யூடியூபர் மன்னிப்பை ஏற்க முடியாது: நடிகை கவுரி கிஷன் அதிரடி
சென்னை: யூடியூபரின் மன்னிப்பை ஏற்க முடியாது. காரணம், அவர் பொறுப்புணர்வு இல்லாமல் பேசியிருக்கிறார் என நடிகை கவுரி கிஷன் கூறியுள்ளார். ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் கவுரி கிஷனை தூக்கினீர்களே. அது எப்படி முடிந்தது. அவரது எடை என்ன என யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு அதிர்ந்த கவுரி கிஷன், இது முட்டாள்தனமான கேள்வி என விமர்சித்தார். இது தொடர்பாக ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் மற்றொரு நிகழ்வில் கவுரி கிஷனுக்கும் சம்பந்தப்பட்ட யூடியூபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒருவரையொருவர் வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கம், நடிகைகள் குஷ்பு, ராதிகா, இயக்குனர்கள் பிரேம்குமார், பா.ரஞ்சித், பாடகி சின்மயி உள்பட பலரும் கவுரி கிஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதையடுத்து தனது கேள்வி தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறி யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் கவுரி கிஷன் நேற்று சோஷியல் மீடியாவில் வெளியிட்ட பதிவில், ‘‘பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல. வருத்தத்தையோ அல்லது வெற்று வார்த்தைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டேன். கேள்வியை தவறாக புரிந்து கொண்டார், அது ஒரு வேடிக்கையான கேள்வி என மீண்டும் கூறுவதா?’’ என கோபத்துடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.