நீட்டில் ஜீரோ, நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்க்கை மிகப்பெரிய மோசடி: திமுக மாணவர் அணி செயலாளர் கடும் கண்டனம்
சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:
தகுதி,திறமை எனச் சொல்லி பல தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வு என்பது மோசடியின் உச்சம். சாமானிய மாணவர்களின் கல்வி உரிமையைக் காவு வாங்கும் கருவி என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்றவர்களுக்கும் நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் மருத்துவச் சேர்க்கை கிடைத்திருப்பது நீட் ஒரு மோசடிதான் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூற்றை மெய்ப்பித்திருக்கிறது.
கல்லூரியில் சேர்ந்தாரா பட்டம் பெற்றாரா மதிப்பெண் சான்றிதழ் இருக்கிறதா காட்டுங்கள் எனக் மக்கள் கேட்கும்போது முடியாது என்ன சொல்லும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? டீ வித்தாவது பக்கோடா வித்தாவது பிழைத்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கும்பலுக்கு கல்வியின் மகத்துவம் தெரியவா போகிறது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.