ஆணவ கொலையை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு; யூடியூபர் திவாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா புகார்
சென்னை: ஆணவ கொலையை ஆதரிப்பதாக தன்மீது குற்றம்சாட்டும் யூடியூபர் திவாகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்ச்சி நடிகை ஷகிலா போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா இன்று காலை அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: யூடியூபரான திவாகர் என்பவர் கடந்த 27.7.2025ம் தேதி தூத்துக்குடி மாவட்ட இன்ஜினியர் கவின்குமார் என்பவரை திருநெல்வேலி மாவட்டத்தில் வைத்து சுர்ஜித் என்பவரால் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். பல போராட்டங்களுக்கு பிறகு அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்த படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் டாக்டர் திவாகர் என்பவர் நியூஸ் கிளிட் இந்தியா என்ற யூடியூப் சேனலில் பேட்டியளிக்கும் போது சுர்ஜித் என்பவர் என்னுடைய முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவர் என்று வெளிப்படையாக தன்னுடைய சமூகத்தை சொல்லி இந்த ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளார். மற்றும் சில யூடியூப் சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியளிக்கும் போது, யூடியூபர் ஜி.பி.முத்து பற்றி நெறியாளர் கேள்வி கேட்கும் போது, டாக்டர் திவாகர் என்பவர் ஜி.பி.முத்து என்பவரது சமூகத்தை குறிப்பிட்டு அவர் தாழ்ந்த சாதி என்று சொல்லி அவரை பற்றி பேசி தன்னுடைய தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இது போன்று தொடர்ந்து வெளிப்படையாக டாக்டர் திவாகர் என்பவர் பொது வெளியில் தான் சார்ந்த சமூகத்தை உயர்ந்த சாதியாகவும், மற்ற சமூகத்தை கீழ் சாதியாகவும் பேசி வரும் திவாகர் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.