பெண்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது
தென்காசி: சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்துக்களை பதிவிட்ட யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அம்பை. ரோடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் திலீபன் (35). பட்டதாரியான இவர் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தனது சமூக வலைதள பக்கங்களில், பெண்கள் குறித்து இழிவான கருத்துக்கள் அடங்கிய வீடியோக்களை பதிவேற்றி வந்ததாகவும், மேலும் அவர் பெண் சிசுக்கொலையை ஆதரித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் திலீபனின் வீடியோவை பகிர்ந்து, தென்காசி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சமூக ஊடகங்களில் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ‘உளறி கொட்டவா’ என்ற பெயரில் இயங்கி வந்த இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகளில், தொடர்ந்து பெண்கள் குறித்து இழிவாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் வீடியோக்கள் வெளியாகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், அந்தக் கணக்கை இயக்கி வந்தது திலீபன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து யூடியூபர் திலீபன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இதன் அடிப்படையில் திலீபனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.