பார்ட்டி முடிந்து கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டோவில் வந்தபோது; குடிபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த யு டியூப் சேனல் பெண் கைது; நீதிபதியிடம் கெஞ்சல்
அண்ணாநகர்: சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் ரேவதி (34) இவர் யு டியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் தனது மாமா ராஜாவுடன் தி.நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ரேபிடோ ஆட்டோவில் ஏறியுள்ளனர். அப்போது ரேவதி கையில் வைத்திருந்த பீரை அருந்தியதாக தெரிகிறது. கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகே வந்தபோது ரேவதி திடீரென்று ஆட்டோவை நிறுத்தச்சொல்லி அதில் இருந்தபடி மேலும் பீர் அருந்திக்கொண்டு சத்தமாக பேசியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த ஆட்டோ டிரைவர், ‘’ மேடம் சவாரி செய்த பணத்தை கொடுத்துவிடுங்கள், நான் சென்றுவிடுகிறேன்’’ என்று கேட்டுள்ளார். அதற்கு ரேவதி, பணம் கொடுக்காமல் ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீசார் 4 பேர் வந்து ரேவதியை எச்சரித்து வீட்டுக்கு போகும்படி தெரிவித்துள்ளனர். அதற்கு ரேவதி, ‘’எங்களுக்கு தெரியும் உங்க வேலையை பாருங்கள்’’ என்று கூறியதுடன் போலீசார் பற்றி இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ரேவதியின் செயல்பாடுகளை போலீசார் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதற்கு பதிலாக ரேவதியும் தனது செல்போனில் போலீசாரின் செயல்பாடுகளை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வந்து சமாதானப்படுத்தி அங்கிருந்து ரேவதியை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே ரேவதி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;
மதுபோதையில் தகராறு செய்த என்மீது தவறு உள்ளது. போலீசாரை ஆபாசவார்த்தைகளால் திட்டியதை மறுக்கவில்லை. என்னிடம் பேசுவதற்கு பெண் போலீசார் வரவேண்டும், ஆனால் சம்பவ இடத்தில் பெண் போலீசார் யாரும் இல்லை. 4 போலீசார் என்னை தாக்கியதில் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனது மாமா ராஜாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து 15 ஆயிரம் ரூபாய், செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். நான் தவறு செய்ததை ஒப்புக்கொள்கிறேன். என்னை இழிவாக பேசி தாக்கியதால் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். என்னை தாக்கியதற்கு 4 போலீசார்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன். இவ்வாறு பேசியுள்ளார்.
இந்தநிலையில், போலீசாரை ஆபாசமாக பேசி பணிகளை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குபதிவு செய்து நேற்றிரவு பாடியில் உள்ள வீட்டில் இருந்த ரேவதியை கைது செய்தனர். அப்போது ரேவதி, ‘’என்னை கைது செய்வதற்கு வாரண்ட் உள்ளதா? என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ரேவதி, அவரது மாமா ஆகியோரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்று கோயம்பேடு காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரிக்கின்றனர். இதன்பின்னர் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ரேவதி, ‘’போலீசாரை திட்டியது தவறுதான், ஆனால் பெண் என்றுகூட பார்க்காமல் என்னை இழிவாக பேசி போலீசார் தாக்கினர்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விசாரணைக்கு பிறகு நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என்று அறிவித்து 2 பேரையும் அனுப்பிவைத்தனர். அப்போது ரேவதி கூறுகையில், ‘’வாடகை ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியது தப்புதான். அங்கு வந்த போலீசாரை திட்டியதும் தவறுதான். போலீசாரை திட்டியதை மட்டும் வீடியோ எடுத்து அந்தவீடியோக்களை வைத்து என்னை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.போலீசார் என்னை இழிவாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளேன்’ என்றார்.