’’ என்று பொருள். முன்னொரு காலத்தில் இக்கோயில் திறந்தவெளியாக, வெட்டவெளியில் இருந்திருக்கிறது. ஆகையால், அப்போது இக்கோயிலை பக்தர்கள் ``பயலு ஆஞ்சநேயர் கோயில்’’ என்றே அழைத்தார்கள். அதுவே இன்று வரை அப்படியே நிலைத்துவிட்டது. ஒரு காலத்தில், இப்பகுதியை ஆண்ட பல ஆட்சியாளர்கள், இக்கோயிலின் வளர்ச்சிக்கு, தங்களால் முடிந்த உதவிகளை செய்துவந்திருக்கிறார்கள்.

ராமபக்தரான அசுரன்

ஸ்ரீ பயலு ஆஞ்சநேயரின் தனிச் சிறப்பே அவரின் மீது ராமர் அமர்ந்திருப்பதுதான். இன்னொரு சிறப்பு என்னவென்றால், அனுமனின் மீது அமர்ந்த ராமர், ராவணனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அனுமனின் பாதத்தின் அருகில் ராவணனுக்கு ஆதரவான ஒரு அசுரர் ஊர்ந்து வந்திருக்கிறார். அனுமனின் கால்களை பிடித்து இழுத்து, அதன் மூலம் ராமபிரானை வீழ்த்த எண்ணியுள்ளான். ஆனால், அனுமனின் பாதங்களை பிடித்த போது, அந்த நொடியில் ராமர் மற்றும் அனுமனின் ஆசிகளை பெற்றதாக உணர்ந்திருக்கின்றான், அந்த அசுரன். அப்போது அசுரனின் உள்ளத்தில், ராமரை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணம் மாறியிருக்கிறது. பிறகு அந்த அசுரன், ஸ்ரீ ராம பக்தராக, அனுமனின் சேவகனாக மாறியிருக்கிறார். இதே காட்சியினை பயலு அனுமனிடத்திலும் பார்க்க முடியும். அனுமனின் காலடியில், அந்த அசுரனை காணலாம்.

பத்தடி உயரத்தில் அனுமன்

இந்தக் கோயில், மேற்கு நோக்கி உள்ளது. பயலு ஆஞ்சநேயர், சுமார் 10 அடி உயரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். எப்போதும் போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்திருக்கும் அனுமன்கள் எல்லாவற்றிலும், வலது கை சற்று உயர்த்தி அபயஹஸ்தத்தை காட்டுவதும், அனுமனின் வால், வலது புறமாக தலைக்கு மேலே சென்றும், அதில் சிறிய அளவிலான மணியும் காணப்படும். சில அனுமனின் இடது கையில் சௌகந்திகா புஷ்பம் காணப்படும். அதே போல், அனுமனின் முகமானது ஒரு பக்கமாக திரும்பி இருக்கும். ஆனால், பயலு அனுமனின் முகமானது நேரடியாக பக்தர்களை நோக்கியவாறு இருக்கிறார். தோள்களில் ராமர் அமர்ந்து வில்லேந்தி ராவணனை வதம் செய்வதுபோல் காட்சியளிக்கிறார். அதே போல், அனுமனின் இடது கையில் கதை (Gathai) உள்ளது, சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

ரா.ரெங்கராஜன்