யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தவர் கைது
திருவெறும்பூர்: திருச்சி அடுத்த நவல்பட்டு பூலாங்குடி, நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜூன் நம்பியார் (35). இவர், அரசு அனுமதி இல்லாமல் நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சென்று அவரது வீட்டில் நடத்திய சோதனையில், நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் அதில் பயன்படுத்தக்கூடிய பால்ரஸ் குண்டுகள், மருந்துகள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அர்ஜூன் நம்பியார், வேட்டையாடுவது எங்களது குலத்தொழில். இதற்காக செல்போனில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அர்ஜூன் நம்பியாரை கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.