நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி கூலி வேலை செய்யும் 50 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறை: நகை, பணம் பறிப்பு; செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியது அம்பலம்
அண்ணாநகர்: நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி கூலி வேலை செய்யும் 50 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சுமதி (47, பெயர் மாற்றம்). சென்னை விருகம்பாக்கம் சாய் நகர் மார்க்கெட் அருகே கூலி வேலைக்காக காத்து கொண்டிருப்பது வழக்கம். அதுபோன்று கடந்த ஜனவரி மாதம் காத்திருந்தபோது, பைக்கில் வந்த டிப் டாப் வாலிபர், ‘வீட்டை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்’ என ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றார். ஆனால் அவர், கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜிக்கு சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ‘எதற்காக இங்கு அழைத்து வந்தீர்கள்’ என்று கேட்டபோது, அந்த வாலிபர், மழுப்பலாக பதிலளித்து பிரியாணி ஆர்டர் செய்தார். அதை சாப்பிட வைத்து நைசாக பேச்சு கொடுத்து, அந்த பெண்ணுடன் லாட்ஜில் ஜாலியாக இருந்தார்.
பின்னர் தி.நகரில் உள்ள நகை கடையில், ‘எனது நண்பர் உள்ளதால் உனக்கு நகைகள் வாங்கி தருகிறேன்’ என்று ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றார். அங்கு பைக்கை பார்க்கிங் செய்து விட்டு வருவதாக கூறி மாயமானார். வெகுநேரமாகியும் வாலிபர் வராததால், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அந்த பெண் உணர்ந்தார்.
இதையடுத்து கோயம்பேடு போலீசில் அந்த பெண் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ முத்து கருப்புசாமி தலைமையில் தனிப்படை அமைத்து தனியார் லாட்ஜில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பைக் எண்களை வைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் காரில் வந்த ஒரு வாலிபர், கூலி வேலை செய்யும் 40 வயது பெண்ணை, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என முள் புதூர் பகுதிக்குள் அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி செயின், கம்மல் ஆகியவற்றை பறித்தார். மேலும், போலீசில் புகார் செய்தால், கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு தப்பினார்.
பின்னர் அந்த பெண், திண்டுக்கல்லுக்கு வந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காரின் எண்களை வைத்து குற்றவாளியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. வாலிபர் அளித்த வாக்குமூலம்: எனது பெயர் சாஜிவ் (32). சொந்த ஊர் கேரளா மாநிலம். திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கிறது. கேரளாவில் லாரி கிளீனராக வேலை செய்தபோது, கூலி வேலை செய்யும் 40 வயது பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து அவருடன் ஜாலியாக இருந்தேன்.
மேலும், அவரிடம் இருந்த செயின், கம்மலை பறித்து சென்றேன். அதை அடமானம் வைத்து ஜாலியாக இருந்தேன். இதுபோல் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டேன். அதனை செல்போனில் வீடியோ எடுத்து, போலீசாரிடம் சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினேன். எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகள் எனக்கு தெரியும் என்பதால் பெண்களிடம் சாதுர்யமாக பேசி அவர்களை மயக்கினேன்.
சென்னை கோயம்பேட்டில் ஒரு பெண்னை பாலியல் அத்துமீறல் செய்து நகைகளை பறித்து சென்றேன். புகார் கொடுக்க யாரும் முன்வராததால் தப்பி வந்தேன். இந்நிலையில்தான் திண்டுக்கல் போலீசார், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கைது செய்யப்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாஜிவ்வை கோயம்பேடு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்பேரில் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதியின் தீர்ப்பில், ‘கைது செய்யப்பட்ட சாஜிவ், கோயம்பேடு பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் 50,000 ஆயிரம் அபராதம் கட்டு வேண்டும் என்றும் 3 வருடம் சிறை தண்டனை எனவும் அதிரடி தீர்ப்பளித்தனர். பின்னர் சாஜிவ்வை பலத்த பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.