மேம்பாலத்தில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பைக்கை ஓட்டியபோது விபத்தில் தலை துண்டாகி யூடியூபர் பலி: குஜராத்தில் பயங்கரம்
காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் படேல் (18). பிரபல யூடியூபரான இவர், “பிகேஆர் பிளாகர்” என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவர் பைக்கை அதிவேகமாக இயக்கிய நிலையில், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், அவர் கிரேட் லைனர் பாலத்தில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் செல்கிறார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார். அவரது பைக் பல நூறு மீட்டருக்கு அப்பால் விழுந்தது. இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பிரின்ஸ் ஹெல்மெட் அணியாமலும் அதிவேகமாக பைக்கை இயக்கியதும்தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் அவரது தாய், அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவரிடம், மகன் உயிரிழந்துவிட்டார் என போலீசார் கூறியபோது, அதை நம்ப முடியாமல் கதறி அழுதார். இது அனைவரது நெஞ்சையும் கலங்க வைக்கும் வகையில் இருந்தது. பிரின்ஸ் படேல், தனது சமூக வலைத்தள பக்கங்களில் பைக் ரீல்ஸ் போடுபவர். சாலைகளில் தேவையான முன்னெச்சரிக்கை அல்லது பாதுகாப்பு நெறிமுறைகள் இல்லாமல் அதிவேகமாக பைக் ஓட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
மேலும் அதை வீடியோவாக எடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். இதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் அவர் மிகவும் பிரபலமானார். தனது கேடிஎம் ட்யூக் 390 பைக் மீது அவருக்கு தனி காதல் இருந்துள்ளது. இதை அவரது சமூக வலைத்தள பக்கங்களிலேயே பகிர்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்தான் வாங்கியிருந்த பைக்குக்கு ‘லைலா’ என பெயரிட்டு, அதன் படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட பிரின்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் உயிர் போனாலும் கூட, அதன் பிறகு தனது லைலாவை (பைக்கை) சொர்க்கத்தில் காதலிப்பேன் என கூறியிருந்தார்.