அற்புத தரிசனம் தரும் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்
``திருவாய் மொழியில் ஓர் அருமையான பாசு ரம்.
கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோ த்தியில் வாழும் ச ராச ரம் முற்றவும்
நற் பாலுக்குள் உய் த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!’’
ராமாயணத்தின் நிறைவான பகுதியை இதில் குறிப்பிடுகிறார் ஆழ்வார். அயோத்தியில் உள்ள புல் முதற்கொண்டு அனைத்து உயிரினங்களையும், தன்னோடு விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றார்
ராமபிரான்!
``சர - அசரங்கள் என்பதுதான் சராசரம்.
சரம் - நகர்வது. அசரம் நகராதது.
எறும்பு போ ன்ற உயிரினங்கள் சரம்.
கல் முதலான பொருட்கள் அசம்.
கல்லுக்கும் மோட்சம் கிடைத்ததாம்!’’
ஆனால், எல்லோரும் மோட்சத்துக்குப் போகும்போது ஒரே ஒருவர் மட்டும் ‘மோட்சத்துக்கு நான் வரவில்லை. இங்கேயே இருக்கிறேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
அப்படி உறுதியாகச் சொன்னவர்தான் அனுமன். ஆஞ்சனேய மகாப்ரபு. திருப்பாணாழ்வார் ‘அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்று வைராக்கியத்தோடு பிரார்த்தனை செய்தார். அனுமனோ என் இராமனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று உறுதிபடத் தெரிவித்து விட்டார்.
இந்த ஆஞ்சனேயருக்கு என்ன குணம்?
எங்கெங்கே ராமாயணம் பாடப்படுகிறதோ, எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சனேயர் தவறாமல் வந்துவிடுவார்.
இரண்டு கை கூப்பி ஆனந்தக்கண்ணீர் விட்டு, இராமனின் புகழைக் கேட்பார்.
ராமனைப் பாடியவர்களுக்கும் கேட்டவருக்கும் அனுமனின் அருள் அமுதமாகச் சுரக்கும்.
இப்படி இராமனின் புகழைப் பரப்பவும், கலியுக மக்களுக்கு பக்தி உணர்வை ஊட்டவும், பல திருக்கோயில்களிலே பல்வேறு வடிவங்களிலே ஆஞ்சனேயர் எழுந்தருளியிருக்கிறார்.
மிக எளிமையான பூஜைக்கு இரங்குபவர் அவர்.
அப்படிப்பட்ட ஓர் ஒப்பற்ற ஆஞ்சனேயர் திருக்கோயில்தான் நாகை மாவட்டம் தரங்கம்பாடி - பொறையாருக்கு அருகில் அமைந்துள்ள அனந்தமங்கலம்.
அனந்தமங்கலம் சீர்காழி - காரைக்கால் சாலையில் அமைந்துள்ள திருத்தலம்.
அழகான கிராமம் அனந்தமங்கலம். போகும் வழியில் இருபுறம் பச்சைச் சூழ்ந்த வயல்கள்........ இன்னமும் தஞ்சை மாவட்டத்தின் நஞ்சை பயிர்களின் அழகு இப்பகுதியில் இருக்கிறது. அனந்த மங்கலத்தில் ஆஞ்சனேயர் கோயிலைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
சனிக்கிழமை, அமாவாசை நாட்களில் சேவார்த்திகள் அதிகம் பேர் வருகின்றனர்.
அனந்தமங்கலம் ஆஞ்சனேயரைச் சேவித்தால் வாழ்வில் நல்ல பல செயல்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளிலும், ஆஞ்சனேயர் ஜெயந்தியின் போதும் கூட்டம் அலைமோதுகிறது.
விஜயநகர அரசர்கள் ஆண்டபோது, அவர்களின் பிராந்திய பிரதிநிதி இத்திருக்கோயிலை அமைத்ததாகக் கூறுகிறார்கள்.
மூலவர் கம்பீரமாகக் காட்சி தருகிறார். மூன்று கண்கள் இருப்பதாலும் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருவதாலும் இவருக்கு த்ரினேத்ர சதுர்புஜ வீர ஆஞ்சனேயர் என்று திருநாமம்.
அருகிலேயே உற்சவமூர்த்தி. சின்ன வேறுபாடு 10 திருக்கரங்கள் இவருக்கு. மூன்று திருக்கண்கள். த்ரிநேத்ர தஜபுஜ வீர ஆஞ்சனேயர் என்று திருநாமம்.
பத்து திருக்கரங்களிலும் சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மதாட்சகம், பாசாங்குசம், அம்பு, வில், சாட்டை, நவநீதம் என்று பல்வேறு ஆயுதங்களை ஏந்தி அழகுக் கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு சிறகுகள் இருப்பது இன்னமும் அழகு இவருக்கு!
பெரும்பாலும் ஆஞ்சனேயர் தனித்து இருப்பதில்லை. பெருமாளுக்காகவே அவர் இருக்கிறார்.
இங்கேயும் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களோடு வாசுதேவப் பெருமாள் என்ற திருநாமத்தோடு விளங்குகிறார்.
பிராட்டியின் திருநாமம் செங்கமலவல்லித் தாயார்.
உத்ஸவர் ராஜகோபால ஸ்வாமி, ருக்மிணி, சத்யபாமாவோடு காட்சி தரும் அழகு காண வேண்டியதொன்றாகும் பிள்ளை வரம் வேண்டி வருபவர்களுக்கு - சந்தான பாக்கியம் தருவதற்கு - சந்தான கிருஷ்ணனும் எழுந்தருளியுள்ளார்.
இனி இத்தலத்தில் ஏன் ஆஞ்சனேயப்பெருமாள் வீர ஆஞ்சனேயராக எழுந்தருளியிருக்கிறார் என்ற தலவரலாற்றுச் செய்திகளைப் பார்ப்போம்.
இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீராமர் அயோத்திக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். வழியில் பரத்வாஜ மகரிஷி ஆஸ்ரமத்தில் ஸ்ரீராமர் சீதாபிராட்டி, லட்சுமணன், ஆஞ்சனேயர் ஆகியோர் தங்கினர். அப்போது அங்கு நாரதர் வந்தார். வணங்கிய ஸ்ரீராமருக்கு ஆசி கூறிய நாரதர்,” முக்கியமான விஷயமாக உன்னை சந்திக்க வந்தேன். இலங்கை யுத்தம் முடிந்தாலும் அது இன்னும் முற்றுப்பெறவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலையுள்ளது” என்று கூற திகைத்த ஸ்ரீராமர், ‘‘நாரத மகரிஷியே, தாங்கள் கூறுவதை விளக்கமாகக் கூறுங்கள்” எனக் கேட்டார்.
“ராமா! ராவணன் அழிந்தாலும் அரக்கர்களின் வாரிசுகள் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்குப்பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். இரக்த பிந்து, இரக்தராட்சன் என்ற இரண்டு அசுரர்கள். கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். அவர்கள் தவம் பூர்த்தியானால் சக்திமிகுந்த வரங்களைப் பெற்று விடுவார்கள். பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும். அவர்களை நீ உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்” என நாரதர் கூறினார்.
“மகரிஷியே! நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் நான் இப்போது அயோத்தி செல்வதில் தாமதிக்க இயலாது. குறிப்பிட்ட நாளில் நான் அயோத்தி செல்லாவிடில் - தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டுவிடுவான்” என ராமர் கூற, ``அப்படியானால் சரி, உனக்கு பதில் தம்பி லட்சுமணனை அனுப்பு” என நாரதர்கூற, “அவன் என் நிழலாயிற்றே, என்னைப் பிரியமாட்டேன் என்று சபதம் செய்துள்ளானே”, என்ற ராமர், கண்களில் அனுமார் பட, அனுமாரை அழைத்தார். “அன்பு ஆஞ்சனேய! இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும்’’ எனக்கூற அனுமார் தயாரானார்.
திருமால் சங்கு சக்கரத்தை வழங்க, பிரம்மா கபாலத்தை வழங்க, ஒவ்வொருவரும் ஆயுதம் தந்திட, ஆஞ்சனேயர் 10 கரங்களுடன் காட்சி தந்தார். விரைவாகச் செல்ல, கருடன் தனது சிறகுகளைத் தந்தார். அனுமார் புறப்படும்நேரம் சிவபெருமான் வந்து சேர்ந்தார். 10 கரங்கள். 10 கரத்திலும் ஆயுதங்கள்! எதைத் தருவது? பார்த்தார் பரமசிவன்! தனது நெற்றிக் கண்ணையே தந்து விட்டார். மூன்று கண்கள்.
10 கரங்களுடன் புறப்பட்ட ஆஞ்சனேயர் இரக்தபிந்து, இரக்தராட்சனை சம்ஹாரம் செய்து வெற்றியுடன் திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ரம்மியமான இயற்கை அழகுடன் தெரிந்த கிராமத்தில் தங்கிச் சிறிது இளைப்பாறினார். வெற்றியுடன் ஆனந்தமான மனதுடன் ஆஞ்சனேயர் அமர்ந்த இடமே ஆனந்தமங்கலம் ஆகும்.
ஆம். ஆனந்தமங்கலமே அனந்தமங்கலம் ஆயிற்று.
வெறும் அனந்தமங்கலம் என்ற பெயர் பொருந்தாதா என்று கேட்கலாம். அனந்தம் என்றால் எண்ணற்ற என்று பொருள். எண்ணற்ற மங்கலங்களைத் தரும் தலம் என்பதால் அனந்தமங்கலம் என்ற பெயரும் சிறப்பானதே! இங்கு ஒரு முறை சென்று ஆஞ்சநேயரை வழிபட்டால் நமக்கும் எல்லையில்லாத ஆனந்தவாழ்வைத் தருவார்.