ஆசைகளை கட்டுப்படுத்தும் அக்ஷோபயா தேவி
மெய் ஞானம் அடைந்தவர்கள் மனம் ஆழ் கடல் போல அமைதியாய் விளங்குவது இயல்பு. அந்த வகையில் இந்த தேவி மிக உயர்ந்த தெய்வீக அமைதியை பிரதிபலிப்பாகத் திகழ்கிறாள். அழகான பெண் உருவம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப் படுகிறாள். இவள் அருகே மகரம் மீன் காணப்படுகிறது.
மகரம் என்றால் என்ன?
மகரம் என்பது இந்து சமயத்தில் கடலில் வாழும் மிருகமாகும். இந்த மிருகமானது முன்பாதி முதலை, யானை, மான் போன்ற விலங்குகளின் வடிவங்களையும், பின்பாதி மீனைப் போன்றும் அமையப்பெற்றது. ஆசியா முழுவதும் பல்வேறு வடிவங்களைக் கொண்டதாக மகரம் உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் பன்னிரண்டு ராசிகளில், மகர ராசியின் குறியீடாக இருப்பது இந்த மகர மீன் தான். மகர ராசிக்கு அதிபதி சனி தேவர் ஆவார்.
ஆகவே கர்மபலனுக்கான அதிபதியான சனியால் வரும் உபாதைகளை நீக்கும் யோகினி இவள் என்பதையும் இது காட்டுகிறது.திருமாலின் திருச்செவியில் குண்டலமாக இருப்பது இந்த மீன்கள் தான். ஆகவே, திருமாலை மகர குண்டல தாரி என்று அழைக்கிறோம். அதே போல பழந்தமிழர் பண்பாட்டில் புதுமாப்பிள்ளைக்கு மகர குண்டலம் வழங்கும் மரபு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கங்கா தேவி மற்றும் வருண பகவானின் வாகனமாக இருப்பது இந்த மகர மீன் தான். கங்கை நதியும் என்றும் வற்றாது. கடலும் என்றும் வற்றாது. இரண்டிற்கும் தலைவனாக விளங்கும் தேவதைகளின் வாகனத்தை இந்த யோகினி கொண்டிருப்பதால் வற்றாத செல்வம், தரும் வல்லமை உடையவள் இந்த யோகினி என்று தெரிகிறது.திருமாலின் மனதில் இருந்து தோன்றியவனும், ரதி தேவியின் கணவனும், ஈசனை எதிர்க்கப் போய், சாம்பலாகிப் போன ஆசைகளின் கடவுளான மன்மதன் அல்லது காம தேவனின் கொடியில் இருப்பதும் இந்த மகரம் தான்.
அந்த வகையில் காமதேவன் கொடியில் இருக்கும் இந்த மகர மீனை அடக்கி தனது வாகனமாக இந்த தேவி மாற்றிக் கொண்டதால், உலகாய விஷயங்களில் இருக்கும் ஆசையில் இருந்து இந்த தேவி விடுபட உதவுகிறாள் என்பது புரிகிறது. அதுமட்டுமில்லாமல் கோயில்களின் பொக்கிஷங்களை பாதுகாக்கும் பல தேவதைகளில் மகர மீனும் ஒன்று ஆகவே, மகர மீனை வாகனமாக உடைய இந்த தேவி, பல விதமான செல்வங்களை கொடுப்பவளாகவும், மனிதனின் உண்மையான பொக்கிஷமான ஞானத்தை கொடுப்
பவளாகவும் இருக்கிறாள்.இந்த மகரத்தை தெய்வீகமானதாக கருதி, பௌத்தர்கள் மற்றும் சமணர்களும் வழிபடுகிறார்கள்.
தியான முத்திரையும் அக்ஷோபயா யோகினியும்
இரண்டு கைகளையும் இணைத்து மடியில் வைத்துக்கொண்டு, கட்டை விரல்களை இணைத்து மேலே தூக்கியபடி பொருத்திக் கொண்டால், இரண்டு கைகளும் இணைந்த நிலையில் ஒரு பிட்சா பாத்திரம் போலத் தோற்றம் தருகிறது. இதையே தியான முத்திரை என்கிறோம். இந்த தியான முத்திரையோடு பத்மாசனம் போட்டு தியானம் செய்தால் விரைவில் தியானம் சித்திக்கும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
மனதில் இருக்கும் தேவையில்லாத அசுத்தங்களை, தவறான எண்ணங்களை நீக்கிவிட்டு மனம் வெற்றிடம் ஆகும் போது தான், அந்த மனதை ஞானம் என்னும் அமுதத்தை கொண்டு நிரப்ப முடியும். இறையருள் நம்முள் புக வேண்டும் என்றால் நமக்குள்ளே இருக்கும் அசுத்தங்கள் நீங்க வேண்டும். இப்படி மன மாசை நீக்க உதவுவது இந்த தியான முத்திரை.தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதையும் தன்னால் ஆவது ஒன்றும் இல்லை என்பதையும், காலியாக ஒரு பிச்சை பாத்திரத்தை போல காட்சி அளிக்கும் தியான முத்திரை காட்டுகிறது.
இது ஒரு மனிதனின் நான் என்ற ஆணவம் இல்லாமல் போனதை குறிக்கிறது. நான் எனது என்னுடைய என்ற ஆணவ எண்ணம் நீங்கும் போது தான் இறையருள் கிடைக்கிறது. அந்த வகையில் ஆணவத்தை அழிப்பது இந்த தியான முத்திரை. இதனால் தான் பல சித்தர்கள் இந்த தியான முத்திரையோடு தவக்கோலத்தில் இருப்பதை கோயில் சிற்பங்களில் நாம் பார்க்கிறோம்.நமது வாழ்க்கையில் தீராத பிரச்னைகள் தீரவும், தீராத கடன் வியாதிகள் தீரவும் வேண்டும் என்றால், இந்த தியான முத்திரையில் அமர்ந்து இறைவனை தியானிக்க அதீத பலன் கிடைக்கிறது என்பதை பலரும் அனுபவத்தில் கண்டு இருக்கிறார்கள்.இப்படி இந்த அக்ஷோபயா யோகினியின் கையில் இருக்கும் தியான முத்திரையின் பின்னே பல ரகசியங்கள் இருக்கிறது.
இந்த யோகினியின் கையில் தியான முத்திரை ஏன்?
பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இந்த யோகினி கையில் தியான முத்திரை பிடித்த படி இருக்கிறாள். அவளுக்கு அருகில் அவளது வாகனமான மகரம் இருக்கிறது. இதன் பின்னே பெரிய தத்துவமே இருக்கிறது.கேட்டதை எல்லாம், தியான முத்திரை செய்து இறைவனை தியானிக்கும் போது அடையலாம் என்பதை பார்த்தோம். இறைவனிடம் நாம் கேட்பது எல்லாம், நமது மன ஒருமைப்பாட்டின் மூலமாக இறைவனை சென்று அடைகிறது, ஆகவே இறைவன் உடனே பதில் அளிக்கிறான்.
அந்த வகையில் தியானத்தில் அமர்ந்து இறைவனை வணங்கும் போது உலகாய விஷயங்களில் நாட்டம் கொள்ளாமல், இறவாத இன்ப அன்பு கொஞ்சும் இருப்பிடமான முக்தி இன்பம் வேண்டும் அதாவது அந்த இறைவனே வேண்டும் என்று தியானம் புரிய வேண்டும் என்று இந்த யோகினி காட்டுகிறாள்.
இந்த யோகினியை வழிபடுவதால் வரும் நன்மைகள்
இந்த யோகினி, சகலவிதமான கலைஞானத்திற்கும் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் திகழ்கிறாள். அவைகளைப் பாதுகாப்பதற்கு மகரம் போலச் செயல்படுகிறாள். சிருஷ்டி மற்றும் அழிவு ஆகியவற்றின் அடிப்படையில் இவள் அனுக்கிரகம் செய்கிறாள். தன்னை முறையோடு வணங்கும் பக்தனுக்கு எண்ணங்களை ஆக்கவும் பிறகு அழிக்கவும் வல்ல ஆற்றல்களை வழங்குகிறாள்.
ஜி.மகேஷ்