ஆடிப்பூரமும் அம்மனுக்கு அற்புதத் திருவிழாக்களும்
முத்துக்கள் முப்பது
ஆடிப்பூரம் - ஜூலை 28,2025
1. முன்னுரை
ஆடி மாதம் பிறந்துவிட்டது. அம்மன் கோயில்களில் திருவிழா ஆரவாரங்களை கட்டி நிற்கின்றது. சைவ வைணவக் கோயில்களில் ஆடிப்பூர விழாவும், ஆடி வெள்ளி விழாக்களும் அற்புதமாக நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆடி மாதத்தின் சிறப்பாக ஆடி அமாவாசையும் ஆடி கிருத்திகையும் விளங்குகின்றது. பெருங்கோயில்கள் முதற்கொண்டு கிராமங்களின் அமைந்துள்ள எளிய கோயில்கள் வரை ஆடி மாத திருவிழாக்கள் அமர்க்களமாக நடைபெறுவதை காலம் காலமாகக் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த ஆடி மாத விழாக்களின் தொகுப்பாகத் தான் முப்பது முத்துக்கள் இந்த இதழில் விரிகின்றது. வாருங்கள் அனுபவிப்போம்.
2. ஆடியும் அம்மனும்
ஆடி மாதம். கடக மாதம் என்பார்கள். காரணம் 12 ராசிகளில் நான்காவது ராசியான கடக ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம். கடக ராசி முதற்கொண்டு தனுசு ராசி வரை தட்சிணாயண காலம் என்று சொல்வார்கள். இது தேவர்களுக்கு இரவு நேரம். இந்த நேரத்தில் தேவர்கள் மாலை பூஜைகளைத் தொடங்கி விடிய விடிய நடத்துவார்கள். அதே சமயம் பூமியிலும் இந்த தேவ பூஜைகள் பல்வேறு ஆலயங்களில் நடந்தேறுகின்றன.
கடக ராசி சந்திரனுக் குரிய ராசி. ஜோதிட சாஸ்திரத்தில் நான்காவது ராசியை தாய் ராசி என்பார்கள். ஒரு ஜாதகத்தில் தாயின் நிலையை தெரிந்து கொள்ள அந்த நான்காவது ராசியைத்தான் பார்க்க வேண்டும். இந்த நான்காவது ராசியில் ஆட்சி பெறும் கிரகம் சந்திரன். சந்திரனை மாதுர் காரகன் என்று அழைப்பார்கள். எனவேதான் தாய்மையைக் குறிக்கும் நான்காவது ராசியில், தாயைக் குறிக்கும் கிரகமான சந்திரன் ஆட்சி பெறும் கடக ராசியில், ஆத்ம காரகனான சூரியன் பிரவேசிக்கும் காலத்தில், லோக மாதாவாக விளங்கும் அம்பாளுக்கும் தாயாருக்கும் ஆடித்திருவிழா எடுக்கிறார்கள்.
3. மகாலட்சுமியும் சந்திரனும்
இந்த மாதத்தில் என்னென்ன திருவிழாக்கள் வரிசையாக வருகின்றன என்று பார்ப்போம். ஆடிக் கிருத்திகை வருகிறது. தொடர்ந்து ஆடி அமாவாசை வருகிறது. ஆடிப்பூரம் வருகிறது. நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, என்று வரிசையாக வருகின்றன. இதில் ஆடிப்பூரம் 28.7.2025 திங்கட்கிழமை வருகிறது. சந்திரனுக்குரியது திங்கட்கிழமை. மகாலட்சுமிக்கு உரிய பூரம் நட்சத்திரம். (சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம்) சுக்கிரன் என்றாலே செல்வங்கள் தானே. சந்திரனுக்குரிய நாளில் பூரம் வருவது சிறப்பு. காரணம் மகாலட்சுமியும் சந்திரனும் பாற்கடலில் தோன்றியவர்கள். மகாலட்சுமியை சந்திர சகோதரி என்பார்கள். இப்படி நாளும் நட்சத்திரமும் சேர்ந்து வருவது இந்த ஆண்டு ஆடிப் பூரத்தின் சிறப்பு.
4. ஆடி அமாவாசை (24.7.2025)
முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த முக்கியமான அமாவாசை தினங்களில் ஒன்று ஆடி அமாவாசை. இந்த நாளில் நதி மற்றும் சமுத்திரக் கரைகளுக்குச் சென்று செய்யும் முன்னோர் வழிபாடு நடத்துவது மிகவும் பயன் கொடுக்கும். ஆடி அமாவாசை வழிபாட்டால் திருமணம், குழந்தைப் பேறு போன்ற சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். முன்னோர்களின் ஆசி பூரணமாக கிடைக்கும். பல அமாவாசைகளில் முன்னோர் வழிபாட்டைத் தவற விட்டவர்கள் இன்று செய்வதன் மூலம் அந்தக் குறையைப் போக்கிக் கொள்ளலாம். ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும்.
5. நாக சதுர்த்தி (28.7.2025)
இந்த ஆண்டு ஆடிப்பூர நாளிலேயே நாக சதுர்த்தி விரதம் வருகிறது. அதற்கு அடுத்த நாள் நாகபஞ்சமி மற்றும் கருட பஞ்சமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. சதுர்த்தி என்றாலே விநாயகருக்கு உகந்த நாள் என்று பொருள். ஆடி மாத வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாகவும் போற்றப்படுகிறது. இந்த நாளில் ஆலயங்களில் இருக்கும் நாகர் சந்நதிக்குச் சென்று நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பு. ஆடி மாத வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என்று போற்றப்படுகிறது. கருட பஞ்சமி விரதம் இருந்து வழிபாடு செய்தால் உடன் பிறந்தவர்கள் நலமோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
6. ஆடி 18 (3.8.2025)
ஆடி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று ஆடிப்பெருக்கு. தொட்ட தெல்லாம் பலமடங்கு பெருகும் புண்ணிய தினம் அது. விவசாயி களுக்கு சிறந்த நாள். நீரையும் ஏரையும் வழிபடும் நாள். நீர் நிலைகளில் புதுப்புனல் பாய்ந்து பொங்கி வந்து மனதின் குதூகலத்தை வளர்க்கும் நாள். ஆடிப் பெருக்கு நாளில் இறை வழிபாட்டோடு நீர் நிலைகளில் செய்யும் வழிபாடும் முக்கியமானது. இந்த நாளில் புது தம்பதியர் தம் வாழ்க்கை சுபமாக அமைய பாக்கு - வெற்றிலை, மஞ்சள் - குங்குமம், தாலிக்கயிறு, வளையல் ஆகிய வற்றை சுமங்கலிப் பெண்களுக்குத் தானமாக வழங்கி நீரும் நிலமும் இணையும் நீர் நிலைகளில் பூஜை செய்யவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் காலம் முழுவதும் பூவோடும், பொட் டோடும், சுமங்கலியாக வாழும் பேறு கிடைக்கும்.
7. ஆடித் தபசு ஆடி மாதத்தில்தான் சங்கரன்
கோவில் கோமதி அம்மனுக்கு ஆடித்தபசு விழா நடைபெறுகிறது. இந்ததிருவிழாவில், கோமதியம்மன் தவமிருந்து சிவபெருமானை சங்கரநாராயணராக தரிசனம் செய்வதாக ஐதீகம். கோமதி அம்மன் இறைவன் ஒருவனே என்பதை உலகுக்கு உணர்த்தப் புன்னைவனக் காட்டில் தவமிருந்தாள். அதன் பலனாக சங்கரநாராயணராக இறைவன் காட்சி கொடுத்தருளினார். இந்த வைபவம் ஒவ்வோர் ஆண்டும் சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெறும்.
அதில் அன்னை தவக்கோலத்தில் தேரேறிக் காட்சியருள்வாள். ஆடித்தபசு விழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். சங்கரன்கோவில் ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கர நாராயணர் சந்நதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது.
8. சுமங்கலி வரம் தரும் விழா
அற்புதமான ஆடித்தபசு காட்சியைக் காண பக்தர்கள் சங்கரன் கோவிலில் குவிவார்கள். இந்த திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு, கோமதியம்மனுக்கு மா விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங்கும் இந்த திருவிழாவின்போது செய்யப்படுகிறது, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சுமங்கலி வரமும் தரும் வழிபாடும் செய்யப்படுகிறது. மேலும் ஆடிப் பௌர்ணமி அன்று அம்பிகையை வழிபாடுசெய்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் அனைவரும் அம்பிகையை வழிபட்டு அருள் பெறலாம்.
9. பூரம்
பூரம் 27 நட்சத்திரங்களில் 11 ஆவது நட்சத்திரமாகும். பூர நட்சத்திரத்தை பூர்வ பல்குனி என்றும் சமஸ்கிருதத்தில் அழைக்கிறார்கள். இது வசீகரமான நட்சத்திரம். இரட்டை நட்சத்திரத்தின் ஒரு பகுதியாகும். ஜோதிட குறிப்புகளில், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை குழந்தைப் பருவத்திலேயே வந்துவிடும், கலைத்துறையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்பு உண்டு. இந்த நட்சத்திரம் சூரியனுக்குரிய சிம்ம ராசியில் உள்ளதால் கம்பீரமாகவும் இனிமையாக பேசக் கூடியவர்களாகவும், அரசாங்கத்தின் உயர் அதிகார பதவியில் இருப்பவர்களாகவும், பிறரை தன்னுடைய பேச்சாலும் செயலாலும் கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
10. மதுரை மீனாட்சியும் பூரமும்
மீனாட்சி அம்மன், ஆண்டாள், பார்வதி தேவி அவதரித்த நட்சத்திரம் பூரமாகும். பூரம் தாரத்திற்கு லாபம் என்ற சொல வடையைச் சொல்வர். பூரம் சிம்ம ராசியினுள் இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் அவதரித்த அன்னை மீனாட்சி, அரண்மனையில் அதிகாரம் செய்யக் கூடிய இடத்தில் அவதாரம் எடுத்தாள். மீனாட்சி என்பதற்கு மீனை போன்ற கண்களை உடையவள் என்று பொருள். கண்கள் என்றால் சுக்ரனைக் குறிப்பதாகும். கண்கள் சூரியனையும் சுக்ரனையும் குறிக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. மீன் தன் குஞ்சுகளை கண்களிலிருந்து அகலவிடாமல் எப்படி பாதுகாத்து வளர்க்கிறதோ, அது போன்று தன்னை வணங்கும் குழந்தைகளை கண் போல் பாதுகாத்து வளர்த்து காப்பவள் மீனாட்சி என்று பொருள்.
11. அம்பாளும் ஆடிப்பூரமும்
ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் எல்லா ஆலயங்களிலும் ஆடிப்பூர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமா தேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உரு வெடுத்த தினம் ஆடிப்பூரம். ஆடிப்பூர விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவத் தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தைத் தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
12. மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் விளை நிலங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து மீனாட்சி அம்மனை வழிபடுவார்கள்.
அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக் கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது. மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் வீதியில் உலா வரும் போது சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்தி சேர்ப்பர். தினசரியும் அம்மன் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம், கிளி வாகனத்தில் எழுந்தருள்வார். 7வது நாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமானம், 10ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
13. காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பூரம்
காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தோடு எங்கு அம்மன் கோயில்கள் இருந்தாலும், அங்கே ஆடிப்பூரம் கொண்டாடப் படும். ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் விமரிசையாக நடக்கும். பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் காமாட்சி அம்மன் அன்னை லலிதா மஹா திரிபுரசுந்தரியின் முழுமை ரூபமாக, ‘‘பரப்ரஹ்ம்ம ஸ்வரூபினியாக’’ காட்சி தருகிறாள். இங்கு ஆடிப்பூரம் மிக சிறப்பாக நடைபெறும். பல இடங்களில் அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் மேளதாளத்தோடு சீர் தட்டு ஏந்திச் சென்று சமர்ப்பிக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
14. தீ மிதித்தல்
ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் பூக்குழி இறங்குதல் அல்லது தீமிதித்தல் என்ற விழாவோடு நிறைவு பெறும். திரௌபதி அம்மன் கோயில்களிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் மஹாபாரதம் பாடி, தீ மிதித்தல் விழா நடைபெறும். ஆடி மாதம் என்பது இந்தியாவில் வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில் பலவிதமான நோய் தொற்றுக்கள் எளிதில் உண்டாகும். இந்த மாதத்தில் தீ மிதிப்பதால் உடலின் பல நோய்கள் நீங்கும் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவேதான் பழங்காலத்தில் மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு காலில் சூடு வைத்து குணப்படுத்தப்பட்டது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு வணக் கத்தின் பரிணாமம் இது என்கிறார்கள். தீ மிதிப்பவர்கள் குறிப்பாக ஆடி மாதத்தில் தான் மிதிப்பர்.
15. பால்குடம்
ஆடிப்பூர நாயகியான அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது சிறப்பானது. சில கோயில்களில் பால்குட விழாவே பெரிய ஊர்வலமாக இருக்கும். உதாரணமாக மணப்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோயில் பால்குட விழாவைச் சொல்லலாம். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வருவார்கள். அதிகாலை தொடங்கி மதியம் வரை நடைபெறும்.
பல ஊர்களிலும் இதை போன்று நடைபெறும். பால் வெண்மை நிறம் உடையது. நம்முடன் பழகுபவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்களாக அமைந்து, நமக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதற்கான பரிகாரம் இது. திருவிழாக்களின்போது முறையாக விரதம் இருந்து பால்குடம் எடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து குளிர்ச்சிப்படுத்தினால் மனம் குளிர்ந்து வரம் தருவாள் என்பது நம்பிக்கை.
16. வளையல் சடங்கு
பல கோயில்களில் ஆடிப்பூர நாயகிகளுக்கு ஆடியில் வளைகாப்பு விழா நடத்தப்படும். சீமந்தம், வளைகாப்பு ஆகிய சடங்குகள் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப்பெண்ணையும் அவள் கருவையும் காக்கும் சடங்குகள். சாதாரண மனிதர்கள் செய்யும் இந்தச் சடங்குகளை ஜகன் மாதாவான அம்பிகைக்குச் செய்து மகிழும் விழா இது. சில கோயில்களில் புட்டு வைத்து படைப்பார்கள். இந்தப் பூலோகமே அவளின் படைப்பு. நாம் அனைவரும் அவளின் பிள்ளைகள்.
அதனால் தான் அம்பிகைக்கு உகந்த ஆடிமாதம், பூர நட்சத்திர நாளில், அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த உலகம் செழித்து வளம் பெருகும் என்பது நம்பிக்கை. உதாரணத்திற்கு சென்னை கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ளது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தில் அம்மனுக்கு சீமந்தமும் வளைகாப்பும் செய்யப்படுகின்றன.
17. ஆடி பௌர்ணமி (9.8.2025)
ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அன்றுதான் ஹயக்ரீவர் ஜெயந்தி. கலைமகளுக்கு குருவான, குதிரை முகம் கொண்ட இந்தப் பெருமாளுக்கு சிறப்பான கோயில் கடலூருக்கு பக்கத்தில் திருஹீந்திரபுரத்தில் (திருவந்திபுரம்) உண்டு. ஞானானந்தமயமான பெருமாள். எல்லா வித்தைகளுக்கும் அதிபதி. நிர்மலமாக ஸ்படிக மாலை வைத்திருப்பார். சில தலங்களில் அவர் லட்சுமி ஹயக்ரீவராகவும் காட்சி தருகிறார்.
காரணம் கல்வியும் செல்வமும் ஆகிய இரண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திருமகளையும் தன்னோடு இணைத்துக்கொண்டு காட்சி தருகின்றார். ஆடி பௌர்ணமி அன்று ஏலக்காய் மாலை சாற்றி ஹயக்ரீவரை வணங்குவது விசேஷமானது. அதைப்போலவே பசும்பாலை காய்ச்சி ஏலக்காய் குங்குமப்பூவைச் சேர்த்து நிவேதனம் செய்யலாம்.
18. ஆடிப்பூரம் விழா நடைபெறும் கோயில்கள்
சைவ வைணவ வேறுபாடு இன்றி எல்லா திருக்கோயில்களிலும் ஆடிப்பூர வைபவம் பெருவிழாவாகவோ அல்லது ஒரே ஒரு நாள் விழாவாக நடைபெறும். அப்படி நடை
பெறும் கோயில்கள்
* ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்.
* திருவாரூர் கமலாம்பிகை கோயில்.
* திருநாகை நீலாயதாக்ஷி அம்மன் கோயில்.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் (உண்ணாமலை அம்மன் சந்நதி)
* திருமயிலை கபாலீஸ்வரர் கோயில்.
* நெல்லையப்பர் கோயில்.
* மதுரை அழகர் கோயில்.
* மயிலாடுதுறை திருக்கடையூர்
அமிர்தகடேஸ்வரர் கோயில்.
* குன்றத்தூர் நாகேஸ்வரர் கோயில்.
* மேல்மருவத்தூர் கோயில்.
என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆடிப் பூரத்தில், அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டால், திருமணம் மற்றும் குழந்தைப்பேறு போன்ற பலன்கள் கிடைக்கும்.
19. திருவாரூர் கமலாம்பிகை ஆலயத்தில் ஆடிப்பூரம் திருவாரூர் கமலாம்பிகை,
முப்பெரும் தேவியரும் இணைந்த அம்சமாகும். இந்த அம்பிகையின் சிறப்புகளாலேயே, திருவாரூருக்கு ஸ்ரீ புரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம் என்ற பெயர்களும் உண்டு. திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தனிக்கோயில் கொண்டு, கமலாம்பிகை அருள்பாலிக்கிறார். கமலாம்பாள் ஆலயம், அம்பிகையை பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் இளம் பெண் பருவத்தினைக் குறிக்கின்றது. கருவறையில் கமலாம்பிகை, மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பல மலரை வலக்கரத்தில் பற்றி, வளர்பிறை சந்திரனையும் கங்கையையும் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து, தவ யோக நிலையில், அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறார். சகல தேவதைகளும் சர்வ மங்கள செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவுமே கமலாம்பிகை தவக்கோலம் பூண்டு இருக்கிறார். இக்கோயிலில் உள்ள அட்சர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அட்சரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளனலலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் கமலாம்பிகையை துதித்துப் போற்றுகின்றது. ஸ்ரீ வித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இத்தேவியே ஆவார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவரண கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். திருவாரூர் கமலாம்பிகை கோயில் பத்து நாள் பிரம்மோற்சவமாக ஆடிப்பூர விழா நடைபெறும்.
20. திருக்கடையூர் அமிர்த கடேசுவரர் கோயில் ஆடிப்பூரம்
மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் திருக்கடையூர் திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ள தலம். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார்.
இத்தல இறைவியான ‘‘அபிராமி தேவி’’ வணங்குவதன் மூலம் உயர் ஞானம், கல்வி கிடைக்கும். அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோயிலில் தேரோட்டம் நடைபெறும். அபிராமி அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெறும்.
21. நீலாயதாக்ஷி அம்மன் கோவில் சிறப்பு
நீலாயதாட்சி அம்மன் கோயில் நாகைக்காரோணம் என்கின்ற நாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள சப்தவிடங்க தலங்களில் ஒன்று. ஸ்ரீ நீலாயதாட்சி சமேத ஸ்ரீ காயா ரோகணேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலம் இந்தக் கோயில் மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன் மற்றும் காசி விசாலாட்சி அம்மன் கோயில்களை போல நீலாயதாட்சி அம்மன் கோயில் என்று தான் அழைக்கப்படுகிறது.
இக்கோயிலின் மூலவர் - ஸ்ரீ காயாரோ கணேஸ்வரர் (ஆதிபுராணர்), அம்பாள் -ஸ்ரீ நீலாயதாட்சி (கருந்தடங் கண்ணி), ஸ்ரீ தியாகராஜர் (சுந்தரவிடங்கர்), நடனம் தரங்க நடனம். சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். கடற்கரை வீசி நடனம் ஆடிய தலம் பாராவாரதரங்க நடனம் (கடலில் அலை ஆடுவது போல்). தலமரம் -மாமரம், தீர்த்தம் -புண்டரீக தீர்த்தம், தேவ தீர்த்தம் அமைந்த தலம்.
22. நாகாபரண விநாயகர்
புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம். சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையாரும் அருள்புரியும் தலம். இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும்போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது. இக்கோயில் முகப்பிலுள்ள விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே, மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். எனவே இவர், ‘‘நாகாபரண விநாயகர்’’ என்று அழைக்கப்படுகிறார்.
நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலா பிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது. கயிலையும், காசியும் போல இத்தலமும் முக்தி மண்டபத்துடன் திகழ்கிறது. அழுகுணி சித்தரின் ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பௌர்ணமிதோறும் பாயச நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.
23. கருந்தடங்கண்ணி அம்மனுக்கு ஆடிப்பூரம்
நீலாயதாட்சி அம்மனுக்குஆடிப்பூரம் கொடி ஏற்றுவதிலிருந்தே களைகட்ட ஆரம்பிக்கும். விழா ஆரம்பநாள் முதல் காலையிலும், இரவிலும் அம்மன் விதவிதமான அலங்காரத்துடனும், விதவிதமான வாகனங்களுடனும், பரிவாரத்துடன் நகரில் ஊர்வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும். நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்கும். இரவில் கச்சேரி நடந்து சுவாமி கோயிலை திரும்ப அடைய விடிகாலை ஆகிவிடும். கச்சேரியை பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டு செல்வார்கள்.
மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து கோலமிட்டு விமரிசையாக வரவேற்பர். அம்மன் வசந்த மண்டப ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தருவாள். நீலாயதாட்சி அம்மனின் பின்னலங்காரம் மிக விசேஷமாக இருக்கும். அதைக் காணும் விதத்தில் சுற்றிவர கண்ணாடிகள் வைக்கப்படும். ஆடிப்பூரம் கழிப்பு காலை1 மணிக்குள் முடியும். இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும். ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதாட்சி அம்மன் வெண்மை நிற ஜரிகை புடைவையை அணிந்து, பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வருவார். பார்க்க பார்க்க அலுக்காத ஸ்வரூபம். நீலாயதாட்சி அம்மன் அழகிய உருவை ரதத்தில் காண ஆயிரம் கண் வேண்டும்.
24. கற்பகாம்பாளுக்கு ஆடிப்பூரம்
மயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் என சப்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன.
இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர் இந்த சப்த ஸ்தான சிவாலயங்களின் வரிசையில் எட்டாவது சிவாலயமாக ஏகாம்பரேசுவரர் - வள்ளுவர் கோயில் சிறப்பு பெற்றுள்ளது. இக் கோயில்கள் எல்லாவற்றிலும் ஆடிப்பூர சிறப்பு பூஜைகள் நடைபெற்றாலும் கபாலீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, கற்பகாம்பாள் அம்மனுக்கு இந்த நாளில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும். வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்து, அம்மனுக்குச் சாத்துவார்கள்.
25. குன்றத்தூர் நாகேஸ்வரர் கோயில் ஆடிப்பூரம்
குன்றத்தூர் கோயில் சென்னையில் தாம்பரம் அருகே அமைந்துள்ளது. பெரிய புராணம் பாடிய சேக்கிழார், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சென்ற பிறகு, தனது சொந்த இடமான குன்றத்தூர் வந்து இந்தக் கோயிலைக் கட்டினார். நவகிரகங்களில் (ஒன்பது கிரகங்கள்) ஒன்றான ராகுவுடன் தொடர்புடையது. குன்றத்தூர் கோயில் திருநாகேஸ்வரத்தில் உள்ள அசல் கோயிலுக்கு வடக்கே அமைந்திருப்பதால், வட நாகேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. ஆடிப்பூர நாளில், நாகேஸ்வரர் மற்றும் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்படும். நாகதோஷம் உள்ள வர்கள் இந்த நாளில் இங்கு வந்து வழிபடுவது விசேஷம். இந்த கோயிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 பால்குட அபிஷேகம் நடைபெறும்.
26. காந்திமதியம்மனும் ஆடிப்பூரமும்
தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர், காந்திமதியம்பாள் திருக்கோயிலும் ஒன்று. இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழா பத்து நாள்கள் நடைபெறும். அதன் ஒரு பகுதியாக நான்காம் நாள் திருநாளில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும்.
தொடர்ந்து செப்பு கேடயத்தில் வெண்பட்டு உடுத்தி எழுந்தருளும் காந்திமதி அம்பாள் வளையல் பூட்டுவதற்கு சுவாமி நெல்லையப்பரிடம் அனுமதி கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காந்திமதி அம்பாள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஊஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். அம்பாளுக்கு நலுங்கு வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். ஆடிப்பூர விழாவின் பத்தாம் நாளில் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக் கட்டு திருநாள் நடக்கும்.
27. ஸ்ரீ ரங்கத்தில் ஆடிப்பூரம்
வைணவர்களின் தலைமைக்கோயிலான ஸ்ரீ ரங்கத்தில் ஆடிப்பூரத் திருவிழா ஒரு முக்கிய வைபவமாகும். ஆண்டாள் சந்நதியில் ஆடிப்பூர உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். இந்த நாளில், ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. மேலும், ரங்கம் பெருமாளால் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆண்டாளுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள் நடைபெறும். பரமபதநாதர் சந்நதியில் உள்ள கண்ணாடி அறையில் திருப்பாற்கடல் நாதன் அலங்காரமும் உற்சவருக்கு கண்ணன் அலங்காரமும் நடைபெறும்.
ஆண்டாள் கட்டிய வீட்டை சிதைப்பது போன்ற பாவனையில் நாச்சியார் திருமொழியின் “சிற்றில் சிதையேல்” என்ற திருமொழியின் விளக்கமாக இந்த அலங்காரம் நடைபெறும். மற்றொரு நாள் ஆண்டாளுக்கு பரம சுவாமி அலங்காரமும் உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்படும். அடுத்த நாள் ஆண்டாளுக்கு ராஜகோபாலன் அலங்காரமும் உற்சவருக்கு ராமர் அகல்யா சாப விமோசன அலங்காரமும் செய்யப்படும். மற்றொரு நாள் ஆண் டாளுக்கு துவராபதி கண்ணன் அலங்காரமும் உற்சவருக்கு சோலை மலை பெருமாள் அலங்காரமும் செய்யப்படும் இப்படி திருவரங்கத்தில் ஆடிப்பூர உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும்.
28. ஆண்டாள் பூரம்
எத்தனைதான் மற்ற மற்ற திருக்கோயில்களின் ஆடிப்பூர உற்சவத்தைச் சொன்னாலும் ஆண்டாளின் ஆடிப்பூர உற்சவத்தைப் பற்றிச் சொல்லாமல் ஆடிப்பூரத்தின் சிறப்பு நிறைவடையாது. ஆண்டாள் அவதரித்த மாதம் ஆடி. ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஸ்ரீ வில்லிபுத்தூர். இதைத்தான் ஸ்ரீ மணவாள மாமுனிகள் தம்முடைய உபதேச ரத்தின மாலையில், மற்ற அவதாரங்களின் சிறப்பை விட ஆண்டாளின் அவதார சிறப்பை கொண்டாடுகின்றார்.
``இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
வன்றோ இங்காண்டாளவதரித்தாள் குன்றாத
வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்)னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.’’
29. ஆண்டாளின் பெரும்கருணை
எல்லோரும் பரமபதத்தை அடைவதற்கு விரும்புவார்கள். காரணம் அது அந்தமில் பேரின்பத் திருநகர். அங்கே துன்பம் என்பதே கிடையாது. எப்பொழுதும் சந்தோஷம் எப்பொழுதும் ஆனந்தம் எப்பொழுதும் பகவான் கூடவே இருக்கக்கூடிய அற்புத நிலை. ஆனால் அத்தகைய பெருவாழ்வைத் துறந்து, அந்த லோக மாதா, பூமியிலே, பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்து, இரண்டு பிரபந்தங்களை தமிழில் பாடி, நம்மையெல்லாம் உய்வித்து அருளினாள் என்றால் அது அல்லவா தியாகம்! அது அல்லவா பெருங்கருணை! இந்தப் பெருங் கருணைக்கு ஈடாக வேறு எதைச் சொல்ல முடியும்? எனவே மற்றத் திருத்தலங்களை விட ஆண்டாளின் அவதாரத் திருத்தலமான வில்லிபுத்தூர் ஆடிப்பூர ஆண்டாள் பெருவிழா மிக மிகச் சிறப்பானது.
30. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். முதல் நாள் இரவு16 வண்டி சப்பரமும், 2-ம் நாளில் ஆண்டாள் சந்திர பிரபை வாகனத் திலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் எழுந்தருள்வர். 3ம் நாள் வைபவத்தில் ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலியிலும், ரெங்க மன்னார் அனுமன் வாகனத்திலும் அருள்பாலிப்பர். 4-ம் நாள்விழா வில் ரெங்கமன்னார் கோவர்த்தன கிரி ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசன வைபவம் அடுத்து நடைபெறும்.
இதையொட்டி ஐந்தாம் நாள் காலை ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பெரியாழ்வார் எழுந்தருளி, ஸ்ரீ வில்லிபுத்தூர் பெரியபெருமாள், செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில் சுந்தர்ராஜ பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீ னிவாச பெருமாள், நின்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைப்பார். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு மேல் 5 கருட சேவை நடைபெறும். 7-ம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவை உற்சவமும் சிறப்பாக நடைபெறும்.
இத்திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெறும். தேரோட்டத்தின் போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருச்சி ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் கோயில் சுந்தரராஜபெருமாள் பட்டு வஸ்திரம், பூமாலை மற்றும் மங்கலப் பொருட்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தடையும். தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
கண்ணாடி மாளிகையில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று. மஞ்சள் பட்டு உடுத்தி ஆண்டாள், வெண்பட்டு உடுத்தி தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருள்வர் இப்படி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஆயிரக் கணக்கான மக்கள் கோலாகலமாக கூடியிருக்க குதூகலத்துடன் நடைபெறும். இன்னும் ஆடிப்பூரத்தின் சிறப்பைச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.
எஸ். கோகுலாச்சாரி