கல்வித்தடை நீக்கும் தலம்
பொதுவாகவே, ஒரு ஜாதகத்தில் ஆரம்பக்கல்வியை இரண்டாமிடத்தைக்கொண்டும், மேல் கல்வியை நான்காம் இடத்தைக்கொண்டும், ஐந்தாம் இடத்தைக் கொண்டும், அதற்கு மேல் உள்ள கல்வியை ஒன்பதாம் இடத்தைக் கொண்டும் ஆராய வேண்டும்.
கேந்திர திரிகோணஸ்தானங்கள் சுபத்துவம் அடைந்திருந்தால் அவர்களுக்கு இயல்பாகவே கல்வியில் ஆர்வமும் முன்னேற்றமும் இருக்கும்.
கிரகங்களில் குரு அறிவைக் கொடுக்கக்கூடிய கிரகம். சூரியன் ஆத்மகாரகன். புதன் புத்திக்காரகன். மற்றும் கல்விக் காரகன். சந்திரன் மனோகாரகன்.
இந்த கிரகங்கள் அனைத்தும் சுபத்தொடர்போடு இருந்தால் கல்விதானே பாகம்படும். அப்படியில்லாமல் புதன் சூரியன் இணைந்து ராகு கேது போன்ற கிரகங்களோடு, கிரகண தோஷத்தில் இருந்தாலும் அல்லது சனி போன்ற மந்த கிரகங்களின் தொடர்பு பெற்றிருந்தாலும் கல்வியில் தாமதமும் தடைகளும் ஏற்படும்.
கோசார ரீதியாகவும் ராகு சனி போன்ற கிரகங்கள் புதனைத் தொடும்பொழுது கல்வியில் அலட்சியமும் கவனச்சிதறலும் ஏற்படும். அந்த அம்மாள் கொடுத்த பையனின் ஜாதகத்தில் புதன் அஷ்டமாதிபதி தொடர்பில் இருந்தார். கோசாரத்தில் ஜென்ம ஜாதகப் புதனை, சனி தொடர்புகொண்டிருந்தார்.
எனவேதான் கல்வியில் கவனச்சிதறலையும் தடைகளையும் தந்து கொண்டிருக்கிறது.இதற்கு என்ன பரிகாரம்? நோயைப்பற்றி தெரிந்து கொண்டால் மருந்து (பரிகாரம்) பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி அமையும் கிரகதோஷங்களைப் போக்கிக் கொள்வதற்காகவும், கிரகங்கள் தரும் தடைகளைத் தாங்கிக்கொண்டு முன்னேறுவதற்கும், பல அற்புதமான ஆலயங்கள் நம்முடைய பாரததேசத்தில் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான் திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஹயக்கிரீவர் சந்நதி.
திருவஹீந்திரபுரம் என்பது கடலூருக்கு அருகில் கெடிலநதிக்கரையில் உள்ள திருக்கோயில். மிக அழகான கோயில். ஒரு பக்கம் கெடிலநதி ஓடிக்கொண்டிருக்கும். அதற்கு அசல் பெயர் கருடநதி. அதன் கரையை ஒட்டி ஆலயம் அமைந்திருக்கும்.
ஆலயத்தின் எதிரில் ஒரு சிறுமலை உண்டு. ஒளஷதகிரி என்று பெயர். இந்த மலைமீது ஏற 74 படிகள் உள்ளன. அந்த மலையின்மீது ஹயக்கிரீவர் சந்நதி இருக்கிறது.இந்த ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் ‘திருவயிந்திரபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இப்பெயர் இன்று ‘திருவந்திபுரம்’ எனச் சுருங்கிவிட்டது. இவ்வூர் புராணங்களில் ‘திருவகீந்திரபுரம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயிந்திரன் என்றால் ஆதிசேடன். ஆதிசேடன் வழிபட்ட தலம். ‘அயிந்தை’ என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது. தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார் அருளும் அற்புதத் தலம்.
இத்தல இறைவனை, திருப்பதி பெருமாளாக நினைத்து திருப்பதிக்குச் செலுத்தும் நேர்த்திக்கடன்களை இங்கேயே செலுத்துகின்றனர். தேவநாதப்பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றைப் பெறுவார்கள்.
மூவராகிய ஒருவனை,
மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை,
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத்
தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை
என்று இத்தலத்துப் பெருமாளை திருமங்கையாழ்வார் போற்றுகின்றார்.
கல்வியில் தடை உள்ளவர்கள், தங்கள் குழந்தைகளை ஒருமுறை இங்கு அழைத்து வந்து, கீழே உள்ள தாயாரையும் பெருமாளையும் சேவித்துவிட்டு, எதிரே உள்ள மலைமீது அருள்தர அமர்ந்திருக்கும் ஹயக்ரீவரைச் சென்று சேவிக்க வேண்டும். புதன்கிழமை, வியாழக்கிழமை, நவமி, சரஸ்வதி பூஜை அன்று சென்று வணங்குவது மிகவும் சிறப்பு.
இந்த மலை மீதுள்ள அச்வத்த மரம் உண்டு. அந்த மரத்தின் கீழ் அமர்ந்து தான், ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன், என்னும் வைணவ ஆச்சாரியார் கருட மந்திரத்தை ஜெபித்தார். அப்போது கருடாழ்வார் தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார். அவருக்குச் சகல கலைகளும் வசமானது.
விஜயதசமி நாள் அன்று இந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர். பரிமுகக்கடவுள் எனும் ஹயக்ரீவர், ஞானத்தின் இருப்பிடமாகத்திகழ்பவர். கலைமகளின் குரு ஹயக்ரீவ மூர்த்தி. ஹயக்ரீவர் மந்திரம் சொல்லி தினம் பரிமுகக்கடவுளை குழந்தைகள் வணங்கிவந்தால் தேர்வுகளில் நல்ல மதிபெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவார்கள்.
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சூட்டி, வெல்லம் கலந்த சுண்டலை நைவேத்தியம் செய்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் அடையலாம். இந்தப் பரிகாரத்தைத் தான் அந்த அம்மாவிடம் சொன்னேன். ஹயக்ரீவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அவர் கல்வித்தடைகளை நீக்கி உயர்கல்வியை நிச்சயம் தருவார்.
இது தவிர கல்வி தடையை நீக்கக் சில பரிகாரங்கள்:
1. தொடர்ந்து ஏழு வாரம் புதன் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை அல்லது இரவு 8 முதல் 9 மணி வரை பெருமாள்கோயிலுக்குச் சென்று, பச்சை நிறமுள்ள துளசியைச் சாற்றி வரவேண்டும். இயன்றால் பச்சைப்பயிறு சுண்டல் நிவேதனம் செய்யச்செய்து வினியோகம் செய்து வரவேண்டும்.
2.ஏழை மாணவர்களுக்கு புதன் ஹோரையில் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் முதலிய கல்வி உபகரணங்களை இயன்ற அளவு தர வேண்டும்.
3.பித்தளைக் கிண்ணத்தில் சற்று உப்பு வைத்து, தொடர்ந்து 48 நாட்கள் நெய்விளக்கு ஏற்றி, பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட வேண்டும். ஹயக்ரீவர் மந்திரம்!
‘‘ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே’’
கல்வித் தடைகள் நீங்கி, வித்தை வசப்படும்.