முதல் மூன்று ஆழ்வார்கள்
பகுதி 2
திருக்கோவிலூரில் பெரிய கோயிலின் கர்ப்ப கிரகத்தில் இருந்த உலகளந்த பெருமாள் தாயாரிடம் பேசத் துவங்கினார்.
“இந்தத் தூண்டா விளக்கின் ஒளியில் உன்னைப் பார்க்கும் பொழுது, உன்னை மிதிலையில் பார்த்தது நினைவுக்கு வருகிறது.”
“ஆஹா! உலகளந்த பெருமாளுக்கு அந்த நினைவுகூட வருகிறதா?”
‘‘தேவி! என் மார்பினில் உன்னை வைத்திருக்கையில், அதனருகில் இருக்கும் என் நெஞ்சம் உன்னை மறக்குமா?”
“திருக்கோவிலூரில் குடிகொண்ட பலன் எனக்குக் கிடைத்துவிட்டது!”
“உன்னிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. நாம் ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த பொழுது, எண்ணிலடங்காத திவ்ய மஹிஷிகளுடனும், அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் முதலிய நித்ய சூரிகள் என்று அழைக்கப்படும் ஞானம் நிறைந்தவர்கள், ஜீவன் முக்தர்கள் என எண்ணிலடங்காதவர்களுடன் இருந்த பொழுது என் மனது முழுமையாக சந்தோஷத்துடன் இருந்ததில்லை. ஸ்ரீ வைகுண்டம் என்கிற பரமபதம் எல்லையில்லாத இன்பங்களை உள்ளடக்கியுள்ள இடம்தான். ஆனால், என் உள்ளம் சம்சாரத்தில் துன்புறும் ஜீவாத்மாக்களையே எண்ணிக்கொண்டிருக்கும். ஏன் அவர்கள் எல்லோருமே உயரிய நிலையை அடையமுடியவில்லை என எனக்குத் தொன்றும்.’’
“தாங்கள் அருளின் ஆழியான் அல்லவா! அதனால் அப்படித் தோன்றுகிறது. அது போன்ற எண்ணம் எனக்கும் தோன்றியதுண்டு.”“அவர்களுக்கும் அந்த உயரிய நிலை கிடைக்கச் செய்யவேண்டியது நம் கடமைதானே? எப்படி இதைச் செயல்படுத்தலாம்? என்று யோசிப்பேன். அவதாரங்கள் எடுத்தேன். நானும் மனிதனாக வாழ்ந்தும் காட்டினேன். கிருஷ்ணனாக கீதை சொன்னேன். அது எளிய மனிதர்களைச் சென்றடையவில்லை.
ராமனாக வாழ்ந்து காட்டினேன். ஆனாலும் ‘இவரால் முடியும்’ என்னால் முடியாது என்பது போல், என்னை வணங்கி விட்டு நகர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலானவர்கள் பக்தி மார்க்கத்தை விட்டு வேறு பாதையில் செல்கிறார்கள். எல்லோரும் நம் பிள்ளைகள். அவர்களை வழிப்படுத்தி, நம்மை அடைவதுதான் உன்னத நிலை என்பதை அவர்கள் உணருமாறு செய்ய வேண்டும்.”
‘‘புரிகிறது. நான் சொல்லாமலே, நீங்களாகவே செய்ய நினைப்பது எனக்கு மிகுந்த சந்தோஷம்.’’‘‘கர்மா என்பது ஒரு சுழற்சி. மீண்டும் பிறந்து மீண்டும் இறந்து கொண்டே இருந்து விடாமல் இருக்க, நான் மனிதர்களிலேயே மிகுந்த ஆழமான பக்தி உள்ளவர்களைப் படைத்து உலவ விடப்போகிறேன். அவர்கள் பக்தியில் திளைத்தும், மிகவும் எளிமையான முறையை உபதேசித்தும், அதே முறையில் வாழ்ந்தும் காட்டுவார்கள்.’’
‘‘ஆஹா! யானையைக் கொண்டே யானையைப் பிடிப்பார்களாமே, அது போலவா? அபாரமான யுக்தி! உலகளந்தவர் நீங்கள், உங்களின் உயர்ந்த எண்ணம், பக்தர்களின் மேல் உங்களுக்கு இருக்கும் கனிவு, நீங்கள் எண்ணிய எல்லாவற்றையும் நன்றாகச் செயல்படுத்தும்.’’‘‘நீயும் என்னுடன் இணைந்து இதில் பங்கு பெறப்போகிறாய்.’’‘‘உங்களுடன் இருப்பது என்பது எப்பொழுதுமே நான் வேண்டுவது. பங்கேற்பதென்பது இன்னும் பெரிய கொடுப்பினை.’’‘‘அதற்கு முன் உனக்கு மூன்று உத்தமர்களை அறிமுகம் செய்கிறேன். பின்வரும் நாளில் ஆழ்வார்கள் என இவர்கள் அழைக்கப்படப் போகிறார்கள்.”
“ஆழ்வார்கள் என்றால்...?”
“அளவில்லாத பக்தியில் ஆழ்ந்தவர்கள். ஆழ்வார்கள் என்றால் வேதத்தாலும் அளவிட்டு அறிய இயலாத பெருமாளின்.....’’“அதாவது உங்களின்.......”“தாயாரான நீயும்தான் என்னுள் அடக்கம். நம் எல்லா குணங்களையும் நம் அருளாலே அறிந்து அனுபவிக்கும் ஞானம் பெற்றவர்கள் என்று கூறலாம்.”“ஆஹா! அவர்கள் எப்பொழுது, எங்கு தோன்ற இருக்கிறார்கள்?”
“இப்போதைக்கு மூன்று ஆழ்வார்கள் தோன்றிவிட்டார்கள். நான் மற்றவற்றை அவ்வப்போது கூறுகிறேன். முதல் ஆழ்வார்கள் மூவருமே துவாபர யுகத்தில் உதித்தவர்கள். இவர்கள் மற்ற மனிதர்களைப்போல் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை. முதலாமவர் பொய்கையாழ்வார். என் திருக்கரத்தில் உள்ள சங்கின் அம்சமாக தோன்றியவர். ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்தை அடுத்த திருவெஃகாவில் உள்ள ஒரு பொய்கையில் பொற்றாமரை மலரில் அவதரித்தார்.
அவர் பொய்கையில் பிறந்ததால், பொய்கையாழ்வார் என்று பெயர். அவர் பிறந்த மறுநாள், அவிட்ட நட்சத்திரத்தில், என் திருக்கரத்தில் உள்ள கதாயுதத்தின் அம்சமாக தோன்றியவர் பூதத்தாழ்வார். திருக்கடல்மல்லை எனும் மாமல்லபுரத்தில், நீலோற்பல மலரில் அவதரித்தார். பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது.
இதன் பொருள், சத்தைப் பெற்றது என்பது. சத்து என்பது அறிவைக்குறிக்கும். நம் திருக்குணங்களை அனுபவித்தே அறிவைப் பெற்றவர் என்பதனால் பூதத்தாழ்வார் என அழைக்கப்படுகிறார்.
அதற்கும், அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில், பிறந்தவர் பேயாழ்வார். அவர் என் வாளின் அம்சமாய் திருமயிலையில் உள்ள ஒரு கிணற்றில், செவ்வரளி மலரில் அவதரித்தார். பெம்மை என்றால் பெருமை என்று பொருள். பெருமையுடைய ஆழ்வார் என்பதனால் ‘பேயாழ்வார்’ என்று அழைக்கப்படுகிறார்.’’
“அற்புதம்! அவர்களை நாம் இப்பொழுது சந்திக்கப்போகிறோமா?”“அவர்கள் மூவரும் ஒருவரையொருவர் இதுவரை சந்தித்ததில்லை. அவர்கள் முதன் முதலில் சந்திக்கப்போவது ஒரு மாபெரும் நிகழ்வு அல்லவா?” அதைக் கேட்டு தேவிக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. அதே தருணத்தில், மூன்று ஆழ்வார்களின் மனதிலும் நாராயணன் தோன்றினார். அவர்களை திருக்கோவிலூர் நோக்கிப் பயணிக்க வைத்தார்.“சுவாமி! அம்மூவரும் இங்கே வரப்போகிறார்களா? வானம் வேறு கருத்திருக்கிறது. பலத்த மழை வரவிருக்கிறது.”
“இன்னும் சற்று நேரத்தில், அந்தச் சூழலில்தான் மிருகண்டு ஆசிரமத்தில் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் சந்திப்பு நிகழட்டும். பின்பு நாம் அங்கு செல்வோம்.”முதலில் திருக்கோவிலூரில் நுழைந்தவர் பொய்கையாழ்வார். அந்த மழை பெய்யும் நள்ளிரவு நேரத்தில் கோயில் திறந்திருக்காது என்கிற உணர்வில், ஆசிரமத்தினுள் நுழைந்தார். அதன் வாசலைக் கடந்து, இடைக்கழி என அழைக்கப்படும் இடத்தில், அசதியில் படுத்தார். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார். கதவு தட்டப்படும் ஓசை கேட்டு எழுந்துச் சென்று திறந்தார். கும்மிருட்டில் வந்திருப்பவர் யார் என்று தெரியவில்லை. ஒருவரையொருவர் பார்க்காமலேயே அறிமுகம் செய்து கொண்டார்கள்.
“நீங்கள் படுத்திருந்தீர்கள். நான் உங்களை தொந்திரவு செய்துவிட்டேன்.”“தனியனாக நான் படுத்திருப்பதைவிட, நாமிருவரும் உட்கார்ந்து கொள்ளலாம்.”இருவரும் நாராயணனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் கதவு மீண்டும் தட்டப்பட, இரண்டாமவர் எழுந்துச் சென்று திறந்தார். மூன்றாவது நபர் உள்ளே நுழைந்தார். மூவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர்.
“நீங்களும் நாராயண பக்தரா? இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’’ என முதலாமவர் உரைத்தார்.நின்றபடியே மூவரும் தங்களை மறந்து, நாராயணனிடத்தில் தாங்கள் கொண்டுள்ள பக்தி குறித்துப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் மேலும் ஒருவரின் அருகாமையை உணர்ந்தார்கள். கதவும் தட்டப்படவில்லை. தாளிட்ட கதவை யாரும் திறக்கவுமில்லை. அந்த இருட்டில் யாரும், யாருடைய உருவத்தையும் காணவும் இயலவில்லை.
“எனக்கு துளசியின் வாசம் உணர
முடிகிறதே!” என்று முதலாமவர்கூற,
“எனக்கு தாமரை மலரின் வாசம் உணர முடிகிறதே!”
என்று இரண்டாமவர் கூற,“எனக்கு சந்தன வாசம் உணர முடிகிறதே!” என்று மூன்றாமவர் கூற, அங்கே சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.“நீங்கள் யார்? நீங்கள் யார்?” மூவரும் ஒருமித்த குரலில் கேட்டபோதும் பதிலில்லை.
பொய்கையாழ்வார் மனதில் ஒரு இறையுணர்வு உந்த, தனது முதல் பாடலைப் பாடினார். வெளியே மழை நின்றிருந்தது. அந்தப் பின்னிரவில் அவரின் குரலில் தெய்வீகம் மிளிர்ந்தது.
`‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன்
சொல்மாலை
இடராழி நீங்குகவே’’
அங்கிருந்தவர்களுக்கு பொருள் புரிந்தது. உலகத்தை அகல் விளக்காகவும், அந்த விளக்கிற்கு நெய்யாக கடலையும், ஒளியாக கதிரவனையும் வைத்து மாலையாகப் பாசுரங்களைத் திருவடிகளுக்கு அணிவிக்கின்றேன், நாராயணன் துன்பக்கடலிலிருந்து என்னை நீக்குவதற்காக, எனப்பொருள்பட பாடி முடித்தார். இருளை ஓட்டிட, விளக்கேற்றுவதற்காக, உலகத்தையே அகலாகக் கொண்டு, கடல் நீரையே நெய்யாக வார்த்து, கதிரவனையே சுடராக பொய்கையாழ்வார் ஒளிவிடச் செய்தார். அடுத்த கணமே பூதத்தாழ்வார் பாடத் துவங்கினார்.
‘`அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்’’
இப்பாசுரத்தில் அன்பு என்னும் விளக்கு, ஆர்வம் என்னும் நெய் ஊற்றப்பட்டு, மனம் என்னும் திரி இட்டு, ஞானம் என்னும் சுடர்விட விளக்கை ஒளிவிடச் செய்தார்.இவ்விருவரும் ஏற்றிய விளக்குகளின் ஒளி, இருளை விரட்ட, அந்த வெளிச்சத்தில் பேயாழ்வார் தங்களுடன் நின்று கொண்டிருந்தது, திருமகளை மார்பில் ஏந்திய வண்ணம் ஸ்ரீமன் நாராயணன்
என்பதை உணர்ந்த அந்தக் கணமே
`‘திருக்கண்டேன், பொன் மேனி கண்டேன்
திகழும் அருட் கண் அணி நிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
புரி சங்கம் கைக் கண்டேன்’’
- என்று பாடத் தொடங்கினார்.
திருக்கண்டேன், என முதலில் தாயாரையும், பின்னர் பொன்மேனி கண்டேன் என்று எம்பெருமானையும், தரிசித்துப் பாடியதாக பாடல் அமைந்தது. பேயாழ்வாரின் பாடல் ஒலிக்க, பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் திருமகளையும் நாராயணனையும் கண்டு பரவசமடைந்தார்கள். பாடல் முடிந்தது. இந்த நிகழ்வு, வரவிருக்கும் மேலான எல்லா நிகழ்வுகளுக்கும் தொடக்கமாக அமைந்தது. நாராயணன், மகாலட்சுமியுடன் முதல் மூன்று ஆழ்வார்களையும் ஆசிர்வதித்தார்.
“உங்கள் மூவரின் மேலான திருப்பணி இனிதான் துவங்கப்போகிறது. நீங்கள் இனி வாழ இருக்கும் வாழ்வின் இனிய தொடக்கமே இதுதான்.. உங்கள் மனதில் நான் என்றுமிருந்து இயக்குவேன். தமிழில் வேதம் உருவாகப்போகிறது. அதன் ஆரம்பம் இங்கே அரங்கேறியாகிற்று.” மூன்று அழ்வார்களுக்கும், நாராயணன் இட்ட பணி புரிந்தது. கண்ணீர் மல்க கைகூப்பித் தொழுதார்கள். மூவரும் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருவந்தாதிகளை, நூறு நூறு பாடல்களாக இயற்றி அருளினார்கள்.
ஒரு பாடல் தொகுப்பில், ஒவ்வொரு பாடலின் கடைசி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகக் கொண்டு அமைத்ததால், அந்தாதியாக அமைந்துவிட்டது பெரும் சிறப்பு. அவர்கள் மூவரும் நிறைய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு பக்தி வளர்த்தார்கள்.இவ்வாறு, பின்பழகிய பெருமாள் ஜீயர், முதல் மூன்று ஆழ்வார்கள் வரலாறைச் சொல்லி முடித்து குருவை வணங்கினார்.
கோதண்டராமன்