ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த போலி மதுபான தயாரிப்பு வழக்கில் ஆந்திரா முன்னாள் அமைச்சர் கைது
திருமலை: ஆந்திர மாநிலத்தில் சில மாதங்களாக போலி மதுபான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் போலி மதுபான தொழிற்சாலை உரிமையாளரும் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் ஆதரவாளருமான ஜனார்தன்ராவ் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் மேற்பார்வையில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டதாகவும், ஆந்திராவில் ஆட்சி மாறியபிறகு போலி மதுபான உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும், அதன்படி இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஜோகி ரமேஷ் மீண்டும் தன்னை போலி மதுபானம் தயாரிக்கும்படி கூறியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் இப்ராஹிம்பட்டணத்தில் உள்ள ஜோகி ரமேஷின் வீட்டிற்கு சிறப்பு புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மற்றும் கலால் அதிகாரிகள் நேற்று காலை சென்று அவரை கைது செய்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் திரண்டு போலீசார் மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவரை விஜயவாடாவில் உள்ள கலால் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தவர்
போலி மதுபான வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ், கடந்த வாரம் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது, கற்பூரம் ஏற்றி வைத்து போலி மதுபான வழக்கிற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு எதிராக சதி நடக்கிறது எனக்கூறி சத்தியம் செய்தார். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.