மனநலத்தை குணமாக்கும் குணசீலம்!
*கலியுகம் முடியும் வரை இத்தலத்தில், தான் சாந்நித்யத்துடன் வசிப்பதாக பெருமாளே கூறியுள்ள அற்புதத் தலம்.
*பெருமாள் பிரசன்ன வெங்கடாஜலபதியாக அருள்கிறார். இத்தலம் தென்திருப்பதி என போற்றப்படுகிறது.
*இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாகவும், பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது.
*கருவறையில் கிழக்கு நோக்கி நின்று மார்பில் மகாலட்சுமி துலங்க, கையில் செங்கோல் ஏந்தியபடி உள்ளார் பெருமாள்.
*வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கு இந்த ஆலயத்தில் தனி சந்நதி நிர்மாணிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டுள்ளது.
*இத்தலத்தில் நடக்கும் சஹஸ்ரநாம அர்ச்சனை வழிபாடு விசேஷம். அரை மணி நேரத்துக்கு நடைபெறும் இந்த வழிபாட்டில் நூற்றுக் கணக்கில் கலந்து கொள்கிறார்கள்.
*தால்பிய மகரிஷியும் அவர் சீடர் குணசீல மக ரிஷியும் திருப்பதி பெருமாளின் பேரழகில் மயங்கி அவரைப் போன்ற மூர்த்தத்தை தமிழ்நாட்டில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார்கள். அதன்படியே செய்ததோடு அந்தத் தலத்துக்கு சீடரின் பெயரையும் வைத்து அவருக்குப் பெருமை சேர்த்தார் குரு.
*பவிஷ்யோத்திர புராணத்தில் இத்தலம் பற்றி குணசீல மகாத்மியம் எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்தே இத்தலத்தின் தொன்மை விளங்கும்.
*உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழமன்னன் நியாயவர்மன் என்பவர் இத்தலத்தை புதுப்பித்திருக்கிறார்.
*தீய சக்திகளால் ஆட்பட்டவர்களையும் இந்த பெருமாள் குணப் படுத்துகிறார் என்பதால், அமானுஷ்ய பாதிப்புக்குள்ளானவர்களும் பெருமானை தரிசித்து துன்பம் நீங்கப் பெறுகிறார்கள்.
*தன் கையில் உள்ள செங்கோலால் பக்தர்களின் உடல் நலம், மனநலம் காப்பதில் இந்த பெருமாள் நிகரற்றவராகத் திகழ்கிறார்.
*மற்ற திருமால் ஆலயங்களில் வாரம் ஒரு முறையே திருமஞ்சனம் நடக்கும். ஆனால் இத்தலத்தில் பெருமாளுக்கு தினமும் திருமஞ்சன சேவை நடக்கிறது.
*மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் காவிரியில் நீராடி, கோயிலில் உச்சிக்கால பூஜையையும், அர்த்தஜாம பூஜையையும் தரிசிக்க, அவர்கள் மனநலம் குணமடையப் பெறுகிறார்கள்.
*திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் குணசீலம் சென்று தரிசித்தால் திருப்பதியை தரிசித்த பலன் கிட்டும் என பெருமாளே குணசீல மகரிஷியிடம் வரம் தந்துள்ளதாக புராண வரலாறு சொல்கிறது.
*குணம் என்றால் குணமடைதல். சீலம் என்றால் இடம் என்று பொருள். பக்தர்களின் உடல் நோய்களையும், மனநோய்களையும் குணப்படுத்துவதால் இத்தலம் குணசீலம் என்றாயிற்று.
*இத்தல பெருமாளுக்கு செய்யப்படும் சந்தனக் காப்பு அலங்காரம் மிக அற்புதமானது. நாம் குருவாயூரில்தான் இருக்கிறோமோ என்று திகைக்க வைத்த வண்ணம் அந்த அலங்காரம் அழகுற அமைந்திருக்கும்.